Press "Enter" to skip to content

டிக் டாக் செயலிக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்படும்: டிரம்ப் அறிவிப்பு

பட மூலாதாரம், EPA

சீனாவை சேர்ந்த டிக் டாக் செயலிக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்படும் அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்..

இத்தடை தொடர்பாக உத்தரவில் இன்று (சனிக்கிழமை) கையெழுத்திட உள்ளதாகச் செய்தியாளர்களிடம் டிரம்ப் தெரிவித்தார்.

சீனாவின் மிக பெரிய தொழில் நுட்ப நிறுவனமான பைட் டான்ஸ் நிறுவனம் டிக் டாக் செயலியை நடத்தி வருகிறது. இந்தநிலையில், அமெரிக்கர்களின் தனிப்பட்ட தகவல்களைத் திரட்ட டிக் டாக் செயலி பயன்படுத்தப்படலாம் என அமெரிக்காவின் இணையப் பாதுகாப்பு அதிகாரிகள் கவலை தெரிவித்திருந்தனர்.

சீன அரசால் இயக்கப்படுவதாகவும், சீனா அரசுக்குத் தரவுகளை அளிப்பதாகவும் வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை டிக் டாக் மறுத்து வருகிறது.

அமெரிக்காவில் 80 மில்லியன் பயன்பாட்டாளர்களைக் கொண்டுள்ள டிக் டாக், அங்கு வேகமாக வளர்ந்து வந்தது. தற்போது இந்த தடை பைட் டான்ஸ் நிறுவனத்திற்கு மிகப்பெரிய பாதிப்பாக கருதப்படுகிறது.

டிக் டாக் மீதான தடை எவ்வாறு செயல்படுத்தப்படும், அது என்ன சட்ட சவால்களை எதிர்கொள்ளும் என்பது உடனடியாகத் தெரியவில்லை.

மைக்ரோசாப்ட் நிறுவனம் டிக் டாக் செயலியை வாங்குவதற்கு பைட் டான்ஸ் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், டிரம்ப் அரசு இதற்கு அனுமதிக்குமா என சந்தேகம் எழுந்துள்ளது. இதை மீறி ஒரு வேளை மைக்ரோசாப்ட் நிறுவனம் டிக் டாக்கை வாங்கினால், பைட் டான்ஸ் நிறுவனம் அமெரிக்காவிலிருந்து வெளியேறும் என தகவல்கள் கூறுகின்றன.

டிரம்பின் தடை அறிவிப்பு குறித்து கருத்து தெரிவிக்க டிக் டாக்கின் ஒரு செய்தி தொடர்பாளர் மறுத்துள்ளார்.

டிக் டாக்

பட மூலாதாரம், Getty Images

ஆனால், “அமெரிக்காவில் நீண்ட காலம் டிக் டாக் வெற்றி நடை போடும் என்ற நம்பிக்கை உள்ளது“ என அமெரிக்க ஊடகங்களிடம் டிக் டாக் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

வர்த்தக பிரச்சனை, கொரோனா வைரஸ் பிரச்சனை என சீன அரசுக்கும், டிர்ம்ப் நிர்வாகத்திற்கும் இடையிலான பிரச்சனை தீவிரமடைந்துள்ள நிலையில், டிக் டாக் மீதான தடை வந்துள்ளது.

‘’டிக் டாக் பயன்பாட்டாளர்கள் பெரும் ஆபத்தில் உள்ளனர். சீனா கம்யூனிஸ்ட் கட்சியிடம் உங்களின் தனிப்பட்ட தரவுகளைக் கொண்டு சேர்க்கிறீர்கள்” என அமெரிக்க வெளியுறவு செயலாளர் மைக் பாம்பியோ ஏற்கனவே குற்றஞ்சாட்டியிருந்தார்.

டிக் டாக் செயலி மூலம் சேகரிக்கப்படும் தரவுகள் சீனாவிற்கு வெளியில் தான் சேகரிக்கப்படுகிறது என டிக் டாக் நிறுவனம் தொடர்ந்து விளக்கம் அளித்து வருகிறது.

‘எங்களைச் சீன அரசாங்கம் இயக்குகிறது என்ற தகவல்கள் முற்றிலும் தவறானது” என ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் டிக் டாக் பொது கொள்கை பிரிவுக்கான தலைவர் தியோ பெர்ட்ரம் கூறுகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »