Press "Enter" to skip to content

சீனா – இந்தியா எல்லை மோதல்: ‘இந்தியா துப்பாக்கிச்சூடு நடத்தினால் தாங்க முடியாத விளைவுகளை சந்திக்கும்’ – சீனா

இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையேயான எல்லைப் பதற்றத்தை குறைக்க, ராஜீய மற்றும் ராணுவ நிலையிலும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஆனால், இருநாட்டு ஊடகங்களும் வெளியிட்டு வரும் செய்திகளால் நிலைமை மோசமாகிக் கொண்டே போகிறது.

இந்தியத் தரப்பில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டால், அந்நாடு தாங்கமுடியாத விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று சீனாவின் அதிகாரப்பூர்வ நாளிதழான குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்திய எல்லையில் அதிக துருப்புகளை இந்தியா குவித்து, சீன ராணுவத்தினர் மீது துப்பாக்கிச்சூடு நடக்க அனுமதித்தால், அது இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் என்றும் இது இந்தியாவுக்கும் ஆபத்தாக முடியும் என்று அதில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியா பதற்றத்தை குறைக்க ஒப்புக்கொண்ட நிலையில், இவ்வாறு நடந்து கொள்வதாக அந்நாளிதழ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தையில், எல்லைகளில் துருப்புகளை அதிகப்படுத்த மாட்டோம் என்று இரு நாடுகளும் ஒப்புக்கொள்ள முடிவு செய்யப்பட்டது. ஆனால், தான் செய்து கொடுத்த சத்தியத்தை இந்தியா காப்பாற்றுவது போல தெரியவில்லை என்றும் குளோபல் டைம்ஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீனா இவ்வாறான செய்தியை வெளியிட என்ன காரணம்?

இந்திய நாளிதழ் வெளியிட்ட ஒரு செய்தியை தொடர்ந்தே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியா சீனா எல்லை

முன்னதாக, இந்தியாவிலிருந்து வெளியாகும் தி இந்து நாளிதழ் வெளியிட்ட செய்தியில், சீன ராணுவத்தினர் எல்லையை முன்னோக்கி வந்தால், அவர்களை இந்திய ராணுவத்தினர் சுடுவார்கள் என்ற செய்தி சீனாவுக்கு தெளிவாக கொடுக்கப்பட்டிருக்கிறது என மூத்த இந்திய அதிகாரி ஒருவர் தி இந்து நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

இந்திய ராணுவத்தினருக்கு தற்காப்புக்காக சுடலாம் என்ற அனுமதி கொடுக்கப்பட்டிருப்பதாக மேலும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் கிழக்கு லடாக்கில் இந்தியா சீனாவுக்கு இடையே நடந்த மோதலில் துப்பாக்கிச்சூடு சம்பவங்களும் நிகழ்ந்தன.

இதனையடுத்து இரு நாடுகளுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தையில் எந்த தரப்பும் எல்லைக்கு மேலும் அதிக துருப்புகளை அனுப்பப்போவதில்லை என முடிவு செய்யப்பட்டது.

பின்னர் எல்லையில் இந்தியாவின் இருப்பு வலுவாக இருக்கும் என்று இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதாவது சீனாதான் முதலில் அங்கு வந்தது, அதனால் அந்நாடுதான் முதலில் அங்கிருந்து திரும்பி செல்ல வேண்டும் என்பதில் இந்தியா தெளிவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் எல்லைப்பகுதிகளில் இந்தியா ராணுவக் கட்டுமானங்களையும், ராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்தியதே இல்லை என குளோபல் டைம்ஸ் பத்திரிகையிடம் சீனாவின் ஜின்ஹுவா பல்கலைக்கழக பேராசிரியர் கியன் ஃபெங் தெரிவித்திருந்தார்.

பாகிஸ்தான் மற்றும் சீனாவின் எல்லைகளில் இரண்டில் இருந்து 3 லட்சம் துருப்புகளை இந்தியா நிலைநிறுத்தியுள்ளதாக அவர் கூறுகிறார்.

கடந்த ஜூன் 15ஆம் தேதி, கிழக்கு லடாக் எல்லைக்கு அப்பால் உள்ள மெய்யான கட்டுப்பாட்டுக் கோட்டுப் (எல்ஏசி) பகுதியில் இந்தியா, சீனா ஆகியவற்றின் படையினருக்கு இடையிலான மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர்.

இந்த சண்டையில் சீன வீரர்கள் யாரேனும் உயிரிழந்தார்களா என்பதை குறித்து அந்நாடு இதுவரை சொல்லவில்லை. எனினும் அந்த சண்டையில் சீன ராணுவத்தினரும் இறந்ததாக குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டது.

முன்னதாக இந்தியா, சீனா இடையே நிலவிவரும் எல்லை பதற்றத்தை குறைக்க, அமைதியை நிலைநாட்டுவது, மற்றும் துருப்புகளை பின்வாங்கிக் கொள்வதை வலியுறுத்தி ஐந்து அம்ச திட்டத்திற்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டிருந்தன.

இந்தியா – சீனா ஆகிய இருநாடுகளும் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், “இந்தியா மற்றும் சீனா இடையிலான வேறுபாடுகள் சர்ச்சையாக மாறாமல் பார்த்துக்கொள்வது போன்ற விஷயங்களை பின்பற்றுவதோடு, உறவுகளை மேம்படுத்தவும் இருநாடுகளும் ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »