Press "Enter" to skip to content

இந்தோனீசியா குகையில் காட்டுப்பன்றி ஓவியம் – அதிசயிக்கும் தொல்லியல் வல்லுநர்கள்

உலகின் பழமையான விலங்குகள் வாழ்ந்த குகையில் தீட்டப்பட்ட ஓவியத்தை தொல்லியல் நிபுணர்கள் இந்தோனீசியாவில் கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்த காட்டுப்பன்றி ஓவியம் 45,500 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

இந்த ஓவியத்தை ஆச்ரே எனப்படும் ஒரு வகையான அடர் சிவப்பு இயற்கை மண் நிறமிகளால் வரைந்திருக்கிறார்கள். இந்த படத்தில் இருக்கும் காட்டுப்பன்றி சூலவேசி வார்டி பன்றி.

இந்த ஓவியம் சூலவேசி தீவில் இருக்கும் லியாங் டெடாங்கே என்கிற குகையில் கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்த பகுதிகளில் மனிதர்கள் தங்கி வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் இருக்கின்றன.

“இந்த ஓவியத்தை வரைந்தவர்கள் நம்மைப் போன்ற மனிதர்கள் தான். அவர்கள் விருப்பப்பட்ட ஓவியத்தை வரையும் அளவுக்கு, அவர்களிடம் எல்லா வகையான உபகரணங்கள் மற்றும் வரைவதற்கான திறன் இருந்தது” என ‘சயின்ஸ் அட்வான்செஸ்’ என்கிற சஞ்ஜிகையில் இந்த அறிக்கையை எழுதியவர்களில் ஒருவரான மேக்சிமே ஆபெர்ட் கூறுகிறார்.

இந்த ஓவியத்தின் மீது உருவான கால்சைட் என்கிற ஒரு வகையான தாது படிமத்தை அவர் கண்டுபிடித்தார் பொருளின் பழமையைக் கண்டுபிடிக்கும் டேட்டிங் நிபுணரான ஆபெர்ட். யுரேனியம் சீரிஸ் ஐசோடோப் டேடிங் முறையைப் பயன்படுத்தி அப்படிமத்தை சோதனை செய்து 45,500 ஆண்டு காலம் பழமை வாய்ந்தது என அவர் கூறியுள்ளார்.

Cave

குகையில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் இந்த ஓவியம் குறைந்தது 45,500 ஆண்டுகாலம் பழமையானதாக இருக்கலாம். “ஓவியத்தின் மீது படிந்திருந்த கால்சைட் தாதூவின் பழமையைத் தான் நாம் பயன்படுத்துகிறோம். எனவே, அவ்வோவியம் அதனை விட பழமைமையானதாக இருக்கலாம்” என்கிறார் ஆபெர்ட்.

136 சென்டிமீட்டர் நீளமும், 54 சென்டிமீட்டர் உயரமும் கொண்ட இந்த ஓவியம், கொம்புகளைக் கொண்ட வார்டி ரக ஆண் பன்றியைக் குறிப்பிடுவதாகத் தெரிகிறது.

இந்த பன்றி ஓவியத்தின் மேல், பின்புறத்தில் இரண்டு கைகள் இருக்கின்றன. இந்த கைகள் வேறு இரண்டு பன்றிகளை நோக்கி இருப்பதாக இருக்கின்றன. ஆனால் அந்தப் பன்றி ஓவியங்கள் முழுமையாகப் பாதுகாக்கப்படவில்லை.

Warty pigs

“இந்தப் பன்றி மற்ற இரு வார்டி பன்றிகள் சண்டை போடுவது அல்லது பன்றிகள் தொடர்பு கொள்வதை கவனிப்பது போலிருக்கிறது” என்கிறார் இந்த ஆய்வறிக்கைகளை எழுதியவர்களில் ஒருவரான ஆடம் ப்ரும்.

இந்த கை ஓவியத்தை வரைவதற்கு, நிறமிகளைக் கொட்டுவதற்கு முன் ஓவியர்கள் தங்களுடைய கைகளை வைத்திருப்பார்கள் என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இந்த ஓவியத்தில் இருக்கும் எச்சிலை வைத்து, அவர்களின் மரபணு மாதிரிகளை எடுக்க முடியும் என நம்புகிறது ஆராய்ச்சியை மேற்கொண்ட குழு.

Cave front

உலகிலேயே மிகப் பழமையான ஒரு உருவத்தைக் குறிப்பிடும் ஓவியமாக இது இருக்கலாம். ஆனால் இந்த பன்றி ஓவியம் உலகிலேயே மிகப் பழமையான ஓவியமல்ல.

தென்னாப்பிரிக்காவில் 73,000 ஆண்டுகளுக்கு முன்பே வரையப்பட்ட வலையொட்டு (ஹேஷ்டேக்) போன்ற ஒரு ஓவியம் தான் உலகிலேயே மிகவும் பழமையான ஓவியமென நம்பப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »