Press "Enter" to skip to content

கொரோனா பயம்: சிங்கப்பூரில் உயிரை மாய்த்துக் கொண்ட தமிழக தொழிலாளி

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அச்சமும் கவலையும் அடைந்த இந்தியத் தொழிலாளி ஒருவர் சிங்கப்பூரில் தாம் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனையின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அவரது மரணம் குறித்து நேற்று (செப்டம்பர் 24ஆம் தேதி) நடைபெற்ற நீதிமன்ற விசாரணையின்போது உயரமான இடத்திலிருந்து கீழே விழுந்ததால் அவர் உயிர் இழந்ததாக விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார்.

46 வயதான அழகு பெரியகருப்பன் அந்தமானைச் சேர்ந்தவர். கடந்த 10 ஆண்டுகளாக இவர் சிங்கப்பூரில் கட்டுமானத் துறையில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி பாஞ்சாலி, மதுரையைச் சேர்ந்தவர். கடந்த 2002ஆம் ஆண்டு இவர்களுக்குத் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதியருக்கு 6 முதல் 16 வயதுக்குட்பட்ட 3 மகள்கள் உள்ளனர். மனைவியின் பெற்றோரையும் ஆதரிக்க வேண்டிய நிலையில் 7 பேர் கொண்ட குடும்பத்துக்காக சிங்கப்பூரில் பணியாற்றி வந்துள்ளார் அழகு பெரியகருப்பன்.

இந்நிலையில் அவருக்கு கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று ஏற்பட்டது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி சிங்கப்பூரில் உள்ள கூடெக் புவாட் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கவலைப்படும் வகையில் அவரது உடல்நிலை இல்லை என்றும் மிக விரைவில் குணமடைவார் என்றும் மருத்துவமனைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் ஏப்ரல் 23ஆம் தேதியன்று மருத்துவமனையின் படிக்கட்டுகள் உள்ள பகுதியில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது. அவர் எதனால் இறந்தார் என்பது முதலில் தெரியவில்லை. எனினும் உயரமான இடத்திலிருந்து விழுந்ததால் ஏற்பட்ட காயங்கள் காரணமாக உயிரிழந்திருக்கலாம் எனப் பின்னர் முடிவு செய்யப்பட்டது. மேலும், இச்சம்பவத்தின் பின்னணியில் சதிச்செயல் ஏதுமில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அழகுவின் மரணத்துக்கு கோவிட் 19 நோய் காரணமல்ல என்று சிங்கப்பூர் சுகாதார அமைச்சு முதலில் உறுதிபடுத்தியது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு தமது குடும்பத்தாரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார் அழகு. அதன் பிறகே அவருக்குக் கடும் மன உளைச்சல் ஏற்பட்டதாகக் கருதப்படுகிறது.

Banner image reading 'more about coronavirus'
Banner

உடல்நிலை குறித்த கவலை, ஒருவேளை தமக்கு ஏதேனும் ஆகிவிட்டால் குடும்பத்தாரின் நிலை என்னவாகும் எனும் கவலை அழகு பெரியகருப்பனை ஆட்டிப்படைத்துள்ளது. இதனால் தமது உயிரை தாமே மாய்த்துக்கொள்ளும் முடிவுக்கு அவர் வந்ததாக கருதப்படுகிறது.

கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி அதிகாலை சுமார் 5.30 மணியளவில் தாம் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனை வார்டின் கழிவறைக்குச் சென்றுள்ளார் அழகு. பிறகு தனது கைபேசியில் இரண்டு காணொளிகளைப் பதிவு செய்துள்ளார்.

தமக்கு கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று ஏற்பட்டுள்ளது என்றும் வேறு வழியின்றி உயிரை மாய்த்துக் கொள்ள முடிவு செய்திருப்பதாகவும் அவர் காணொளியில் தெரிவித்திருப்பது அவரது குடும்பத்தாரை நிச்சயம் நிலைகுலைய வைத்திருக்கும். இதையடுத்து கழிவறையின் ஜன்னலைத் திறந்து அதன் வழி கீழே குதித்துள்ளார் அழகு.

சிங்கப்பூர்

பிரேதப் பரிசோதனையில் அவரது இதயப் பகுதி பிளவுபட்டுள்ளதாகவும் மார்புக்கூட்டுக்குள் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்தது. மேலும், மூளையில் ரத்தக்கசிவும் ஏற்பட்டதை அடுத்து பலத்த காயங்கள் காரணமாக அவருக்கு இறப்பு நேர்ந்துள்ளது உறுதியானது.

மருத்துவமனையில் இருந்த 4 தினங்களுக்குள் சக நோயாளிகளிடம் நற்பெயரைச் சம்பாதித்துள்ளார் அழகு.

அவர் மிக அமைதியானவர் என்று உடனிருந்தவர்கள் தெரிவிக்கின்றனர். தாமே ஒரு நோயாளி என்றபோதிலும் தனது வார்டில் இருந்த மற்ற நோயாளிகளுக்கு உணவு விநியோகப்பதில் தாதியர்களுக்கு அவர் உதவியுள்ளார். எனினும் தமக்கு கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றியதை அவரால் ஜீரணிக்க முடியவில்லை எனத் தெரிகிறது.

சிங்கப்பூர்

தமது எதிர்காலம் குறித்தும் குடும்பத்தின் பொருளாதார நிலை குறித்தும் அழகு கவலைப்பட்டார் என அவருக்குச் சிகிச்சையளித்த மருத்துவமனையின் மனநல சிகிச்சைப் பிரிவின் தலைவர் கோ கா ஹோங் தெரிவித்துள்ளார். தமது குழந்தைகளைப் பற்றிய கவலையும் அழகுவின் மனதை ஆக்கிரமித்திருந்ததாக அம்மருத்துவர் நேற்று நீதிமன்ற விசாரணையின்போது குறிப்பிட்டார்.

பொதுவாக கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மற்ற நோயாளிகளுக்கும் இத்தகைய கவலைகள் இருக்கவே செய்யும் என்று அவர் தெரிவித்ததாக சிங்கப்பூர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

சிங்கப்பூரில் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றுக்காக மருத்துவமனைகளில், குறிப்பாக அழகு சிகிச்சை பெற்ற மருத்துவமனையில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கோவிட் 19 நோயாளிகளுக்கு, அவர்களுடைய தாய்மொழியில் நோயின் தன்மை குறித்த விளக்கங்கள் அளிக்கப்படுகின்றன. அவ்வாறு இருந்தும் தங்களுக்கு ஏற்பட்டுள்ள நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று குறித்து சில வெளிநாட்டவர்களால் சரியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை என்றும், தங்களை எதற்காக மருத்துவமனையில் வைத்திருக்க வேண்டும் என அவர்கள் கேட்பதாகவும் கூடெக் புவாட் மருத்துவமனையின் மருத்துவர் கோ கா ஹோங் கூறுகிறார்.

கோப்புப்படம்

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிங்கப்பூரில் ஒரே நிறுவனத்தில் பணியாற்றி வந்த அழகு மீது பணியிடத்தில் எந்தவிதப் புகாரும் இல்லை எனத் தெரிய வந்துள்ளது. கணவரின் திடீர் இறப்பு பெரும் அதிர்ச்சி அளிப்பதாகவும் மொத்த குடும்பமும் கண்ணீரில் மூழ்கி இருப்பதாகவும் அழகு பெரிய கருப்பனின் மனைவி பாஞ்சாலி தெரிவித்துள்ளார். சிங்கப்பூரில் இருந்து தினந்தோறும் தமது குடும்பத்தாரைத் தொடர்பு கொண்டு பேசுவது அழகு பெரியகருப்பனின் வழக்கமாக இருந்துள்ளது.

கணவர் இறந்தது குறித்து பாஞ்சாலிக்கு உடனுக்குடன் தகவல் தெரியவில்லை. ஊடகங்கள் மூலமாகவே தமக்கு விவரம் தெரிய வந்ததாகவும் அதன்பின்னர் சிங்கப்பூர் போலிசார் தொடர்புகொண்டு பேசியதாகவும் அவர் கூறியுள்ளார். அழகு பெரிய கருப்பனின் இரு மகள்கள் பள்ளியில் படித்து வருகின்றனர். மூன்றாவது மகள் இன்னும் பள்ளியில் சேர்க்கப்படவில்லை.

குடும்பத்துக்காக கடல் கடந்து சென்று பொறுப்புடன் சம்பாதித்து மகள்களையும் மற்றவர்களையும் அன்பாக கவனித்துக்கொண்ட பெரியகருப்பன், கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று குறித்து அதிகப்படியான பயம் காரணமாகவே தவறான முடிவை எடுத்திருப்பதாகக் கருதத் தோன்றுகிறது. கொரோனா குறித்த பீதி அழகான, பாசமான ஒரு குடும்பத்தை சிதைத்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »