Press "Enter" to skip to content

இந்தியா – சீனா: இரண்டு ஆசிய நாடுகளின் பகை உலகை எப்படி பாதிக்கும்?

ஜுபைர் அகமது
பிபிசி நிருபர் டெல்லி

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் கடுமையாக அதிகரித்து வரும் ராணுவம் மற்றும் ராஜதந்திர பதற்றங்களுக்கு மத்தியில், உலகின் இரண்டாவது மற்றும் ஐந்தாவது பெரிய பொருளாதாரங்களுக்கு இடையே விவாகரத்து பற்றிய பேச்சுவார்த்தைகள் எழுந்துள்ளன.

சீற்றத்தில் இருக்கும் இந்திய தரப்பு, சீனாவுடன் வர்த்தக உறவுகளை முறித்துக் கொள்வது குறித்து உரத்து பேசத் தொடங்கிவிட்டது. உணர்ச்சிவசப்படும் இந்திய பொதுமக்கள் சீனாவில் தயாரிக்கப்பட்டு, தங்களால் வாங்கி பயன்படுத்தப்பட்ட சீன பொருட்களை கேமராக்களுக்கு முன் உடைத்து போராட்டங்களை நடத்துகிறார்கள். திடீரென்று நாட்டின் முதன்மையான எதிரி என்ற அந்தஸ்து பாகிஸ்தானிடம் இருந்து சீனாவுக்கு கிடைத்துவிட்டது போல் தோன்றுகிறது.

அதிகரிக்கும் இடைவெளி… முறிகிறதா உறவு?

கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற வன்முறைகள் இந்திய-சீன உறவுகளில் ஒரு திருப்புமுனையாக அமையக்கூடும் என்று முன்னாள் வெளியுறவு செயலாளரும், சீனாவின் இந்திய தூதருமான நிருபமா ராவ் ட்வீட் செய்துள்ளார்.

1988 ல் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி சீனாவுக்கு பயணம் மேற்கொண்டபோது இரு நாடுகளுக்கும் இடையிலான ஒரு புதிய உறவு தொடங்கியது. ஆனால் இப்போது அந்த உறவை பரிசீலிக்க வேண்டிய சமயம் இது என்று நிருபமா கருதுகிறார்.

மெய்யான கட்டுப்பாட்டுக் கோட்டில் நடைபெற்ற வன்முறை மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதால், சீனாவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கடும் அழுத்தம் மோதி தலைமையிலான மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு சாரா நிலையில் அதற்கான சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இறக்குமதி வரி, புறக்கணிப்பு

இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்து வருகிறது. 300 இறக்குமதி பொருட்களின் பட்டியலை தயாரித்துள்ள இந்திய அரசு, அவற்றுக்கான இறக்குமதி வரியை அதிகரிக்கலாம் என்று பரிந்துரைத்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை கூறுகிறது. இந்த பட்டியலிடப்பட்ட இறக்குமதி பொருட்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் சீனாவின் பெயர் குறிப்பிடப்படவில்லை என்றாலும், சீன இறக்குமதியை இந்தியா சார்ந்திருப்பதைக் குறைப்பதற்காக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்பது புரிந்து கொள்ளக் கூடிய விஷயம் தான்.

இதற்கிடையில், அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (CAIT) புறக்கணிக்கப்பட வேண்டிய 500 க்கும் மேற்பட்ட சீன தயாரிப்புகள் என்று கூறி அதற்கான பட்டியலை வெளியிட்டுள்ளது. 2021 டிசம்பருக்குள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களின் மதிப்பை 13 பில்லியன் டாலர் அல்லது 1 லட்சம் கோடி ரூபாயாகக் குறைப்பதே தங்களது நோக்கம் என்று வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சீன தயாரிப்புகளை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் இந்தியாவில் பரவலாக எழுந்திருக்கும் சூழ்நிலையில், சீன கைபேசி தயாரிப்பாளரான ஒப்போ இந்தியாவில் கடந்த புதன்கிழமையன்று நடைபெறவிருந்த தனது முதன்மை 5 ஜி ஸ்மார்ட் போன் அறிமுக நிகழ்ச்சியை ரத்து செய்தது.

“சீனாவுடனான எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு காண எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் இந்தியாவில் மருந்துத்துறை, மொபைல் போன்கள் மற்றும் சூரிய சக்தி போன்ற தொழில்களில் இடையூறுகளை ஏற்படுத்தக்கூடும்” என்று மும்பையின் பொருளாதார விவகார நிபுணர் ரகுவீர் முகர்ஜி கூறுகிறார்.

இழப்புகளை சந்திக்குமா இந்தியா?

இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர பகை மற்றும் மோதலில், இரு நாடுகளுக்கும் நன்மைகள் குறைவு, இழப்புகள் அதிகம் என்று பல வல்லுநர்கள் கூறுகின்றனர். குறிப்பாக இந்தியா அதிக இழப்புகளை சந்திக்கக்கூடும் என்று நிபுணர்கள் கருதுகிறார்கள்.

இது ஒரு தீவிரமான பிரச்சனை ஆனால் தீர்ப்பதற்கு கடினமானதல்ல என சீனாவின் சிச்சுவான் பல்கலைக்கழகத்தின் தெற்காசிய ஆய்வுகளுக்கான சீனா மையத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஹ்வாங் யுங்சாங் கூறுகிறார், “இமயமலையின் இருபுறமும் பொருளாதார பரிமாற்றங்களை முழுமையாக நிறுத்த வேண்டும் என்று கூறுவது பொறுப்பான விஷயம் அல்ல என்று அவர் கருதுகிறார்.

அதிலும் குறிப்பாக இரு தரப்பு தலைவர்களும் நிலைமையை மோசமடைவதைத் தடுக்கவும், அமைதிப்படுத்தவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில் பொருளாதார நடவடிக்கைகளை தடை செய்வது என்ற பேச்சுகளை எழுப்பக்கூடாது” என்று கூறுகிறார்.

சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா புவிசார் அரசியல் ஆய்வுகள் மையத்தின் கல்வி இயக்குநர் டாக்டர் அலெக்சாண்டர் லம்பேர்ட் சீன விவகாரங்களில் நிபுணர்.

அவரது கருத்துப்படி, இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான பதற்றம் தொடர்பாக இந்திய ஊடகங்கள் மற்றும் குடிமக்களிடமும் சீனாவுக்கு எதிரான அதிருப்தி இருந்தபோதிலும், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளைச் இந்தியாவின் வலுவான நண்பராக கருதுகிறார்கள். இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றங்களை பிற நாடுகள் பயன்படுத்திக் கொள்ள முயற்சி செய்யலாம் என்று டாக்டர் அலெக்சாண்டர் லம்பேர்ட் கூறுகிறார்.

“சீனாவுடனான இந்தியாவின் வர்த்தக உறவுகள் சீர்குலைந்தால், இந்த இரு நாடுகளைத் தவிர வேறு சில நாடுகளுக்கு அதன் பலன் கிடைக்கும். புவியியல் ரீதியாகப் பார்த்தால், சீனா மற்றும் இந்தியாவின் பரஸ்பர விலகல் அமெரிக்காவும் அதன் சில நட்பு நாடுகளுக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கும். பொருளாதார ரீதியாக, ஆசியான் மற்றும் வளர்ந்த நாடுகளின் உற்பத்தியாளர்கள் இந்திய சந்தையில் சீன பொருட்களுக்கு மாற்றாக தங்கள் பொருட்களை களம் இறக்குவதில் ஆர்வம் காட்டக்கூடும், ஆனால் அவை தரத்தில் குறைவாகவும், விலை அதிகமாகவும் இருக்கலாம்” என்று டாக்டர் அலெக்சாண்டர் லம்பேர்ட் கருதுகிறார்.

சீனாவின் இருத்தலை அச்சுறுத்தலாக கருதக்கூடாது என்று டாக்டர் அலெக்சாண்டர் லம்பேர்ட் இந்தியாவுக்கு அறிவுரை வழங்குகிறார். “ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் பிரிட்டன் மற்றும் வளர்ந்து வரும், துடிப்பான நாடான ஜெர்மனியின் சூழ்நிலையில் இந்தியாவும் சீனாவும் இல்லை.

இந்த நிலைமை மேற்கு ஐரோப்பா மற்றும் சோவியத் யூனியனுக்கு ஏற்பட்ட அச்சங்களில் இருந்து மிகவும் வேறுபட்டது. இன்று ‘அமைதியாக வளரும்’ சக்தியாக இருக்கும் சீனா, ராஜதந்திரம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புகளை நல்குவதில் மும்முரமாக இருக்கிறது. இந்த வாய்ப்பை ஏற்றுக் கொள்ளாமல் தவிர்ப்பது இந்தியாவின் எதிர்கால சந்ததியினரை தண்டிப்பதற்கு சமமாகும்.”

இந்தியாவும் சீனாவும் உணர்வுப்பூர்வமான நிலைகளுக்கு அப்பாற்பட்டு சிந்தித்துப் பார்ப்பது கடினம், ஆனால் இரு நாடுகளின் 270 கோடி மக்களுக்கு (உலகின் மொத்த மக்கள் தொகையில் 37 சதவீதம்) உணவளிப்பதற்கும், உலகப் பொருளாதாரம் மற்றும் வணிகத்தின் வளர்ச்சிக்கும் ஆசியாவின் இரு சக்திவாய்ந்த நாடுகளின் ஒருங்கிணைந்த பொருளாதார வலிமையானது சுமூகமாகவும் வளமானதாகவும் இருக்க வேண்டியது அவசியம்.

சந்தை அரசியல்

சீனாவும் இந்தியாவும் பரஸ்பரம் மிகப் பெரிய சந்தைகள் என்பதோடு, இரு நாடுகளும் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கும் பிரம்மாண்டமான மற்றும் கவர்ச்சிகரமான சந்தையாகும். சீன சந்தையில் நுழைவது சிலிக்கான் பள்ளத்தாக்கின் எந்தவொரு நிறுவனத்துக்கும் மிகப்பெரிய கனவு என்பது ஆச்சரியமான உண்மை என்றாலும், அது நிதர்சனத்தை உணர்த்துகிறது. உலகின் மிகவும் பிரபலமான மற்றும் வெற்றிகரமான நிறுவனங்கள் பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே சீனாவில் தொழிற்சாலைகளை அமைத்து, பொருட்களை உற்பத்தி செய்வதில் ஈடுபட்டுள்ளன.

இன்று, உலகின் உற்பத்தி மையமாக திகழும் சீனாவிற்கு இறங்குமுகம் என்றால், அதன் தாக்கத்தால், அமெரிக்க மற்றும் பிற பொருளாதாரங்களில் பூகம்பம் போன்ற அபாயகரமான அதிர்ச்சி ஏற்படும். இது, மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் எதிரொலிக்கும்போது, இந்தியாவுடன் தொடர்புடைய பல அமெரிக்க மற்றும் மேற்கத்திய நாடுகளின் நிறுவனங்களுக்கு ஏற்படும் பாதிப்பு இந்தியாவையும் அசைத்து பார்க்கும்.

சர்வதேச நாணய நிதியத்தின் (ஐ.எம்.ஏ.எஃப்) 2019ஆம் ஆண்டின் தரவுகளின்படி, உலகின் கூட்டு பொருளாதாரம் சுமார் 90 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடையது, இதில் சீனாவின் பங்களிப்பு 15 சதவீதத்திற்கும் சற்று அதிகமாகவும், இந்தியாவின் பங்களிப்பு 7.5 சதவீதமாகவும் உள்ளது. உலகப் பொருளாதாரத்தில் 22-23 சதவிகித பங்களிக்கும் இரு நாடுகளும் உலக மக்கள் தொகையில் 37 சதவிகிதத்தைக் கொண்டவை. மேலும், ஆசியாவின் இரண்டு பெரிய பொருளாதாரங்கள் உலகளாவிய வர்த்தகத்தின் வளர்ச்சிக்கு உதவுகின்றன. இரு நாடுகளும் பல ஆப்பிரிக்க நாடுகளுக்கு மலிவான வட்டிக்கு கடன் வழங்குகின்றன; உலகின் பெரிய முதலீட்டாளர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் பில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்பிலான வர்த்தகத்தை நடத்துவதற்கு ஆதாரமாக உள்ளவை இந்தியாவும் சீனாவும்.

பொருளாதார முன்னேற்றம்

கடந்த 30-35 ஆண்டுகளில் இந்திய மற்றும் சீன பொருளாதாரங்களின் செயல்திறன் பிரம்மாண்டமானது. இந்தியா மற்றும் சீனாவின் பொருளாதாரங்கள் கடந்த பல ஆண்டுகளாக, உலகிலேயே துரிதமாக முன்னேறி வருகின்றன. அதன் மிகப்பெரிய வெற்றியானது, கோடிக்கணக்கான மக்களை வறுமைக் கோட்டுக்கு மேலே உயர்த்தியதில் பிரதிபலிக்கிறது. சீனாவும் இந்தியாவும் வெவ்வேறு நிலைகளில் பெருமளவிலான உள்கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளன. நகர்ப்புறங்கள் வெகுவாக மாறிவிட்டன, உற்பத்தி திறன்களில் பரவலான முன்னேற்றம் காணப்படுகிறது. டிஜிட்டல் மற்றும் ஆன்லைன் வணிகம் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டன. மொபைல் மற்றும் இணையம் கிராமப்புற மக்களின் வாழ்க்கையை மாற்றியுள்ளது. மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட்டுள்ளது. இன்று பொது மக்கள் மிகவும் ஆரோக்கியமாக இருப்பதும், அவர்களிடம் செலவழிக்க பணம் உள்ளதற்கும் காரணம் இந்த இரு நாடுகளின் பொருளாதார முன்னேற்றம் தான் என்று சொன்னால் அது மிகையாகாது.

இரு நாடுகளிலும் இவ்வளவு பெரிய வெற்றிக்கு முக்கியமானது சுதந்திரமான வர்த்தகம் மற்றும் உலகமயமாக்கல் என்று பொருளாதார வல்லுநர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். இந்தியாவில் ஜனநாயகம் இருப்பதால் அது தனது பொருளாதாரத்தை வெளி முதலீட்டாளர்களுக்குத் திறந்துவிட்டிருக்கிறது. சீனாவில் ஜனநாயகம் இல்லை என்றாலும், அதுவும் தனது பொருளாதாரத்தை பிற நாடுகளுக்கு திறந்துவிட்டிருக்கிறது. இரு நாடுகளும் சவாலை ஏற்றுக்கொண்டு தனியார்மயமாக்கலின் பாதையில் துரிதமாக முன்னேறிக் கொண்டிருக்கின்றன.

ஆனால் சமுதாயத்தில் வறுமை மற்றும் ஒற்றுமை என்பதே இன்னும் மிகப்பெரிய சவாலாக உள்ளது. பிரபல பொருளாதார நிபுணர் டேவிட் மார்கெந்தாலர் தனது சமீபத்திய கட்டுரை ஒன்றில் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்: “இந்தியா மற்றும் சீனாவின் பொருளாதார வளர்ச்சி உண்மையில் பாராட்டத்தக்கது என்றாலும், சில பொருளாதாரத் துறைகள் பிற துறைகளை விட வேகமாக வளர்ந்து வருகின்றன. ஆனால் வேறு சில பகுதிகளில் இன்னும் முன்னேற்றத்திற்கான வேலைகள் செய்யவேண்டியிருக்கிறது”.

உலக அளவில் நான்கில் ஒரு பங்கு ஏழை மக்கள் இந்தியாவில் இருக்கின்றனர். ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, இந்தியாவின் கிராமப்புற மக்களில் 39% பேருக்கு சுகாதார வசதிகள் இல்லை. கிட்டத்தட்ட பாதி மக்கள் இன்னும் திறந்த வெளியில் மலம் கழிக்கின்றனர்.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலின் போது, சமத்துவமின்மை என்பது சீனாவை விட இந்தியாவில் அதிகமாக உள்ளது என்பது நிரூபிக்கப்பட்டது. அரசு சுகாதார அமைப்பில் ஒரு குறைபாடு உள்ளது. இந்த தொற்றுநோயானது, இரு நாடுகளின் கோடிக்கணக்கான மக்களை மீண்டும் வறுமைக்குள் தள்ளிவிட்டது.

எது எப்படி இருந்தாலும், இந்த இரண்டு வளர்ந்து வரும் நாடுகளும் வரவிருக்கும் தசாப்தங்களில் உலகப் பொருளாதாரத்தை பல வழிகளில் மாற்றிவிடுவார்கள் என்ற கூற்று பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்

பீட்டர்சன் சர்வதேச பொருளாதரா மையத்தை சேர்ந்த நிக்கோலஸ் லார்டி ஒரு கட்டுரையில் இவ்வாறு எழுதுகிறார்: “இந்தியாவும் சீனாவும் இன்னும் வளர்ந்து வரும் பொருளாதாரத்தின் பிரிவில் இருக்கும் இரண்டு நாடுகள், அதாவது இந்த இரு நாடுகளிலும் இன்னும் நிறைய வளர்ச்சிக்கான பணிகள் எஞ்சியிருக்கின்றன. இந்தியாவை மேற்கோளிட்டு கூறும் அவர், “உலகளாவிய வர்த்தகத்தில் இந்தியாவின் பங்களிப்பு சீனாவை விட மிகக் குறைவு. உலக வர்த்தகத்தை மேலும் மேம்படுத்தும் திறன் இந்தியாவுக்கு இன்னும் உள்ளது” என்கிறார்.

இதைத் தவிர, இரு நாடுகளின் மக்கள்தொகை, குறிப்பாக இந்தியாவின் இளம் மக்கள் தொகையானது மாபெரும் சக்தி வாய்ந்தது. இளம் தலைமுறையினரை இரு நாடுகளின் ஒரு முக்கிய சக்தியாகக் கருதும் ஹ்வாங் யுங்சோங், இரு பொருளாதாரங்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

இரு நாடுகளின் பரஸ்பர பங்களிப்பு பல ஆண்டுகளாக உள்ளது உண்மைதான். இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான பரஸ்பர வர்த்தகத்தின் வளர்ச்சி ஊக்கமளிப்பதாக இருக்கிறது. 3.6 பில்லியன் டாலர்கள் என்ற அளவில் இருந்த 2001 ஆம் ஆண்டின் இந்திய-சீன வர்த்தகமானது, 2019 ஆம் ஆண்டில், சுமார் 90 பில்லியன் டாலர்களை எட்டியது. இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக சீனா உள்ளது. இந்த உறவு ஒரு வழிப்பாதை அல்ல. இன்று இந்தியா உலகின் மிகப்பெரிய மருந்துகளை ஏற்றுமதி செய்யும் நாடாக இருந்தால், இதில் சீனாவின் பங்களிப்பும் அடங்கியிருக்கிறது, ஏனெனில் பொது மருந்துகளுக்கான மூலப்பொருள் சீனாவிலிருந்து வருகிறது. வர்த்தகத்தைத் தவிர, இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் நாட்டில் முதலீடு செய்கின்றன, ஆனால் அந்த முதலீடானது அவற்றின் உண்மையான திறனை விட மிகக் குறைவாகவே உள்ளது.

1962ஆம் ஆண்டு போர் மற்றும் பல ஆண்டுகளாக மெய்யான கட்டுப்பாட்டு வரிசையில் பதற்றங்கள் தொடர்ந்தாலும், பரஸ்பர வர்த்தகம் தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. பிரதமர் நரேந்திர மோதியின் ஆறு ஆண்டு கால ஆட்சிக்காலத்தில் இரு நாடுகளும் பரஸ்பரம் நெருங்கிவிட்டன. இரு நாடுகளின் தலைவர்களும் மற்றொருவரின் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளனர், நரேந்திர மோதிக்கும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கும் இடையிலான நட்பும் அரவணைப்பையும் இந்த பயணங்கள் வெளிக்காட்டின.

இந்திய தரப்பில், இருதரப்பு வர்த்தகத்தில் சீனாவின் ஏற்றுமதி மூன்றில் இரண்டு பங்கு இருப்பதாக குறை கூறப்படுகிறது. ஆனால், இதை வர்த்தகப் பற்றாக்குறையாக கருதக்கூடாது என்கிறார் பொருளாதார நிபுணர் விவேக் கால். “நாம் சீனாவிலிருந்து பொருட்களை வாங்குகிறோம், ஏனெனில் இந்தியாவின் வாடிக்கையாளர்கள் அவற்றின் தரம் மற்றும் விலை இரண்டும் சரியாக இருப்பதாக கருதுகிறார்கள்” என்கிறார் அவர். இந்தியாவுடனான அமெரிக்காவின் வர்த்தக பற்றாக்குறை அதிகமாக இருந்தாலும் அதைப் பற்றி யாரும் பேசுவதில்லை.

ஆனால், சீனாவுடனான வர்த்தக பற்றாக்குறையைக் குறைப்பதற்காக, அங்கிருந்து செய்யும் இறக்குமதியைக் குறைத்து உள்நாட்டிலேயே பொருட்களை தயாரிக்கவும் இந்தியாவில் சில பொருளாதார வல்லுநர்கள் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கின்றனர். பிரதமரும் இதை பல முறை வலியுறுத்தியுள்ளார். ஆனால் நாடுகளின் பொருளாதாரங்களின் போட்டித் திறனை பட்டியலிடும் ஐ.எம்.டி உலக போட்டித்திறன் மையத்தின் இயக்குநரும் நிதி விவகார இயக்குநருமான அர்துரோ ப்ரிஸின் கூற்றுப்படி, இந்தியா போன்ற பல நாடுகள் கொரோனா வைரஸ் காரணமாக உலகமயமாக்கல் என்ற கோணத்தில் இருந்து மாறி உள்நாட்டுமயமாக்கலை நோக்கி தடம் மாறுகின்றன, ஆனால் அவை இது தற்போதைய சிந்தனையின் போக்கு. அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா போன்ற நாடுகள் இரண்டு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு உலகமயமாக்கலுக்கு திரும்பிவிடும் என்று அவர் நம்புகிறார்.

வர்த்தகப் போர்

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் நடந்து வரும் வர்த்தகப் போரில், இரு நாடுகளும் சேதத்தை சந்தித்துள்ளன என்பது நிபுணர்களின் பொதுவான கருத்து. ஆனால் 2018 பிப்ரவரி மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடங்கிய இந்த வர்த்தகப் போருக்கு அமெரிக்காவிற்கு அதிக விலை கொடுத்து வருகிறது. டிரம்பின் முயற்சிகளுக்கு பிறகும், அமெரிக்க நிறுவனங்கள் சீனாவில் தங்கள் நிறுவனங்களை மூடவில்லை. சில நிறுவனங்கள் சீனா பிளஸ் ஒன் சூத்திரத்தை ஏற்றுக்கொண்டதும் உண்மைதான். அதாவது இந்த நிறுவனங்கள் தங்கள் தொழில்துறையின் சில பிரிவுகளை வியட்நாம் போன்ற நாடுகளுக்கு மாற்ற முடிவு செய்துள்ளன.

“இந்தியாவும் சீனாவும் ஒருவருக்கொருவர் முன்னேறினால், இரு நாடுகளின் மக்கள்தொகை பொருளாதார செழிப்பை நோக்கி அதிகரிக்க முடியும். இந்த நாடுகளில் தொழில்நுட்பம் மற்றும் புதுமை இரண்டுமே உள்ளன. வரவிருக்கும் சில ஆண்டுகளில் 5 ஜி தொழில்நுட்பங்கள் பொருளாதாரம் வேகமாக வளர வைக்கும். உலகின் மிகப்பெரிய 5 ஜி நிறுவனங்களில் தென் கொரிய சாம்சங் மற்றும் எல்ஜி மற்றும் நோக்கியா போன்ற நிறுவனங்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது” என்கிறார் பேராசிரியர் ஹ்வாங் யுங்சோங்.

குவால்காம் மற்றும் இன்டெல் ஆகியவை 5 ஜி காப்புரிமையை பெற்றுள்ள மிகப்பெரிய அமெரிக்க நிறுவனங்கள் ஆகும். ஷார்ப் மற்றும் என்.டி.டி டோகோமோ ஆகியவை மிகப்பெரிய ஜப்பானிய நிறுவனங்கள், ஆனால் சீன நிறுவனமான ஹவாய் 5 ஜி போர்ட்ஃபோலியோவைக் கொண்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவுக்கு ஆதாயம் கிடைக்கலாம்.

அமைதி காக்க வேண்டும்

அமெரிக்காவுக்கு மாற்றான உலக சக்தியாக மாற சீனா விரும்புகிறது. ஆனால் இதற்காக அந்நாடு, தனது அண்டை நாடுகளுடன் அமைதி காக்க வேண்டும் என்று அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இந்தியாவும் உலகின் பெரிய மற்றும் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியலில் சேர விரும்புகிறது. இதற்காக இந்தியாவும் தனது அண்டை நாடுகளுடனும் பிற நாடுகளுடனும் நல்லுறவைப் பேண வேண்டியிருக்கும்.

சீனா ஐ.நா.பாதுகாப்புக் குழுவின் நிரந்தர உறுப்பினராக இருக்கும் நிலையில், ஜூன் 17 அன்று, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான 10 தற்காலிக உறுப்பினர்களில் ஒன்றாக இந்தியா மாறியுள்ளது. ஐ.நா சபையின் உறுப்புரிமைக்காக உலகில் அமைதியை நிலைநாட்ட முயற்சிக்க வேண்டியது அவசியம். இரு நாடுகளின் ஒருங்கிணைந்த பொருளாதார சக்தியைத் தவிர, இரு நாடுகளின் ஒருங்கிணைந்த அரசியல் சக்தியை வெளிப்படுத்தக்கூடிய ஒரு பெரிய திருப்புமுனையாக இது இருக்கக்கூடும். அது இரு நாடுகளின் மக்களுக்கும் பயனளிக்கும் என்பதோடு, கொரோனா தொற்றுநோயின் நெருக்கடியிலிருந்து எதிர்வரும் ஆண்டுகளில் உலகம் வெளியேறுவதற்கு உதவியாகவும் இருக்கக்கூடும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »