Press "Enter" to skip to content

டிக் டாக்கின் அமெரிக்க உரிமத்தை வாங்கும் திட்டத்தை நிறுத்திய மைக்ரோசாப்ட்

அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்குத் தடை விதிக்கப்படும் என அதிபர் டிரம்ப் அறிவித்துள்ள நிலையில், டிக் டாக்கின் அமெரிக்கச் செயல்பாடுகளை வாங்கும் திட்டத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் நிறுத்தியுள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன.

டிக் டாக்கின் விற்பனை கிட்டதட்ட முடிவாகியிருந்த நிலையில், டிரம்பின் அச்சுறுத்தலுக்குப் பிறகு ஒப்பந்தம் நிறுத்தப்பட்டுள்ளது.

’’மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்த பேச்சுவார்த்தைகளை தற்போது நிறுத்தியுள்ளது. அதே சமயம் வெள்ளை மாளிகையின் ஆதரவைப் பெறக் கடைசிக் கட்ட முயற்சிகளில் டிக் டாக்கை நடத்தி வரும் பைட் டான்ஸ் நிறுவனம் ஈடுபட்டுள்ளது’` என வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது.

அமெரிக்கர்களின் தனிப்பட்ட தகவல்களைத் திரட்ட டிக் டாக் செயலி பயன்படுத்தப்படலாம் என அமெரிக்காவின் இணையப் பாதுகாப்பு அதிகாரிகள் கவலை தெரிவித்திருந்தனர்.

அமெரிக்காவில் 80 மில்லியன் பயன்பாட்டாளர்களைக் கொண்டுள்ள டிக் டாக், அங்கு வேகமாக வளர்ந்து வந்தது. தற்போது இந்த தடை பைட் டான்ஸ் நிறுவனத்திற்கு மிகப்பெரிய பாதிப்பாகக் கருதப்படுகிறது.

சீன அரசால் இயக்கப்படுவதாகவும், சீனா அரசுக்குத் தரவுகளை அளிப்பதாகவும் வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை டிக் டாக் மறுத்து வருகிறது.

டிக் டாக்

பட மூலாதாரம், Getty Images

டிக் டாக் செயலிக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்படும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடந்த வெள்ளிக்கிழமை செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்தார். அதன் பின்னர் நேற்று( சனிக்கிழமை) அறிக்கை ஒன்றை வெளியிட்ட வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர்,“ டிக் டாக் செயலியால் தேசிய பாதுகாப்புக்கும் ஏற்படும் அச்சுறுத்தல்கள் குறித்து அரசு தீவிரமாகக் கவனித்து வருகிறது. எங்களது முடிவுகளை தொடர்ந்து பரிசீலனை செய்வோம்“ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 3 ஆண்டுகளில், அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாகக் கூறி, வெள்ளை மாளிகையின் ஆதரவைப் பெற பைட் டான்ஸ் நிறுவனம் முயன்று வருவதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் கூறியுள்ளது.

மைக்ரோசாப்டின் போட்டி நிறுவனங்கள் சமூக வலைத்தளங்களில் முன்னணியில் உள்ள நிலையில், டிக் டாக்கை வாங்குவதன் மூலம் சமூக வலைத்தளத்தில் தனது தடத்தைப் பதிக்க மைக்ரோசாப்ட் நினைக்கிறது. டிக் டாக்கின் அமெரிக்க உரிமத்தின் மதிப்பு 15 பில்லியன் டாலரில் இருந்து 30 பில்லியன் டாலர்கள் வரை இருக்கும் என கருதப்படுகிறது.

அதிபர் டிரம்பின் அச்சுறுத்தல், மைக்ரோசாப்ட் நிறுவனம் குறைந்த விலையில் டிக் டாக்கை வாங்குவதற்கான ஒரு தந்திரமாக இருக்கலாம் என பைட் டான்ஸ் இயக்குநர்கள் நினைப்பதாக பைனான்சியல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

“வதந்திகள் குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. அமெரிக்காவில் நீண்ட காலம் டிக் டாக் வெற்றி நடை போடும் என்ற நம்பிக்கை உள்ளது“ என டிக் டாக் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »