Press "Enter" to skip to content

அமெரிக்கா அதிபர் தேர்தல் 2020 : டிரம்ப் Vs பைடன் – இந்துக்களின் ஆதரவு யாருக்கு? – நேரடி அறிக்கை

  • வினீத் கரே
  • பிபிசி இந்தி, அமெரிக்காவிலிருந்து

பட மூலாதாரம், JIM WATSON,DOMINICK REUTER/AFP VIA GETTY IMAGES

ராஜ் படேல் ஜனவரி 29, 2019 ஆம் ஆண்டு அவர் பணியாற்றிக் கொண்டிருந்த கோயிலுக்குச் சென்ற போது, அங்கு அவர் பார்த்த விஷயங்கள் அவரை அதிர்ச்சி அடைய வைத்தன. ஆம், அவர் வீடு இடிக்கப்பட்டு இருந்தது.

கோயிலின் மையப்பகுதியில் ஏதேதோ எழுதப்பட்டு இருந்தன. குறிப்பாக அதன் சுவற்றில் கிறிஸ்துவத்தை போற்றும் வாசகங்கள் எழுதப்பட்டு இருந்தன.

“அதுவரை இதுபோன்ற விஷயங்களை நான் இங்கு கண்டதில்லை. என் இதயம் துடிப்பதே சில நொடிகள் நின்றுவிட்டது போல இருந்தது,” என்கிறார் லூஸ்வெயில் பகுதியில் உள்ள மணிநகர் ஸ்ரீ சுவாமி நாராயண் காடி கோயிலை சேர்ந்த ராஜ் பட்டேல்.

இதன் பிறகு பயம், கோபம், கவலை நிலவியது என்கிறார் ராஜ் பட்டேல்.

இவர் அமெரிக்காவில் பிறந்து அங்கேயே வளர்ந்தவர்.

அதே ஆண்டு ஜூலை மாதம், நியூயார்க்கிலும் ஒரு இந்து பூசாரி மோசமாக தாக்கப்பட்டார். பிறகு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

2016ஆம் ஆண்டு ஒரு மாட்டின் தலை சீவப்பட்டு, பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள ஒரு கோசாலையில் வீசப்பட்டது.

அமெரிக்கா தேர்தல் நடக்க இன்னும் இரு மாதங்கள் கூட இல்லை. இந்த சூழலில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள ‘பைடனுக்காக அமெரிக்க இந்துக்கள்’ எனும் பிரசார முன்னெடுப்பு, இது போன்ற வெறுப்பு குற்றங்கள் குறித்தும், வழிபாட்டுத் தலங்கள் பாதுகாக்கப்பட வேண்டியது குறித்தும் பேசுகிறது.

அமெரிக்க ஜனநாயக கட்சியின் வேட்பாளர், பிரசாரத்தில் இது போன்ற முன்னெடுப்புகளை எடுப்பது இதுவே முதல் முறை என்கிறார் ‘பைடனுக்காக அமெரிக்க இந்துக்கள்’ அமைப்பை சேர்ந்த முரளி பாலாஜி.

அமெரிக்காவில் உள்ள 20 லட்சம் இந்து வாக்காளர்களை கவர, ‘ட்ரம்புக்கான இந்து குரல்கள்’ பிரசாரம் தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்தே பைடனின் பிரசாரமும் தொடங்கி உள்ளது.

இந்துக்களுக்கு எதிரான வெறுப்பு குற்றங்கள் மும்மடங்காக அதிகரித்துள்ளது என்கின்றனர் ‘பைடனுக்காக அமெரிக்க இந்துக்கள்’ அமைப்பினர்.

எஃப்.பி.ஐயின் தரவுகளை மேற்கோள் காட்டி, 2015ஆம் ஆண்டு இந்துக்களுக்கு எதிரான குற்றங்கள் ஐந்தாக இருந்தன, 2017 ஆம் ஆண்டு அவை 15ஆக உயர்ந்துவிட்டது என்கின்றனர் பிரசாரகர்கள்.

கடந்த நான்கு ஆண்டுகளில், வெறுப்பு, பாகுபாடு சகிப்புத்தன்மையின்மை அதிகரித்து இருக்கிறது என்கிறார் அமெரிக்க இந்தியரான மக்கள் பிரதிநிதிகள் சபை உறுப்பினர் ராஜா கிருஷ்ணமூர்த்தி.

அமெரிக்காவில் 662 கோயில்கள் இருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்க இந்தியர்கள் யாருக்கு ஆதரவு?

அமெரிக்கா தேர்தல்: டிரம்ப் Vs பைடன் - இந்துக்களின் ஆதரவு யாருக்கு? - நேரடி ரிப்போர்ட்

அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் முந்தைய தேர்தல்களில் பெரும்பாலும் ஜனநாயக கட்சியினரையே ஆதரித்து வந்திருக்கின்றனர்.

அமெரிக்காவில் 45 லட்ச இந்திய வம்சாவளியினர் வசிக்கின்றனர்.

2016ஆம் ஆண்டு தேர்தலில் வெறும் 16 சதவீத இந்திய வம்சாவளியினர் மட்டுமே டிரம்பை ஆதரித்தனர்.

இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று ஜனநாயக கட்சியைச் சேர்ந்த அமெரிக்க இந்தியர்களில் ஒரு பிரிவினர் கவலை தெரிவிக்கின்றனர்.

காஷ்மீர் விவகாரம், குடியுரிமை திருத்தச் சட்டம் ஆகிய விவகாரங்களில் டிரம்ப் நிர்வாகம் அமைதியாக இருக்கும் போது, ஜனநாயக கட்சியை சேர்ந்த பெர்னி சேண்டர்ஸ், பிரமிளா ஜெயபால் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டையே எடுத்துள்ளனர்.

ஹெளடி மோதி நிகழ்ச்சியில் டிரம்ப் கலந்து கொண்டது, டிரம்பின் இந்திய வருகை, அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களைக் குறிப்பாக கடும்போக்குவாதிகளை டிரம்பின் பக்கம் நகர்த்தி உள்ளது.

முஸ்லிம் அமெரிக்க சமூகத்தினருக்கான பைடனின் திட்டத்தில் காஷ்மீர் விவகாரம், குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளிட்ட விவகாரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

அமெரிக்கா தேர்தல்: டிரம்ப் Vs பைடன் - இந்துக்களின் ஆதரவு யாருக்கு? - நேரடி ரிப்போர்ட்

பட மூலாதாரம், ALEX WONG/GETTY IMAGES

இது போன்ற திட்டங்கள் அமெரிக்காவில் வசிக்கும் இந்துக்களுக்கும் உண்டா என கேள்விகள் எழுந்தன.

ட்ரம்ப் அமெரிக்காவுக்கு ஆதரவாக இருப்பதாகக் குரல்கள் எழுந்தன.

இதனை அடுத்தே ‘பைடனுக்காக அமெரிக்க இந்துக்கள்’ என்ற பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது.

இந்தியச் சுதந்திர தினம், விநாயகர் சதுர்த்திக்கு பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் வாழ்த்து தெரிவித்ததும் இதன் தொடர்ச்சியாகவே.

இந்திய அமெரிக்கர்களுக்கான பைடனின் திட்டம் என ஓர் ஆவணம் உண்டாக்கப்பட்டது. அதில் எல்லை தாண்டிய பயங்கரவாதம் மற்றும் சீனாவின் அச்சுறுத்தல்கள் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன.

டிரம்பின் பிரசாரத்துக்கான எதிர்வினை?

பைடனின் இந்த போக்கானது டிரம்பின் பிரசாரத்துக்கான எதிர்வினையா, இழந்த இடத்தை பிடிக்க விரும்புகிறதா?

டிரம்பின் பிரசாரத்துக்கான எதிர்வினை?

சேத தடுப்பு ஆனால் ஒவ்வொரு சின்ன நகர்வும் உதவும் என்கிறார் ஜனநாயக கட்சியை சேர்ந்த அமெரிக்க இந்தியர்.

பைடனுக்காக அமெரிக்க இந்துக்கள் பிரசார முன்னெடுப்பை சேர்ந்த முரளி பாலாஜி, “இது எதிர்வினை அல்ல இணையான நடவடிக்கை,” என்கிறார்.

இந்தியப் பிரதமர் மோதிக்கும், முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கும் நெருங்கிய நட்பு இருந்ததை அவர் நினைவு கூர்கிறார்.

ஒபாமா மற்றும் பைடன் நிர்வாகத்தில் ஏராளமான இந்துக்கள் பணியாற்றுவதாக அவர் சுட்டிக்காட்டுகிறார்.

அமெரிக்க இந்து சமூகமானது பன்முகத்தன்மை கொண்டது.

இந்திய இந்துக்கள் மட்டுமல்ல, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், பூட்டான், கயானா, ட்ரினிடட உள்ளிட்ட உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இந்துக்கள் வசிக்கிறார்கள்.

தங்கள் சொந்த நாட்டு துன்புறுத்தலிலிருந்து தப்பிக்கவே அவர்கள் அமெரிக்கா வந்தனர்.

அனைத்து இந்துக்களும் இந்தியர்கள் அல்ல. அனைத்து இந்தியர்களும் இந்துக்கள் அல்ல என்கிறார் முரளி.

தாமதமான பிரசாரம்

இது தாமதமான பிரசாரமா என்ற கேள்வி எழுகிறது.

‘பைடனுக்காக அமெரிக்க இந்துக்கள்’ பிரசாரத்தைச் சேர்ந்த நிகி ஷா, இந்த பிரசாரத்தை செயல்படுத்துவதற்கான திட்டம் ஒரு மாதமாக இருந்ததாகத் தெரிவிக்கிறார்.

Howdy Modi

பட மூலாதாரம், Getty Images

இன்னும் அறுபது நாட்களில் தேர்தல் வரவிருக்கும் சமயத்தில், இது மிகவும் தாமதமானது தானே என்ற பேச்சும் உள்ளது.

இதற்கு பதிலளிக்கும் முரளி, “பொதுவாக செப்டம்பர் 7 அதாவது தொழிலாளர் தினம் வரை அமெரிக்கர்கள் பொதுவாக தேர்தலில் கவனம் செலுத்த மாட்டார்கள். இது சரியான நேரம்தான்,” என்கிறார்.

கமலா ஹாரிஸூம் இருப்பதால் இது பலன் தரும் என்றே நினைக்கிறார்கள்.

கமலா ஹாரிஸ் இருப்பதால் அமெரிக்க இந்துக்கள் ஜனநாயக கட்சி பக்கம் இருக்க சாத்தியம் இருப்பதாக குறிப்பிடுகிறார்.

கமலா ஹாரிஸின் தாய் வழியினர் இந்துக்கள் என்று ஒரு வெப்பினார் கூட்டத்தில் பேசுகிறார் அமெரிக்க எம்பி ராஜா கிருஷ்ணமூர்த்தி.

அமெரிக்காவில் இந்துக்கள்

அமெரிக்காவில் உள்ள இந்தியர்களிடம் நான் பேசிய வரை, அமெரிக்காவில் இனவெறி இருப்பது உண்மை என்றே அவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால், அமெரிக்காவில் இந்துவாக இருப்பது கடினமா?

அமெரிக்காவில் இந்துத்துவம் எப்படி இருக்கிறது என்பதை பலர் புரிந்துகொள்ளவில்லை என்கிறார் ராஜ்.

எனது பள்ளிக்காலத்தில் பிறர் குறிவைத்து வம்பிழுப்பார்கள் என்று அஞ்சி பள்ளியிலிருந்து வீட்டிற்கு ஓடிய நாட்கள் நினைவிருக்கிறது என்கிறார் ராஜ் பட்டேல்.

பல சமயங்களில் இந்துக்கள் என்பதை ஒரு மதம் என தெரியாமல் எங்களை கிண்டல் செய்வதற்காகவும், பாகுபாட்டுடனும், இனவெறியுடனும் எங்களை இந்துக்கள் என்று அழைப்பார்கள் என்கிறார் ராஜ் பட்டேல்.

அது போன்ற நிலை இப்போது தங்கள் குழந்தைகளுக்கு இல்லை என்று கூறும் ராஜ், ஆனால், பழுப்பு நிறத்தவர்கள் என இப்போது குறிவைக்கப்படுகிறோம் என்று கூறுகிறார்.

எனது மத நம்பிக்கையின் காரணமாக நான் குறிவைக்கப்படுவதாகக் கருதவில்லை என்கிறார் பென்சில்வேனியாவில் லஷ்மி கோசாலை நடத்தும் சங்கர் சாஸ்திரி.

“மக்கள் அனுதாபம் காட்டுகிறார்கள். நாங்கள் சகிப்புத்தன்மையுடன் இருக்கிறோம், நாங்கள் முன்னேறுகிறோம். பைத்தியக்காரர்களாக, வெறியர்களாக ஒரு சிறிய சதவீதம் இருக்கலாம். ஆனால், பொதுவாக அவர்கள் நல்லவர்கள்,” என்று அவர் கூறுகிறார்.

2016ஆம் ஆண்டு இவரது கோசாலையில்தான் மாட்டின் தலை வெட்டி போடப்பட்டது. ஆனால், இதனை வெறுப்பு குற்றம் என கூற மறுக்கிறார்.

அவர்கள் பதின்பருவத்தினர். அவர்கள் மன்னிப்பும் கேட்டார்கள். நாங்கள் அதனை ஏற்றுக் கொண்டோம். அதனால்தான் அதனை வெறுப்பு குற்றம் இல்லை என்கிறோம் என்று அவர் கூறுகிறார்.

வெறுப்பு குற்றமென்றால், சாதி, மதம் மற்றும் நிறம் ஆகியவை அடிப்படையாக இருக்க வேண்டும். இதில் அப்படி இல்லை என்கிறார் அவர்.

கடந்த சில ஆண்டுகளில் இந்துக்களுக்கு எதிரான வெறுக்கத்தக்கக் குற்றங்கள் அதிகரித்துள்ளன என்ற கூற்று குறித்து உங்கள் கருத்தென்ன?

ஆம், அவை ஒபாமா நிர்வாகத்தில் நடந்தவை, டிரம்பின் நிர்வாகத்தில் இல்லை என்கிறார் சங்கர் சாஸ்திரி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »