Press "Enter" to skip to content

கொரோனா தடுப்பு மருந்து: பரிசோதனையை நிறுத்துவது அசாதாரணமானதா?

பட மூலாதாரம், Getty images

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து ஆய்வகப் பரிசோதனையின் இறுதிக்கட்ட ஆய்வு நிறுத்திவைக்கப் பட்டுள்ளது. ஆய்வகப் பரிசோதனையின்போது, அதில் பங்கேற்ற ஒருவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் ஆய்வு நிறுத்தப்பட்டது.

இது சிறிது தீவிரமான விஷயமாகத் தோன்றுகிறது.

ஆனால், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்தத் தடுப்பூசியைத் தயாரிக்கும் அஸ்ட்ராசெனிக்கா என்ற மருந்து உற்பத்தி நிறுவனம், “இது வழக்கமானது தான்” என்று கூறியுள்ளது.

“எதிர்பாராத உடல்நலக் குறைவு” ஏற்பட்டதால் மோசமான எதிர்மறை விளைவு என்று சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Banner image reading 'more about coronavirus'
Banner

ஆய்வக பரிசோதனையை இப்படி நிறுத்துவது எந்த அளவுக்கு இயல்பானது? கோவிட்-19 தடுப்பு மருந்துக்காக உலகமே எதிர்பார்த்திருக்கும் நிலையில், இந்த நடவடிக்கை எந்த வகையிலான தாக்கத்தை ஏற்படுத்தும்?

இந்தத் தடுப்பு மருந்தின் ஆய்வகப் பரிசோதனை பற்றி நமக்கு என்ன தெரியும்?

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு எதிராக நோய் எதிர்ப்பாற்றலை உருவாக்குவதற்கு உலக நாடுகள் போட்டி போட்டுக் கொண்டிருக்கும் நிலையில், அஸ்ட்ராசெனிக்கா – ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழக தடுப்பு மருந்து ஆய்வுதான் முன்னோடி பரிசோதனை நிலையில் இருந்தது.

எனவே, இந்த மருந்து தயாரிப்பில் தாமதம் ஏற்பட்டால் அது ஏமாற்றம் தருவதாக இருக்கும்.

பிரிட்டனில் இந்த மருந்துக்கான ஆய்வகப் பரிசோதனையில் பங்கேற்ற ஒருவருக்கு “சந்தேகத்துக்குரிய தீவிர எதிர்மறை பாதிப்பு” ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என்று இச்செய்தியை செவ்வாய்க்கிழமை முதலில் வெளியிட்ட ஸ்டாட் நியூஸ் கூறியுள்ளது. அதனால் ஆய்வக பரிசோதனையின் இறுதிக்கட்ட பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு மருந்து

பட மூலாதாரம், Getty images

அந்த நோயாளி குணம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஸ்டாட் நியூஸ் தகவல்களை மேற்கோள்காட்டி சிலர் கூறுகின்றனர். மற்றபடி இது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.

“பாதுகாப்புத் தகவல் அம்சங்களை மறு ஆய்வு செய்ய அனுமதிக்கும் வகையில், எங்களுடைய தரநிலைப்படுத்திய மறுஆய்வு நடைமுறைகள் காரணமாக, தடுப்பு மருந்து தயாரிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது” என்று அஸ்ட்ராசெனிக்கா நிறுவனம் கூறியுள்ளது.

இந்த நடைமுறைகள் நிறைவடைய பல “நாட்கள்” ஆகும் என்று பிபிசி மருத்துவப் பிரிவு ஆசிரியர் பெர்கஸ் வால்ஷ் கூறியுள்ளார்.

தடுப்பு மருந்து ஆய்வக பரிசோதனைகள் நிறுத்தப்படுவது எந்த அளவுக்கு இயல்பானது?

“இது கேள்விப்படாத ஒன்றாக உள்ளது” என்று வால்ஷ் கூறினார்.

“ஆய்வில் பங்கேற்கும் ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அவருடைய உடல்நலக் குறைவுக்கான காரணம் உடனடியாகத் தெரியாமல் போனால், அந்த ஆய்வு நிறுத்தப்படலாம்” என்றார் அவர்.

“பெரிய அளவிலான ஆய்வக பரிசோதனைகளில், உடல்நலக் குறைபாடுகள் தற்செயலாக ஏற்படலாம். ஆனால் இதை கவனமாக தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்ய வேண்டும்” என்று ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து ஆய்வக பரிசோதனையில் இப்படி நடப்பது இது முதல்முறை அல்ல என்று வால்ஷ் தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் முதலாவது குழுவினருக்கு நோய் எதிர்ப்பு மருந்து தரப்பட்ட பிறகு நடந்திருக்கும் இரண்டாவது நிகழ்வாக இது உள்ளது.

அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் வெளிப்புற நிபுணர்கள் குழு ஒன்று, “தடுப்பூசி போடப்பட்ட நபரின் ஆரோக்கியம் குறித்தும், எதிர்மறை பாதிப்பு ஏற்பட்ட போது பின்பற்றப்பட்ட தரநிலைப்படுத்திய நடைமுறை குறித்தும் ஆழமாக ஆய்வு செய்து வருகிறது” என்று கோவிட்-19 தடுப்பூசி மருந்தை விரைவாகத் தயாரிப்பதற்கான திட்டத்தின் பொறுப்பு அதிகாரியாக இருக்கும் அமெரிக்க உயரதிகாரி மோன்செப் ஸ்லாவோயி தெரிவித்துள்ளார்.

கோவிட்-19க்கு எதிரான தடுப்பு மருந்து பாதுகாப்பானதாக இருக்குமா?

ஆய்வக பரிசோதனை நிறுத்தப்பட்ட செய்தி பரவியதும், சந்தைப்படுத்தப்படும் எந்தத் தடுப்பு மருந்தும் மக்களுக்குப் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்வதற்குத்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அஸ்ட்ராசெனிக்கா மற்றும் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழக நிர்வாகங்கள் கூறியுள்ளன.

பரிசோதனை

பட மூலாதாரம், Getty images

முதல் தடுப்பு மருந்துகளை உருவாக்குவதில் பாதுகாப்புக்கு “உயர் முன்னுரிமை” அளிக்க வேண்டும் என்று கோவிட்-19 தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபட்டுள்ள அஸ்ட்ராசெனிக்கா உள்ளிட்ட 9 பெரிய மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் “வரலாற்று முக்கியத்துவமான உறுதிமொழி” எடுத்துக் கொண்டன.

தடுப்பு மருந்துக்கான ஆராய்ச்சியில் “அறிவியலுடன் இணைந்து செயல்படுவது” என்று ஜான்சன் அண்ட் ஜான்சன், பயோஎன்டெக், கிளாக்ஸோஸ்மித்கிளைன், ஃபைசஸர், மெர்க், மொடெர்னா, சனோஃபி உள்ளிட்ட நிறுவனங்கள் உறுதியளித்துள்ளன.

அந்த உறுதிமொழியில் கீழ்க்காணும் அம்சங்கள் இடம் பெற்றுள்ளன:

  • ஆய்வகப் பரிசோதனைகள் நடத்துவது மற்றும் தீவிர உற்பத்தி செயல்பாடுகளில் உயர்நிலை அறிவியல்பூர்வ மற்றும் நன்னெறி தரநிலைகள் தொடர்ந்து பின்பற்றப்படும்.
  • போதிய அளவுக்கு, வேண்டிய வகைகளில் கிடைக்கச் செய்வது உறுதி செய்யப்படும். எல்லோரும் வாங்கும் வகையில் இவை கிடைக்கும்படி செய்யப்படும்.

கோவிட்-19 தடுப்பு மருந்து கிடைக்கும் வாய்ப்பை எந்த அளவுக்கு நெருங்கி இருக்கிறோம்?

உலகம் முழுக்க சுமார் 180 பேருக்கு கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கொடுத்து பரிசோதனைகள் நடைபெறுவதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. ஆனால் எதுவுமே ஆய்வக பரிசோதனையை முடிக்கவில்லை.

மருந்தின் செயல்பாட்டுப் பாதுகாப்புத் தன்மையை உறுதி செய்வதற்கு கால அவகாசம் தேவைப்படும் என்பதால், செயல்திறன் மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் குறித்து இந்த ஆண்டுக்குள் ஒப்புதல் அளிக்கும் வாய்ப்பு இல்லை என்றும் உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

கொரோனா தடுப்பு மருந்து: பரிசோதனையை நிறுத்துவது அசாதாரணமானதா?

பட மூலாதாரம், Pedro Vilela

அஸ்ட்ராசெனிக்கா – ஆக்ஸ்ஃபோர்ட் மருந்து சீக்கிரத்தில் பரிசோதனைகளை முடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏற்கெனவே முதலாவது மற்றும் இரண்டாவது கட்டப் பரிசோதனைகள் முடிந்துவிட்டதால் இந்த எதிர்பார்ப்பு இருந்தது.

சில வாரங்களுக்கு முன்பு அமெரிக்கா, பிரிட்டன், பிரேஸில், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் சுமார் 30 ஆயிரம் பேருக்கு மூன்றாவது கட்டப் பரிசோதனை மேற்கொளளப்பட்டது. ஆனால் அந்தப் பரிசோதனைகள் இப்போது நிறுத்தப்பட்டுள்ளன.

வழக்கமாக மூன்றாவது கட்ட பரிசோதனைகளில், ஆயிரக்கணக்கானோருக்கு பரிசோதனை நடைபெறும். அது சில ஆண்டுகள் வரை நடைபெறும்.

அமெரிக்காவில் நவம்பர் 3 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாக தடுப்பு மருந்து கிடைக்கும்படி செய்ய வேண்டும் என்று விரும்புவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். ஆனால் வேகமாக இதைத் தயாரிக்க வேண்டும் என்ற முனைப்பில், பாதுகாப்பைவிட, அரசியலுக்கு தான் முக்கியத்துவம் தரப்படும் என்ற சந்தேகத்தை அவருடைய வார்த்தைகள் ஏற்படுத்துகின்றன.

ரஷ்யாவில் சீக்கிரத்தில் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படுமா என ஆராய்ச்சியாளர்கள் சந்தேகம் எழுப்புகின்றனர். ரஷிய ஆய்வின் முடிவுகள் குறித்தும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »