Press "Enter" to skip to content

இந்திய – சீன உறவுகள் இனி எப்படி இருக்கும்? ஒருவருக்கொருவர் எவ்வளவு தேவை?

இந்திய – சீன எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் திங்கள்கிழமை இரவு இரு நாட்டு ராணுவங்களிடையே கடுமையான மோதல் ஏற்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. எல்லைப் பகுதியில் நடைபெற்ற மோதல்களில் 20 இந்திய ராணுவத்தினர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் ராணுவத்திற்கும் சேதம் ஏற்பட்டிருப்பதாக இந்தியத் தரப்பு கூறினாலும், அந்நாடு இது குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கை எதையும் இதுவரை சீனா வெளியிடவில்லை.

ஏப்ரல் மூன்றாம் வாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப் பகுதியில் தொடங்கிய பிரச்சனை இன்னும் ஓயவில்லை. இந்த பிரச்சனையை தீர்க்க ஜூன் மாத தொடக்கத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் தொடங்கின.

பிரிகேடியர் நிலை, மேஜர் ஜெனரல் நிலை, கோர் கமாண்டர் நிலை என பல மட்டங்களில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. ஆனால் இந்த சர்ச்சை திங்கள் இரவு உயிர்ச் சேதம் ஏற்படுத்தும் அளவுக்கு மோசமானது.

சீனாவின் ஊடுருவல் முயற்சிகள்

சீனாவின் மோதல் போக்கின் பின்னணியில் ஒரு பாணி இருப்பதாக நம்புகிறார் ஜவஹர்லால் பல்கலைக்கழக பேராசிரியர் ஸ்வரண் சிங்.

சீனா தொடர்பான விவகாரங்களில் நிபுணரான ஸ்வரன் சிங், எல்லைப் பிரச்சனையைத் தீர்ப்பதற்காக இரு நாடுகளும் போதுமான முயற்சிகளை எடுக்கவில்லை என்பது அண்மைச் சம்பவத்திலிருந்து தெளிவாகிவிட்டதாகவும், இரு நாடுகளும் சில புதிய வழிகளைக் கடைபிடிக்க வேண்டும் என்றும் கூறுகிறார்.

சீனாவுடனான எல்லைத் தகராறில் கடந்த எட்டு முதல் பத்து ஆண்டுகளில், சீனா இந்தியப் பகுதிகளுக்குள் ஊடுருவும் போக்கு அதிகரித்திருப்பதாக ஸ்வரன் சிங் கூறுகிறார்.

இதில் பல்வேறு மாற்றங்களை பார்க்க முடிகிறது. முதலாவதாக, ஆரம்பத்தில் குறைவாக இருந்த ஊடுருவல் முயற்சிகள், தற்போது மிகவும் அதிகரித்துவிட்டன. கடந்த ஆண்டு மட்டும் 650 ஊடுருவல் முயற்சிகள் நடைபெற்றிருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இரண்டாவது, கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டுக்கு மிகவும் அருகில் சீனா தரமான சாலைகளை உருவாக்கியுள்ளது.

இதனால், அவர்களின் உடைமைகள், ஆயுதங்கள், வீரர்கள் என துருப்புகள் விரைவில் எல்லையை அடைய முடியும். எல்லைப் பகுதியில் சாலை கட்டுமானம் என்பது சீனாவின் ஆக்கிரமிப்பையும் தீவிரத்தையும் காட்டுவதாக உள்ளது. ஆனால் இரு நாடுகளிலும் இதுபோன்ற மோதல்களும், உரசல்களும் ஏற்பட்டபோதெல்லாம் ஒருபோதும் ஆயுதங்கள் பயன்படுத்தப்படவில்லை.

மூன்றாவது மாற்றம் என்னவென்றால், ஊடுருவல் நடத்துவதை ஓர் இடத்திலிருந்து மட்டுமல்லாது, ஒரே நேரத்தில் பல இடங்களிலிருந்து முயற்சிக்கும் வழிமுறையை சீனா கையாள்கிறது.

இந்தக் காரணங்களால், இரு நாடுகளுக்கும் இடையிலான நிலைமை, எல்லையில் வன்முறையாக மாற்றம் பெற்றதோடு, வீரர்களின் உயிரிழப்பிற்கும் வித்திட்டது.

ஜூன் 15 இரவு எல்லைப் பகுதியில் ஏற்பட்ட மோதல்களைத் தொடர்ந்து உருவான பதற்றமான சூழ்நிலையைத் தீர்க்க மேஜர் ஜெனரல் நிலையிலான பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாக ராணுவ வட்டாரங்களை மேற்கோளிட்டு ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இரு நாடுகளும் எல்லையிலிருந்து படைகளைத் திரும்பப் பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இந்த மோதல் நிலைமை ஏற்பட்டுள்ளதை அரசியல் வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இரு நாடுகளுக்கும் இடையில் மாற்று வழி என்ன இருக்கிறது?

பேச்சுவார்த்தை மூலமாகவே பிரச்சனைகளைத் தீர்க்க முடியும் என்று பேராசிரியர் ஸ்வரண் சிங், நம்புகிறார். கடந்த 40 ஆண்டுகளாக, இந்தியாவும் சீனாவும் எல்லையில் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் நிலைநாட்ட முயற்சித்தன என்பதையும் அவர் சுட்டுக்காட்டுகிறார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே இரண்டு இருதரப்பு உச்சி மாநாடுகள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 2018 ஏப்ரல் முதல் தேதியில் இருந்து சீனாவின் வுஹான் நகரில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இரண்டாவது முறையாக இருவரும் மீண்டும் சென்னை அருகே மாமல்லபுரத்தில் சந்தித்தனர்.

இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும், இரு நாடுகளின் தலைவர்களும் தங்கள் படைகளை சமாதானத்தை நிலைநாட்டும் வழியில் வழிநடத்துவதாக ஒப்புக் கொண்டனர்.

தற்போது சீனா மீது உலகமே மிகுந்த மனக்கசப்பு கொண்டிருப்பதாக கூறும் ஸ்வர்ன் சிங், எனவே தற்போதைய சூழ்நிலையில் எந்தவொரு போரையும் சீனா விரும்பாது என்று கூறுகிறார். எனவே, இந்தியாவுடனான உறவை சுமூகமாக்குவதைத் தவிர சீனாவுக்கு வேறு வழியில்லை என்று அவர் கருதுகிறார்.

இரு நாடுகளும் பாடம் கற்றுக் கொள்ள வேண்டிய நேரம் இது. எல்லையில் அமைதியைக் கடைப்பிடித்து, எல்லைத் தகராறை முற்றவிடாமல் தீர்க்க வேண்டும்.

கட்டுப்பாட்டு எல்லைக் கோடு தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையிலான பல்வேறு கருத்து வேறுபாடுகள் தீர்க்கப்பட வேண்டும். எல்லைப் பிரச்சனையைத் தீர்ப்பதன் மூலம் இரு நாடுகளின் படைகளுக்கு இடையிலான குழப்பம் முடிவுக்கு வரும் என்று பேராசிரியர் ஸ்வரண் சிங் நம்புகிறார்.

ஆனால், இரு நாடுகளும் இந்த சர்ச்சையை எவ்வாறு தீர்க்க முடியும்? இரு நாடுகளும் ஒரே பகுதிக்கு உரிமை கோருவதுதான் பிரச்சனையா?

சமரசத்திற்கு பல்வேறு வழிகள் உள்ளன என்று ஸ்வரண் சிங் கூறுகிறார்.

இந்தியாவின் கோரிக்கைகளை சீனா ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு முதலில் சர்வதேச அளவில் சீனாவிற்கு அழுத்தத்தை உருவாக்க வேண்டும்.

இரண்டாவதாக, இரு நாடுகளின் ரோந்து குழுக்களும் தாங்கள் ரோந்து வரும் பகுதிகளைப் பற்றி தெரிவிக்க வேண்டும். இதுபோன்ற தகவல்கள் முன்னதாகவே பரஸ்பரம் பரிமாறிக் கொள்ளப்பட்டால் மோதல் சம்பவங்கள் ஏற்படாது அல்லது கணிசமான அளவில் குறையும்.

இந்த நடவடிக்கையை உடனடியாக எடுக்கலாம். இரு படைகளுக்கும் இடையே கொடி அணிவகுப்பு நடைபெறும்போதும் அதுகுறித்த தகவல்களையும் பரிமாறிக்கொள்ள வேண்டும்.

மூன்றாவதாக, இரு நாடுகளும் தாங்கள் உரிமை கோரும் பிரதேசங்களின் வரைபடத்தை பரஸ்பரம் பரிமாறிக்கொள்வது அவசியமாகும்.

மத்தியப் பகுதியின் வரைபடங்கள் இரு நாடுகளுக்கும் இடையில் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ள போதிலும், கிழக்கு மற்றும் மேற்கு பிராந்தியங்களின் வரைபடம் பரிமாறிக் கொள்ளப்படவில்லை என்கிறார் ஸ்வரண் சிங்.

சமாதனத்தை முன்னெடுக்கும் முயற்சியில், இரு நாடுகளும் இந்த விவகாரத்தில் முன்முயற்சி எடுக்க வேண்டும். இது, இரு நாடுகளும் தங்களுடைய பரஸ்பர உரிமை கோரலைப் பற்றிய முழுமையான தகவல்களை அதிகாரப்பூர்வமாக அறிந்துக் கொள்வதற்கு ஏதுவாக இருக்கும்.

இந்தியாவும் சீனாவும் ஒன்றுகொன்று முக்கியமானவை மட்டுமல்ல, அவசியமானவையும் கூட.

சீனாவின் மிகப்பெரிய சந்தை இந்தியா

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தகம் அதிகரித்துள்ள விதம் குறிப்பிடத்தக்கது. இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில், அதாவது 2000ஆம் ஆண்டில், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மூன்று பில்லியன் டாலர்கள் மட்டுமே. இது 2008இல் 51.8 பில்லியன் டாலராக அதிகரித்தது.

அதாவது, அமெரிக்காவிற்கு பதிலாக சீனா, இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக மாறியது.

2018ஆம் ஆண்டில், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகள் புதிய உச்சங்களை எட்டின. இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் 95.54 பில்லியன் டாலர்களாக இருந்தது. இரு நாடுகளுக்கும் பொருளாதார தேவைகளில் ஒருவருக்கொருவர் சார்ந்திருப்பதை இது காட்டுகிறது.

இருப்பினும், 2019இல் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் சற்று குறைந்து, 92.7 பில்லியன் டாலர்களாக மட்டுப்பட்டுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் இரு நாடுகளுக்கும் இடையில் வணிகம் ஏற்றம் பெற்றுள்ளது. ஆனால், இரு நாடுகளின் வர்த்தகமும் சமமாக இருக்கிறது என்று புரிந்து கொள்ள வேண்டாம்.

2018ஆம் ஆண்டில், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகம் 95.54 பில்லியன் டாலர், ஆனால் அதில் இந்தியாவின் ஏற்றுமதி பொருட்களின் மதிப்பு 18.84 பில்லியன் டாலர்கள் என்று இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் வலைத்தளத்தில் காணப்படும் தரவுகள் தெரிவிக்கின்றன.

இ-காமர்ஸ், மொபைல் துறை என இந்தியா சீனாவுக்கு ஒரு பெரிய முதலீட்டு மையமாக இருப்பது உலகறிந்த உண்மையாகும்.

சீன நிறுவனமான அலிபாபா, இந்தியாவின் பிக் பாஸ்கெட், பேடிஎம், ஸ்னாப்டீல் மற்றும் ஜொமோட்டோ போன்ற நிறுவனங்களில் சுமார் 500 மில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது. அதேபோல, பைஜு, ப்ளிப்கார்ட், ஓலா, ஸ்விககி ஆகிய இந்திய நிறுவனங்களில் சீனாவின் டென்சென்ட் நிறுவனத்திற்கு பங்கு உள்ளது.

விவோ, ஒப்போ, சியோமி போன்ற மொபைல்போன் நிறுவனங்களுக்கு இந்தியா மிகப் பெரிய சந்தை. இந்தியாவும் சீனாவும் ஒருவருக்கொருவர் விரோதப் போக்கை ஏற்படுத்த முடியாததற்கு இதுவே காரணம்.

பேச்சுவார்த்தைகளால் உறவு மேம்படவில்லை என்றால், வர்த்தகம் மற்றும் முதலீடு பாதிக்கப்படும். கோவிட்-19 சமயத்தில் வர்த்தகத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் மோதல்களை இரு நாடுகளுமே விரும்பாது என்று ஸ்வரண் சிங் கருதுகிறார்.

உலகில் சீனா தனது பொருளாதார ஆதிக்கத்தைப் பராமரிக்க வேண்டும் என்றால், இந்தியாவுடனான உறவை சுமூகமாக பேணுவது அந்நாட்டுக்கு அவசியம். அதுதான் சீனாவின் பொருளாதார வலிமைக்கும் அடித்தளமாக இருக்கும்.

இந்தியா போன்ற பொருளாதாரத்தில் ஏற்படும் வீழ்ச்சியானது, சீனாவின் பொருளாதார வளர்ச்சியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அறியாத அளவுக்கு சீனா ஒன்றும் பேதமை மேலோங்கிய நாடல்ல. என்று பேராசிரியர் ஸ்வர்ன் சிங் நம்புகிறார்.

இந்தியாவுக்கும் இதுவே பொருந்தும். கொரோனா காலத்தில், இந்தியா போன்ற ஒரு நாடு, பொருளாதார ரீதியாக பல ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுவிடும் என்பது கண்கூடு.

இந்த நேரத்தில், அண்டை நாடுகளுடனான உறவு மோசமடைந்து யுத்தம் போன்ற சூழ்நிலையை உருவாக்க இந்தியா விரும்பாது. முதலில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் ஏற்றுமதியை தடை செய்த இந்தியா, பிறகு அதற்கு அனுமதித்ததை உதாரணமாகச் சொல்லலாம்.

எது எவ்வாறாயினும், ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை இந்தியா பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டுமானால், ஆக்டிவ் மருந்து பொருட்கள் (ஏபிஐ) என அழைக்கப்படும் இந்த மருந்தின் மூலப்பொருள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படவேண்டும் என்பது இரு நாடுகளும் ஒன்றையொன்று சார்ந்திருப்பதை துல்லியமாக உணர்த்துகிறது.

இது மட்டுமல்லாமல், இந்தியாவில் இருந்து அதிகம் ஏற்றுமதி செய்யப்படும் மற்றொரு மருந்து குரோசின். சீனாவிலிருந்து குரோசினின் ஏபிஐ-யான பராசிட்டமால் வருகிறது. நாடாளுமன்றத்தில் இந்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவின் மருந்து நிறுவனங்கள் சுமார் 70% ஏபிஐகளை சீனாவிலிருந்து இறக்குமதி செய்கின்றன. இப்படிப்பட ஒரு நாட்டோடு மோதல் போக்கை கடைபிடிப்பது இந்தியாவுக்கும் சேதம் விளைவிக்கும்.

இதைத் தவிர, பருத்தி, தாமிரம், வைரம் மற்றும் பிற விலையுயர்ந்த இயற்கை ஆபரணக் கற்களையும் சீனாவுக்கு விற்பனை செய்கிறது இந்தியா. இதன் காரணமாக, இரு நாடுகளுக்கும் பேச்சுவார்த்தை என்ற ஒரே வாய்ப்புதான் எஞ்சியிருப்பதாக ஸ்வரண் சிங் உறுதியாக நம்புகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »