Press "Enter" to skip to content

சிரியாவில் அலை அலையாக விமானத் தாக்குதல்: 57 பேர் பலி, இஸ்ரேல் நடத்தியதா?

சிரியாவில் உள்ள இரான் ஆதரவுபெற்ற ஆயுதக் குழுக்களின் நிலைகள் மீது அலை அலையாக விமானத் தாக்குதல் நடந்ததில் குறைந்தது 57 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தியதாக கூறப்படுகிறது.

கடந்த இரு வாரங்களில் சிரியா மீது இத்தகைய தாக்குதல் நடப்பது இது நான்காவது முறை.

இஸ்ரேலிய விமானப்படை, சிரியாவின் கிழக்குப் பகுதியில் இருக்கும் டெய்ர் அல் சோர் & அல்பு கமல் பகுதிகளில் தாக்குதல் நடத்தியதாக சிரியாவின் அரசு செய்தி நிறுவனம் சனா குறிப்பிடுகிறது.

சனா செய்தி முகமை எந்த உயிர் சேதமும் நடந்ததாகக் குறிப்பிடவில்லை. சிரியாவின் படையினர் 14 பேர், கூட்டணிப் படையினர் 43 பேர் இந்த தாக்குதலில் இறந்ததாக இங்கிலாந்தில் இருந்து செயல்படும் ‘சிரியன் அப்மேலாய்வுட்டரி ஃபார் ஹ்யூமன் ரைட்ஸ்’ என்கிற கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.

இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் இதுவரை வாய்திறக்கவில்லை. ஆனால், இஸ்ரேல் அடிக்கடி சிரியாவில் இருக்கும் இரான் தொடர்புடைய இலக்குகளை தாக்கிவருகிறது.

2020-ம் ஆண்டில், ரகசிய ராணுவ திட்டங்கள் மூலம், அனைத்து போர் முனைகளையும் சேர்த்து, இஸ்ரேலியப் படை 500-க்கும் மேற்பட்ட இலக்குகளை அழித்திருப்பதாக, இஸ்ரேலிய ஊடகங்களிடம் கடந்த மாதம் கூறினார் இஸ்ரேலிய பாதுகாப்புப் படையின் தலைவர் ஜெனரல் அவிவ் கொசாவி.

இஸ்ரேலிய பாதுகாப்புப் படை நடவடிக்கைகளால், சிரியாவில் இரான் ராணுவ நடவடிக்கைகளின் வேகம் குறைந்திருக்கிறது. ஆனால், இஸ்ரேல் தன் இலக்குகளை அடைய இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கிறது எனவும் ஜெனரல் அவிவ் கொசாவி குறிப்பிட்டார்.

Map showing location of Deir al-Zour and Albu Kamal in Syria

இரான், சிரியாவைப் பயன்படுத்தி நவீன ஆயுதங்களை லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்புக்கு கடத்துவதாகக் குற்றம்சாட்டுகிறது இஸ்ரேல்.

கடந்த ஒன்பது ஆண்டுகளாக நடந்து வரும் இந்த உள்நாட்டுப் போரில், சிரியாவின் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு ஆதரவாகப் போராடுவதற்கு, லெபனான், இராக், ஆப்கானிஸ்தான், யேமன் போன்ற நாடுகளைச் சேர்ந்த ஷியா இஸ்லாமிய ஆயுதக் குழுக்களுக்கு இரான் பயிற்சி அளித்து, ஆயுத, பண உதவிகள் செய்து வருவதாகவும் நம்பப்படுகிறது.

இந்த தாக்குதல் கிரீன்விச் சராசரி நேரப்படி,செவ்வாய்க்கிழமை 23.10-க்கு நடந்ததாகக் குறிப்பிடுகிறது சனா செய்தி முகமை.

‘ஐ.எஸ். அமைப்புக்கு இந்த தாக்குதல் உதவும்’

இந்த தாக்குதலினால் ஏற்பட்ட பாதிப்புகளை மதிப்பிட்டு வருவதாகவும், சிரியாவில் இருக்கும் தீவிரவாத இயக்கங்களுக்கு, குறிப்பாக ஐ.எஸ் அமைப்புக்கு உதவும் வகையில் இஸ்ரேல் தலையிடுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளது சனா செய்தி முகமை.

டெய்ர் அல் சோர் நகரத்தின் புறநகர் பகுதியில் இருக்கும் இராணுவ சேமிப்புக் கிடங்குகள் மற்றும் ராணுவ முகாம்களையும், அல்பு கமல் பகுதியில் இருக்கும் ராணுவ கட்டமைப்புகள், மயாதின் பகுதியில் இருக்கும் சேமிப்புக் கிடங்குகள் என 18 இலக்குகளை இஸ்ரேல் குறிவைத்து தாக்கியதாக இங்கிலாந்தில் இருந்து செயல்படும் ‘சிரியன் அப்மேலாய்வுட்டரி ஃபார் ஹ்யூமன் ரைட்ஸ்’ அமைப்பு கூறியுள்ளது.

2px presentational grey line

இந்த தாக்குதலில் மொத்தம் 57 பேர் இறந்திருக்கலாம். அதில் பேர் 14 சிரியாவின் படையினர், 16 இராக் படையினர் மற்றும் 11 ஆப்கன் படையினர் அடக்கம். இது தவிர ஏராளமானோர் காயமடைந்திருக்கலாம் என்கிறது இந்த அமைப்பு.

ஹிஸ்புல்லா உடன் தொடர்புடைய ஆயுதக் குழு மற்றும் ஃபதிமியான் பிரிகேட் என்கிற ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஷியா ஆயுதக் குழு தாக்கப்பட்டிருக்கிறது எனவும் குறிப்பிடுகிறது.

“இந்த தாக்குதலில் இரானியர்கள், சிரியா நாட்டவர், ஃபதிமியான் பிரிகேட்டைச் சேர்ந்தவர்கள் என யாரும் உயிரிழக்கவில்லை” என இரானின் அரபிக் அரசு ஊடகமான அல் அலம் குறிப்பிட்டிருக்கிறது.

“இந்த தாக்குதல் அமெரிக்க உளவுத் துறை கொடுத்த தகவல்களின் அடிப்படையில்தான் நடத்தப்பட்டது. இரான் ஆயுத கிடங்குகளை இஸ்ரேல் குறி வைத்து தாக்கியிருக்கிறது” என பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்க உளவுத் துறை அதிகாரி அசோசியேடட் பிரஸ் செய்தி முகமையிடம் குறிப்பிட்டுள்ளார்.

அதோடு, இந்த சேமிப்புக் கிடங்கு வழியாக, இரான் அணுசக்தித் திட்டங்களுக்குத் தேவையான பொருட்கள் விநியோகிக்கப்படுவதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேல் தாக்கிய டெய்ர் அல் சோர் சேமிப்புக்கிடங்கில், இரான் ஆயுதக் குழுக்களுக்கு விநியோகிக்க ஃபதிமியான் பிரிகேட் கொண்டு வந்த ஆயுதங்கள் இருந்ததாக, ஐரோப்பாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் டெய்ர் எசோர்24 செய்தி வலைதளத்தின் தலைவர், ஒமர் அபு லய்லா தன் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »