Press "Enter" to skip to content

அமெரிக்க அதிபர் தேர்தல் 2020: ஆளும் கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் மைக் பென்ஸ் – யார் இவர்?

அமெரிக்க வெள்ளை மாளிகைக்குழுவில் ஒரு மிக முக்கிய நபராக உருவெடுத்துள்ளார் துணை அதிபர் மைக் பென்ஸ்.

கடந்த 4 ஆண்டுகளாக, அவர் ஒரு சிறந்த துணை அதிபராக பணியாற்றி, நிர்வாகத்தில் முக்கிய நிகழ்வுகளை முடிவெடுக்கும் குழுக்களை வழிநடத்தி, ஊடகங்களில் தனது சிறப்பான பேச்சினால் எதிர்கொண்டார்.

பெரிதாக எந்த சர்ச்சைகளிலும் மாட்டாமல் இருக்கும் இவர், சமீபத்தில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) டாஸ்ட் ஃபோர்ஸை இவர் வழிநடத்திய விதம் விவாதத்திற்கு உண்டானது.

புதுப்பிக்கப்பட்ட தேசிய விண்வெளி கவுன்சிலில், அமெரிக்க விண்வெளிக் கொள்கைக்கு பொருப்பாளராகவும் மைக் பென்ஸ் அமர்த்தப்பட்டார்.

2016ஆம் ஆண்டு ஜூலை மாதம்தான் மைக் பென்ஸின் வெள்ளை மாளிகை பயணம் தொடங்கியது. இந்தியானாபொலிஸில் இருக்கும் இல்லத்தில் டிரம்பின் குடும்பத்தை அவர் சந்தித்தபோது, துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும்படி அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அவருக்கு ஏன் இந்த அழைப்பு வந்தது என்பது எளிதாக புரியக்கூடிய ஒன்றே.

வாஷிங்டனில் நல்ல அனுபவம் வாய்ந்த முன்னாள் ஆளுநரான மைக், சமூக பழமைவாதிகள் இடையே பிரபலமானவர்.

துணை அதிபருக்கு இவர் போட்டியிடுவதாக அறிவிக்கப்படும் முன்னர், மைக் பென்ஸ், டிரம்பின் சில கொள்கைகளை இவர் நேரடியாக விமர்சித்திருக்கிறார்.

அமெரிக்காவுக்கு முஸ்லிம்கள் நுழைய தடை விதிக்க வேண்டும் என்று டிரம்ப் பரிந்துரை செய்த போது, அதனை “அவர்கள் மனதை புண்படுத்தும் விதமாக உள்ளது என்றும் அரசியல் அமைப்புக்கு எதிரானது” என்றும் பென்ஸ் தெரிவித்தார்.

மைக் பென்ஸ்

தற்போது அதிபர் டிரம்ப் குறித்து பெரிதும் அவர் எந்த விமர்சனங்களையும் செய்வதில்லை.

அதே நேரத்தில் கடந்த நான்கு ஆண்டுகள் அவருக்கு எளிமையாக இருக்கவில்லை. சில சறுக்கல்களை அவர் சந்திக்கவே செய்தார்.

இந்தியானா ஆளுநராக இருந்தபோது, தனிப்பட்ட இ-மெயிலை மைக் பென்ஸ் பயன்படுத்தியதாக 2017ஆம் ஆண்டு ஒரு சர்ச்சை எழுந்தது.

அமெரிக்காவில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவல் தொடர்பான பதற்றம் “பெரிதுப்படுத்தப்பட்டதாக” இவர் கூறியதற்கும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.

தாராளவாத அடிப்படையைக் கொண்டவர்

கொலம்பஸில் உள்ள இந்தியானாவில் தனது உடன் பிறந்த 5 பேருடன் வளர்ந்த மைக் பென்ஸ் ஒரு கத்தோலிக்கர்.

தாராளவாத கொள்கையின் முகங்களாக இருந்த ஜான் எஃப் கென்னடி மற்றும் ஜூனியர் மார்டின் லூத்தர் கிங் ஆகியோரைப் பார்த்தே தனக்கு அரசியல் ஆர்வம் ஏற்பட்டதாக 2012ஆம் ஆண்டு இந்தியானாபொலிஸ் ஸ்டாருக்கு அளித்த பேட்டி ஒன்றில் அவர் குறிப்பிட்டிருந்தார்

தன்னை ஒரு “கிறிஸ்துவர், பழமைவாதி மற்றும் குடியரசுக்கட்சி சார்ந்த நபர்” என்று விவரித்தக் கொண்ட மைக் பென்ஸ் 1980ல் ஜிம்மி கார்டெருக்கு வாக்களித்தார்.

கல்லூரிக் காலத்தில் தன் எதிர்கால மனைவி கேரனை சந்தித்த பிறகுதான் கத்தோலிக்க அடிப்படை மாறத் தொடங்கியதாக அவர் தெரிவித்தார்.

மைக் பென்ஸ், அவரது மனைவி கேரன் பென்ஸ், மற்றும் அவரது மகள் ஷார்லெட்

2013 முதல் 2017 வரை இந்தியானாவின் ஆளுநராக இருந்த மைக் பென்ஸ், அமெரிக்க பிரநிதிகள் சபையின் உறுப்பினராக 12 ஆண்டுகள் இருந்தார்.

முன்னதாக அதிபர் பதவிக்கு போட்டியிடும் எண்ணம் இவருக்கு இருந்தது. 2009ஆம் ஆண்டில் அவர் முக்கிய மாகாணங்களுக்கு சென்று பார்வையிட்டது, 2012ல் அவர் அதிபர் பதவிக்கு போட்டியிட உள்ளார் என்ற பேச்சுக்கு காரணமாக இருந்தது.

2016 அதிபர் பிரசாரத்தின்போது, டிரம்புடன் பல மாகாணங்களுக்கு சென்றார் மைக் பென்ஸ்.

எப்போதெல்லாம் சர்ச்சை எழுந்ததோ, அப்போதெல்லாம் அதிபருக்கு ஆதரவாக நிற்பது மைக் பென்ஸின் முக்கிய பணிகளில் ஒன்று.

தனக்கு எதிராக போட்டியிட்ட ஹில்லரி கிளின்டனுக்கு எதிராக மக்கள் ஆயுதங்கள் ஏந்தி செல்ல வேண்டும் என்று டிரம்ப் பேசிய போதும், டிரம்பின் மகன், அகதிகளை தரக்குறைவாக ஒப்பிட்டபோதும், மைக் பென்ஸ் இவர்களுக்கு ஆதரவாக நின்றார்.

ஆனால், முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா அமெரிக்காவில் பிறந்தவர் இல்லை என்ற டிரம்பின் கருத்தை, இவர் எதிர்க்கவே செய்தார்.

சர்ச்சைகள்

சர்ச்சைகள்

மைக் பென்ஸ் ஆளுநராக இருந்தபோது, மத சுதந்திர மறுசீரமைப்பு சட்டத்தில் கையெழுத்திட்டது மக்களிடையே பெரும் எதிர்ப்பை சந்தித்தது.

இந்தச்சட்டம் LGBT சமூகத்திற்கு பாகுபாடு காண்பிக்கும் விதமாக இருப்பதாக விமர்சகர்கள் தெரிவித்தனர்.

பல தரப்பில் இருந்து வந்த அழுத்தத்தால் இதில் சட்டத்திருத்தம் செய்யப்பட்டது.

மேலும் கருக்கலைப்புக்கு மிகவும் எதிரானவர் மைக் பென்ஸ்.

சுவிசேஷ கிறிஸ்துவரும், 3 குழந்தைகளுக்கு தந்தையுமான மைக் பென்ஸ், தான் ஆளுநராக இருந்தபோது கருக்கலைப்புக்கு எதிரான கடுமையான சட்டத்தில் இவர் கையெழுத்திட்டார்.

குழந்தையின் பாலினம், இனம் அல்லது இயலாமை நோயறிதல் ஆகியவற்றின் அடிப்படையில் கருக்கலைப்பு செய்ய தடை விதிக்கப்பட்டது.

பின்னர் இந்த சட்டம் மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »