Press "Enter" to skip to content

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): நோய்த்தொற்றிலிருந்து மீண்டதாக அறிவிக்க உலக நாடுகள் அவசரப்படுவது ஏன்?

தாரேந்திர கிஷோர்
பிபிசி நிருபர்

உலகில் கிட்டத்தட்ட 188 நாடுகள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளன. நியூசிலாந்து, ஃபிஜி போன்ற சில நாடுகள் சமீபத்தில் தங்களை கொரோனா தொற்று இல்லாத நாடாக அறிவித்துள்ளன. ஆனால், நியூசிலாந்தில் சமீபத்தில் புதிய தொற்று கண்டறியப்பட்டது.

கொரோனாவில் இருந்து முற்றிலும் விடுபட்டதாக ஜூன் எட்டாம் தேதியன்று நியூசிலாந்து அறிவித்தது. அன்றுதான் நாட்டின் கடைசி நோயாளியும் கொரோனாவில் இருந்து முழுமையாகக் குணமானார். அனால், சமீபத்தில் கண்டறியப்பட்ட புதிய தொற்றால் அதிகாரிகள் கலக்கமடைந்துள்ளனர்.

தொற்றுநோய் உறுதிப்படுத்தப்பட்ட இரண்டு நபர்கள் இங்கிலாந்திலிருந்து திரும்பி வந்துள்ளனர், அவர்கள் பரஸ்பரம் தொடர்புடையவர்கள் என நியூசிலாந்து சுகாதார அமைச்சகம் கூறுகிறது.

தனது நாட்டில் கொரோனா இல்லை என்று கடந்த வாரம் அறிவித்த நியூசிலாந்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தையும் நீக்கியது, ஆனால் சர்வதேச விமானங்களுக்கான தடை மட்டும் தொடர்கிறது.

நாட்டில் கொரோனா இல்லை என்று பிரதமர் ஜெசிந்தா அர்டென் அறிவித்திருந்தாலும், நாட்டில் மீண்டும் கொரோனா ஏற்படும் அபாயம் உள்ளது என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

நாட்டில் கொரோனா முற்றிலுமாக ஒழிந்துவிட்டதாக ஜூன் ஐந்தாம் தேதியன்று ஃபிஜி அறிவித்தது. அப்போது டிவிட்டர் செய்தி வெளியிட்ட அந்நாட்டு பிரதமர் பிராங்க் பைனிமராமா, “ஃபிஜியின் கடைசி கொரோனா நோயாளியும் குணமாகிவிட்டார். எங்கள் பரிசோதனை எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. கடைசியாகத் தொற்று ஏற்பட்டு 45 நாட்கள் ஆகின்றன என்பதோடு, இறப்புகள் எதுவும் ஏற்படவில்லை.

பிரார்த்தனை, கடின உழைப்பு மற்றும் அறிவியலின் உதவியால் தான் இது சாத்தியமாயிற்று” என்று தெரிவித்திருந்தார்.

நியூசிலாந்து மற்றும் ஃபிஜி தவிர வத்திக்கான் சிட்டி, தான்சானியா போன்ற பல நாடுகளும், தங்கள் நாட்டில் கொரோனா இல்லை என்று அறிவித்தன.

புதிதாக நோய்த்தொற்று எதுவும் பதிவாகவில்லை என்பதுடன், நோய்த்தொற்றால் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்த அனைத்து நோயாளிகளும் குணமடைந்தனர் எனவும் கூறியுள்ளன.

45 நாட்கள் வரை புதிய வழக்குகள் பதிவாகாததால் ஃபிஜி இந்த அறிவிப்பை வெளியிட்டது. ஆனால் 17நாட்கள் வரை கொரோனா தொற்று பதிவாகவில்லை என்பதால் நியூசிலாந்து கொரோனாவில் இருந்து முற்றிலும் விடுபட்டதாக அறிவித்தது.

அதேபோல், மற்ற நாடுகளும் கொரோனா பாதிப்பிலிருந்து விடுபட்டதாக வெவ்வேறு கால அடிப்படையில் அறிவித்துள்ளன. சரி, ஒரு நாடு கொரோனா பாதிப்பிலிருந்து முற்றிலும் விடுபட்டது என்பதை எதன் அடிப்படையில் தீர்மானிக்கிறது?

இந்த கேள்வியை டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைகழகத்தின் சமூக மருத்துவம் மற்றும் சமூக சுகாதார மையத்தின் தலைவர் டாக்டர் சங்கமித்ரா ஆச்சார்யாவிடம் கேட்டோம்.

”45 நாட்களுக்கு புதிய தொற்று நோய் எதுவும் பதிவாகவில்லை என்றாலும், யாருக்கும் நோய் அறிகுறி ஏதும் இல்லை என்றாலும், அந்த பகுதியை கொரோனா இல்லாததாக அறிவிக்கலாம் என்று ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. ஆனால் வெவ்வேறு நாடுகளும் இந்த கால அவகாசத்தை முடிவு செய்வதில் தங்கள் தனிப்பட்ட அளவுகோல்களை வைத்திருக்கின்றன.” என்கிறார் அவர்.

மேலும் அவர், ” இறப்பு விகிதம் மிகக்குறைவாக உள்ள நாடுகள் கொரோனா பாதிப்பு இல்லை என்று அறிவிப்பதற்கான காலகட்டத்தை 45 நாட்கள் என்பதிலிருந்து குறைத்துக் கொண்டன. தாங்கள் சிறப்பாக செயல்படுகிறோம் என்பதை இந்த நாடுகள் உலகுக்குச் சொல்ல வேண்டும் என்பதற்காக இப்படிப்பட்ட உத்திகளை மேற்கொண்டன. எனவே, சில நாடுகள் 15 நாட்களில் கொரோனாவில் இருந்து விடுபட்டதாக அறிவித்தன. சில நாடுகள் ஒரு சில நாட்கள் நோய் இல்லாத நிலை ஏற்பட்டாலே, தங்கள் நாட்டில் கொரோனா இல்லை என்று அறிவித்து வருகின்றன. ” என்கிறார் .

இந்தியாவும் தற்போது இந்த கால இடைவெளியைக் குறைத்துவிட்டது. சுமார் இரண்டு வாரங்களாக, தொற்று ஏற்படாத பகுதிகளில், ஏற்கனவே பாதிக்கப்பட்ட அனைத்து நோயாளிகளும் குணப்படுத்தப்பட்டால், அந்த குறிப்பிட்ட பகுதியை, கொரோனா இல்லாத பகுதியாக இந்தியா அறிவிக்கிறது.

கொரோனா இல்லை என்று அறிவிப்பதில் அவசரம் ஏன்?

“ஒவ்வொரு நாடும் தாங்கள் கொரோனாவை சிறப்பாக கையாண்டு வென்றோம் என்பதை நிரூபிப்பதில் மும்முரமாக உள்ளன. தனது நாட்டின் பிம்பத்தை கட்டமைப்பதற்காக நாடுகள் அவசரப்படுகின்றன. அதற்கு அடிப்படையான காரணம் பொருளாதாரம் என்பதும் உண்மைதான். ஒவ்வொரு நாடும் விரைவில் தனது பொருளாதாரத்தை மீண்டும் இயல்பு நிலைக்கு மீட்டெடுக்க விரும்புகிறது. அதற்கு நாட்டில் கொரோனா எல்லை என்று அறிவிப்பது முக்கியம். ஆனால் அது நியூசிலாந்து போன்ற ஒரு நாட்டிற்கு சாத்தியமாகும். இந்தியா போன்ற நாட்டிற்கு அது அவ்வளவு எளிதானது அல்ல” என்கிறார் சங்கமித்ரா ஆச்சார்யா

இந்தியாவுக்கு என்ன பிரச்சனை?

இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் இந்த விவகாரத்தில் வித்தியாசமான அணுகுமுறையை மேற்கொள்கின்றன. எனவே ஒரு மாநிலம் அல்லது பிராந்தியம் கூட கொரோனா இல்லாத இடம் என்று அறிவிப்பது கடினம் என்று சங்கமித்ரா ஆச்சார்யா கூறுகிறார்.

“கேரளாவில், ஆரம்ப நாட்களில், கொரோனா தொற்று இருந்த மூன்று-நான்கு மாவட்டங்களில், நோய் கட்டுப்பாட்டிற்குள் இருந்தது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் இடப்பெயர்வு தொடங்கும் வரை சில வாரங்கள் அங்கு கட்டுப்பாட்டிலிருந்ததை அனைவரும் கண்டோம். ஆனால், மகாராஷ்டிராவில் தொற்று தொடங்கிய நான்கு வாரங்களில், புனே, மும்பை மட்டுமல்லாமல் மேலும் பல புதிய மாவட்டங்களுக்கும் பரவியது. வடகிழக்கு மாநிலங்களில் பல வாரங்களாக கொரோனா பரவாமல் இருந்த நிலையில், பிறகு சொற்ப எண்ணிக்கையில் நோய்த்தொற்று பதிவாகின” என்கிறார்.

அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் நிலைமை என்ன?

இதுவரை, கொரோனா இல்லாத நாடு என்று அறிவித்துள்ள கிட்டத்தட்ட அனைத்து நாடுகளும் அளவில் சிறியவை என்பதோடு, குறைந்த மக்கள் தொகை கொண்ட நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்தின் மொத்த மக்கள் தொகை சுமார் ஐம்பது லட்சம் ஆகும். ஃபிஜி மற்றும் தான்சானியாவின் மக்கள் தொகை முறையே ஒன்பது லட்சம் மற்றும் ஐந்தரை கோடி ஆகும்.

சிறிய மற்றும் குறைந்த அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு இல்லை என்று அறிவிப்பது மிகவும் எளிதானது என்றே சொல்லலாம்.

“மக்கள் தொகை அதிகமாக இருக்கும் நாடுகளில், அதிக தொற்று விகிதம் இருக்கும் என்ற கணிப்பு பொய்த்துவிட்டது. உதாரணமாக இந்தோனேசியா மற்றும் மலேசியாவை எடுத்துக் கொள்ளலாம். இந்த நாடுகளில் மக்கள்தொகை அடர்த்தியாக இருந்தாலும் நோய்த்தொற்றும், இறப்பு விகிதமும் குறைவாக இருக்கின்றது. மக்கள் தொகை குறைவாக உள்ள சில நாடுகளின் பாதிப்புடன் ஒப்பிடும்போது அங்கு தாக்கம் குறைவாகவே இருக்கிறது.” என்கிறார் சங்கமித்ரா ஆச்சார்யா

வைரஸ் நோய்த்தொற்றின் பரவலும் தாக்கமும் நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. அமெரிக்காவில் நோய்த்தொற்றின் வடிவம் வேறாகவும், ஸ்பெயின் மற்றும் இத்தாலியில் அதற்கு மாறாகவும் உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டுகிறார் அவர்.

கொரோனா பாதிப்பே இல்லாத நிலையை நோக்கி எவ்வாறு செல்வது?

கொரோனாவுக்கான தடுப்பூசிகள் மற்றும் மருந்துகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை, ஆனால் இந்த பெருந்தொற்று பரவாமல் தடுப்பதில் ஒவ்வொரு நாடும் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.

கொரோனா இல்லாத நிலையை எட்டுவதற்கு இரண்டு விஷயங்கள் முக்கியமானவை என டாக்டர் சங்கமித்ரா ஆச்சார்யா வலியுறுத்துகிறார் – ஒன்று பரிசோதனை மற்றும் மற்றொன்று பயணம். பரிசோதனையை அதிகரிக்கவேண்டும், பயணத்தை தவிர்க்கவேண்டும்.

“ஹாட்ஸ்பாட்டுகளை கணக்கில் எடுத்துக் கொண்டால், அந்த இடங்களில் தொடக்கத்திலேயே முழுமையான ஊரடங்கு இருந்திருந்தால், அது போதுமான அளவு பயனளித்திருக்கும். கேரளாவில் ஆரம்ப நாட்களில் இந்த முறை பயனுள்ளதாக இருப்பதைக் கண்டோம். சீனாவின் வுஹான் பிராந்தியமும் இதற்கான உதாரணமாக இருந்தது. வுஹான் பகுதிக்கு வெளியே இன்றும் கொரோனா பரவவில்லை என்பதை குறிப்பாகச் சொல்லலாம். இப்போது பெய்ஜிங்கிலும் சில பாதிப்புகள் பதிவாகியிருந்தபோதிலும், வுஹான் பிராந்தியம் மட்டுமே கொரோனாவால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அதற்கு முக்கியமான காரணம், தொற்று கண்டறியப்பட்டதுமே, வுஹான் பிராந்தியமே முழுமையாக மூடப்பட்டதுதான்” என்று டாக்டர் சங்கமித்ரா ஆச்சார்யா கூறுகிறார்.

“எனவே, முழுமையான ஊரங்குக்கு பதிலாக, ஹாட்ஸ்பாட்களை அடையாளம் கண்டு, அங்கு கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டும். முழுமையான ஊரடங்கால் அதிக பலன் கிடைக்கவில்லை. மாறாக, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்களின் இடம்பெயர்வு போன்ற பல பிரச்சனைகள் உருவாகின” என்று அவர் கூறுகிறார்.

கொரோனா முற்றிலும் இல்லாததாக அறிவிக்கப்பட்ட பிறகும், சில நாடுகளில் கொரோனாவின் புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதைத் தவிர்க்கமுடியாது என்று கூறும் சங்மித்ரா ஆச்சார்யா, இப்போது முக்கியமான விஷயம் என்னவென்றால், ஒரு நாடு எவ்வாறு தொற்றுநோயைக் கையாளுகிறது என்பதை பொறுத்தே அனைத்துமே முடிவுசெய்யப்படும் என்றார்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »