Press "Enter" to skip to content

100 ஆண்டுகளுக்கு முன்பு பெருந்தொற்று காலங்களில் பள்ளிகள் எவ்வாறு இயங்கின?

  • பாலா அடமோ இடோடா
  • பிபிசி நியூஸ், பிரேஸில்

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்)…. உயிரை காவு வாங்கும் வாய்ப்புள்ள, தடுப்பு மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படாத ஒரு நோய். குழந்தைகள் கற்றல் திறன் குறைந்துவிடாமல் இருக்க, அவர்கள் பாதுகாப்பாக பள்ளிக்கு வந்து செல்ல என்ன மாதிரியான ஏற்பாடுகள் செய்வது என்பது ஒரு பிரச்சனையாக உள்ளது. இப்போதைய பிரச்சினை போலத் தெரிகிறதா? நல்லது, நூறாண்டுகளுக்கு முன்பு இதேபோன்ற ஒரு சூழ்நிலையை உலகம் எதிர்கொண்டது. அப்போது காசநோய் உயிர்க்கொல்லி நோயாக இருந்தது.

20வது நூற்றாண்டின் தொடக்கத்தில், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் ஏழு பேரில் ஒருவர் என்ற அளவில் காசநோய் காரணமாக இறந்து போனார்கள் என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையங்கள் அமைப்பு (சிடிசி) தெரிவித்துள்ளது. 1921ல் தான் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. உலகெங்கும் அந்த மருந்து கிடைக்க பத்தாண்டுகள் வரை ஆனது. அந்தச் சூழ்நிலையில், குழந்தைகள் தங்கள் கல்வியைத் தொடர்வதற்கு, திறந்தவெளிப் பள்ளிக்கூடங்கள் என்பது ஒரு தீர்வாக அமைந்தது.

மேசைகளும், இருக்கைகளும் தோட்டங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. அறிவியல், புவியியல் அல்லது கலை பாடங்களை இயற்கையை கவனித்தல் மூலம் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கற்றுக் கொடுத்தனர்.

இந்தச் சிந்தனை 1903ல் ஜெர்மனி மற்றும் பெல்ஜியத்தில் தொடங்கியது. சீக்கிரத்திலேயே அது பெரிய இயக்கமாக உருவெடுத்தது. திறந்தவெளிக் கல்வி முறை அமைப்பின் முதலாவது சர்வதேச மாநாடு 1922ல் பாரிஸ் நகரில் நடைபெற்றது.

ஜெர்மனி மற்றும் பெல்ஜியத்தில் 1904ஆம் ஆண்டு திறந்தவெளி பள்ளிகள் தொடங்கப்பட்டன
Banner image reading 'more about coronavirus'
Banner

அமெரிக்காவில் 1907-ல் திறந்தவெளி பள்ளிக்கூடங்கள் தொடங்கின. நகரில் காலியாக உள்ள இடங்களில் பள்ளிக்கூடங்கள் நடத்தலாம் என்று ரோடே ஐலண்ட் மாகாணத்தைச் சேர்ந்த இரண்டு மருத்துவர்கள் பரிந்துரை செய்ததை அடுத்து, அந்தத் திட்டம் தொடங்கப்பட்டது என்று நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. அடுத்த 2 ஆண்டுகளில், கட்டடங்களுக்கு இடையே காலியாகக் கிடந்த இடங்கள், உயரடுக்கு மாடிகளில் மொட்டை மாடிகள், பயன்படுத்தாமல் கிடக்கும் படகுகள் ஆகியவற்றில் 65 பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன.

உடலும் மனமும்

கோவிட்-19 போல அல்லாமல், காசநோய் காற்றில் பரவக் கூடியது. காற்றில் பல மணி நேரங்களுக்கு ஊசலாடிக் கொண்டிருக்கும் பாக்டீரியாவை சுவாசிக்கக் கூடிய நபர்களுக்கு காசநோய் பாதிப்பு ஏற்படும் என்று சி.டி.சி கூறுகிறது.

20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஊட்டச்சத்து குறைபாடு, ரத்த சோகையோடு, டிபி-யும் குழந்தைகளிடையே முக்கிய பிரச்சனையாக இருந்தது.

நோய் பாதித்தவர்களிடம் இருந்து வெளியாகும் பெரிய திவலைகள் மூலம், நேரடியாக தொடுதல் அல்லது நோயாளி தொட்ட இடத்தின் மேற்பரப்பை இன்னொருவர் தொடுவதன் மூலம் கோவிட் பரவுகிறது என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. இருந்தபோதிலும் காற்றில் ஊசலாடிக் கொண்டிருக்கும் நுண்ணிய துகள்கள் மூலமாகவும் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவுகிறது என்பதற்கு ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக இந்த அமைப்பு சமீபத்தில் கூறியுள்ளது.

“ரத்தசோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டு குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தானதாக காசநோய் இருந்தது” என்று சா பாலோ மத்திய பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் ஆண்ட்ரூ டால்பென் கூறுகிறார்.

EAAL

“ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் பள்ளிக்கூடங்களில் படித்து வந்தனர். எனவே இந்த சுகாதார அம்சம் அவர்களுக்கு மிகுந்த கவலையை அளித்தது” என்கிறார் அவர்.

அதிகம் பேர் வசிக்கும் குடியிருப்புகள் போன்ற சுகாதாரமற்ற சுற்றுச்சூழலில் இருந்து குழந்தைகளை வெளியே கொண்டு வருவதன் மூலம், இயற்கையுடன் அவர்களுக்குத் தொடர்பை ஏற்படுத்தித் தருவதன் மூலம், குழந்தைகளின் கற்றல் தேவைகளைப் பூர்த்தி செய்வதன் மட்டுமின்றி, அவர்களின் நோய் எதிர்ப்பாற்றலை பலப்படுத்த முடிந்தது.

`புதிய சிந்தனைகள்’

இரண்டு உலகப் போர்களுக்கு இடைப்பட்ட காலத்தில் திறந்தவெளி பள்ளிக்கூடங்கள் எண்ணிக்கை அதிகரித்தன என்றும், அப்போது சமூகம் மற்றும் கல்வி குறித்து புதிய சிந்தனைகள் உருவாயின என்றும் சா பாலோ பல்கலைக்கழகத்தின் வரலாற்றுக் கல்வித் துறை பேராசிரியர் டயானா விடால் சுட்டிக்காட்டுகிறார்.

EAAL

“அமைதி மிகுந்த மற்றும் ஆதரவு காட்டும் தலைமுறையை” உருவாக்குவதற்கு, “நட்பு ரீதியிலான மற்றும் ஜனநாயக ஊக்குவிப்பு” மாடல்களை பின்பற்ற வேண்டும் என்ற வழக்கமான நடைமுறைகளை கல்வியாளர்கள் உடைத்தெறிந்தனர்.

பிரேஸிலில் 1916 ஆம் ஆண்டிலும் பிறகு 1920கள் மற்றும் 1930களிலும் திறந்தவெளி பள்ளிக்கூடங்கள் நிறைய செயல்பட்டதற்கான ஆதாரங்களைப் பேராசிரியர் டல்பென் கண்டறிந்துள்ளார்.

அப்ளைடு திறந்தவெளி பள்ளிக்கூடத்தில் 1939 முதல் 1950 வரையில் சா பாலோ அக்குவா பிரான்கா பூங்காவில் பாடங்கள் நடைபெற்று வந்துள்ளன. பிறகு அருகில் உள்ள கட்டடத்துக்கு மாற்றப்பட்டது.

இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள வரலாற்று முக்கியத்துவமான படங்கள் எல்லாமே அந்தப் பள்ளிக்கூடத்தின் திறந்தவெளி வகுப்பறைகள் தான்.

EAAL

அந்தப் பகுதியில் வசிக்கும் மேல்தட்டு மக்களின் பிள்ளைகளும் அதில் படித்தார்கள் என்பதால், அந்தப் பள்ளிக்கூடம் அசாதாரணமானதாகக் கருதப்படுகிறது.

ஒரு சமயத்தில் அங்கு 350 பேர் படித்துக் கொண்டிருந்தனர், பலர் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப் பட்டிருந்தனர்.

நகர அதிகாரிகள் இதை கல்விக்கான முன்மாதிரியாகக் கருதியபோதிலும், இந்தப் பள்ளியின் எல்லா அம்சங்களுமே பாரம்பர்ய பள்ளிக்கூட நடைமுறையில் இருந்து மாறுபட்டிருக்கவில்லை என்று பேராசிரியர் டல்பென் கூறியுள்ளார்.

“இப்போது 80 வயதைக் கடந்துவிட்ட, அந்தப் பள்ளியின் அப்போதைய மாணவர்களுடன் நான் பேசினேன். ஆசிரியர்கள் மிகவும் கண்டிப்புடன் நடந்து கொள்வார்கள் என அவர்கள் கூறினர். எனவே நடைமுறையில், மற்ற பள்ளிகளில் இருந்து இது ரொம்பவும் மாறுபட்டதாக இல்லை” என்றார் அவர்.

திறந்தவெளி பள்ளிக்கூடங்களை ஒப்பீடு செய்வதாக இருந்தால், “ஆசிரியர்கள் மொழியில், வால் நட்சத்திரம்” போன்றவையாக இவை செயல்பட்டன என்று அவர் கூறியுள்ளார். நிறைய பேரின் கவனத்தை இவை ஈர்த்தன ஆனால் 1960களில் மெல்ல மெல்ல அவை காணாமல் போய்விட்டன என்று குறிப்பிட்டார்.

EAAL

அதன் பிறகு பள்ளிக்கூடம் தொடங்கும் நேரம், வகுப்பு முடியும் நேரம் நிர்ணயித்து, ஆதார வளங்களை அதிகபட்சம் பயன்படுத்திக் கொள்வதற்காக அதே வகுப்பறையில் முடிந்த வரையில் அதிகமான மாணவர்களை அமர வைப்பது என்பது போன்ற தொழிற்சாலை மாதிரியான போக்கிற்கு பள்ளிக்கூடங்கள் மாறிவிட்டன என்று பேராசிரியர் விடால் கூறியுள்ளார்.

வெளிப்புறங்களில் கோவிட் 19 பாதிப்பு கணிசமாகக் குறையும் என்று ஆய்வு முடிவுகள் இப்போது காட்டும் நிலையில், திறந்தவெளி பள்ளிக்கூடங்கள் என்ற சிந்தனையை மீண்டும் ஆராயலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

வெளிப்புற கற்றலில் சாம்பியன்கள்

காஷ்மீரில் ஏற்கெனவே திறந்தவெளி பள்ளிக்கூடங்கள் நடைமுறையில் உள்ளன. பனிமூடிய இமயமலையின் பின்னணியில் மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்.

காஷ்மீர்

தங்களுடைய இளவயது குடிமக்களை உடல்ரீதியாகவும், மன ரீதியாகவும் பலப்படுத்துவதற்கு, சிங்கப்பூரில் பல ஆண்டுகளாகவே வெளிப்புற கற்றல் நடைபெற்று வருகிறது.

பின்லாந்தில் வனப் பகுதி பள்ளிகள் நன்கு அறியப்பட்டுள்ளன. நாட்டின் கலாச்சாரத்தில் வனங்களும் இயற்கையும் அங்கு முக்கியத்துவம் பெறுகின்றன.

டென்மார்க்கில் வெளிப்புறப் பள்ளிகளுக்கு – udeskole – என்ற பெயரே வைக்கப்பட்டுள்ளது. பல பள்ளிக்கூடங்களும், ஆசிரியர்களும் இந்த வகுப்புகள் நடத்துவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். கோவிட் 19 நோய்த் தொற்று சூழலில் இந்த நடைமுறையை இன்னும் எப்படி மேம்படுத்தலாம் என்று அரசாங்கம் யோசனைகள் கேட்டிருக்கிறது.

வெளிப்புறக் கற்றல் மாணவர்களை இயற்கையுடன் தொடர்புக்குக் கொண்டு வருவது மட்டுமின்றி, கல்வியில் ஈடுபாடு காட்டுதலை அதிகரிக்கவும், உடல் இயக்கம் மற்றும் உணர்வு மேம்பாட்டுக்கு உதவுவதாகவும் பேராசிரியர் விடால் கூறியுள்ளார்.

டென்மார்க்

பாடங்களை வழங்குபவர்களாக இருந்து வந்த ஆசிரியர்கள், இந்தச் சூழ்நிலையில் கற்றலுக்கு உதவக் கூடியவர்களாக மாறி இருக்கிறார்கள்.

“திறந்தவெளி கல்வி என்பது பள்ளிக்கூட பயணங்கள் என்பதாகத்தான் இருக்க வேண்டும் என்று கிடையாது. திறந்தவெளியைப் பயன்படுத்தும் கட்டாயம் நமக்கு ஏற்படும். மூடப்பட்ட அறைகளுக்குப் பதிலாக இது நல்லதாக இருக்கும். காலியாகக் கிடைக்கும் இடங்களைப் பயன்படுத்துவதற்கான அழைப்பு இது” என்று அவர் கூறியுள்ளார்.

கடந்த காலத்தில் நடைபெற்ற திறந்தவெளி பள்ளிக்கூடங்கள், இன்றைய காலக்கட்டத்தில் பள்ளிகளின் கட்டமைப்பை உருவாக்குவதற்கான மறுசிந்தனையை உருவாக்குபவையாக உள்ளன.

“என் ஆராய்ச்சியை நான் தொடங்கியபோது, குழந்தைகளின் சுற்றுச்சூழல் கல்வி மீது நான் கவனம் செலுத்தினேன். ஆனால் இப்போது நோய்த் தொற்று பிரச்சினை ஏற்பட்டுள்ளது” என்று அவர் குறிப்பிட்டார்.

“நகர்ப்புற பள்ளிக்கூடங்கள் பற்றியும், பூங்காக்கள் மற்றும் பொது இடங்களை எப்படி அதிக அளவில் பயன்படுத்துவது என்பது பற்றியும் மறு சிந்தனை செய்யலாம். கடந்த காலத்தில் இருந்த அதே மாதிரியான திறந்தவெளிப் பள்ளி நடைமுறைகளை நாம் பின்பற்ற வேண்டியதில்லை. நிச்சயமாக மாறுபட்ட வடிவில் அந்த நடைமுறையைப் பின்பற்றலாம்” என்றும் அவர் கூறியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »