Press "Enter" to skip to content

இரான், வட கொரியாவை தொடர்ந்து பாகிஸ்தானும் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படுகிறதா?

  • சச்சல் அஹ்மத்
  • பிபிசி மானிடரிங்

சட்டவிரோத பணப்புழக்கம் மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதி அளிக்கப்படுவதைத் தடுப்பதற்கான, அரசுகளிடையிலான அமைப்பாக உள்ள நிதி சார்ந்த செயல்பாட்டுப் பணிக் குழுவின் “கிரே பட்டியலில்” இருந்து தங்கள் நாட்டை நீக்குவதற்கான முன் முயற்சிகளை பாகிஸ்தான், கடந்த சில வாரங்களாக மேற்கொண்டு வருகிறது.

கடந்த 2018 ஜூன் மாதத்தில், இந்த குழுவின் “கிரே பட்டியலில்” பாகிஸ்தான் சேர்க்கப்பட்டது.

“அதிகரிக்கப்பட்ட கண்காணிப்பின் கீழ் வரையறைகளின் பட்டியல்” பின்பற்றப்பட வேண்டும் என்று அலுவல்பூர்வமாக தெரிவிக்கும் வார்த்தை அது.

சட்டவிரோத பணப்புழக்கம் மற்றும் பயங்கரவாத செயல்களுக்கு நிதி கிடைக்கச் செய்வதற்கு எதிரான நடவடிக்கைகளை பலப்படுத்தும் வகையில் சட்டம் உருவாக்கி, ஒழுங்குமுறை நடவடிக்கைகளை உருவாக்க 2019 அக்டோபர் வரையில் அவகாசம் அளிக்கப்பட்டு, பின்னர் மேலும் 4 மாதங்கள் அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

செயல்பாடுகளைக் காட்ட வேண்டிய 27 விஷயங்களில், 14 விஷயங்கள் தொடர்பாக “பெருமளவில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன” என்று 2020 பிப்ரவரியில் பாகிஸ்தான் தெரிவித்தது.

பல்வேறு நல்ல முன்னேற்றத்தைக் காட்டவில்லை என்று கூறி, பாகிஸ்தானை “கிரே பட்டியலில்” வைத்திருக்க இந்தக் குழு முடிவு செய்தது.

செப்டம்பர் 14 முதல் 21ஆம் தேதிக்கு இடையில் இந்தக் குழுவின் அதிகாரிகள் நிலையிலான கூட்டம் நடைபெற உள்ளது. அப்போது செயல் திட்டத்தில் கூறப்பட்டுள்ள மீதி 13 அம்சங்களில் பாகிஸ்தான் என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளன என்பது குறித்து ஆய்வு செய்யப்படும்.

பாகிஸ்தான் “கிரே பட்டியலிலேயே” இருக்குமா, வெள்ளை பட்டியலுக்கு மாற்றப்படுமா அல்லது இரான் மற்றும் வடகொரியாவுடன் சேர்ந்து கறுப்புப் பட்டியலில் இணைந்து கொள்ளுமா என்பது குறித்து, அக்டோபர் மாதம் நடைபெறும் உயர்நிலைக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும். அதற்கு முன்னதாக மேற்படி சீராய்வு செய்யப்பட உள்ளது.

சட்டம் உருவாக்கும் முயற்சி

செப்டம்பர் மாதத்துக்கான கூட்டம் நெருங்கி வரும் நிலையில், தற்போதைய சட்டவிரோதப் பணப் புழக்கம் மற்றும் பயங்கரவாத செயல்களுக்கு நிதி கிடைப்பதைத் தடுப்பதற்கான சட்டங்களைத் திருத்தி புதிய சட்டங்களை உருவாக்க 8 மசோதாக்களை பாகிஸ்தான் அரசு உருவாக்கி வருகிறது.

மசோதாக்களில் ஒருமித்த ஆதரவை உருவாக்குவதற்கு 24 அரசு மற்றும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் கொண்ட ஒரு கூட்டுக் குழுவும் உருவாக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மேலவையில் ஆட்சிக்குப் பெரும்பான்மை இல்லாத நிலையில், ஒருமித்த ஆதரவை உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இரான், வட கொரியாவை தொடர்ந்து பாகிஸ்தானும் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படுகிறதா?

எதிர்கட்சியின் ஆதரவுடன் எட்டில் ஆறு மசோதாக்களை நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. செல்வாக்கு மிகுந்த ராணுவத்தின் உந்துதலின் பேரில், அபூர்வமான இந்த ஒருமித்த ஆதரவு உருவாக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

கைதுகளும் தண்டனைகளும்

“தடை செய்யப்பட்ட அமைப்புகள் மற்றும் நபர்களை சட்டத்தின் முன் நிறுத்தி, நீதிமன்றத்தில் தண்டனை வாங்கிக் கொடுத்து நிரூபிக்க வேண்டும்” என்பது பாகிஸ்தானுக்கு இந்தக் குழு கூறியுள்ளது.

கடந்த காலத்தில், இக்குழுவின் கூட்டங்கள் நடப்பதற்கு முந்தைய சமயத்தை ஒட்டி அதிக தொந்தரவு தரும் தடை செய்யப்பட்ட நபர்களுக்கு பாகிஸ்தான் அரசு தண்டனை வாங்கிக் கொடுத்திருக்கிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் வெவ்வேறு தீவிரவாத குழுக்களுடன் தொடர்புடைய 88 பேருக்கு எதிராக பாகிஸ்தான் அரசு தடைகள் விதித்தது. ஐ.எஸ். அமைப்பு, அல்-காய்தா, தெஹ்ரிக்-இ-தாலிபான் பாகிஸ்தான் உள்ளிட்டவை இதில் அடங்கும்.

இந்தியாவுக்கு எதிரானவரும், லஷ்கர்-இ-தொய்பா மற்றும் அதன் அறக்கட்டளை ஜமாத்-உத்-டாவா நிறுவனருமான ஹஃபீஸ் சயீத்துக்கு தண்டனை வழங்குவது குறித்த விஷயத்தில், கடந்த பிப்ரவரியில் இக் குழுவின் கூட்டம் நடக்கவிருந்த சமயத்தில், சயீத்தின் கூட்டாளிகள் மூவருக்கு பாகிஸ்தான் நீதிமன்றங்கள் தண்டனை விதித்தன.

இருந்தபோதிலும், தீவிரவாதிகளைக் கைது செய்வது, பிறகு விடுதலை செய்வது (சயீத் உள்பட) என்ற வகையில் பாகிஸ்தானின் வரலாறு இருப்பதால், குழுவின் கூட்டத்தின் முன்பு இவையெல்லாம் எந்த அளவுக்கு ஆக்கப்பூர்வமாக எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரியவில்லை.

ராஜ தந்திரம்

செயல் திட்ட விதிகளுக்கு கட்டுப்பட்டு நடந்து கொள்வதுடன், இதில் தூதரக தொடர்புகளை பயன்படுத்தவும் பாகிஸ்தான் நம்பிக்கை கொண்டுள்ளது.

முன்பு பாகிஸ்தானை கருப்புப் பட்டியலில் சேர்க்கக் கூடாது என்பதற்கு துருக்கி, மலேசியா, சீனா ஆகிய நாடுகள் ஆதரவு அளித்தன.

ராஜதந்திரம்

இதற்கிடையில் பயங்கரவாத குழுக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி, குழுவின் நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் என்று பாகிஸ்தானை சீனா வலியுறுத்தி வருகிறது.

அடுத்து வரக் கூடிய இக்குழுவின் உயர்நிலைக் கூட்டத்தில் தங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று, சமீபத்தில் பெய்ஜிங் சென்றிருந்த பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மொஹம்மத் குரேஷி கோரிக்கை விடுத்துள்ளார் என்று இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.

ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலைநாட்ட தாங்கள் அளித்து வரும் பங்களிப்பை, உயர்நிலைக் கூட்டத்தின் போது அமெரிக்கா கருத்தில் கொள்ளும் என்று பாகிஸ்தான் நம்புகிறது.

2018-ல் “கிரே பட்டியலில்’ இருந்து பாகிஸ்தானை நீக்குவதை முடிவு செய்யும் வாக்கு குறித்த முடிவை திரும்பப் பெறுமாறு சௌதி அரேபியாவை அமெரிக்கா சம்மதிக்க வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளை திரும்பப்பெற பெறுவதற்கான அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் திட்டத்தில் மையமாக இருக்கும் பேச்சுவார்த்தைகளில் தாலிபான்களை பங்கேற்கச் செய்ய வைப்பதில் பாகிஸ்தான் முயற்சி மேற்கொண்டுள்ளது.

ஆப்கான் தாலிபான்களுக்கு எதிரான ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் தடைகளை அமல் செய்வதாக ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தான் அறிவித்தது. இக் குழுவின் நிபந்தனை மனதில் கொண்டும் இந்த முடிவு எடுக்கப் பட்டிருக்கும் என்பதில் சந்தேகம் எதுவும் கிடையாது. ஆப்கானில் அமைதியை உருவாக்க அடுத்தகட்ட முயற்சியாக, ஆப்கானுக்குள் நடைபெறும் பேச்சுவார்த்தையில் தாலிபான் உயர்நிலைக் குழுவினரை பங்கேற்கச் செய்ய பாகிஸ்தான் முயற்சி மேற்கொண்டுள்ளது.

சவால்கள்

சில விஷயங்கள் பாகிஸ்தான் முயற்சிகளுக்குத் தடங்கல்களாக உள்ளன. குறிப்பாக, அந்த நாட்டில் செயல்படும் தீவிரவாத குழுக்களுக்கு இஸ்லாமாபாத் ஆதரவை விலக்கிக் கொள்ளவில்லை என்ற இந்தியாவின் புகார்கள் இந்த வகையில் வருகின்றன.

சவால்கள்

பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதக் குழுவின் தலைவர் மௌலானா மசூத் அஸார் உள்ளிட்ட 19 பேர், 2019 புல்வாமா தாக்குதலை நடத்தியுள்ளனர் என்று கடந்த ஆகஸ்ட் மாதம், இந்தியாவின் தேசிய புலனாய்வு முகமை 13,500 பக்கங்கள் கொண்ட ஓர் அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.

புல்வாமா தாக்குதலில் இந்திய வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர். அந்தத் தாக்குதலில் பாகிஸ்தானுக்குப் பங்கு இருந்தது என்பதற்கான “மறுக்க முடியாத ஆதாரங்கள்” அந்த அறிக்கையில் உள்ளதாக இந்திய அதிகாரிகள் கூறுகின்றனர்.

உள்நாட்டு ஊடகங்கள் என்ன சொல்கின்றன?

குழுவின் முடிவுகள் பற்றியும், அதன் நிபந்தனைகளை நிறைவேற்ற அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்தும் பாகிஸ்தான் ஊடகங்கள் தொடர்ந்து செய்திகள் வெளியிட்டு வருகின்றன.

அரசின் முயற்சிகளுக்கு பாராட்டு கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன. பாகிஸ்தான் டுடே என்ற ஆங்கில பத்திரிகையில் ஆகஸ்ட் 1 ஆம் தேதி வெளியான தலையங்கத்தில் பின்வருமாறு கூறப்பட்டிருந்தது:

“முன்னோக்கி பார்த்தோம் என்றால், FATF எதிரே தனது நல்ல செயல்பாடுகளைக் காட்டி, கறுப்புப் பட்டியலுக்கு பாகிஸ்தான் போய்விடாதபடி தவிர்த்துவிடுமானால், கட்டாயத்தின் பேரில் இதுவரையில் சட்டவிரோத பணப்புழக்கம் மற்றும் பயங்கரவாத செயல்களுக்கு நிதி கிடைப்பதைத் தடுப்பதற்கு மேற்கொண்ட நடவடிக்கைகளின் தீவிரத்தை குறைத்துக் கொள்ளக் கூடாது.”

பாகிஸ்த்ன்

அதேபோல, “கம்ரான் கான் உடன் உலகம்” என்ற உரையாடல் நிகழ்ச்சியில் துன்யா நியூஸ் என்ற உருது டி.வி.யில் பாதுகாப்பு விவகாரங்கள் துறை நிபுணர் அமீர் ராணா பேசினார். “அக்டோபர் மாதம் சீராய்வு செய்யப்பட உள்ள 13 விஷயங்களில் பாகிஸ்தானின் செயல்பாடுகள் திருப்திகரமாக உள்ளன” என்று அவர் கூறியுள்ளார். இதனால் “கிரே பட்டியலில்’ இருந்து பாகிஸ்தான் நீக்கப்பட்டுவிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருந்தபோதிலும், அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையிலான மோதல் போக்கு பற்றி பெரும்பாலான ஊடகங்கள் கவனம் செலுத்துகின்றன. 24 பேர் குழுவில் எடுக்கப்படும் முடிவுகளில் இருந்து அரசு விலகிச் செல்கிறது என எதிர்க்கட்சிகள் திரும்பத் திரும்ப குற்றஞ்சாட்டி வருகின்றன. ஆனால் மேற்படி குழுவின் முடிவுக்கு ஆதரவான வகையில் எதிர்க்கட்சிகள் செயல்படுவதாக அரசு குற்றஞ்சாட்டியுள்ளது.

இருந்தபோதிலும், FATF தொடர்பான சட்டங்கள் மூலம் சர்வாதிகாரத்தனமான அதிகாரங்களைப் பெறுவதற்கு அரசு முயற்சிக்கிறது என்று எதிர்கட்சிகள் கூறுகின்றன. ஊடகங்களிலும் இந்த விவாதங்கள் நடந்துள்ளன.

“இது மிகுந்த அச்சுறுத்தலாக, நன்னெறிக்கு எதிரானதாக உள்ளது. FATF தொடர்பான சட்டம் என்ற பெயரில் `பொருளாதார பயங்கரவாத’ மசோதா என்ற கொடூரமான சட்டத்தை உருவாக்க அரசு முயற்சிக்கிறது. புலனாய்வாளர்கள் விரும்பினால், எந்தவொரு தனிப்பட்ட குடிமகனையும் 180 நாட்கள் வரை தடுப்புக் காவலில் வைக்க இந்த உத்தேச சட்டம் வகை செய்கிறது. நல்லவேளையாக எதிர்கட்சிகள் அதை நீக்கச் செய்துவிட்டன” என்று டான் என்ற ஆங்கிலப் பத்திரிகை கூறியுள்ளது.

இருந்தபோதிலும், எதிர்கட்சிகள் சமரசம் செய்து கொள்ள வேண்டும் என்று தேசிய அளவிலான உருது தினசரி நவா-இ-வக்விட் வலியுறுத்தியுள்ளது.

“FATF நிபந்தனையைப் பூர்த்தி செய்வதற்கு “இன்றைய காலகட்டத்தில் பாகிஸ்தானுக்கு இந்த மசோதா தேவைப்படுகிறது” என்று அந்தப் பத்திரிகை கூறியுள்ளது. தாங்கள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து FATF-க்கு பாகிஸ்தான் ஏற்கெனவே அறிக்கை சமர்ப்பித்துவிட்ட நிலையில், இந்த வாதம் விநோதமானதாக உள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »