Press "Enter" to skip to content

இந்திய – சீன எல்லை பதற்றத்தைப் புரிந்துகொள்ள 11 எளிய கேள்வி, பதில்கள்

மக்கள்தொகை அடிப்படையில் உலகின் இருபெரும் நாடுகளாக உள்ள இந்தியா மற்றும் சீனா இடையே சமீபத்தில் நிகழ்ந்த எல்லை மோதல், பாதுகாப்புத் துறையில் மட்டுமல்லாது வெளியுறவு, பொருளாதாரம், சர்வதேச புவி அரசியல் ஆகிய அனைத்திலும் எதிரொலிக்கிறது.

இந்தப் பிரச்சனை குறித்து எளிதாகப் புரிந்து கொள்வதற்கான 11 கேள்விகளும், அவற்றுக்கான தெளிவான, விரிவான பதில்களும் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.

1. ஜூன் 15 – 16 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில் கல்வான் பள்ளத்தாக்கில் என்ன நடந்தது?

ஜூன் 15ம் தேதி லடாக் பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் எல்லையோரத்தில் இந்திய – சீன ராணுவத்தினர் இடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்தியப் படையினர் கொல்லப்பட்டனர். சீனத் தரப்பிலும் உயிர்ச்சேதம் ஏற்பட்டதாக இந்திய அரசு கூறியது.

ஆனால், சீனத் தரப்பில் இருந்து அவர்களுக்கு ஏற்பட்ட சேதாரம் குறித்து அதிகாரபூர்வத் தகவல் ஏதும் இல்லை. இந்த சம்பவத்தை அடுத்து இரு தரப்பும் ஒன்றை ஒன்று குற்றம்சாட்டுகின்றன. தங்கள் பகுதியில் எதிராளி ஊடுருவியதாக இரு தரப்பும் புகார் கூறுகின்றன.

லடாக், கல்வான் பள்ளத்தாக்கில் ஜூன் 15ம் தேதி இரவு இந்திய – சீனப் படையினருக்கு இடையே நடந்த மோதலில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் ஆயுதங்களின் படம் ஒன்று வெளியாகியது. அந்தப் படத்தில் இருப்பவை ஆணிகள் பொருத்தப்பட்ட வலுவான இரும்புக் கம்பிகள் இந்த தாக்குதலில் சீனர்கள் பயன்படுத்திய ஆயுதங்களின் படங்கள் என்று கூறி, இந்திய சீன எல்லையில் பணியாற்றும் மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் ஒரு படத்தை பிபிசிக்கு அனுப்பியிருந்தார்.

இரும்புக் கம்பியில் ஆணி பொருத்திய ஆயுதங்களைக் காட்டும் இந்தப் படத்தை இந்தியாவைச் சேர்ந்த ராணுவ விவகார வல்லுநர் அஜய் சுக்லா ட்விட்டரில் முதல் முதலில் பகிர்ந்திருந்தார்.

இந்தப் படத்தில் இருக்கும் ஆயுதங்களைச் சம்பவ இடத்திலிருந்து இந்திய சிப்பாய்கள் கைப்பற்றியதாகவும், இவற்றைக் கொண்டே ரோந்து சென்ற இந்தியப் படையினரைச் சீனப் படையினர் தாக்கியதாகவும், 20 பேர் கொல்லப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

2. இந்திய – சீன எல்லையில் பதற்றம் நிலவுவது ஏன்? இது எப்படி தொடங்கியது?

இந்தியா – சீனா எல்லை பிரச்சனை ஏப்ரல் மூன்றாவது வாரம் முதல் பூதாகரமாகி உள்ளது.

மெய்யான கட்டுப்பாட்டுக் கோடு (LAC) அன்று அழைக்கப்படும் இந்திய – சீன எல்லை 3,488 கிலோமீட்டர் நீளமுள்ளது.

யூனியன் பிரதேசமான லடாக் மற்றும் பிற நான்கு இந்திய மாநிலங்களின் எல்லையை ஒட்டி இது அமைந்துள்ளது.

கிழக்கு லடாக்கில் உள்ள பாங்கோங் த்சோ ஏரியில் சீனா தனது ரோந்து படகுகளின் நடமாட்டத்தை அதிகரித்துள்ளதாகச் செய்திகள் வெளியாகின.

மே மாதத் தொடக்கத்தில் இந்த ஏரியின் அருகே இந்திய மற்றும் சீன வீரர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது. இந்தப் பகுதி லடாக்கின் மெய்யான கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு அருகில் உள்ளது.

அக்சாய் சீனாவின் கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்தின் சில கூடாரங்கள் அமைக்கப்பட்டிருப்பதாக இந்தியா கூறியது. அதன்பிறகு அங்கு தனது ராணுவத்தினரின் எண்ணிக்கையை இந்தியா அதிகரித்தது.

ஆனால் சீனாவோ, கல்வான் பள்ளத்தாக்கு அருகே சட்டவிரோதமாகப் பாதுகாப்பு தொடர்பான கட்டுமானங்களை இந்தியா செய்து வருவதாக குற்றம் சாட்டியது.

லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் ஆயிரக்கணக்கான சீன துருப்புகள் நுழைந்துள்ளதாக அதிகாரிகள் கூறியதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா தனக்கு சொந்தமான இடம் என்று கருதும் எல்லைப்பகுதிகளில் சீனப் படைகள் கூடாரம் அமைத்து, சுரங்கங்கள் தோண்டி அதன் வழியாக கனரக உபகரணங்களைக் கொண்டு வந்துள்ளதாக இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

எல்லையில் இரு தரப்பும் மேற்கொள்ளும் கட்டுமானப் பணிகளே சமீபத்திய பதற்றத்துக்கு காரணம் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

சிலர் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 நீக்கம், இந்திய வெளியுறவுக் கொள்கையில் உண்டான மாற்றங்கள், கொரோனா பரவலால் சீனாவுக்கு உண்டாகியுள்ள சர்வதேச அழுத்தம் ஆகியவையும் இதற்கான காரணம் என்று கூறப்படுகிறது.

3. சமீபத்திய எல்லை மோதல் ஏன் முக்கியத்துவம் பெறுகிறது?

கடந்த 45 ஆண்டுகளில் இரு நாட்டு ராணுவத்தினரிடையே மிக மோசமான தாக்குதலாக இது அமைந்துள்ளது என்பதால் இது பெரிதும் கவனம் பெற்றுள்ளது.

கடைசியாக 1975-ம் ஆண்டு இந்தியாவின் அருணாச்சல பிரதேச எல்லை இந்தியா மற்றும் சீன ராணுவத்தினர் இடையே துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில் நான்கு இந்திய ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இதை சில முன்னாள் தூதர்கள் திட்டமிட்ட தாக்குதல் என்றும், சிலர் விபத்து என்றும் கூறினர்.

மெய்யான கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு 2 கிலோமீட்டருக்கு அருகில் துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டுகளை வீசக்கூடாது என 1996-ம் ஆண்டு இரு நாடுகள் இடையே ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது.

நரேந்திர மோதி பிரதமராக பொறுப்பேற்றபின் சீன அதிபர் ஷி ஜின்பிங் உடன் 18 முறை சந்திப்புகள் மேற்கொண்டுள்ளார். அதன்மூலம் வலுவான இருதரப்பு உறவு இந்த மோதலுக்கு பின் மோசமாகியுள்ளது.

4. கல்வான் பள்ளத்தாக்கில் எத்தனை இந்திய ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்?

ஜூன் 16 அன்று மதியம் ”இந்திய – சீன எல்லையில் நடைபெற்ற மோதலில் மூன்று இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழப்பு” என்ற செய்தி வெளிவந்தது.

அடுத்த சில மணி நேரத்திற்கு பிறகு இந்திய-சீன எல்லையில் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியும் வெளிவந்தது.

இவர்களில் பெரும்பாலானவர்கள் பிகார் ரெஜிமென்டை சேர்ந்தவர்கள்.

இந்திய ராணுவம் ஜூன் 16 அன்று இரவு வெளியிட்ட அறிக்கையில், “இந்திய – சீன துருப்புகள் இடையே இதற்கு முன்னர் கைகலப்பு ஏற்பட்ட லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் ஜூன் 15/16 அன்று மீண்டும் மோதல் ஏற்பட்டது. அதில் படுகாயமடைந்த 17 இந்திய ராணுவ துருப்புகள் அங்கு நிலவும் பூஜ்ஜியத்துக்கும் குறைவான வெப்பநிலை நிலவியதால் உயிரிழந்தனர். இதனால் இந்த சம்பவத்தில் உயிரிழந்த இந்திய ராணுவ துருப்புகளின் எண்ணிக்கை 20ஆக அதிகரித்துள்ளது. எல்லைப் பாதுகாப்பையும் நாட்டின் இறையாண்மையும் காப்பதில் இந்திய ராணுவம் உறுதியாக இருக்கிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

5. கல்வான் பள்ளத்தாக்கில் எத்தனை சீன ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்?

சீன தரப்பில் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெளிவாகத் தெரியவில்லை. சீன ராணுவத்தினர் 43 பேருக்கு காயம் அல்லது உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என இந்திய ராணுவம் தெரிவிக்கிறது.

ஆனால், இது குறித்த விவரங்கள் எதையும் சீனா வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை.

சீன ராணுவத்தினர் எத்தனை பேர் இறந்தனர் என்பது குறித்த கேள்விக்கு, பதிலளித்த சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஷாவோ லிஜியன், அது குறித்த தகவல் எதுவும் தன்னிடம் இல்லை என்று கூறினார்.

6. இந்திய ராணுவத்தினர் ஏன் ஆயுதத்தை பயன்படுத்தவில்லை?

“எல்லைப் பணியில் உள்ள எல்லாப் படையினரும் ஆயுதம் வைத்திருப்பார்கள். அதிலும் குறிப்பாக சாவடியை விட்டு வெளியே செல்லும்போது அவர்களிடம் ஆயுதம் இருக்கும். ஜூன் 15 அன்று கல்வான் பள்ளத்தாக்கிலும் அவர்கள் அப்படியே செய்தார்கள். இது போன்ற மோதல்களில் ஆயுதங்களைப் பயன்படுத்துவதில்லை என்பது நீண்ட கால நடைமுறை (1996, 2005 ஒப்பந்தங்களின் அடிப்படையில்),” என்று ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு ஒன்றுக்கு இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ட்விட்டரில் பதில் அளித்துள்ளார்.

1996 நவம்பர் 29ஆம் நாளன்று இந்தியா சீனா இடையில் கையெழுத்தானது. அந்த ஒப்பந்தத்தில், “மெய்யான கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் எந்தவொரு சக்தியையும் பயன்படுத்த மாட்டார்கள். ராணுவ பலத்தைப் பயன்படுத்துவதாகவோ ராணுவத்தின் வல்லமையைக் காட்டுவதாகவோ அச்சுறுத்த மாட்டார்கள்,” என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, 1993ஆம் ஆண்டிலும் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த ஒப்பந்தத்தின்படி, “இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான எல்லைப் பிரச்சனை அமைதியான மற்றும் சுமுகமான பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்க்கப்பட வேண்டும். எந்தவொரு தரப்பும் தனது பலத்தைப் பயன்படுத்தக்கூடாது, அல்லது ராணுவ வல்லமையைப் பயன்படுத்தப் போவதாக அச்சுறுத்தக்கூடாது,” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதன் பின்னர், 2005ஆம் ஆண்டில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டபோது, 1993 மற்றும் 1996 ஒப்பந்தங்களில் குறிப்பிடப்பட்டிருந்த பல விஷயங்கள் மீண்டும் வலியுறுத்தப்பட்டன.

7. கல்வான் பள்ளத்தாக்கு இரு நாடுகளுக்கும் ஏன் முக்கியம்?

இந்தியாவின் லடாக் பிராந்தியத்திற்கும் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள அக்சாய் சீனா பகுதிக்கும் இடையே கல்வான் பள்ளத்தாக்கு அமைந்துள்ளது. இந்த பள்ளத்தாக்கு, இந்தியா, சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகியவற்றின் எல்லைக்கு அருகில் அமைந்துள்ளதால் இந்த பகுதியை இந்தியாவும் சீனாவும் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகக் கருதி வருகின்றன.

இந்தப் பள்ளத்தாக்கு வழியாகச் செல்லும் மெய்யான கட்டுப்பாட்டுக் கோடுதான் இந்தியா மற்றும் சீனாவை பிரிக்கிறது. இந்த பள்ளத்தாக்கு அமைந்துள்ள அக்சாய் சீனா பகுதி தற்போது சீனாவின் கட்டுப்பாட்டிலிருந்தாலும், அந்த பகுதி தங்களுக்குச் சொந்தமானது என இந்தியா உரிமை கோரி வருகிறது.

1962-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய – சீனப் போரின்போது, கல்வான் நதி போரின் மையப்பகுதியாக இருந்ததை வைத்தே அதன் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள முடியும் என தெரிவிக்கிறார் சர்வதேச விவகார நிபுணரான எஸ்.டி முனி.

அதே போல இந்தியாவுக்கு பாகிஸ்தானுடனான உறவும் மோசமடைந்து வருவதால், இந்த ஆபத்து மேலும் அதிகரித்துள்ளது. இந்தச் சூழலில்தான், தன்னுடைய எல்லைகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் இந்தியாவிடம் வலுப்பட்டுள்ளது.

அக்சாய் சீனா பகுதியில் இந்தியா கட்டடம் ஒன்றை உருவாக்குமானால், அதன் மூலம் அந்த பகுதியில் சீனப்படையினரின் நடமாட்டத்தைக் கண்காணிக்க முடியும்.

ஆனால் கல்வான் பள்ளத்தாக்கில் டோக்லாம் போன்ற சூழல் இல்லை எனவும் அக்சாய் சீனா பகுதியில் சீன ராணுவம் வலிமையாக இருப்பதால், பதற்றத்தை அதிகரிக்கும் பட்சத்தில் இந்தியா அதற்கான விலையை கொடுக்க வேண்டி இருக்கும் எனச் சர்வதேச விவகாரங்களுக்கான வல்லுநர் ஒருவர் தெரிவித்ததாகச் சீன அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

8. கட்டுப்பாட்டு எல்லைக் கோடு, மெய்யான கட்டுப்பாட்டுக் கோடு என்ன வேறுபாடு?

மொத்தம் 15,106.7 கிலோமீட்டர் நீளமுள்ள இந்தியாவின் நில எல்லையானது, மொத்தம் ஏழு நாடுகளைத் தொட்டு செல்கிறது. இதைத் தவிர, 7516.6 கி.மீ நீளமுள்ள கடல் எல்லையைக் கொண்டது இந்தியா.

வங்கதேசம் (4,096.7 கி.மீ), சீனா (3,488 கி.மீ), பாகிஸ்தான் (3,323 கி.மீ), நேபாளம் (1,751 கி.மீ), மியான்மர் (1,643 கி.மீ), பூடான் (699 கி.மீ), ஆஃப்கனிஸ்தான் (106 கி.மீ) ஆகிய இந்த ஏழு நாடுகளும் இந்தியாவுடன் எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் நாடுகள் ஆகும்.

இந்திய நிர்வாகத்தின் மற்றும் பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் இருக்கும் காஷ்மீர் பகுதியில் நடுவே 740 கிலோமீட்டர் தூரத்தில் இந்த கட்டுப்பாட்டு எல்லைக் கோடு (Line of Control – LoC) இருக்கிறது.

இந்தியா, சீனாவுடன் 3,488 கி.மீ எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. இது மெய்யான கட்டுப்பாட்டுக் கோடு (Line of Actual Control – LAC) எனப்படுகிறது.

ஜம்மு-காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட், சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகியவற்றை ஒட்டி இந்த எல்லை செல்கிறது.

மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ள இந்த எல்லையின் மேற்குப் பகுதியில் ஜம்மு-காஷ்மீர், மத்தியப் பகுதியில் இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் மற்றும் கிழக்குப் பகுதியில் சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசம் இடம் பெற்றுள்ளன.

9. இந்தியா – சீனா ஆகிய நாடுகள் இனி என்ன செய்யும்?

தற்போது உள்ள பிரச்சனையைத் தீர்க்க அரசு ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் இந்தியாவும் சீனாவும் நெருங்கிய பேச்சுவார்த்தையில் உள்ளது என சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

மேலும், மெய்யான கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடந்து சீனப் பகுதியில் இந்த மோதல் நடந்துள்ளது. எனவே இதற்கு சீனா பொறுப்பல்ல எனவும் அந்த அமைச்சத்தின் செய்தித் தொடர்பாளர் ஷாவோ லிஜியன் கூறியுள்ளதாக சீன அரசின் குளோபல் டைம்ஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்திய மற்றும் சீன ராணுவங்களின் மூத்த அதிகாரிகள் இடையே இந்தப் பதற்றத்தை தணிக்க பேச்சு வார்த்தை நடத்தியதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

“மெய்யான கட்டுப்பாட்டுக் கோட்டின் (எல்ஏசி) இந்திய எல்லைக்குள்ளேயே எங்களது நடவடிக்கைகள் இருந்தன என்பதில் இந்தியா தெளிவாக உள்ளது. சீன தரப்பிலிருந்தும் இதனை எதிர்பார்க்கிறோம். எல்லையில் அமைதியை பாதுகாக்க வேண்டியது அவசியம். அதே சமயம் இந்திய இறையாண்மையைப் பேணிப்பாதுகாப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” என்று இந்திய வெளியுறத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்துள்ளார்.

10. இந்தியா – சீனா இதற்கு முன் எப்போது மோதிக்கொண்டன?

1962 போர்: இமய மலையில் சீனாவுடனான எல்லைப் பகுதியில் நடைபெற்ற குறுகியகால, கசப்பான போர் முடிந்து அரை நூற்றாண்டுக்கு அதிகமானபோதும், அந்த அதிர்ச்சி மறக்க முடியாதது. இந்த யுத்தத்தில், இந்திய ராணுவத்துக்கு ஏற்பட்ட தோல்வி அரசியல் தோல்வியாகவும் கருதப்படுகிறது.

சீனாவுக்கும் இந்தியாவுக்கும் தொடர்ந்து சிறிய அளவிலான தொடர் மோதல்கள் இருந்தாலும், 1959 நவம்பர் தொடக்கத்தில் லடாக்கில் நிகழ்ந்த மோதல்களை அடுத்து, பிரச்சனைகள் பெரிதாகின, கருத்து வேறுபாடுகளும் வலுத்தன.

1967 மோதல்: 1967-ம் ஆண்டு இந்தியாவின் சிக்கிம் மற்றும் சீனாவின் திபெத் எல்லையில் உள்ள நாதுலா கணவாயில் இந்திய மற்றும் சீன ராணுவத்தினர் இடையே நடந்த மோதலில் 300 சீன ராணுவத்தினரும், 65 இந்திய ராணுவத்தினரும் உயிரிழந்தனர்.

1962 போருக்குப் பின்னர் இந்தியாவும் சீனாவும் தங்களது தூதர்களைத் திரும்ப அழைத்துக்கொண்டன. இருப்பினும் சிறிய குழுக்கள் மட்டுமே இரு நாட்டுத் தூதரகங்களிலும் பணியாற்றின. இந்தநிலையில், இந்தியத் தூதரகத்தில் பணியாற்றும் இந்தியர்கள் தங்கள் நாட்டை உளவு பார்ப்பதாகச் சீனா குற்றஞ்சாட்டியது.

1975: 1975-ம் ஆண்டு இந்தியாவின் அருணாச்சல பிரதேச எல்லை இந்தியா மற்றும் சீன ராணுவத்தினர் இடையே துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில் நான்கு இந்திய ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

11. இந்திய – சீன உறவுகளை சமீபத்திய மோதல் எப்படி பாதிக்கும்?

இது பதில் சொல்வதற்கு சற்று கடினமான கேள்வி. இரு நாடுகளும் இன்னும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இனி வரும் மாதங்கள் இருநாட்டு உறவில் மிகவும் முக்கியமானவை.

நிலைமை சரியாக ராணுவ மட்டத்தில் மட்டுமல்லாது அரசியல் தலைவர்கள் மட்டத்திலும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் கடுமையாக அதிகரித்து வரும் ராணுவம் மற்றும் ராஜதந்திர பதற்றங்களுக்கு மத்தியில், உலகின் இரண்டாவது மற்றும் ஐந்தாவது பெரிய பொருளாதாரங்களுக்கு இடையே பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.

எதிர்காலத்தில் நடக்கும் பேச்சு வார்த்தைகள்தான் அனைத்தையும் முடிவு செய்யும். அது வரை உறவு சிக்கலாகவே இரும்கும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »