Press "Enter" to skip to content

வட கொரியா: தென் கொரியாவுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை ரத்து செய்த கிம்

தென் கொரியா மீது வட கொரியா மேற்கொள்ளவிருந்த ராணுவ நடவடிக்கை ரத்து செய்யப்பட்டு இருப்பதாகக் கூறுகிறது வட கொரியா அரசு ஊடகம்.

கடந்த இரண்டு வாரமாக இரு நாடுகளுக்கு இடையே மிகவும் பதற்றமான சூழல் நிலவியது.

ராணுவ நடவடிக்கைகளற்ற கொரிய எல்லைக்கு ராணுவத்தை அனுப்ப போவதாக வட கொரியா அச்சுறுத்தி இருந்தது.

இதனிடையே கிம் ஜோங் உன் தலைமையில் நடந்த கூட்டத்தில், இந்த ராணுவ நடவடிக்கையை ரத்து செய்ய முடிவெடுக்கப்பட்டதாக அரசு ஊடகம் தெரிவிக்கிறது.

இப்போது இருக்கும் சூழலைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கையை எடுத்ததாக மத்திய ராணுவ ஆணையம் தெரிவிக்கிறது.

வட கொரியா அரசுக்கு எதிரான துண்டு பிரசுரங்கள் அனுப்பப்படுவதை தென் கொரியா தடுக்கவில்லை என்றும், இதன் காரணமாக நாங்கள் அடுத்துக்கட்ட நடவடிக்கையை எடுக்கப் போகிறோம் என்றும் வட கொரியா கூறியது.

வட கொரிய அதிபரின் சகோதரி கிம் யோ ஜோங் இது தொடர்பான உத்தரவைக் கடந்த வாரம் ராணுவத்திற்குப் பிறப்பித்தார்.

வட கொரியா – தென் கொரியா: அண்மைய பதற்றங்களுக்கு என்ன காரணம்?

கடந்த 2018 ஆம் ஆண்டிலிருந்து, வட கொரியா – தென் கொரியா என இருதரப்பும் தங்களுக்கு இடையேயான பிரச்சனையைத் தீர்க்க முயன்று வருகிறது. அவ்வப்போது இதற்கான பேச்சு வார்த்தைகளும் அங்கு நடந்து வருகின்றன.

ஆனால், இந்த உறவானது கடந்த சில வாரங்களாக மிகவும் மோசமடைந்தது.

தென் கொரியாவில் தஞ்சம் புகுந்த வட கொரிய எதிர்ப்பு குழுக்கள், வட கொரிய அரசுக்கு எதிரான துண்டு பிரசுரங்கள், பென் ட்ரைவ், டிவிடிக்களை பலூன் மூலம் கட்டி வட கொரிய எல்லைக்கு அனுப்புகிறது. தென் கொரிய சீரியல்கள் மற்றும் தென் கொரிய செய்தித் தாள்களும் இதில் அடக்கம்.

வட கொரிய அரசை மக்கள் உள்ளிருந்தே கவிழ்க்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்யப்படுகிறது என குற்றச்சாட்டப்படுகிறது.

இவ்வாறான செயல்கள் மூலம் இரண்டு நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தத்தைத் தென் கொரியா மீறிவிட்டதாக வட கொரியா குற்றஞ்சாட்டுகிறது.

இவ்வாறான நடவடிக்கைகள் எல்லையில் வசிக்கும் மக்களின் வாழ்க்கைக்கு ஆபத்தாக அமையும் என்று கூறி இதனை தடுக்க தென் கொரியா முயன்றது.

இம்மாத தொடக்கத்தில் இரு கொரிய நாடுகளுக்கு இடையேயான அனைத்து தொடர்புகளையும் வட கொரியா துண்டித்தது. இரு நாட்டு தலைவர்களின் தொடர்புக்காக வைக்கப்பட்டிருந்த ஹாட் லைன் சேவையையும் வட கொரியா துண்டித்தது.

கடந்த வெள்ளிக்கிழமை, இரு நாட்டு தொடர்புகளுக்காக எல்லையில் அமைக்கப்பட்டிருந்த அலுவலகத்தை வட கொரியா வெடி வைத்துத் தகர்த்தது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடர் பேச்சுவார்த்தைக்காக அமைக்கப்பட்ட அலுவலகம் இது.

இதனிடையே வட கொரிய அதிபரின் சகோதரி கிம் யோ ஜோங், ராணுவ நடவடிக்கை தொடர்பாக அச்சுறுத்தியது, பதற்றத்தை மேலும் அதிகரித்தது.

இப்படியான சூழலில் தென் கொரியா மீது வட கொரியா மேற்கொள்ளவிருந்த ராணுவ நடவடிக்கை ரத்து செய்யப்பட்டு இருப்பதாக வட கொரியா அரசு ஊடகமான கே.சி.என்.ஏ கூறுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »