Press "Enter" to skip to content

பிபிசி உலக சேவை டி.விக்கு சீனா தடை – என்ன நடந்தது?

பிபிசி உலக செய்தி தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு சீனா அந்நாட்டில் தடை விதித்திருப்பதாக வியாழக்கிழமை இரவு அறிவித்திருக்கிறது.

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) மற்றும் வீகர் இனவாத சிறுபான்மையினர் மீதான அடக்குமுறை தொடர்பான பிபிசியின் ஊடக ஒளிபரப்பு குறித்தும் அந்நாடு விமர்சித்திருக்கிறது.

சீன அரசின் இந்த முடிவு ஏமாற்றம் தருவதாக பிபிசி தெரிவித்திருக்கிறது.

பிரிட்டனில் அதன் ஊடகம் மற்றும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை அமைப்பான ஆஃப்காம் (Ofcom), சீனா குளோபல் டெலிவிஷன் நெட்வொர்க் (சிஜிடிஎன்) என்ற சீன அரசு ஒளிபரப்பு நிறுவனத்தின் ஒளிபரப்பு உரிமம் திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டன் தொடர்ச்சியாக, பிபிசி மீதான சீனாவின் உள்நாட்டு ஒளிபரப்பு தடை அமைந்திருக்கிறது.

சிஜிடிஎன் உரிமத்தை விண்மீன் சீனா ஊடகம் என்ற நிறுவனம் விதிகளை மீறி பெற்றிருப்பதாக தெரிய வந்ததையடுத்து அதன் ஒளிபரப்புக்கு ஆஃப்காம் இந்த மாத தொடக்கத்தில் கட்டுப்பாடுகளை விதித்தது.

மேலும், பிரிட்டன் குடியுரிமை பெற்றவரும் பத்திரிகையாளருமான பீட்டர் ஹம்ப்ரே, சீன சிறையில் இருந்த விவகாரத்தில் அவரது கட்டாயப்படுத்தப்பட்ட ஒப்புதலை ஒளிபரப்பியதாகவும் சிஜிடிஎன் மீது சர்ச்சை எழுந்தது.

இந்த நிலையில், சீனாவில் பிபிசி உலக சேவை தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு தடை விதித்திருக்கும் சீன அரசின் முடிவு குறித்து அதன் திரைப்படம், தொலைக்காட்சி மற்றும் வானொலி தொடர்பான நிர்வாகம், “பிபிசியின் சீனா தொடர்புடைய சில தகவல்கள் உண்மையாகவும் வெளிப்படையாகவும் இருப்பது மற்றும் சீன தேசிய நலன்களுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என்ற தங்கள் நாட்டு ஒலிபரப்பு வழிகாட்டுதல்களை மீறும் வகையில் உள்ளன,” என்று தெரிவித்திருக்கிறது.

இதே வேளை, சீனாவில் பிபிசி உலக சேவை ஒளிபரப்பு செய்ய மேலும் ஓராண்டு அவகாசம் கேட்டு சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பமும் ஏற்றுக்கொள்ளப்படாது என்று அந்த நிர்வாகம் கூறியிருக்கிறது.

பிபிசி பதில்:

இந்த விவகாரம் தொடர்பாக பிபிசி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சீன அரசுத்துறையின் நடவடிக்கை தொடர்பான முடிவு எங்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது. சர்வதேச அளவில் உலக செய்திகளை வெளிப்படையாகவும் பக்க சார்பற்றும் அச்சமன்றியும் வெளியிடுவதில் உலகின் நம்பகமான சர்வதேச ஊடக ஒளிபரப்பாளராக பிபிசி உள்ளது,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக ரீதியில் நிதியுதவி சார்ந்து இயங்கும் பிபிசி உலக சேவை தொலைக்காட்சி, உலக அளவில் அதன் சேவையை ஆங்கில மொழியில் வழங்கி வருகிறது. சீனாவில் கட்டுப்படுத்தப்பட்ட வெளிநாட்டு ஊடக செய்திகளில், பிபிசியின் தொலைக்காட்சி சேவை, சர்வதேச விடுதிகள், சில ராஜீய அலுவலகங்கள் போன்றவற்றில் மட்டுமே பார்க்கும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. அங்குள்ள சீனர்கள் பொதுவான தளங்களிலோ வீடுகளிலோ பிபிசி உலக தொலைக்காட்சி சேவையை பார்க்க முடியாத நிலையை நிலவுகிறது.

பிரிட்டன் வெளியுறவுத்துறை விமர்சனம்

இந்த நிலையில் பிபிசி உலக சேவைக்கு தடை விதித்துள்ள சீன அரசின் நடவடிக்கையை பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் டோமினிக் ராப் விமர்சித்துள்ளார்.

“ஊடக சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை ஏற்க முடியாதது,” என அவர் தெரிவித்துள்ளார்.

சீனாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்காவும் கண்டித்துள்ளது. சீனாவில் ஊடக சுதந்திரத்தை ஒடுக்கும் வகையிலான விரிவான பிரசாரத்தின் அங்கமாக அந்நாட்டு அரசின் நடவடிக்கை கருதப்படுவதாக அமெரிக்கா கூறியுள்ளது.

ஹாங்காங்கில் சர்ச்சைக்குரிய புதிய பாதுகாப்பு சட்டத்தை சீனா அறிமுகப்படுத்தியது முதலே, சீனாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையிலான உறவுகள் மிக மோசமான நிலைக்கு சென்றுள்ளன. அங்கு புதிய சட்டத்துக்கு எதிராக பிராந்தியம் முழுவதும் ஜனநாயக ஆதரவு போராட்டங்களும் இயக்கமும் தீவிரமாகின.

இதைத்தொடர்ந்து ஹாங்காங் குடியிருப்புவாசிகளில் 5.4 மில்லியன் பேருக்கு பிரிட்டனில் வாழும் உரிமையை வழங்கும் புதிய நுழைவு அனுமதி (விசா) முறையை கடந்த ஜனவரி மாதம் பிரிட்டன் அறிமுகப்படுத்தியது. சீனாவில் ஹாங்காங் பிராந்தியத்தின் உரிமைகள் மற்றும் சுதந்திரம் பலவீனப்படுத்தப்படுவதாக பிரிட்டன் நம்புவதால், சிறப்பு நுழைவு அனுமதியின் பேரில் பிரிட்டனுக்கு வரும் ஹாங்காங்வாசிகள் பிரிட்டன் குடியுரிமையை பெறலாம் என்றும் அரசு அறிவித்தது.

சீனாவில் வெளிநாட்டு ஊடகங்களுக்கு எதிரான கட்டுப்பாடுகள் மேற்கொள்ளப்படுவது புதியது கிடையாது. அங்கு ஏற்கெனவே 2000ஆம் ஆண்டில் அமெரிக்க ஊடகங்களைச் சேர்ந்த பத்திரிகையாளர்களை அந்நாட்டு அரசு வெளியேற்றியிருக்கிறது. சீனாவில் பிபிசி உலக சேவையின் இணையம் மற்றும் அதன் செல்பேசி செயலி ஏற்கெனவே முடக்கப்பட்டிருக்கின்றன.

பிப்ரவரி மாதத்தில் வீகர் பெண் ஒருவர், ஷின்ஜியாங் பகுதியில் உள்ள மீள் கல்வி என்று அழைக்கப்படும் முகாமில் முறைசார்ந்து பாலியல் தொந்தரவுக்கு ஆளாகி துன்புறுத்தப்பட்டதாக வெளியிட்ட தகவலை பிபிசி ஒளிபரப்பியது. ஆனால், அந்த செய்தியை தவறான தகவல் என சீன வெளியுறவுத்துறை மறுத்தது.

கடந்த மாதம், சீனாவில் வீகர்கள் மற்றும் பிற முக்கிய முஸ்லிம் குழுக்களை ஒடுக்கி இனப்படுகொலைக்கு நிகரான குற்றத்தை சீனா செய்ததாக அமெரிக்கா குற்றம்சாட்டியது.

சீனாவில் வீகர்கள் மற்றும் பிற சிறுபான்மையினர் உள்ளிட்ட பத்து லட்சத்துக்கும் மேற்பட்டோர் தடுத்து வைக்கப்பட்ட முகாம்களில் இருப்பதாக மதிப்பீடுகள் கூறுகின்றன.

ஆனால், வீகர்கள் அடக்கப்படுவதாக வெளியான தகவலை சீனா மறுத்தது. கடந்த ஆண்டு பிரிட்டனுக்கான சீன தூதர் லியூ ஷியாமிங், பிபிசியின் ஆண்ட்ரூ மார் பிபிசியிடம் பேசுகையில், “நாட்டில் உள்ள பிற சிறுபான்மையினர் போலவே வீகர்கள் ஒரே மாதிரியாக நடத்தப்படுகிறார்கள்,” என கூறியிருந்தார்.

BBC Indian sports woman of the year

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »