Press "Enter" to skip to content

மியான்மர் தமிழர்களின் கதை: ராணுவத்தின் பிடியில் சிக்கித் தவிக்கும் 10 லட்சம் தமிழர்களின் குமுறல்கள்

  • சாய்ராம் ஜெயராமன்
  • பிபிசி தமிழ்

பிப்ரவரி 1, திங்கட்கிழமை காலை 7 மணி, எப்போதும் போல விழித்து, கையில் அலைபேசியை எடுத்த மியான்மர் மக்களுக்கு தூக்கிவாரிப்போட்டது. தொலைத்தொடர்பு சேவை துண்டிக்கப்பட்டதால் யாரையும் அழைக்க முடியவில்லை, ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களை பயன்படுத்த இணையமும் இல்லை.

போலிச் செய்திகள் வாட்சாப், ஃபேஸ்புக் உள்ளிட்ட செயலிகள் மற்றும் சமூக ஊடகங்கள் வழியாகவும் மட்டுந்தான் பரவுமா என்ன? மக்கள் பலரும் தங்களின் அச்சத்துடன் போலிச் செய்திகளையும் பகிர தொடங்கியதால், நாட்டில் என்ன நடக்கிறது? 2015ஆம் ஆண்டு முதல் மீண்டு வந்த நமது வாழ்க்கை ஒரே இரவில் அதலபாதாளத்துக்கு சென்றுவிட்டதா? என்று மியான்மர் மக்கள் பரிதவிக்க தொடங்கினர்.

அதே நாள் மதியம் 12 மணி முதல், தொலைத்தொடர்பு சேவை படிப்படியாக பயன்பாட்டுக்கு வந்தது. மியான்மர் மக்கள் எது நடந்திருக்கக் கூடாது என்று நினைத்தார்களோ அது நடந்துவிட்டது. ஆம், 1962ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை ராணுவத்தின் ஆட்சியில் உரிமைகளை இழந்து, இயல்பு வாழ்க்கைக்கே அல்லல் பட்ட மக்கள், 2015ஆம் ஆண்டு முதல் சுவாசிக்க தொடங்கிய சுதந்திர காற்று அடைக்கப்பட்டது என்று தெரியவந்ததாக பதறுகிறார் மியான்மரின் யாங்கோன் (ரங்கூன் என்றும் அழைக்கப்படுகிறது) நகரை சேர்ந்த பர்மிய திரைப்பட இயக்குநரும், தமிழருமான சுந்தர்ராஜ்.

மியான்மரில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்வதாக கருதப்படுகிறது. குறிப்பாக, யாங்கோன் என்ற நகரத்தில் மட்டும் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களும், பக்கோ, மூன், கரீன், ஏராவடி உள்ளிட்ட மாநிலங்களிலும் தமிழர்கள் பெருமளவில் வாழ்ந்து வருகிறார்கள். அங்கு இன்றளவும் தமிழ் மொழி பேசப்பட்டு, கலாசாரமும், பாரம்பரியமும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கடந்த ஒரு வார காலமாக அங்கு நிலவி வரும் அசாதாரணமான சூழ்நிலை குறித்து தமிழர்களின் பார்வையில் அறிவதற்காக மியான்மரில் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வரும் சில தமிழர்களுடன் பிபிசி தமிழ் பேசியது.

ராணுவ ஆட்சி Vs மக்களாட்சி – ஒரு ஒப்பீடு

ராணுவ ஆட்சி

1962 முதல் 2011 வரை என சுமார் 49 ஆண்டுகளுக்கு மியான்மரை ராணுவம்தான் ஆட்சி செய்தது என்பதால், அது அந்த நாட்டு மக்களுக்கு புதிதல்ல. எனினும், கடந்த ஆறு ஆண்டுகளாக சுவாசித்து வந்த சுதந்திர காற்று ஒரே இரவில் முடிவுக்கு வந்தது என்பது, கண் தெரியாத, வாய் பேச முடியாத, காது கேட்காத ஒருவரை அடர்ந்த காட்டுக்குள் தனியாக அடைத்தது போன்றுள்ளதாக மக்கள் கருதுகிறார்கள்.

ராணுவ ஆட்சியின்போது, ‘உங்களுடன் பேச வேண்டும்’ என்று கூறி அழைத்து செல்லப்பட்ட பெரும்பாலானோரை பத்து அல்லது இருபதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு மீண்டும் பார்க்க முடியாத சூழல் 2011ஆம் ஆண்டுக்கு முன்புவரை நிலவி வந்ததாகவும், அது மீண்டும் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் இயல்பு வாழ்க்கையை முடக்குவதாகவும் கூறுகின்றனர்.

மேலும், நீதித்துறை, கல்வி, பாதுகாப்பு, சுகாதாரம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்து விடயங்களிலும் ராணுவத்தின் ஆட்சியில் பாரபட்சம் காட்டப்பட்டதாகவும், அந்த நிலைமை படிப்படியாக மாறி வந்த வேளையில் அவை மீண்டும் கனவுபோல் மாறிவிட்டதாகவும் வேதனைப்படுகிறார் சுந்தர்ராஜ்.

“எங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் கடந்த ஒரு வாரமாக தினமும் இரவு எட்டு மணிக்கு வீட்டிலுள்ள பாத்திரங்களை கொண்டு ஒலியெழுப்பி வந்தோம். மக்களாட்சிக்கு ஆதரவான இந்த ஒற்றுமை ஒலி, உணர்ச்சிவசப்பட்டு எங்களது கண்களில் கண்ணீரை வரவைக்கிறது. ஆனால் ராணுவமோ, இதுபோன்று ஒலியை எழுப்புவதாக யாராவது ஒருவர் புகாரளித்தாலும், ஊரிலுள்ள அனைவரையும் சிறையில் தள்ளிவிடுவோம் என்று எச்சரிக்கை விடுக்கிறது. நாங்கள் எங்களது விருப்பு, வெறுப்பை அமைதியான வழியில் வெளிப்படுத்துவதற்கு உரிமை கிடையாதா?” என்று கேள்வியெழுப்பும் அவர், எனினும் மக்கள் ராணுவத்துக்கு அஞ்சாமல் தொடர்ந்து பாத்திரங்களை கொண்டு ஒலியெழுப்புவதை தொடர்வதாக கூறுகிறார்.

சுந்தர்ராஜ்

கொரோனா காலத்தில் இணையத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அதன் வழியே வர்த்தகம் மேற்கொள்ளவும், சந்தைப்படுத்தவும், கல்வி கற்கவும் என எண்ணற்ற புதுமைகளை வாழ்க்கையில் புகுத்திக்கொள்ள மக்கள் முயற்சித்து வந்த காலகட்டத்தில் தங்களது ஜனநாயக உரிமைகள் மீண்டும் பறிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகிறார்.

மியான்மரில் ராணுவ ஆட்சி அமலுக்கு வந்த முதல் நாளன்று சில மணிநேரங்களுக்கு அமலில் இருந்த தொலைத்தொடர்பு கட்டுப்பாடுகள், நாட்கள் செல்ல செல்ல விரிவடைந்து, ஒரு கட்டத்தில் நாடுமுழுவதும் இணைய சேவை முடக்கப்பட்டது. ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களும் தடை செய்யப்பட்டன.

49 ஆண்டுகால ராணுவ ஆட்சியில் உரிமைகள் பறிக்கப்பட்டு, சொத்துகள் முடக்கப்பட்டு, கல்வி – வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டு, அநீதி இழைக்கப்பட்டு வாழ்ந்த நாட்கள் இனி ஒருபோதும் திரும்ப கூடாது என்று ஒவ்வொரு நாளும் மியான்மர் மக்கள் வேண்டிக்கொள்வதாக கூறுகிறார் சுந்தர்ராஜ்.

தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்

மியான்மரில் முந்தைய ராணுவ ஆட்சியின்போதும், இப்போதும் மியான்மரில் வாழும் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து அறிய முற்பட்டோம். அப்போது, மியான்மர் வாழ் தமிழர்களான இயக்குநர் சுந்தர்ராஜ் மற்றும் வழக்குரைஞரான அகத்தியன் ஆகிய இருவரும் வித்தியாசமான ஒருமித்த பார்வையை வெளிப்படுத்தினர்.

அதாவது, தமிழர்கள் பல்வேறு காரணங்களுக்காக பல நூறாண்டுகளுக்கு முன்னதாக மியான்மருக்கு வந்ததாகவும், இப்போது அங்கு வசிக்கும் தமிழர்கள் அனைவரும் தங்களை ‘தமிழர்கள்’ என்று அழைத்துகொள்வதில் எந்தளவுக்கு பெருமிதம் கொள்கிறார்களோ, அதே அளவுக்கு தாங்கள் ‘மியான்மர் குடிமகன்’ என்றும் ‘மியான்மர் தமிழர்’ என்றும் கூறிக்கொள்வதிலும் பெருமிதமடைவதாகவும் தெரிவிக்கின்றனர்.

மேலும், மியான்மர் நீண்டகாலமாக சந்தித்து வரும் அனைத்து பிரச்சனைகளிலும் தமிழர்கள் தனித்திருக்காது, நாட்டின் உரிமைக்காக மற்றனைத்து சமுதாயத்தினருடன் ஒன்றிணைந்து போராடுவதையே நோக்கமாக கொண்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.

“1962ஆம் ஆண்டு மியான்மரில் ஏற்பட்ட மிகப் பெரிய கலவரம் மற்றும் அதைத்தொடர்ந்த அச்சத்தின் காரணமாக பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கப்பல்களில் தமிழகத்துக்கு திரும்பினர். அப்போது மியான்மரையே தங்களது தாய்நாடாக கருதியவர்கள் இன்று வரை அந்த கருத்தில் உறுதியாக உள்ளனர்” என்று சுந்தர்ராஜ் கூறுகிறார்.

“மற்ற இனத்தை சேர்ந்தவர்களை போலவே, தமிழர்களும் மியான்மரில் எண்ணற்ற துன்பங்களுக்கு உள்ளாகி உள்ளனர். குறிப்பாக, தமிழர்கள் வசித்து வந்த நிலங்கள் காரணம் ஏதுமின்றி பறிக்கப்பட்டு உள்ளது. ராணுவ ஆட்சியில், வேலைவாய்ப்பு, கல்வி என எங்கு சென்றாலும் தமிழர்களுக்கு சமஉரிமை என்ற பேச்சுக்கே இடமில்லை.”

இதில் மிகவும் மோசமான விடயம் என்னவென்றால், மியான்மரின் மீது மிகுந்த தேசப்பற்றை வெளிப்படுத்தும் அங்கு வாழும் தமிழர்கள், அந்த நாட்டின் குடிமகனாகவே பெரும்பாலான நேரங்களில், இடங்களில் அங்கீகரிக்கப்படுவதில்லை என்பதுதான். அதாவது, மியான்மரின் குடிமகனுக்கு உரிய சலுகைகளை பெற தேவையான தேசிய அடையாள அட்டை, 90 சதவீதத்துக்கும் அதிகமான தமிழர்களுக்கு இன்னமும் கூட கொடுக்கப்படவே இல்லை என்று கூறுகிறார் சுந்தர்ராஜ்.

இதன் காரணமாக, மியான்மர் தமிழர்கள் சிறந்து கல்வியை பெற்று, நல்ல பணியில் இருப்பது என்பது அரிதான ஒன்றாக உள்ளதாகவும் அவர் கூறுகிறார். “மியான்மரில் தமிழர்களை மருத்துவராக, பொறியாளராக, அரசு ஊழியராக பார்ப்பதென்பது மிகவும் அரிது. தமிழர்கள் பெரும்பாலும் தூய்மை பணியாளர்கள், உதவியாளர்கள் என கடைநிலை ஊழியர்களாகவே இன்னமும் நீடிக்கின்றனர். இதற்கு தேசிய அடையாள இல்லாததால் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை மறுக்கப்படுவது மிக முக்கிய காரணமாகும்.”

எனினும், 2015ஆம் ஆண்டு ஆங் சாங் சூச்சி ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழர்கள் உள்ளிட்ட மற்ற நாடுகளிலிருந்து புலம்பெயர்ந்தவர்களுக்கும் தேசிய அடையாள அட்டை வழங்கும் பணிகள் தொடங்கியதாக கூறப்படுகிறது.

மியான்மரின் ‘அம்மா’

ஆங் சான் சூச்சி

2015ஆம் ஆண்டுக்கு முன்பு வரை, எங்கு சென்றாலும், எதை செய்தாலும் “எங்களை வேற்றுமைப்படுத்துகிறார்களே” என்ற எண்ணம் மியான்மர் தமிழர்களிடத்தில் நிலவி வந்ததாகவும், அந்த உணர்வு ஆங் சாங் சூச்சி ஆட்சிக்கு வந்ததும் முற்றிலும் மாறியுள்ளதாகவும் கூறும் சுந்தர்ராஜ், சூச்சியை மியான்மரின் ‘அம்மா’ என்று குறிப்பிடுகிறார்.

“வலுவான குடும்ப பின்னணி, வெளிநாட்டு கல்வி என்று வாழ்ந்து கொண்டிருந்த ஆங் சான் சூச்சி, மியான்மர் மக்கள் படும் துன்பத்தை பார்த்து நாட்டுக்கு திரும்பி வந்தார். ‘ராணுவ ஆட்சியே நமது வாழ்க்கை, இதுவே இயல்புநிலை’ என்று இருந்த மக்களுக்கு சுதந்திரம் என்பதன் அர்த்தத்தை கற்பித்தது மட்டுமின்றி, அதை அடைவதற்கு காந்தியின் அகிம்சை வழியிலேயே போராட வேண்டுமென்று சொல்லிக் கொடுத்து, எங்களுக்கும் நல்ல காலம் பிறகும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தினார்.”

“எங்களுக்கு வாழ்க்கையில் நம்பிக்கையையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்திய ஆங் சாங் சூச்சியை 20 ஆண்டுகளுக்கு மேல் வீட்டுக் காவலில் வைத்தது ராணுவம். மக்களுக்காகவே தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை கழித்த அவர் மியான்மருக்கே ‘அம்மா’ ஆவார். அவர் வழங்கிய அறிவுரை, ஏற்படுத்தி கொடுத்த திட்டங்களை கொண்டே நாங்கள் கடந்த ஆறாண்டுகளாக, கொரோனா உள்ளிட்ட பிரச்சனைகளையும் தாண்டி நம்பிக்கையுடன் வாழ்க்கையை நடத்தி வந்தோம்” என்று சுந்தர்ராஜ் கூறுகிறார்.

மியான்மரில் பல மொழிகள் பேசப்பட்டாலும், பர்மிய மொழியே அனைத்து மட்டங்களிலும் முக்கியத்துவம் பெற்றதாக உள்ளது. குறிப்பாக, பர்மிய மொழியை மட்டுமே மையமாக கொண்ட மியான்மரின் திரைத்துறை, மிகுந்த கட்டுப்பாடுகளுடன் இயங்குவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பர்மிய திரைத்துறையில் 35 ஆண்டுகளுக்கு முன்பு கடைநிலை ஊழியராக தொடங்கி, இன்று 40க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவராக சுந்தர்ராஜ் விளங்குகிறார்.

“மியான்மர் வரலாற்றில் கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு பிறகு அரசியல் சார்ந்த திரைப்படத்தை எடுத்தது நான்தான். 2019ஆம் ஆண்டு ‘சிட்டிசன்’ என்ற பெயரில் வெளியான அந்த திரைப்படத்தில் ராணுவ ஆட்சியின் கோர முகத்தை வெளிப்படுத்தி இருந்தேன். இதுகுறித்து கேள்விப்பட்ட ஆங் சாங் சூச்சி என்னையும், படக்குழுவினரையும் அழைத்து பாராட்டு தெரிவித்து, தானும் திரைப்படத்தை பார்ப்பதற்கு ஆவலாக இருப்பதாக கூறினார்” என்று ஆங் சாங் சூச்சியின் பாராட்டை பெற்ற தருணத்தை விவரிக்கிறார் சுந்தர்ராஜ்.

ஆங் சாங் சூச்சியும் ரோஹிஞ்சா முஸ்லிம்களும்

ஆங் சாங் சூச்சியும் ரோஹிஞ்சா முஸ்லிம்களும்

ஆங் சாங் சூச்சியால் மட்டுமே மியான்மரில் மக்களாட்சியை சிறப்பாக நடத்திட முடியும் என்பது போன்ற கருத்தை அங்கு வாழும் தமிழர்கள் முன்வைத்தாலும், ரோஹிஞ்சா முஸ்லிம்கள் விவகாரத்தில் அதே ஆங் சாங் சூச்சி மீதுதான் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு சர்வதேச விசாரணைக்கும் உட்படுத்தப்பட்டார்.

இந்த நிலையில், இந்த விவகாரத்தை புரிந்துகொள்ள வேறுபட்ட கண்ணோட்டம் தேவைப்படுவதாக கூறுகிறார் அங்கு வாழும் வழக்கறிஞரான அகத்தியன். “மியான்மரில் 2015ஆம் ஆண்டு மக்களாட்சி அரசாங்கம் ஆட்சியை அமைத்தாலும், ராணுவத்தின் கட்டுப்பாட்டு பெரும்பாலான இடங்களில் எப்போதும் இருந்துகொண்டே இருந்தது. குறிப்பாக, உள்துறை, பாதுகாப்புத்துறை உள்ளிட்ட முக்கிய துறைகள் அனைத்தும் ராணுவத்தின் நேரடி கட்டுப்பாட்டிலேயே இருந்தன. எனவே, அந்த துறை சார்ந்த நடவடிக்கைகளில் சூச்சி தலைமையிலான அரசால் தலையிடவோ அல்லது தாக்கம் செலுத்தவோ இயலவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், ரக்கைன் மாநிலத்தில் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் மீது இனஅழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில், ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைகள் அனைத்தும், இங்குள்ள சூச்சி தலைமையிலான அரசு செய்ததை போன்று சர்வதேச சமூகத்தின் கண்களுக்கு தெரிந்தன” என்று கூறுகிறார்.

மேலும், இந்த விவகாரத்தில் உள்ளூர் ஊடகங்கள் ஒருவிதமான செய்தியையும், சர்வதேச ஊடகங்கள் வேறுவிதமான செய்தியையும் வெளியிட்டதாக கூறும் அகத்தியன், ஊடகங்கள் தங்களுக்குள் செய்திகளை பரிமாறிக்கொள்வதில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாகவே இந்த விவகாரத்தில் வெளியுலகத்துக்கு தவறான புரிதல் ஏற்பட்டதற்கு காரணம் என்று தான் கருதுவதாக கூறுகிறார்.

அதுமட்டுமின்றி, தன்னைப் பொறுத்தவரை, ரோஹிஞ்சா முஸ்லிம்கள் இன அழிப்பு குற்றச்சாட்டில், ஆங் சாங் சூச்சிக்கோ அல்லது அவரது அரசுக்கோ தொடர்பில்லை என்றும், அவர் இனஅழிப்பை ஆதரிக்கவில்லை என்றும் நம்புவதாக கூறுகிறார்.

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்த நாடுமுழுவதும் கடந்த ஒரு வாரமாக நடந்து வரும் போராட்டங்களில் தானும் ஈடுபட்டு வருவதாக அகத்தியன் கூறுகிறார்.

போராட்டத்தை முன்னின்று நடத்தும் அகத்தியன்

என்னதான் தீர்வு?

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 4ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்தபோது உலகமே அதை உற்றுநோக்கிக் கொண்டிருந்தது. அதே காலகட்டத்தில், அதாவது நவம்பர் 8ஆம் தேதிதான் மியான்மரில் பொதுத்தேர்தல் நடைபெற்று, அதில் பெரும்பான்மையான வாக்குகளை பெற்று, ஆங் சாங் சூச்சி தலைமையிலான ஜனநாயக தேசிய லீக் கட்சி ஆட்சியை தக்க வைத்தது.

ஆனால். எப்படி அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளிவந்தபோது, அதில் முறைகேடுகள் நடந்ததாக அப்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தாரோ, அதேபோன்று மியான்மரில் சூச்சியின் கட்சி மீது ராணுவம் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை ஆதாரம் ஏதுமின்றி முன்வைத்தது.

ராணுவத்தின் பிடியில் மியான்மர்: பரிதவிக்கும் 10 லட்சம் தமிழர்களின் குமுறல்கள்

இதுகுறித்து கருத்துத் தெரிவித்த சுந்தர்ராஜ், “முன்னெப்போதுமில்லாத வகையில், முன்கூட்டியே திட்டமிட்டு, சிறப்பான முறையிலேயே தேர்தல் நடத்தப்பட்டது. பெருமளவிலான மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தார்கள். ஆனால், ராணுவமோ கொரோனா வைரஸை காரணம் காட்டி, தேர்தலை ஒத்திவைக்கும் எண்ணத்துடனே தொடக்கத்தில் இருந்தே செயல்பட்டது. ஒரு கட்டத்தில், தேர்தல் தேதி உறுதியானவுடன், பெருந்தொற்று பிரச்சனையை கருத்திற்கொண்டு, பொது கூட்டங்களுக்கு மாறாக வானொலி, காணொளி வாயிலாக பிரசாரம் மேற்கொண்டே சூச்சி மக்களின் ஆதரவை பெற்றுவிட்டார். இந்த தோல்வியை ஏற்க விரும்பாத ராணுவம், கடந்த சில மாதங்களாக திட்டமிட்டு ஆட்சியை கவிழ்த்துள்ளது” என்று கூறுகிறார்.

மியான்மரில் கைது செய்யப்பட்டுள்ள அரசியல் தலைவர்களையும் அதிகாரிகளையும் உடனடியாக விடுவிக்கவிட்டால், கடும் பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்று அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், பல்வேறு உலக நாடுகளும், ஐக்கிய நாடுகள் சபையும் மியான்மர் ராணுவத்துக்கு அழுத்தம் கொடுக்க தொடங்கியுள்ளன.

இந்த விவகாரத்தில் தீர்வு எப்படி எட்டப்படக்கூடும் என்ற கேள்விக்கு பதிலளித்த சுந்தர்ராஜ், “மக்கள் அமைதியான முறைகளில் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள். ஆனால், ராணுவத்தின் ஆட்சியை அகற்றுவதற்கு இதெல்லாம் போதாது. மியான்மரின் அண்டை நாடுகள் மற்றும் உலக நாடுகள் அனைத்தும் தலையிட்டே இந்த பிரச்சனையை தீர்க்க முடியும். மற்றபடி, தமிழர்கள், பௌத்த மதத்தினர், முஸ்லிகள் உள்ளிட்ட அனைத்து சமூகத்தை சேர்ந்த மக்களும் தொடர்ந்து ஒருமித்த குரலில் போராடுவோம்” என்று கூறுகிறார்.

“உலகம் முழுவதும் மியான்மரில் தயார் செய்யப்படும் மரப்பொருட்கள் மற்றும் உணவு தானியங்களுக்கு சிறந்த பெயர் உள்ளது. இதைத்தவிர்த்து தங்கம் உள்ளிட்ட பல்வேறு வளங்களும் இந்த நாட்டில் உள்ளன. ஆனால், இத்தனை இருந்தும் எங்களது வாழ்க்கை வாழ்வா – சாவா என்ற நிலையிலேயே தினமும் நகர்கிறது.”

ராணுவத்தின் பிடியில் மியான்மர்: பரிதவிக்கும் 10 லட்சம் தமிழர்களின் குமுறல்கள்

சுதந்திரமும், ராணுவ ஆட்சியின் பிடியும்

பர்மா என்றும் அழைக்கப்படும் மியான்மர் தென்கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ளது. தாய்லாந்து, லாவோஸ், வங்கதேசம், சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுடன் இது எல்லையை பகிர்ந்து கொள்கிறது.

இங்கு வாழும் சுமார் 5.4 கோடி மக்களில் பெரும்பாலானோர் பர்மிய மொழி பேசுபவர்களாக உள்ளனர். நாட்டின் மிகப் பெரிய நகரமாக யங்கோன் இருந்தாலும், நேபியேட்டோ தலைநகரமாக விளங்குகிறது.

1948ஆம் ஆண்டு மியான்மர் பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்றது. எனினும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு வெகுகாலம் நீடிக்கவில்லை. 1962 முதல் 2011 வரை ராணுவத்தின் ஆட்சியில் மியான்மர் இருந்தது. 2015ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் ஜனநாயக தேசிய லீக் கட்சி வெற்றிபெற்று ஆங் சாங் சூச்சி ஆட்சியமைத்தார்.

BBC Indian sports woman of the year

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »