Press "Enter" to skip to content

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): `உயிரிழப்புகள் இரட்டிப்பாகும்` – எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்

கொரோனா தடுப்பு மருந்து பயன்பாட்டிற்கு வரும்முன் உலகளவில் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றால் இருபது லட்சம் பேர் உயிரிழக்கலாம் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தின் அவசர நிலைகளுக்கான தலைவர் மைக் ரேயான், உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்படவில்லை என்றால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என தெரிவித்துள்ளார்.

இதுவரை உலகளவில் கொரோனா தொற்றால் பத்து லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 32மில்லியன் பேர் உலகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குளிர்காலம் நெருங்குவதால் வட துருவ நாடுகள் பலவற்றில் கொரோனா தொற்றில் இரண்டாம் அலை தொடங்கியுள்ளது.

ஐரோப்பா முழுவதும் பல பகுதிகளில் மீண்டும் தொற்று பரவ தொடங்கியுள்ளதால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

இதுவரை அமெரிக்கா, இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகளில்தான் அதிகம்பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்றுக்கான சிகிச்சை மேம்பட்டுள்ளதால் உயிரிழப்புகள் குறைந்துள்ளன. ஆனால் நல்ல சிகிச்சையோ அல்லது தடுப்பு மருந்துகளோ இருந்தாலும், இருபது லட்சம் பேர் உயிரிழப்பதை தடுக்க இயலாது என அவர் தெரிவித்தார்.

எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல் இன்று மரியாதையுடன் அடக்கம்

எஸ்பிபி

சென்னையில் உடல்நலக்குறைவால் வெள்ளிக்கிழமை பகல் 1 மணிக்கு காலமான எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் சனிக்கிழமை (செப்டம்பர் 26) நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

கொரோனா பரவல் கட்டுப்பாடுகள் நாடு முழுவதும் அமலில் உள்ள நிலையில், இறுதி நிகழ்ச்சிகளில் அதிகபட்சமாக 100 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்று இந்திய அரசும், தமிழக அரசும் ஏற்கெனவே கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

இந்த நிலையில், சென்னை நுங்கம்பாக்கம் இல்லத்தில் இன்று ஆயிரக்கணக்கில் எஸ்.பி.பியின் ரசிகர்கள், திரைத்துறையினர் அஞ்சலி செலுத்த வந்ததால் கூட்டத்தை காவல்துறையினரால் கட்டுப்படுத்த முடியவில்லை.

இதனால், அங்கு தொடர்ந்து எஸ்.பி.பியின் உடலை வைத்திருக்காமல் அவரது இறுதிநிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டுக்கு கொண்டு செல்லுமாறு எஸ்.பி.பி குடும்பத்துக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது.

சிங்கப்பூரில் உயிரை மாய்த்துக் கொண்ட அந்தமான் தமிழர்

குடும்பத்தினருடன் தமிழக தொழிலாளி பெரியகருப்பன்

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அச்சமும் கவலையும் அடைந்த இந்தியத் தொழிலாளி ஒருவர் சிங்கப்பூரில் தாம் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனையின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அவரது மரணம் குறித்து நேற்று (செப்டம்பர் 24ஆம் தேதி) நடைபெற்ற நீதிமன்ற விசாரணையின்போது உயரமான இடத்திலிருந்து கீழே விழுந்ததால் அவர் உயிர் இழந்ததாக விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார்.

46 வயதான அழகு பெரியகருப்பன் அந்தமானைச் சேர்ந்தவர். கடந்த 10 ஆண்டுகளாக இவர் சிங்கப்பூரில் கட்டுமானத் துறையில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி பாஞ்சாலி, மதுரையைச் சேர்ந்தவர். கடந்த 2002ஆம் ஆண்டு இவர்களுக்குத் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதியருக்கு 6 முதல் 16 வயதுக்குட்பட்ட 3 மகள்கள் உள்ளனர். மனைவியின் பெற்றோரையும் ஆதரிக்க வேண்டிய நிலையில் 7 பேர் கொண்ட குடும்பத்துக்காக சிங்கப்பூரில் பணியாற்றி வந்துள்ளார் அழகு பெரியகருப்பன்.

மன்னிப்பு கேட்டார் கிம் ஜாங் உன்

கிம்

தென் கொரிய அதிகாரி ஒருவர் வட கொரிய படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டு எரிக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தில் அரிதான நிகழ்வாக, இதுகுறித்து தனிப்பட்ட முறையில் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் மன்னிப்பு கேட்டுள்ளதாக தென் கொரிய தரப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன்னுக்கு வட கொரிய தலைவர் கிம் எழுதிய கடிதத்தில், “அவமானகரமான இந்த சம்பவம்” நடந்திருக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இலங்கை அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம்: நீதிமன்றத்தை நாடும் எதிர்கட்சிகள்

ராஜபக்ச சகோதரர்கள்

இலங்கை அரசியலமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தத்திற்கு எதிராக எதிர்கட்சிகள் மற்றும் இலங்கை பிரஜைகள் பலர் உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

அரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலம், நாடாளுமன்றத்தில் கடந்த திங்கட்கிழமை சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், அந்த சட்டமூலத்திற்கு எதிராக எதிர்கட்சிகள் மற்றும் தனி நபர்கள் என பலரும் உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

1978ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இலங்கை அரசியலமைப்பில் இதுவரை 19 திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த நிலையில், நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கு காணப்படுகின்ற அதிகாரங்களை குறைத்தல், சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு அதிகாரங்களை வழங்குதல் உள்ளிட்ட முக்கிய சரத்துக்களை உள்ளடக்கிய வகையில் 19ஆவது திருத்தம் கடந்த ஆட்சியாளர்களினால் கொண்டு வரப்பட்டது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »