Press "Enter" to skip to content

சசிகலாவுக்கு என்ன பிரச்சனை? டிடிவி தினகரன் விளக்கம்

கர்நாடகத்தின் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு கடந்த ஒரு வாரமாக காய்ச்சல் இருந்ததாகவும் நேற்று மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகவும் விரைவில் சிடி ஸ்கேன் எடுப்பது குறித்து முடிவுசெய்யப்படுமெனவும் டிடிவி தினகரன் தெரிவித்திருக்கிறார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கிறார்.

அவருடைய தண்டனைக் காலம் வரும் ஜனவரி 27ஆம் தேதி முடிவடைந்து அவர் விடுதலை செய்யப்படவிருக்கிறார். இந்த நிலையில், புதன் கிழமை மாலை அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் பெங்களூருவில் உள்ள பௌரிங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு எடுக்கப்பட்ட கொரோனாவுக்கான ஆர்டிபிசிஆர் மற்றும் ரேபிட் ஆண்டிஜென் சோதனைகளில், கொரோனா இல்லை எனத் தெரியவந்தது.

இருந்தபோதும் ஆக்ஸிஜனை உள்ளிழுக்கும் அளவு 79 சதவீதமாக இருந்தது. இதையடுத்து அவருக்கு ஆக்ஸிஜன் அளிக்கப்பட்டது. அவர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார்.

இந்த நிலையில் அவரைப் பார்க்க டிடிவி தினகரனும் மருத்துவர் சிவகுமாரும் பெங்களூர் வந்தனர். அவரைச் சந்திக்க அனுமதியும் கோரியுள்ளனர்.

பெங்களூரில் இருந்தபடி செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “சசிகலாவை நல்ல முறையில் கவனித்துக் கொள்கிறார்கள். சிடி ஸ்கேன் தேவையா என்பதை மருத்துவர்கள் இன்று முடிவுசெய்வார்கள். நேற்று மாலை 4.30 – 5.00 மணியளவில் எங்களுடைய வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியனுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அதன்படி அவருக்கு ஒரு வாரமாக காய்ச்சல் இருந்தது. கடந்த இரண்டு நாட்களாக அவருக்கு காய்ச்சல் இல்லை. ஆனால், மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டதால் அவரை மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் உடனே சிடி ஸ்கேன் எடுப்பார்கள். இங்கே அப்படி இல்லை. தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசென்றால் நன்றாக இருக்கும் என நினைக்கிறோம். அவரை சந்திக்க எங்கள் வழக்கறிஞர் மூலம் முயற்சிக்கிறோம்” என்று கூறினார்.

ஜனவரி 27ஆம் தேதி அவர் விடுதலையாகும்போது அவருக்கு எப்படிப்பட்ட வரவேற்பு அளிக்கப்படுமென செய்தியாளர்கள் கேள்வியெழுப்பியபோது, “அவரை கட்சித் தொண்டர்கள் மிகவும் எதிர்பார்த்திருக்கிறார்கள்.

அவருக்குத் தகுந்த வரவேற்பை அளிப்போம். கொரோனா காலகட்டத்தில் பெரிய கொண்டாட்டங்களை இங்கே அனுமதிக்க மாட்டார்கள், நோயின் தீவிரத்தைப் பொறுத்து அவருக்கு வரவேற்பு அளிக்கப்படும்” என்றார் தினகரன்.

இப்போது சசிகலாவைச் சந்திப்பதற்கான அனுமதி கோரி டிடிவி தினகரன் பெங்களூருவில் காத்திருக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »