Press "Enter" to skip to content

விளாடிமிர் புதினுக்கு 10,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு மாளிகையா – ரஷ்யாவில் சர்ச்சை

கருங்கடலில் உள்ள மாளிகையான ‘பிளாக் சீ மேன்ஷன்’ ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடையது அல்ல, அந்த மாளிகை தன்னுடையது என புதினுக்கு நெருக்கமான ரஷ்யப் பணக்காரர் ஆர்காடி ரோட்டன்பெர்க் கூறியுள்ளார்.

இந்த பிரம்மாண்ட மாளிகை தொடர்பாக, புதினை கடுமையாக விமர்சிக்கும் அலெக்ஸே நவால்னி வெளியிட்ட காணொளி ரஷ்யா முழுமைக்கும் மிகுதியாக பகிரப்பட்டது. அது 10 கோடி முறைக்கு மேல் பார்க்கப்பட்டிருக்கிறது.

இந்த சொகுசு மாளிகை தன்னுடையது அல்ல என கடந்த வாரம் கூறியிருந்தார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்.

கருங்கடலின் கரையில் அமைந்திருக்கும் இந்த சர்ச்சைக்குரிய ஆடம்பர மாளிகை தன்னுடையதுதான் என கடந்த 2021 ஜனவரி 30 அன்று பொது வெளியில் கூறினார் புதினுடைய பணக்கார நண்பர் ஆர்காடி ரோட்டன்பெர்க்.

“சில ஆண்டுகளுக்கு முன் நான் இந்த மாளிகையின் உரிமையாளர் ஆகிவிட்டேன்” என ஆர்காடி ரோட்டன்பெர்க் தரப்பிலிருந்து கூறப்பட்டிருக்கிறது.

இன்னும் இரண்டு ஆண்டுகளில் இந்த மாளிகையின் கட்டுமானம் நிறைவடையும் எனவும், இது அடுக்குமாடி விடுதியாகலாம் என எதிர்பார்ப்பதாகவும் கூறினார் ஆர்காடி ரோட்டன்பெர்க்.

ஏன் ‘பிளாக் சீ மேன்ஷன் செய்திகளில் அடிபடுகிறது?

President Vladimir Putin

சமீபத்தில் ரஷ்ய அரசால் சிறைப்படுத்தப்பட்டிருக்கும் எதிர்க் கட்சித் தலைவரான அலெக்ஸே நவால்னியின் அணி, இந்த மாளிகை குறித்த ஆவணப் படத்தை வெளியிட்டனர். அதிலிருந்து இந்த மாளிகை குறித்த சர்ச்சைகள் ரஷ்யாவில் அதிகரித்து வருகின்றன.

அலெக்ஸே நவால்னியின் தரப்பில் நடத்திய விசாரணையில் இந்த மாளிகையைக் கட்ட 137 கோடி அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 10,000 கோடி ரூபாய்) செலவழிக்கப்பட்டதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.

கருங்கடலின் கரையில் விளாடிமிர் புதினின் சொந்த பயன்பாட்டுக்காக, ஒரு பிரம்மாண்டமான மாளிகை கட்டப்படுவதாகவும், அதற்கு அரசின் நிதி பயன்படுத்தப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டப்படுவதாக கடந்த 2012 மே மாதத்தில் டிம் வெல் என்கிற பிபிசி செய்தியாளர் ஒரு செய்தியைப் பதிவு செய்ததும் இங்கு நினைவுகூரத்தக்கது.

இந்த ஊழல் குற்றச்சாட்டு, நவால்னிக்கு ஆதரவாக பரவி வருகிறது. கடந்த வாரம், நவால்னியை விடுவிக்கக் கோரி மக்கள் திரண்டதும், அதில் 4,000-த்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

நவால்னியை தடுப்புக் காவலில் வைத்திருப்பது மற்றும் அவருக்கு ஆதரவாக நடந்த மக்கள் போராட்டத்தை ரஷ்ய காவல் துறை கையாண்ட விதம் இரண்டுமே சர்வதேச அளவில் பெரும் விமர்சனங்களைப் பெற்றது.

யார் இந்த ஆர்காடி ரோட்டன்பெர்க்?

ஆர்காடி ரோட்டன்பெர்க்

ஆர்காடி ரோட்டன்பெர்க் ஒரு பிரபலமான கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர். பாலங்கள், எரிவாயுக் குழாய்களைப் பதிப்பது போன்றவைகளை இந்நிறுவனம் மேற்கொள்கிறது. இவர் புதினின் பாலிய நண்பர் என்பதும், புதினோடு ஜூடோ விளையாடுபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆர்காடி ரோட்டன்பெர்க் மற்றும் அவரது சகோதரர் குறித்த செய்திகள் கடந்த ஆண்டு வெளியான ஃபின்சென் பைல்ஸ் ஆவணங்களில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

உலகின் மிகப்பெரிய வங்கிகள் மூலம் 150 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடான பணிப்பரிவர்த்தனை நிகழ்ந்துள்ளதை வெளிப்படுத்திய ஃபின்சென் பைல்ஸ் ஆவணங்கள் சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கடந்த 2014-ம் ஆண்டு முதல் ஆர்காடி ரோட்டன்பெர்க் அமெரிக்க அரசின் தடையின் கீழ் இருக்கிறார் என்பதும் நினைவுகூரத்தக்கது. அவரால் அமெரிக்காவுக்கு பயணிக்கவோ, தொழில் முதலீடு செய்யவோ முடியாது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »