Press "Enter" to skip to content

நாசா & ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்: பயணத்தை முடித்து நீரில் தரையிறங்கிய விண்வெளி வீரர்கள் மற்றும் பிற செய்திகள்

பட மூலாதாரம், Getty Images

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விண்வெளி ஓடத்தில், முதல் முறையாக விண்வெளிக்கு பயணித்த அமெரிக்க விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாக மெக்சிகோ வளைகுடாவின் கடல் பகுதியில் தரை இறங்கியுள்ளனர்.

‘ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் கேப்ஸ்யூள்’ என்ற விண்வெளி ஓடம் மூலம் அமெரிக்க விண்வெளி வீரர்களான டக் ஹர்லி மற்றும் பாப் பெஹன்கென் விண்ணிற்கு இரண்டு மாத பயணம் மேற்கொண்டனர். இருவரையும் விண்வெளி வாகனத்தில் இருந்து பத்திரமாக பூமியில் தரை இறக்க மீட்பு கப்பல் அனுப்பப்பட்டது. இருவரும் ஃபோலோரிடா வளைகுடா கடற்பகுதியில் உள்ள மெக்சிக்கோ வளைகுடாவில் பாதுகாப்பாக தரை இறங்கியுள்ளனர்.

நாசா விண்வெளி வீரர்கள் இரண்டு மாத விண்வெளி பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் இந்த திட்டத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

டக் ஹர்லி மற்றும் பாப் பெஹன்கென்

பட மூலாதாரம், NASA

முதல் முறையாக தனியார் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் உடன் சேர்ந்து நாசா செயல்படுத்தும் இத்திட்டம் வரலாற்று சிறப்புமிக்கதாக கருதப்படுகிறது. இதுவரை சொந்த விண்வெளி திட்டங்களை மட்டுமே செயல்படுத்தி வந்த நாசா, முதல் முறையாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தயாரித்த விண்கலத்தை பயன்படுத்தி விண்வெளி வீரர்களை விண்ணிற்கு அனுப்பியது.

உலகிலேயே இதுபோன்ற சேவையை வழங்கும் முதல் நிறுவனம் எலன் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ், சேவையை பயன்படுத்துவது, நாசாவிற்கு செலவை குறைப்பதாக கூறப்பட்டது. இந்த வெற்றிகரமான பயணத்தின் மூலம் அமெரிக்காவின் புதிய வர்த்தகம் துவங்கியுள்ளது.

எதிர்காலத்தில் விண்வெளி பயணம் மேற்கொள்வதற்கான அனைத்து போக்குவரத்து தேவைகளுக்கும் ஸ்பேஸ் எக்ஸ் போன்ற தனியார் நிறுவனத்தை அமெரிக்க பயன்படுத்தும் என கூறப்படுகிறது.

உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழக ஆளுநருக்கு கொரோனா

அமித் ஷா

பட மூலாதாரம், Getty Images

இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

“கொரோனா தொடக்க அறிகுறிகள் தென்பட்டதால் , பரிசோதனை செய்யப்பட்டது. முடிவு பாசிட்டிவ் என வந்துள்ளது. எனது உடல்நிலை தற்போது சீராக உள்ளது. ஆனால் மருத்துவர்கள் அறிவுரைக்கேற்ப மருத்துவமனையில் சேர்ந்துள்ளேன். கடந்த சில நாட்களாக என்னை சந்தித்தவர்கள் தனிமைப்படுத்திக்கொண்டு, பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்“ என அமித் ஷா ட்வீட் செய்துள்ளார்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திற்கும் இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் சிலருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருப்பதால் தமிழக ஆளுநர் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாக கடந்த ஜூலை 29-ம் தேதி ஆளுநர் மாளிகை தெரிவித்திருந்தது.

தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு, அறிகுறியற்ற கொரோனா தொற்று உள்ளதாக அவருக்கு பரிசோதனை செய்த காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது.

எகிப்திலுள்ள பிரமிடுகளை கட்டியது வேற்றுகிரகவாசிகளா?

எகிப்து

பட மூலாதாரம், Getty Images

உலக அதிசயங்களில் ஒன்றான எகிப்திலுள்ள பிரமிடுகளை வேற்றுகிரகவாசிகள் கட்டியதாக கூறிய பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க்கிற்கு அந்த நாட்டு அரசு பதிலடி கொடுத்துள்ளது.

பிரமிடுகளை கட்டும் மாபெரும் பணியில் வேற்றுகிரகவாசிகள் ஈடுபட்டதாக கூறி வரும் சூழ்ச்சி கோட்பாட்டாளர்களின் கருத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் டெஸ்லா, ஸ்பைஸ்எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவரான எலான் மஸ்க் சில நாட்களுக்கு முன்னர் ட்விட்டரில் கருத்தொன்றை பதிவிட்டிருந்தார்.

ஆனால், எகிப்தின் சர்வதேச ஒத்துழைப்புத்துறையின் அமைச்சர் இதை துளியும் ஏற்றுக்கொள்வதாக இல்லை.

டிக் டாக்கின் அமெரிக்க உரிமத்தை வாங்கும் திட்டத்தை நிறுத்திய மைக்ரோசாப்ட்

டிக் டாக்

அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்குத் தடை விதிக்கப்படும் என அதிபர் டிரம்ப் அறிவித்துள்ள நிலையில், டிக் டாக்கின் அமெரிக்கச் செயல்பாடுகளை வாங்கும் திட்டத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் நிறுத்தியுள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன.

டிக் டாக்கின் விற்பனை கிட்டதட்ட முடிவாகியிருந்த நிலையில், டிரம்பின் அச்சுறுத்தலுக்குப் பிறகு ஒப்பந்தம் நிறுத்தப்பட்டுள்ளது.

”மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்த பேச்சுவார்த்தைகளை தற்போது நிறுத்தியுள்ளது. அதே சமயம் வெள்ளை மாளிகையின் ஆதரவைப் பெறக் கடைசிக் கட்ட முயற்சிகளில் டிக் டாக்கை நடத்தி வரும் பைட் டான்ஸ் நிறுவனம் ஈடுபட்டுள்ளது’` என வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது.

ஆன்லைன் வகுப்பு: கல்வியை இழக்கும் அபாயத்தில் பழங்குடியினப் பள்ளி மாணவர்கள்

மாணவர்கள்

பட மூலாதாரம், SUBRAMANIAM

கொரோனா பொது முடக்கம் காரணமாக தமிழகம் முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால் ஆசிரியர்கள் பாடம் நடத்துவதும், மாணவர்கள் கல்வி கற்பதும் பெரும் பாதிப்பில் உள்ளது.

சவால்கள் பல இருந்த போதும், பெரும்பாலான தனியார் பள்ளிகள் ‘ஆன்லைன் வகுப்புகள்’ மூலம் வீட்டில் இருக்கும் மாணவர்களுக்குப் பாடம் நடத்த துவங்கிவிட்டனர். ஆனால், கிராமங்கள் மற்றும் மலைப்பகுதிகளில் வசிக்கும் மாணவர்களுக்கு, ஆன்லைன் கல்விமுறை சாத்தியமேயில்லை என்கின்றனர் கல்வி ஆலோசகர்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »