Press "Enter" to skip to content

சார்லி ஹெப்டோ: முகமது நபி கேலிச்சித்திரத்தை மறுபதிப்பு செய்த பிரெஞ்சு பத்திரிகை

பட மூலாதாரம், EPA

முகமது நபியின் கேலிச்சித்திரத்தை பதிப்பித்ததற்காக 2015ஆம் ஆண்டு தீவிரவாத தாக்குதலுக்கு உள்ளான பிரெஞ்சு கேலிப் பத்திரிகையான ‘சார்லி ஹெப்டோ’ அந்தக் கேலிச் சித்திரங்களை நேற்று மீண்டும் பதிப்பித்துள்ளது.

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக 14 பேர் நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்படுவதற்கு முந்தைய தினம் இப்பத்திரிகை அந்தக் கேலி சித்திரங்களை மறுபதிப்பு செய்துள்ளது.

தீவிர வலதுசாரிகள், கத்தோலிக்க மதம், யூத மதம், இஸ்லாம் உள்ளிட்டவற்றின் சில கூறுகளைப் பகடி செய்வதற்காக சார்லி ஹெப்டோ நீண்ட காலமாக சர்ச்சைக்கு உள்ளாகி வருகிறது.

2015 சார்லி ஹெப்டோ தாக்குதல்

சார்லி ஹெப்டோ

பட மூலாதாரம், Getty Images

2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7ம் தேதி இந்த பத்திரிக்கை அலுவலகத்தில் இரண்டு இஸ்லாமியவாத தாக்குதல்காரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் சார்லி ஹெப்டோவின் ஊழியர்கள் 12 பேர் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்டவர்களில் இந்த இதழின் ஆசிரியர் ஸ்டெஃபேன் கார்போனியர் மற்றும் நான்கு கார்டூனிஸ்டுகளும் அடக்கம்.

தாக்குதல் நடத்திய இருவர் சையது கோச்சி மற்றும் செரீப் கோச்சி ஆகிய சகோதரர்கள் என அடையாளம் காணப்பட்டனர். காவல்துறை நடவடிக்கை ஒன்றில் அவர்கள் கொல்லப்பட்டனர்.

இந்தப் பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து சில நாட்களில் பாரிசில் நடந்த இன்னொரு தாக்குதலில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.

சார்லி ஹெப்டோ அலுவலகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் பிரான்ஸில் ஜிஹாதியவாதத் தாக்குதல்களைத் தொடங்கி வைத்தது.

முகமது நபியை பகடி செய்த கார்ட்டூன்கள்

சார்லி ஹெப்டோவின் சமீபத்திய பதிப்பில் முகமது நபி குறித்த கேலிச் சித்திரங்கள் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளன.

2015-ல் இவை வெளியிடப்படும் முன்பு ஒரு டேனிஷ் மொழி (டென்மார்க் மொழி) செய்தித்தாளின் பதிக்கப்பட்டிருந்தன.

இந்தக் கேலிச் சித்திரங்களில் ஒன்றில் முகமது நபி தலைப்பாகைக்கு பதிலாக தலையில் வெடி குண்டு அணிந்திருப்பார். ‘எல்லாம் இதற்காத்தான்’ என்று பிரெஞ்சு மொழியில் தலைப்பிடப்பட்டிருந்தது.

கேலிச் சித்திரம் வரையக் கோரிக்கை

இன்று, புதன்கிழமை, ஜிஹாதியவாத தாக்குதல்கள் தொடர்பான விசாரணை தொடங்குகிறது.

பட மூலாதாரம், EPA

2015ஆம் ஆண்டு தங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட பின்பு முகமது நபி குறித்து இன்னும் பல கேலிச் சித்திரங்களை பதிப்பிக்குமாறு பலரும் தங்களிடம் கூறியதாகவும் அதன் தலையங்கத்தில் அந்த பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

“ஆனால், நாங்கள் அதை மறுத்து விட்டோம்; அது தடை செய்யப்பட்டதால் அல்ல; அவ்வாறு செய்ய எங்களை சட்டம் அனுமதிக்கிறது; ஆனால் அவ்வாறு செய்வதற்கு எங்களுக்கு அர்த்தமுள்ள விவாதத்தைத் தூண்டும் ஒரு நல்ல காரணம் தேவைப்பட்டது,” என அந்தத் தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.

ஜனவரி 2015 நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல்கள் தொடர்பான விசாரணை தொடங்க உள்ள நிலையில் அதை மறுபதிப்பு செய்வது அவசியம் என்று கருதுகிறோம் என்றும் அந்த தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘இராக், சிரியா தப்பி ஓடியவர்கள்’

சையது கோச்சி (வலது) மற்றும் செரீப் கோச்சி

பட மூலாதாரம், AFP

சார்லி ஹெப்டோ அலுவலகங்கள், யூதர்களின் சூப்பர் மார்க்கெட் மற்றும் ஒரு காவல் அதிகாரி மீது தாக்குதல் ஆகிய சம்பவங்களில் ஆயுதம் வழங்கியது, உதவிகள் செய்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் பேரில் 14 பேர் விசாரணையை எதிர்கொண்டுள்ளனர்.

அவர்களின் மூன்று பேர் மீதான விசாரணை, அவர்கள் பிரான்சில் இல்லாமலேயே நடக்கிறது. அந்த மூன்று பேரும் வடக்கு சிரியா அல்லது இராக்கிற்கு தப்பி ஓடிவிட்டதாக கருதப்படுகிறது.

இந்தத் தாக்குதல் சம்பவங்களில் உயிர் தப்பியவர்களும் நீதிமன்ற விசாரணையில் சாட்சியமளிப்பார்கள் என்று பிரான்சின் ஆர்எஃப்ஐ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த விசாரணை சென்ற மார்ச் மாதமே தொடங்க இருந்தது. எனினும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாகத் தள்ளிவைக்கப்பட்டது. நவம்பர் மாதம் இந்த நீதிமன்ற விசாரணை முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »