Press "Enter" to skip to content

வாய்வழி புணர்ச்சி: பெண் பிறப்புறுப்பு அழற்சியை உண்டாக்குமா?

பட மூலாதாரம், Getty Images

வாய்வழி பாலின்பம் காணுவதால், பாக்டீரியாவால் ஏற்படும் பெண் உறுப்பு அழற்சி (பி.வி.) என்ற சாதாரண பெண் உறுப்பு பாதிப்பு சூழ்நிலை ஏற்படும் என்று PLoS பயாலஜி என்ற சஞ்சிகையில் வெளியாகியுள்ள ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது.

பாக்டீரியாவால் ஏற்படும் பெண் உறுப்பு அழற்சி என்பது பாலியல் தொடர்பால் பரவக் கூடிய வியாதி கிடையாது. சாதாரணமாக பெண்ணின் பிறப்புறுப்பில் காணப்படும் பாக்டீரியாக்களின் சமநிலையற்ற தன்மையாக மட்டுமே அது உள்ளது.

இந்தப் பாதிப்பு உள்ள பெண்களுக்கு அறிகுறி எதுவும் தென்படாது. ஆனால், சிலருக்கு மிகுந்த நாற்றத்துடன் திரவம் வெளியேறும்.

செல்களை மூடியுள்ள பி.வி. பாக்டீரியா

பட மூலாதாரம், Getty Images

பெண்ணின் பிறப்புறுப்பில் உயிர்வாழும் நுண்கிருமிகள் மீது, மனிதரின் வாயில் இருக்கும் பாக்டீரியாக்கள் என்ன வகையான பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

பாக்டீரியாவால் ஏற்படும் பெண் உறுப்பு அழற்சி என்பது என்ன?

இந்த நோய் சாதாரணமாக கவலைப்படக் கூடியது கிடையாது. ஆனால் இதற்கு தவறாமல் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

பாக்டீரியாவால் ஏற்படும் பெண் உறுப்பு அழற்சி உள்ள பெண்களுக்கு, பாலியல் தொடர்பால் நோய்கள் பரவும் மற்றும் சிறுநீர்த் தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகமாக இருக்கும்.

அந்தப் பெண் கருத்தரித்து இருந்தால், உரிய காலத்திற்கு முன்பே குழந்தை பிறக்கும் வாய்ப்பும் உண்டு.

இந்த நோய் இருக்கிறதா என எப்படி அறிவது?

இந்த நோய் இருக்கிறதா என எப்படி அறிவது?

பட மூலாதாரம், Getty Images

இது மிகவும் சாதாரணமாகக் காணப்படும் நோய். இந்தப் பாதிப்பு உள்ளவர்களுக்கு வழக்கத்திற்கு மாறாக திரவம் வெளியேறும் (வெள்ளைப்படுதல்), கடுமையாக வாடை இருக்கும்.

சாம்பல் கலந்த வெண்மை நிறம் மற்றும் குறைந்த அடர்வு கொண்ட, தண்ணீரைப் போன்றதாக தொடர்ந்து திரவம் வெளியேறும்.

உங்களுக்கு பாக்டீரியாவால் ஏற்படும் பெண் உறுப்பு அழற்சி உள்ளதா என்பதைக் கண்டறிய ஆய்வகப் பரிசோதனைக்கு டாக்டர் பரிந்துரை செய்வார்.

நோயின் பாதிப்பு இருந்தால் ஆன்டிபயாடிக் மாத்திரைகள், ஜெல்கள் அல்லது கிரீம்கள் மூலம் சிகிச்சை அளிக்கலாம்.

புதிய ஆராய்ச்சியில் என்ன கண்டுபிடிக்கப்பட்டது?

பாக்டீரியாவால் ஏற்படும் பெண் உறுப்பு அழற்சி இல்லாத பெண்களுக்கு பெண் உறுப்பில் அமிலத் தன்மையை அதிகமாக பராமரித்து pH அளவைக் குறைவாக வைத்திருக்கும் லேக்டோபசில்லி என்ற “நல்ல” பாக்டீரியா அதிகமாக இருக்கும்.

சில நேரங்களில் இதன் சமன்நிலை காரணமாக, பெண் உறுப்பில் வேறு நுண்கிருமிகள் வாழ்வதற்கான சூழ்நிலை கிடைக்கும்.

எதனால் இது ஏற்படுகிறது என்பது முழுமையாகக் கண்டறியப்படவில்லை. ஆனால் பின்வரும் காரணங்களால் பெண்களுக்கு பாக்டீரியாவால் ஏற்படும் பெண் உறுப்பு அழற்சி ஏற்படலாம்:

•பாலியல் செயல்பாடுகள் அதிகம் கொண்டவராக இருந்தால் (ஆனால் பாலுறவு கொள்ளாத பெண்களுக்கும் இது ஏற்படுவது உண்டு)

•பாலுறவு துணைவரை நீங்கள் மாற்றிக் கொள்ளும் போது

•கருத்தடை சாதனத்தை பெண் உறுப்பில் பொருத்தி இருந்தால்

•மணம் ஊட்டப்பட்ட பொருட்களை பெண் உறுப்பிலோ அல்லது அதைச் சுற்றிய பகுதிகளிலோ பயன்படுத்துவதால்

வாயில் ஈறு பாதிப்புடன் உள்ள பாக்டீரியா மற்றும் பல் சொத்தையாக இருக்கும் போது வாயில் ஏற்படும் பாக்டீரியா ஆகியவை இந்த நோய்க்கு உகந்த சூழலை ஏற்படுத்துகின்றன என்று PLoS பயாலஜி கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

பாக்டீரியாவின் செயல்தன்மையை ஆய்வு செய்வதற்கு, பெண்களின் பெண் உறுப்பு மற்றும் எலிகளுடன் ஒப்பீடு செய்து ஆராய்ச்சிகள் செய்தனர்.

மனிதர்களின் வாயில் காணப்படும் Fusobacterium nucleatum என்ற பாக்டீரியா, பெண் உறுப்பு அழற்சி பாதிப்புக்கு உள்ளான பகுதியில் மற்ற பாக்டீரியாக்கள் வளர உதவி செய்யக் கூடியவையாக உள்ளன.

வாய்வழி பாலின்பம் காண்பதால் பெண் உறுப்பு அழற்சி ஏற்படுவதற்கு எந்த அளவுக்கு ஏற்படும் என்பதை இந்த ஆய்வு முடிவுகள் காட்டுவதாக கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் டாக்டர் அமந்தா லூயிஸ் மற்றும் அவருடைய சகாக்கள் கூறுகின்றனர்.

பெண் உறுப்பு அழற்சி பாதிப்பு பாலுறவால் ஏற்படும், பெண்களுக்கு இடையிலான பாலுறவாலும் ஏற்படும் என்று ஏற்கெனவே நிபுணர்கள் கூறியுள்ளனர்.

பாக்டீரியாவால் ஏற்படும் பெண் உறுப்பு அழற்சியைப் புரிந்து கொள்வதற்கு இதுபோன்ற ஆராய்ச்சிகள் முக்கியமானவையாக உள்ளன என்று பாலுறவு ஆரோக்கியம் மற்றும் எச்.ஐ.வி.க்கான பிரிட்டன் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் பேராசிரியர் கிளாடியா எஸ்ட்கோர்ட் தெரிவித்தார்.

“பாக்டீரியாவால் ஏற்படும் பெண் உறுப்பு அழற்சி பல காரணங்களால் ஏற்படுகிறது என்பதால் இதைப் புரிந்து கொள்வது சிக்கலானதாக உள்ளது” என்று அவர் குறிப்பிட்டார்.

வாய்வழி பாலின்பம் காண்பதால், பாலுறவால் பரவும் நோய்த் தொற்று ஏற்படுவதற்கும், மற்ற ஆரோக்கிய நிலைகளில் முக்கியத்துவம் வகிக்கும் அல்லது முக்கியத்துவம் வகிக்காக பாக்டீரியா தொற்று ஏற்படவும் வாய்ப்பு ஏற்படும் என்று அவர் கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »