Press "Enter" to skip to content

ஈஸ்வரன் – திரைப்படம் விமர்சனம்

  • முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பிபிசி தமிழ்

நீண்ட காலத்திற்குப் பிறகு கிராமத்துப் பின்னணியில் அமைந்த ஒரு கதையில் நடித்திருக்கிறார் சிம்பு.

2019ல் வெளிவந்த ‘வந்தா ராஜாவாத்தான் வருவேன்’ படத்திற்குப் பிறகு சிம்பு நடித்து வெளிவரும் படமும் இதுதான்.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் வசிக்கும் பெரியசாமியின் (பாரதிராஜா) பெரிய குடும்பத்தில் வரும் பிரச்சனைகளும் அந்தப் பிரச்சனைகளை அவருக்குத் துணையாக இருக்கும் ஈஸ்வரன் (சிலம்பரசன்) எப்படித் தீர்க்கிறார் என்பதும்தான் கதை.

ஒரு பெரிய குடும்பம் இருப்பதும் அதில் தீர்க்கவே முடியாதோ என்று சொல்லும்வகையில் பிரச்சனைகள் வருவதையும் வைத்து பல வெற்றிப் படங்கள் வெளியாகியிருக்கின்றன. ஒரு சிறிய பிரச்சனையில் துவங்கி, அது மிகப் பெரிய பிரச்சனையாக மாறி, உச்சகட்டத்தில் நிறைவுக்கு வரும்வகையில் இந்தப் படங்கள் அமைந்திருக்கும்.

ஆனால், இந்தப் படத்தில் பாதிப் படம் வரையில் பெரிதாக எந்தப் பிரச்சனையும் இல்லாமல் விவசாயி பெரியசாமியின் வாழ்க்கை வரலாறு மாதிரி படம் நகர்கிறது. இதற்குப் பிறகுதான், வழக்கம்போல சொத்தை அடைய நினைக்கும் சொந்தங்கள், அதற்காக செய்யப்படும் வில்லத்தனங்கள் என சற்றே சுவாரஸ்யத்தைக் கூட்ட முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர்.

ஆனால், படத்தில் வரும் பிரச்சனைகள் எல்லாம் பல படங்களில் பார்த்த பிரச்சனைகளாக இருப்பதால், அவை எப்படி முடிவுக்கு வரும் என்பதையும் யூகிக்க முடிகிறது. படத்தின் துவக்கத்திலும் நடுவிலும் சோழியை வைத்து குறிசொல்லும் காளி வெங்கட்டின் பாத்திரம் மட்டுமே சற்று வித்தியாசம்.

ஈஸ்வரன் - சிலம்பரசன்

சிம்புவுக்கும் நிதி அகர்வாலுக்கும் இடையிலான காதல் காட்சிகளில் பெரிதாக எந்த ஈர்ப்பும் இல்லை. தன்னுடைய அக்கா நந்திதா சிம்புவை காதலிப்பதாகச் சொல்லி, பிறகு திருமணம் செய்ததால், அக்காவைப் பழிவாங்க சிம்புவைக் காதலிக்கிறாராம் நிதி. இவர் எதற்கு தன் சொந்த அக்காவையே பழிவாங்குகிறார்? இந்தக் கதாநாயகிகள் எடுக்கும் முடிவுகள் எல்லாம் கதாநாயகர்களுக்கே சாதகமாக இருக்கின்றன.

இந்தப் படம் சிம்புவுக்கு நிச்சயமாக ஒரு மீட்சியைத் தரும் திரைப்படம்தான். ஆக்ஷன், அழுகை, நகைச்சுவை என எல்லா உணர்ச்சிகளையும் வெளிப்படுத்துகிறார். முடிவில் சம்பந்தமே இல்லாமல் யாரோ ஒரு ‘அசுரனு’க்கு எச்சரிக்கையும் விடுக்கிறார்.

படத்தில் நாயகிகளாக வரும் நந்திதா, நிதி அகர்வால் ஆகிய இருவருக்கும் பெரிதாக வேலை ஏதும் இல்லை. ஆனால், பெரியசாமியாக வரும் பாரதிராஜா நன்றாக ஸ்கோர் செய்திருக்கிறார். சொல்லப்போனால் கதாநாயகன் சிம்புவைவிட இவருடைய பாத்திரத்தில் அழுத்தம் அதிகம்.

எஸ்.தமனின் இசையில் ஒரு பாடல் மட்டும் சிறப்பாக இருக்கிறது.

படத்தில் வரும் பிரச்சனைகளில் பெரிதாக தீவிரம் இல்லாமல், கதை நீண்டுகொண்டே போவதால், ஒரு தொலைக்காட்சித் தொடர் பார்க்கும் அனுபவத்தையே தந்து முடிகிறது ‘ஈஸ்வரன்’.

ற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »