Press "Enter" to skip to content

இந்தியா – சீனா எல்லை பதற்றம்: தற்காலிக அமைதி உருவானது எப்படி?

  • விகாஸ் பாண்டே
  • பிபிசி நியூஸ், டெல்லி

இமயமலைப் பகுதியில் சர்ச்சைக்குரிய எல்லையில் சில மாதங்களாக பதற்றநிலை மோசம் அடைந்து வந்த நிலையில், படைகளை வேகமாக விலக்கிக் கொள்வோம் என்று அறிவித்து இந்தியாவும் சீனாவும் பல நாடுகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளன.

இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி இடையில் மக்கள் விரும்பத்தக்கதுகோவில் பல மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இந்த கூட்டு அறிவிப்பு வெளியானது.

அணு ஆயுதம் வைத்திருக்கும் இரு பக்கத்து நாடுகளுக்கும் இடையில் பதற்றம் அதிகரித்து வந்த சூழ்நிலையில் இந்த அறிவிப்பு வெளியானது.

முன்னதாக இந்த வாரத்தில், போரை டெல்லி திணித்தால் சீன படைகள் “வேகமாக எதிர்வினையாற்றி இந்திய படையினருக்கு பெரிய இழப்புகளை ஏற்படுத்தும், இந்திய படை முற்றிலுமாக அழிக்கப்படும்,” என்று சீனாவின் அரசுக்குச் சொந்தமான குளோபல் டைம்ஸ் இந்த வார தொடக்கத்தில் செய்தி வெளியிட்டிருந்தது.

“எல்லையின் இறையாண்மையைப் பாதுகாப்பதில் எந்தச் சந்தேகத்துக்கும் இடமில்லை” என்று இந்தியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.

களத்தில் படைகளுக்கு இடையில் மோதல் சூழ்நிலை நிலவியதில், இந்த அறிக்கைகள் உண்மை நிலையை பிரதிபலிப்பவையாக இருந்தன.

கடந்த ஜூன் மாதம் லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் கட்டைகள் மற்றும் கற்களைக் கொண்டு அவர்கள் தாக்கிக் கொண்டனர். அதில் இந்திய வீரர்கள் 20 பேர் பலியானார்கள்.

தத்தமது பிராந்தியம் என்று இரு நாடுகளும் உரிமை கோரும் எல்லைப் பகுதிகளில் இரு நாடுகளும் அதிக அளவில் வீரர்களைக் குவித்துள்ளன. வேறுபாடுகளைத் தீர்ப்பது எளிதான விஷயம் கிடையாது.

`முக்கிய தடையை உடைத்த’ தூதர்

பதற்றத்தைத் தணிக்க இரு நாடுகளும் ஒப்புக்கொள்ளும்படி செய்தது என்ன?

இரு நாடுகளுமே போருக்குத் தயாராக இருந்தன. ஆனால் சிறிய போராக இருந்தாலும் அது விருப்பத்துக்குரிய தேர்வாக இருப்பாது என்பதை இரு நாடுகளுமே அறிந்திருந்தன என்று வில்சன் சென்டர் சிந்தனை குழுவின் துணை இயக்குநர் மைக்கேல் குகேல்மன் உள்ளிட்ட பல வல்லுநர்கள் கருதுகின்றனர்.

எல்லைப் பகுதிக்கு இந்தியா ஆயுதங்களையும் படைகளையும் அனுப்பி வந்தது.

“இரு நாடுகளுக்கும், அந்தப் பிராந்தியத்துக்கும் அது பெரிய இழப்புகளை ஏற்படுத்தி இருக்கும். பொருளாதார நிலைமை ஏற்கெனவே ஆட்டம் கண்டுள்ள நிலையில், போரை எதிர்கொள்வது ஆபத்தானதாக இருந்திருக்கும்” என்று அவர் கூறினார்.

பெய்ஜிங்கில் ஜெய்சங்கர் பல ஆண்டுகள் பணியாற்றியவர் என்பதால், சீன தூதரகத்தினருடன் அவருக்கு நல்ல உறவு இருந்தது. அது உதவிகரமாக இருந்திருக்கும்.

அதுதான் முக்கியமான தடையை உடைத்திருக்கும் என்று குகேல்மன் கூறினார். முக்கியமான தூதரக பேச்சுவார்த்தைகளில் தனிப்பட்ட உறவுகள் முக்கிய பங்காற்றும் என்றார் அவர்.

வானிலையும் முக்கிய பங்காற்றியிருக்கும். பனிக்காலங்களில் கல்வான் பள்ளத்தாக்கில் உச்சியில் உள்ள பகுதிகளில் மனிதர்கள் வாழ்வது சிரமமானதாக இருக்கும்.

மோசமான வானிலைகளில் படைகள் பணியாற்றும். ஆனால் “வாய்ப்பு கிடைத்தால், இரு படைகளுமே அதைத் தவிர்க்க விரும்பும்” என்று இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் வினோத் பாட்டியா தெரிவித்தார்.

சீனாவின் முகாம்களை கண்காணிக்கும் வகையிலான முக்கியமான சிகரங்களை இந்தியப் படைகள் சமீபத்தில் கைப்பற்றிவிட்டன என்று செய்திகள் வெளியாயின. இரு நாடுகளுமே அதிகாரப்பூர்வமாக அதை உறுதி செய்யவில்லை.

“இந்த சாதகமான சூழ்நிலையின் அடிப்படையில் இந்தியா பேரத்தை நடத்தியிருக்கும்” என்று பாட்டியா கூறினார்.

இரு நாடுகளுமே தீர்வுகாண வேண்டிய வேறு பல பிரச்சனைகள் உள்ளன. இந்தியாவில் கோவிட்-19 நோய் பாதிப்பு அச்சப்படக் கூடிய அளவுக்கு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது. பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆயுத மோதல் ஏதும் நடந்தால், இந்தப் பிரச்சனைகளைக் கையாளும் திறன் பாதிக்கப் பட்டிருக்கும்.

இதற்கிடையில் அமெரிக்காவுடனும் மற்ற நாடுகளுடனும் சீனாவின் உறவில் பதற்றம் அதிகரித்து வருகிறது. ஹாங்காங்கில் சர்ச்சைக்குரிய பாதுகாப்பு சட்டம் தொடர்பாக உலக அளவில் சீனா கண்டனங்களை எதிர்கொண்டு வருகிறது.

எவ்வளவு சீக்கிரத்தில் அமைதி திரும்பும்?

அதைக் கணிப்பது சிரமம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்தக் கூட்டறிக்கையில் முழு விவரங்கள் இல்லை என்று வாஷிங்டனில் உள்ள ஸ்டிம்சன் சென்டர் சிந்தனைக் குழுவில் சீனா செயல்திட்டப் பிரிவின் இயக்குநர் யுன் சன் கூறியுள்ளார்.

இரு நாடுகளையும் நிஜமாகவே பிரிக்கக் கூடிய – மெய்யான கட்டுப்பாட்டுக் கோடு (எல்.ஏ.சி.) எது என்று அது குறிப்பிடவில்லை என்பது முதலாவது விஷயம்.

“எல்.ஏ.சி.யில் பல இடங்கள் இன்னமும் சர்ச்சைக்குரியவையாக உள்ளன, அங்கு படைகள் இன்னும் நிறுத்தப் பட்டுள்ளன. எனவே இந்தப் பிரச்சனையைத் தீர்ப்பது குறித்த தெளிவு அதில் இல்லை” என்று அந்தப் பெண்மணி சுட்டிக்காட்டுகிறார்.

பாங்காக் ஏரி அருகே சச்சரவுகள் நடந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பதற்றத்தைத் தணிப்பதற்கு அவகாசம் தேவை என்று பாட்டியா கூறுகிறார். இப்போதைய சூழ்நிலையில் அது நீண்ட கால அவகாசமாக இருக்கும் என்றார் அவர்.

“அது மிகவும் பரந்த பகுதி. அதைப் புரிந்து கொள்வதற்கு கமாண்டர்களுக்கு அவகாசம் தேவைப்படும். பதற்றம் அதிகமாக இருக்கும்போது, உணர்வுகள் அடிப்படை நிலையில் இருக்கும்போது ராணுவ அளவிலான பேச்சுவார்த்தைகள் நடைபெறும்” என்று அவர் கூறுகிறார்.

இரு நாடுகளுமே தற்போதைய நிலையைத் தொடர விரும்புகின்றன என்கிறார் யுன்.

இரு நாடுகளுமே இப்போதைய நிலை என்பதை வரையறுப்பதில் மாறுபடுகின்றன.

“இந்திய எல்லைக்குள் சீன படைகள் வந்திருப்பதாக இந்தியா கூறுகிறது. அந்த முகாம்களை சீனா காலி செய்யுமா என்பது பற்றி இப்போது தெளிவாக்கப்படவில்லை” என்று யுன் தெரிவித்தார்.

என்ன காரணத்தால் பதற்றம் அதிகரித்தது என்பதன் அடிப்படையில் தான், எவ்வளவு சீக்கிரமாக படைகள் திரும்பப்பெற பெறும் நடவடிக்கைகள் அமையும். எல்லையின் அருகில் உள்ள விமான படை தளத்தை இந்திய ராணுக முகாம்களுடன் இணைப்பதற்கு புதிய சாலை அமைத்தது தான் பதற்றம் அதிகரித்ததற்கான பிரதான காரணமாகச் சொல்லப்பட்டது. ஆனால், அந்தப் பணி 20 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது என்பதால், அது மட்டுமே பதற்றம் அதிகரிப்பதற்கான காரணமாக இருந்திருக்க முடியாது என்று யுன் கூறுகிறார். “அது ஒன்றும் ரகசியமாக நடக்கும் பணி அல்ல” என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

அந்தப் பிராந்தியத்துக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய இந்தியா முடிவு எடுத்தது, இந்தியா அமெரிக்கா இடையில் உறவுகள் மேம்பட்டுக் கொண்டிருப்பது ஆகியவையும் இதில் முக்கிய பங்காற்றி இருக்கும் என்று அவர் கருதுகிறார்.

“இந்தியாவை தண்டித்தால் டெல்லிக்கும் வாஷிங்டனுக்கும் ஒரே நேரத்தில் எச்சரிக்கை விடுத்ததாக அமைந்துவிடும் என பெய்ஜிங் கருதியது. ஆனால், இந்தியா பின்வாங்க மறுத்துவிடும் என்பதை அவர்கள் கணக்கு போடத் தவறிவிட்டார்கள்” என்றும் அவர் கூறினார்.

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவைத் தடுப்பதில் சீனா சிறப்பாக செயல்படவில்லை என்று அமெரிக்கா குற்றஞ்சாட்டியதை அடுத்து, சீனாவுக்கு பல நாடுகளுடன் தூதரக உறவுகள் மோசம் அடைந்து வருகின்றன.

சீனாவுடனான தனது எல்லையில் சாலைகள் அமைக்கும் பணியை இந்தியா வேகப்படுத்தியுள்ளது.

அதனால் அவர்கள் மிகவும் கோபம் அடைந்தனர் என்றார் அவர். சமீப நாட்களில் பெய்ஜிங் அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கைகளில் இந்தக் கண்ணோட்டம் பிரதிபலித்தது என்று அவர் குறிப்பிட்டார். ஆக்கிரமிப்பு என்பது சீனாவின் வெளியுறவுக் கொள்கையில் முக்கியமான அம்சமாக உள்ளது. குறிப்பாக கடந்த சில மாதங்களில் அந்தப் போக்கு அதிகரித்துள்ளது. தங்களுடைய ஆதிக்கம் செலுத்தக் கூடிய ராணுவ பலத்தை பக்கத்து நாடுகளுக்கு நினைவுபடுத்தும் வகையில் சீனாவின் அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் இந்திய வீரர்கள் உயிரிழந்த நிலையிலும், ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் கருத்துகளை வெளியிடுவதற்கு டெல்லி மற்றும் பெய்ஜிங் அதிகாரிகளுக்கு பெரும்பாலும் கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டிருந்தன.

உறவுகளை மேம்படுத்துவதற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, சீன அதிபர் ஜின்பிங் மேற்கொண்ட முயற்சிகளின் பலன் வீணாகிவிடக் கூடாது என்பதற்காக இந்தக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது என்று குகேல்மன் தெரிவித்தார்.

2014ல் மோதி பதவியேற்ற பிறகு, இருவரும் 18 முறை சந்தித்துப் பேசியுள்ளனர். “ஆனால் கடந்த சில நாட்களில் அவற்றின் பலன்கள் எல்லாம் முறியடிக்கப்பட்டுள்ளன. தாங்கள் வெளியிட்ட அறிவிப்புகளை, இந்தியாவும் சீனாவும் எப்படி மக்கள் மத்தியில் அமல்படுத்திக் காட்டப் போகின்றன என்பது கூர்ந்து கவனிக்கப்படும்” என்று அவர் கூறினார்.

“சீனா பலவீனம் அடையவோ அல்லது இந்தியாவின் வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பதையோ விரும்பாது” என்பதால், அந்த நாடு பழைய நிலைக்குத் திரும்புவது சிக்கலானதாக இருக்கும் என்று யுன் கூறியுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையில் எல்.ஏ.சி.யில் உள்ள 3,440 கிலோ மீட்டர் நீளத்தில், பல தசாப்த காலங்களாகத் தீர்வுகாணப்படாமல் உள்ள பிரச்சனைகள் உள்ளிட்ட, முக்கியமான விஷயங்களுக்கு ஒரு சில தினங்களில் தீர்வை ஏற்படுத்திவிட முடியாது.

“எனவே, இது ஒரு நல்ல தொடக்கம்” என்கிறார் குகேல்மன். “பேச்சுகளே இல்லாமல் இருப்பதைவிட, பேச்சுகள் நடந்திருப்பது நல்லது. ஆனால் நாம் எச்சரிக்கையுடனும் பரந்த சிந்தனையுடனும் இருக்க வேண்டும்” என்றும் அவர் கூறியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »