Press "Enter" to skip to content

கமலா ஹாரிஸ்: அதிபர் பதவி போட்டியில் இருந்து விலகியவரால் துணை அதிபராக முடியுமா?

முதலில் அதிபர் வேட்பாளருக்கு போட்டியிட்ட கமலா ஹாரிஸ், பின்னர் அதில் இருந்து பின்வாங்கிக் கொண்டார்.

தற்போது ஜனநாயக கட்சி சார்பாக துணை அதிபர் வேட்பாளராக அவர் நிறுத்தப்பட்டுள்ளார்.

சுமார் ஓராண்டிற்கு முன்பு அதிபர் வேட்பாளராக தன்னை முன்னிறுத்திக் கொண்ட செனட்டர் கமலா ஹாரிஸ், பல இடங்களிலும் பிரசாரங்களிலும், விவாதங்களிலும் ஈடுபட்டு, ஜோ பைடனுக்கு எதிராகக்கூட விமர்சித்துள்ளார்.

எனினும், 2019 இறுதியில் அந்த பிரசாரம் முற்றுப்பெற்றது.

தற்போது ஜனநாயக கட்சி சார்பில், ஜோ பைடன் அதிபர் வேட்பாளராக இருக்க, அவருடன் சேர்ந்து 55 வயதான கமலா ஹாரிஸ் துணை அதிபர் பதவிக்கு போட்டியிடுகிறார்.

யார் இந்த கமலா ஹாரிஸ்?

கலிபோர்னியாவில் ஓக்லாந்தில் பிறந்தவர் கமலா ஹாரிஸ். இவரது தாய் இந்திய வம்சாவளியைக் கொண்டவர். தந்தை ஜமைக்கா நாட்டைச் சேர்ந்தவர்.

பெற்றோர் விவாகரத்திற்கு பிறகு தனது தாயால் வளர்க்கப்பட்டார் கமலா. ஹிந்து மதத்தை சேர்ந்த அவரது தாயான ஷியாமளா கோபாலன் ஹாரிஸ் ஒரு புற்றுநோய் ஆய்வாளராகவும், சிவில் உரிமை செயற்பாட்டாளராகவும் இருந்தார்.

தனது தாயுடன் அடிக்கடி இந்தியா வந்த கமலா ஹாரிஸ், இந்திய பாரம்பரியத்துடனே வளர்ந்தார். ஆனால், ஓக்லாந்தின் கறுப்பின கலாசாரத்துக்கும் தன்னையும் தனது சகோதரி மாயாவையும் , தனது தாய் தயார்படுத்தியதாகவும் கமலா ஹாரிஸ் தெரிவித்திருக்கிறார்.

கமலா ஹாரிஸ்

“இரு கருப்பின மகள்களை அமெரிக்காவில் வளர்க்கிறோம் என்பதை என் அம்மா நன்கு உணர்ந்திருந்தார்” என தனது சுயசரிதை புத்தகமான The Truths we Hold-ல் அவர் எழுதியிருப்பார்.

மெக் கில் பல்கலைக்கழகத்தில் ஷியாமளா ஹாரிஸ் ஆசிரியர் பணியை எடுத்துக் கொண்டபோது, கமலா ஹாரிஸும், தங்கை மாயாவும் அவருடன் சென்றனர். அங்கு மான்ட்ரியலில் 5 ஆண்டுகள் பள்ளிப்படிப்பை படித்தனர்.

அந்நாட்டின் வரலாற்றில் கருப்பினத்தவர்களுக்கான கல்லூரி என்று அறியப்படும் ஹோவர்ட் பல்கலைக்கழகத்தின் தனது 4 ஆண்டுகால கல்லூரிப்படிப்பை கமலா முடித்தார். தன் வாழ்வின் பெரும் உருவாக்க அனுபவங்களில் ஒன்று என்று தனது கல்லூரி காலத்தை அவர் விவரிக்கிறார்.

தனது அடையாளம் தனக்கு பிரச்சனையாக இருந்தது இல்லை என்று கூறும் அவர், தன்னை ஒரு “அமெரிக்கர்” என்றே கூறிக் கொள்கிறார்.

அரசியல்வாதிகள் தங்களை நிறம் அல்லது பின்னணியின் அடிப்படையில் தங்களை பொறுத்திக்கொள்ள கூடாது. “நான் நானாகவே இருக்கிறேன். நான் அதில் சிறந்து இருக்கிறேன்” என்று 2019ஆம் ஆண்டு வாஷிங்டன் போஸ்டுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியிருந்தார்.

2014ஆம் ஆண்டு வழக்கறிஞரான டக் எம்ஹாஃபை திருமணம் செய்துகொண்ட கமலா, அவருடைய இரு குழந்தைகளுக்கும் தாயானார்.

உயரங்களை தொட்ட கமலா

ஹோவர்ட் பல்கலைக்கழகத்தில் 4 ஆண்டுகள் படித்த அவர், கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் தனது சட்டப்படிப்பை முடித்தார். பின்னர் அலமெடா கவுன்டி அட்டர்னி அலுவலகத்தில் தனது பணியை தொடங்கினார்.

அதனைத் தொடர்ந்து, மாவட்ட அட்டர்னி, 2003ல் சான் பிரான்சிஸ்கோவின் அரசு வழக்கறிஞர் என தொடர்ந்து முன்னேறினார்.

கமலா ஹாரிஸ்

அமெரிக்காவின் மக்கள் தொகை அதிகம் இருக்கும் மாகாணமான கலிபோர்னியாவின் அட்டர்னி ஜெனராலாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் மற்றும் முதல் கறுப்பினத்தவர் கமலா ஹாரிஸ்.

இரண்டு முறை அட்டர்னி ஜெனரலாக இருந்த அவர், ஜனநாயக கட்சியில் உயர்ந்துவரும் நட்சத்திரமாக இருந்தார்.

வெள்ளை மாளிகைக்கு செல்லும் திட்டம்

2019ஆம் ஆண்டு தொடக்கத்தில் கலிஃபோர்னியாவின் ஓக்லாந்தில் 20,000க்கும் மேற்பட்டோர் முன்னிலையில் தன்னை அதிபர் வேட்பாளராக அறிவித்துக் கொண்ட கமலா ஹாரிஸ், தனது பிரசாரத்தை உற்சாகமாக தொடங்கினார்.

ஆனால், அவரால் தெளிவான திட்டங்களை விளக்க முடியவில்லை. சுகாதாரம் போன்ற துறைகளில் முக்கிய கொள்கைகளை குறித்த கேள்விகளுக்கு அவர் பதிலளிக்க தவறிவிட்டார்.

சட்ட அமலாக்கத்துறையின் பின்னணி கொண்ட கலிபோர்னிய ஜனநாயகவாதியான ஹாரிஸ், எந்தத் தரப்பிலும் சரியாக இல்லாமல் 2019ஆம் ஆண்டு டிசம்பரில் அதிபர் தேர்தலுக்கான போட்டியில் இருந்து விலகிக் கொண்டார்.

முற்போக்குவாதி இல்லையா?

முற்போக்குவாதி இல்லையா?

2020 தேர்தலுக்கு அவர் போட்டியிட்டபோது, அவரது பின்னணி குறித்த பல விஷயங்கள் வெளிச்சத்திற்கு வந்தது.

ஒரு பாலின திருமணம் மற்றும் மரண தண்டனை ஆகிய விவகாரங்களில் இடதுசாரி கருத்துகளை கொண்டிருந்தாலும், இவரிடம் போதிய முற்போக்குத்தனம் இல்லை என்று முற்போக்குவாதிகளால் தாக்கப்பட்டார்.

காவல் துறை சீர்திருத்தம், போதைப் பொருள் சீர்திருத்தம் போன்ற விவகாரங்களில் கமலா ஹாரிஸ் முற்போக்கான சண்டைகளை தவிர்த்தார் என அவரது பிரசாரங்கள் குறித்து கூறப்பட்டது.

தற்போது அமெரிக்கா இனப்பிரச்சனைகளை எதிர்கொண்டிருக்கும் வேலையில், காவல் துறை நடவடிக்கைகள் கூர்ந்து கவனிக்கப்படுகிறது.

இந்நிலையில், முற்போக்கு கருத்துகளை கூற முன்வந்துள்ளார் கமலா ஹாரிஸ்

விவாத நிகழ்ச்சிகளில் காவல் துறை நடைமுறைகளில் மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறார். 26 வயதான ஆப்பிரிக்க அமெரிக்க பெண்மணி பிரேயோனா டெய்லரை கொன்ற காவல் துறை அதிகாரிகளை கைது செய்ய வேண்டும் என்று ட்விட்டரில் பதிவிடுகிறார்.

மேலும் அமைப்பு ரீதியாக உள்ள இனவெறியை தகர்த்து எறிய வேண்டும் என்று அவ்வப்போது பேசுகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »