Press "Enter" to skip to content

`இந்திய வெங்காயம்தான் வேண்டும்` – விருப்பம் தெரிவிக்கும் மலேசிய மக்கள்; அதிகரிக்கும் விலை

மலேசியாவில் இந்த ஆண்டும் இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் வெங்காயத்தின் விலை வெகுவாக அதிகரித்துள்ளது. இதையடுத்து பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்தை பயன்படுத்துமாறு உள்நாட்டு பயனீட்டாளர்களை மலேசிய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

மலேசியாவில் அன்றாட உணவில் வெங்காயம் அதிகளவு சேர்க்கப்படுகிறது. குறிப்பாக இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் வெங்காயத்துக்கு மலேசியாவில் மவுசு அதிகம். இந்திய வம்சாவளியினர் மட்டுமல்லாமல், மலாய்க்காரர்களும் சீனர்களும் கூட இந்திய வெங்காயத்தையே பெரிதும் விரும்புகின்றனர்.

பெரும்பாலான உணவு வகைகளில் வெங்காயம் சேர்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் வெங்காயத்தின் அளவு தற்போது குறைந்துள்ளது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பெய்த பெருமளவிலான பருவ மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக வெங்காய இறக்குமதியில் சரிவு ஏற்பட்டுள்ளதாக மலேசிய உள்நாட்டு வர்த்தகம் மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சின் துணை அமைச்சர் ரசோல் வாஹிட் தெரிவித்துள்ளார்.

எனவே தாய்லாந்து, பாகிஸ்தான், சீனா, நெதர்லாந்து, மியான்மர், இந்தோனீசியா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் வெங்காயத்தை தற்காலிகமாக பயன்படுத்துமாறு பயனீட்டாளர்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இந்திய வெங்காயத்தின் விலைதான் அதிகரித்துள்ளது என்றும், இதர நாடுகளில் இருந்து வரக்கூடிய வெங்காயத்தின் விலை அதிகரிக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெங்காயம்

பிற நாடுகளின் வெங்காயத்தை விரும்பாத மலாய், சீன மக்கள்

“ஆனால் பெரும்பாலான உள்நாட்டுப் பயனீட்டாளர்கள் இந்திய இறக்குமதி வெங்காயத்தையே பெரிதும் விரும்புகின்றனர். மற்ற நாடுகளின் வெங்காயத்தில் அவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை என்பதை அறிகிறேன். எனவே அத்தகைய பயனீட்டாளர்கள் சற்று பொறுமை காக்க வேண்டும். வெங்காயத்தை ஏற்றுமதி செய்யும் இதர நாடுகளைத் தொடர்பு கொண்டு நடப்புத் தேவையை ஈடுகட்டுவதற்கான மாற்று வழிகள் கண்டறியப்படும்,” என்று அமைச்சர் ரசோல் மேலும் தெரிவித்துள்ளார்.

மலேசியாவின் சில மாநிலங்களில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றுப் பரவல் காரணமாக நிபந்தனைகளுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்துவிடாதபடி அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில், இறக்குமதி அளவு குறைந்ததன் காரணமாகவே இந்திய வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளதாக தெரிகிறது.

தற்போது இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் சின்ன வெங்காயத்தின் விலை ஒரு கிலோ மலேசிய ரிங்கிட் 22க்கு (இந்திய மதிப்பில் ரூபாய் 400) விற்கப்படுவதாக கூறப்படுகிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு சின்ன வெங்காயத்தின் விலை இதில் பாதியாகவே இருந்தது.இந்நிலையில் இந்தோனீசியாவில் இருந்து இறக்குமதியாகும் பெரிய வெங்காயத்தின் விலை 5.60 மலேசிய ரிங்கிட்டாக உள்ளது.

வெங்காயம்

கடந்த ஆண்டும் இதே நிலை

கடந்த ஆண்டும் கூட டிசம்பர் மாதத்தில் மலேசியா முழுவதும் இந்திய வெங்காயத்தின் விலை வெகுவாக அதிகரித்தது.

அப்போது ஒரு கிலோ இந்திய சிவப்பு வெங்காயம் 15 மலேசிய ரிங்கிட், அதாவது இந்திய மதிப்பில் 260 ரூபாய்க்கு விற்கப்படுவதாக பயனீட்டாளர்கள் புகார் எழுப்பினர்.

விலை உயர்வுக்கு முன் சிவப்பு வெங்காயத்தின் விலை குறைந்தபட்சம் 5 மலேசிய ரிங்கிட் – அதாவது 87 ரூபாய் மட்டுமே இருந்ததாகவும் பொதுமக்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.

இந்தியாவில் இருந்து சிவப்பு மற்றும் பெரிய வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டதே இந்த விலை உயர்வுக்குக் காரணம் என மலேசிய உள்நாட்டு வர்த்தக மற்றும் பயனீட்டாளர் நலத்துறை தெரிவித்திருந்தது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்தியாவில் இருந்து 3,131 டன் சிவப்பு வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், டிசம்பரில் இது 1,399 டன்னாக குறைந்துவிட்டது என மலேசிய மத்திய விவசாய சந்தை வாரியம் சுட்டிக்காட்டியது.

மேலும், மலேசியாவில் வெளியாகும் தமிழ் மற்று இதர மொழி ஊடகங்கள் இதுகுறித்து விரிவாக செய்தி வெளியிட்டன.

முன்னதாக செப்டம்பர் மாதம் இந்தியாவில் பல இடங்களில் கன மழை காரணமாக வெங்காயத்தின் உற்பத்தி பாதிக்கப்பட்டதாலும், வெங்காயத்தின் விலை அதிகரித்ததாலும் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த அனைத்து ரக வெங்காயத்துக்கு உடனடியாக தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது..

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »