Press "Enter" to skip to content

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா கூட்டு ராணுவப் பயிற்சியால் சீனாவுக்குக் கவலை ஏன்?

  • சல்மான் ராவி
  • பிபிசி நிருபர்

ஏறக்குறைய 13 ஆண்டுகளுக்குப் பிறகு க்வாட் நாடுகளின் கூட்டு ராணுவப் பயிற்சியில் இந்தியா, அமெரிக்கா மற்றும் ஜப்பானுடன் ஆஸ்திரேலியாவும் இணைகிறது. இந்தப் பயிற்சி அடுத்த மாதத்தில், அதாவது நவம்பரில், வங்காள விரிகுடா மற்றும் அரேபிய கடலில் மேற்கொள்ளப்படும். இதற்கு அதிகாரப்பூர்வமாக ‘மலபார் பயிற்சி’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இது குறித்து சீனாவிலும் எதிர்வினைகள் எழுகின்றன.

ஆஸ்திரேலியா, 2007 ஆம் ஆண்டில் இந்தக் கூட்டு ராணுவப் பயிற்சியிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டது. ஆனால் இப்போது அந்நாடு மீண்டும் ராணுவப் பயிற்சியில் இணைவது, குவாட் நாடுகளின் அமைப்பு மேலும் வலுவடையும் என்று நம்பப்படுகிறது.

இந்த ஆண்டு அக்டோபர் 6 ஆம் தேதி, ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற குவாட் கூட்டம், அதாவது ‘நாற்கரப் பாதுகாப்பு பேச்சுவார்த்தை’ பல வகையிலும் முக்கியத்துவம் பெறுகிறது.

கொரோனா பெருந்தொற்றின் இந்த காலகட்டத்தில் இந்த நான்கு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் நடத்திய தனிப்பட்ட சந்திப்புகளே பல செய்திகளைச் சொல்வதாக ஃபுடான் பல்கலைக்கழகத்தின் அமெரிக்க ஆய்வுகள் மையத்தின் பேராசிரியர் ஜாங் ஜியாடோங் தெரிவித்துள்ளார்.

“இந்தச் சந்திப்புகள் காணொளி கான்பரன்சிங் மூலமாகவும் செய்யப்பட்டிருக்கலாம். ஆனால் அதற்கு பதிலாக இந்தத் தலைவர்கள் நேரில் சந்திப்பதையே விரும்பினர்,” என்று இவர் கூறுகிறார்.

ஜப்பான் பிரதமர் யோஷிஹிடா சுகா, ‘இந்திய-பசிபிக்’ பிராந்தியத்தை சுதந்திரமாகவும், அச்சமில்லாமலும் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ஆனால், “இந்த விவாதத்தின் உண்மையான காரணம், ஒரே ஒரு நாடுதான் – அது சீனாதான்,” என்கிறார் பேராசிரியர் ஜியோடாங்.

இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான உறவுகள் அவ்வளவு சிறப்பாக இல்லை, அதனால்தான் ஆஸ்திரேலியா 2007ல் இந்த ராணுவப் பயிற்சியிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டது.

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா கூட்டு ராணுவப் பயிற்சியால் சீனாவுக்குக் கவலை ஏன்?

ஆனால் அக்டோபர் 6 கூட்டத்திற்குப் பிறகு, ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பு அமைச்சர் லிண்டா ரெனால்ட்ஸ், ‘இந்திய-பசிபிக் பிராந்தியத்தின் ஜனநாயக நாடுகள் தங்களுக்கிடையிலான நம்பிக்கையை அதிகரிக்க வேண்டும் என்பதை குவாட்டின் நான்கு நாடுகளும் ஒப்புக் கொள்வதாக ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் மேரிஸ் பாயனும் ஒரு அறிக்கையில், இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இந்திய பிரதமருக்கும் ஆஸ்திரேலிய பிரதமருக்கும் இடையே, நடந்த பேச்சுவார்த்தையின்போது இந்த ராணுவ பயிற்சி குறித்து விவாதிக்கப்பட்டது. இரு தலைவர்களும் ஒருவருக்கொருவர் ஒரு ‘மெய்நிகர் சந்திப்பு’ நடத்தினர். கூட்டத்தில் பல பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. ஒருங்கிணைந்த மலபார் பயிற்சி, அந்த உரையாடலின் விளைவாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

க்வாட் சந்திப்பு – சந்திப்பு ஒன்று, கருத்துக்கள் பல

கேந்திர விவகாரங்களின் நிபுணர் அஜய் ஷுக்லா, “இப்போது எல்லாம் மன்னிக்கப்பட்டுவிட்டது. இப்போது குவாட் முழுமை பெற்றுவிட்டது. 2007ஆம் ஆண்டில், ஆஸ்திரேலியாவின் பிரதமர் கெவின் ரூட் சீனாவைத் திருப்திப்படுத்த, இதிலிருந்து வெளியேறினார்” என்று ட்வீட் செய்துள்ளார்.

இருப்பினும், சீன ஊடகமான குளோபல் டைம்ஸ், தமது வெளியுறவு அமைச்சர் வாங் யி-யை மேற்கோள் காட்டி ‘நான்கு நாடுகளும் குவாட் மூலம் நேட்டோ போன்ற ஒரு கூட்டணியை உருவாக்க விரும்புகின்றன’ என்று கூறியுள்ளது.

ஆனால் மூத்த பத்திரிகையாளரும் வெளியுறவு விவகார நிபுணருமான மனோஜ் ஜோஷி, டோக்கியோவில் நடந்த கூட்டத்திற்குப் பிறகு நான்கு நாடுகளும் ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டிருந்தால்தான், இது ஒப்புதலாகக் கருதப்படும் என்று கருத்து தெரிவிக்கிறார்.

“கூட்டத்திற்குப் பிறகு, நான்கு நாடுகளும் தன்னிச்சையாக அறிக்கைகளை வெளியிட்டன. கூட்டம் ஒன்று, ஆனால் அறிக்கைகள் பல. எந்தவொரு ஒரு அறிக்கையிலும் ஒருமித்த கருத்து ஏற்படுத்த இயலவில்லை. ஒரு கூட்டு அறிக்கை வெளியிடப்பட்டிருந்தால், அதன் மதிப்பே தனி.” என்பது இவர் கருத்து.

மேற்கு பசிபிக் கடலில் தான் ஆதிக்கம் செலுத்துவதையே ஆஸ்திரேலியா எப்போதும் விரும்புவதாகவும் அதனாலேயே அது வெளியேறியது என்றும் அவர் கூறுகிறார்.

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா கூட்டு ராணுவப் பயிற்சியால் சீனாவுக்குக் கவலை ஏன்?

“வெள்ளை இன மேலாதிக்க” உணர்வில் அமெரிக்காவை விட ஆஸ்திரேலியா தீவரப் போக்கு கொண்டது. ஆனால் இப்போது ஆஸ்திரேலியா மீண்டும் குவாட்டில் இணைந்துள்ளது என்பதே ஒரு பெரிய விஷயம். சீனாவின் போக்கால் ஏற்பட்ட கவலையே இதற்குக் காரணமாக இருக்க முடியும்” என்று இவர் கருதுகிறார்.

கேந்திர விவகாரங்களின் நிபுணர் சுஷாந்த் சரீன் கூறுகையில், ‘மலபார் பயிற்சி’ என்பது ஒரு பயிற்சி மட்டுமல்ல, இதன் மூலம் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகளும் ஒரு காட்டமான செய்தியைக் கொடுக்க விரும்புகின்றன.

“இந்த நான்கு நாடுகளும் ஒன்றாக இருந்து ஆஸ்திரேலியா மீண்டும் பிரிந்து செல்லாமல் இருந்தால், இந்த அமைப்பு, நிச்சயமாக பிராந்தியத்தில் ஒரு முக்கிய சக்தியாக உருவெடுக்கும். குவாட்-ன் செயல்பாடுகள் தற்போது இராணுவப் பயிற்சிகளுக்கு மட்டுமே என்றாலும், குறைந்தபட்சம் அனைத்து நாடுகளும் தங்கள் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி ஒரு செய்தியை அளிக்க இதுவே போதுமானது.” என்பது இவர் தெரிவிக்கும் கருத்து.

இந்த நான்கு நாடுகள் சீனாவிற்கு எதிரான போக்கைக் கடைபிடிப்பது யாருக்கும் நன்மை பயக்காது என்று கூறுகிறார், சீனாவின் சிச்சுவான் பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வுகள் குறித்த கல்வி நிறுவனத்தின் இணை டீன், பேராசிரியர் ஹுவாங் யூன்சாங்.

“கொரோனா தொற்றுநோய்க்கு எதிரான தங்களது போராட்டத்தில் ஏற்பட்ட தோல்வியை மறைக்கவே இந்த குவாட் நாடுகள், சீனாவிற்கு எதிரான போக்கைக் கடைபிடிப்பது என்பது துரதிருஷ்டவசமானது” என்று அவர் கூறுகிறார்.

“பாதுகாப்பை மேம்படுத்த, சீனாவின் மீதான சார்பைக் குறைத்துக் கொள்ளவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துவதற்காகவே இந்தக் கூட்டம். உண்மையில், உலக சுகாதார அமைப்பு (WHO) போன்ற சர்வதேச அமைப்புகள் இந்தச் சூழலை முற்றிலும் வேறு கோணத்தில் பார்க்கின்றன.” என்று இவர் கூறுகிறார்.

வெற்றி வாய்ப்பு குறைவு என்று தெரிந்தும் இந்த நான்கு நாடுகளின் பொருளாதாரம் சீனாவுடன் ஆழமாகத் தொடர்பு கொண்டுள்ள காரணத்தால், சீனாவினால் ஏற்படும் தாக்கத்தைக் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

இந்த உண்மைகளில் சற்று கவனம் செலுத்துங்கள்-

– 2013 முதல் 2017 வரை இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக சீனா இருந்தது, இப்போது இரண்டாவது பெரிய வர்த்தக பங்காளியாக உள்ளது.

– ஆஸ்திரேலியாவின் மொத்த ஏற்றுமதியில் கிட்டத்தட்ட பாதி (48.8 சதவீதம்) சீனாவுக்கு செல்கிறது.

– சீன-ஜப்பானிய இருதரப்பு வர்த்தகம் 2019 இல் 317 பில்லியன் டாலராக இருந்தது, இது ஜப்பானின் மொத்த வர்த்தகத்தில் 20 சதவீதமாகும்.

– அமெரிக்க-சீனா வர்த்தகப் போர் இருந்தபோதிலும், இருதரப்பு வர்த்தகம் 2019 ஆம் ஆண்டில் 558 பில்லியன் டாலர் மதிப்புடையது, இதில் சேவைகள் அடங்கவில்லை.

– இந்த ஆண்டு ஜூலை நிலவரப்படி, சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் 290 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக இருந்தது.

(அனைத்து உண்மைகளும் அரசாங்கத் தரவை அடிப்படையாகக் கொண்டவை)

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா கூட்டு ராணுவப் பயிற்சியால் சீனாவுக்குக் கவலை ஏன்?

முயற்சிகள் வெற்றியடைவதாகத் தெரியவில்லை

இந்த கண்ணோட்டத்தில் பார்த்தால் கூட, இந்த நாடுகளுக்கு சீனாவை முழுவதுமாக ஒதுக்குவது எளிதல்ல, இதை அடைய அவர்களுக்கு பல ஆண்டுகள் ஆகலாம். விநியோகச் சங்கிலி என்னும் ரீதியிலும் பல சிக்கல்கள் எழலாம்.

இந்த நான்கு நாடுகளும் தனிப்பட்ட முறையில் சீனா மீதான தம் சார்பைக் குறைக்க முயற்சிக்கின்றன. சீனாவின் பல மொபைல் செயலிகளை இந்தியா தடை செய்துள்ளதுடன், சீன இறக்குமதியைக் குறைக்கும் நோக்கத்துடன் இந்த ஆண்டு மே மாதத்தில் மோடி அரசு தற்சார்பு குறித்துப் பேசியுள்ளது.

அமெரிக்கா 2018 முதல் சீனாவிற்கு எதிராக கட்டண உயர்வை அறிவித்து வர்த்தகத் தடைச் சுவரை எழுப்பத் தொடங்கியது.

சீனாவில் உற்பத்திப் பிரிவை வைத்துள்ள தனது நிறுவனங்களை மீண்டும் தங்கள் நாட்டிற்கே கொண்டு வரும் திட்டத்தில் ஜப்பான் செயல்பட்டு வருகிறது. மேலும் ஆஸ்திரேலியாவும் சீனாவின் அச்சுறுத்தல்களுக்குச் செவிசாய்ப்பதில்லை.

ஆனால் சீனாவுக்கு எதிராக தனிப்பட்ட முறையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் இதுவரை மிகவும் வெற்றிகரமாக இருப்பதாகத் தெரியவில்லை.

அமெரிக்க கட்டண உயர்வு யுத்தம் இருந்தபோதிலும், இந்த ஆண்டு ஜூலை வரை சீனா 220 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை அமெரிக்காவிற்கு விற்றுள்ளது. அதே போல், அமெரிக்கா சுமார் 60 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை சீனாவுக்கு விற்றுள்ளது.

சீனா ஒரு மாபெரும் சந்தையாக இருப்பது ஜப்பானுக்கு ஒரு நிர்பந்தம். இந்தியாவிலும் சீன இறக்குமதியில் அதிக சரிவு ஏற்படவில்லை, மேலும் லடாக் எல்லையில் நிலவும் பதற்றம் தணிந்த பின்னர், இரு நாடுகளும் மேலும் நெருக்கமடையலாம். 2017 ல் டோக்லாம் பதற்றத்திற்குப் பிறகு இதுவே நிகழ்ந்தது என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர்.

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா கூட்டு ராணுவப் பயிற்சியால் சீனாவுக்குக் கவலை ஏன்?

சீனாவுடனான இந்தியாவின் அணுகுமுறை மென்மையடையும் என்று பேராசிரியர் ஹுவாங் யூன்சாங் நம்புகிறார்.

இது தவிர, சில விஷயங்களில் குவாட் நாடுகளுக்கு இடையிலும் வேறுபாடுகள் உள்ளன. இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான உறவு நெருக்கமாக உள்ளதாக நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தாலும் சிறு சிறு வேறுபாடுகள் இன்னும் உள்ளன.

ஒரு அமைச்சக அதிகாரி கூறுகையில், “ஜப்பான் இந்தியாவுக்குக் கோழியை ஏற்றுமதி செய்ய விரும்புகிறது. அதிலும் அவர்கள் கோழிக் கால் கறியை மட்டுமே அனுப்ப விரும்புகிறார்கள், ஏனெனில் ஜப்பானியர்களுக்கு கால் கறி விருப்பமில்லை, அவர்களுக்கு நெஞ்சுக் கறி தான் விருப்பம். உங்களுக்குப் பயன் படாது என்பதால் கால் கறி விற்க விரும்புகிறீர்கள் என்று நாம் அவர்களுக்குப் பதில் அளித்தோம்” என்று தெரிவித்தார்.

எப்படியோ, நிதி அமைச்சகம் இந்த ஆலோசனையை நிராகரித்தது, ஏனெனில் இது இந்தியாவின் கோழித் தொழிலில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஜப்பான் இதை விரைவாகச் செயல்படுத்த விரும்புகிறது. நவம்பர் முதல் இதைத் தொடங்க பரிந்துரைக்கிறது, “ஆனால் இந்தியா தனது தேசிய நலனுக்கு உகந்ததைத் தான் செய்யும்.”

பேராசிரியர் ஹுவாங் யூன்சாங், “குவாட் நாடுகள் சீனாவுக்கு எதிராக ஏதேனும் நடவடிக்கை எடுத்தால், சீனாவும் தனது உத்திகளை மாற்றிக்கொள்ளலாம். சீனாவும் குவாட் நாடுகளின் மீதான தனது சார்பைக் குறைக்கும் நடவடிக்கைகளை எடுக்க வாய்ப்புள்ளது.” என்று கணிக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »