Press "Enter" to skip to content

இந்தியா, சீனா எல்லையில் கூடுதல் படை குவிப்பை நிறுத்த தீர்மானம் – விரிவான தகவல்கள்

கிழக்கு லடாக்கில் உள்ள அசல் எல்லை கோடு (எல்ஏசி) பகுதியில் இந்தியாவும், சீனாவும் பரஸ்பரம் படை பலத்தை அதிகரிப்பதை நிறுத்திக் கொள்ளத்தீர்மானித்துள்ளன.

இது தொடர்பாக இரு நாட்டு ராணுவ கட்டளைத் தளபதிகள் நிலையிலான ஆறாவது சுற்று கூட்டம் திங்கட்கிழமை நடைபெற்றது. 13 மணி நேரம் நீடித்த அந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட முடிவுகள் அறிவிக்கப்படால் இருந்தன.

இந்த நிலையில், இரு தரப்பு ராணுவமும் சேர்ந்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன. அதில், இரு தரப்பிலும் மிகவும் ஆழமான முறையில் எல்ஏசி பகுதியில் உள்ள நிலையை சரி செய்வது குறித்து விவாதித்ததாக கூறியுள்ளன.

இரு நாட்டு தலைவர்கள் நிலையிலான கூட்டத்தில் எட்டப்பட்ட கருத்தொற்றுமையின்படி, களத்தில் பரஸ்பரம் தொடர்புகளை வலுப்படுத்துவது, தவறான புரிந்துணர்வுகளையும் தவறான அனுமானங்களையும் தவிர்த்து செயல்பட முடிவு செய்யப்பட்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், எல்லை முன்களத்தை நோக்கி கூடுதல் படையினரை அனுப்பாமல் நிறுத்திக் கொண்டு, களத்தில் பரஸ்பரம் உள்ள நிலைகளில் இருந்து கொண்டு, மேலும் முன்னேறாமல் இருக்கும் நிலையே தொடருவது என்றும் இரு தரப்பு ராணுவ கட்டளை அதிகாரிகள் ஒப்புக் கொண்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தன்னிச்சையாக தங்களின் கள இருப்பை மாற்றாமல் இருக்கவும், எல்லை முன்கள சூழலை மேலும் சிக்கலாக்காமல் தவிர்ப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டதாக இரு நாட்டு ராணுவ உயரதிகாரிகள் கூட்டத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விரைவில் இரு நாட்டு ராணுவ கட்டளை அதிகாரிகள் நிலையிலான ஏழாவது சுற்று கூட்டத்தை கூட்டவும், அப்போது களத்தில் நிலவும் பிரச்னைகளுக்கு சரியான முறையில் தீர்வு காணவும் இரு தரப்பும் ஒப்புக் கொண்டன.

எல்லை பகுதியை அமைதி வழியில் பாதுகாக்க நடவடிக்கை எடுப்பது என இரு தரப்பிலும் தீர்மானிக்கப்பட்டதாக அந்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை பேசிய சீன வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் வாங் வென்பின், எல்லை பகுதியில் பதற்றத்தை தணிக்கும் வகையில் தொடர்புகளை வலுப்படுத்தி, பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது குறித்து இரு தரப்பிலும் கருத்துகள் பரிமாறிக் கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.

ஆனால், கூட்டறிக்கை தொடர்பான தகவல், இந்திய அரசு தரப்பில் ஊடகங்களுக்கு பகிரப்பட்டது. இதேவேளை, சீன அரசு தரப்பில் இருந்து அத்தகைய தகவல்கள் அலுவல்பூர்வமாக பகிரப்படவில்லை.

எல்லை பதற்றம் தொடர்பாக இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் பேசியது தொடர்பான காணொளி:

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »