Press "Enter" to skip to content

“சீனா அமெரிக்காவின் இடத்தைப் பிடித்துவிடும்” – ஜோ பைடனின் எச்சரிக்கைக்கு காரணம் என்ன?

அமெரிக்கா தன் அடிப்படை உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கானச் செலவீனங்களை அதிகரிக்கவில்லை எனில், சீனா அமெரிக்காவின் இடத்தைப் பிடித்துவிடும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவில் அடிப்படை உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதுவதற்கான தேவை குறித்து, நேற்று (பிப்ரவரி 11 வியாழக்கிழமை) செனட்டர்கள் குழுவோடு ஆலோசனை நடத்தினார் ஜோ பைடன்.

சீன அதிபர் ஷி ஜின்பிங் உடன், ஜோ பைடன் அமெரிக்க அதிபராக பதவியேற்றபின் பேசிய முதல் அழைப்புக்கு அடுத்த நாளே, ஜோ பைடன் இப்படி ஓர் எச்சரிக்கையைக் கொடுத்திருக்கிறார்.

அவ்வழைப்பின் போது, சீன அதிபர் ஷி ஜின்பிங் மனித உரிமைகள் விவகாரத்தில் கடுமையான நிலைப்பாட்டை எடுத்ததோடு இரு நாடுகளுக்கு இடையிலான மோதல் இரு தரப்பினருக்கும் பேரழிவைக் கொடுக்கும் எனவும் தெரிவித்தார்.

சுற்றுச்சூழல் மற்றும் பொது வேலைகள் குழுவைச் சேர்ந்த உறுப்பினர்களைச் சந்தித்த பின் இப்படிப் பேசினார் அதிபர் ஜோ பைடன்.

“நாம் விரைவாக வேலையில் இறங்கவில்லை எனில், சீனா நம் இடத்தைப் பிடித்துவிடுவார்கள்” என பைடன் கூறினார்.

சீனாவின் வேகமான முதலீடுகள்

சீனா பில்லியன் கணக்கிலான டாலரை போக்குவரத்து, சுற்றுச்சூழல் என பல விஷயங்களில், பல பிரச்னைகளைத் தீர்க்கும் விதத்தில் முதலீடு செய்து வருகிறது. நாமும் நம் முதலீடுகளை அதிகரிக்க வேண்டும் எனக் கூறினார் பைடன்.

அமெரிக்க அதிபருக்கான தேர்தல் பிரசாரத்தின் போது, இரண்டு ட்ரில்லியன் அமெரிக்க டாலரை, அடுத்த நான்கு ஆண்டுகளில் வேலை வாய்ப்பு மற்றும் தூய்மையான ஆற்றல் கட்டமைப்புகளில் முதலீடு செய்வேன் எனக் கூறி இருந்தார் பைடன்.

`அமெரிக்கன் சொசைட்டி ஆஃப் சிவில் இன்ஜினியர்ஸ்` என்கிற அமைப்பு, கடந்த 2017-ம் ஆண்டு அமெரிக்க உள்கட்டமைப்புகளுக்கு D+ என மதிப்பீடு வழங்கியது. அதோடு உள்கட்டமைப்புகளைச் சரி செய்ய 2025-ம் ஆண்டுக்குள் இரண்டு ட்ரில்லியன் டாலர் செலவழிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருக்கிறது. ஒருவேளை இந்த உள்கட்டமைப்புப் பிரச்னைகளுக்கு ஒரு தீர்வு காணப்படவில்லை எனில், இதை விட இரண்டு மடங்கு செலவாகலாம் எனவும் மதிப்பிட்டுள்ளது.

உலக பொருளாதார மன்றம் (World Economic Forum) கடந்த 2019-ம் ஆண்டு வெளியிட்ட `குளோபல் காம்படீடிவ்னெஸ் அறிக்கை` என்கிற அறிக்கையில், அமெரிக்காவின் ஒட்டுமொத்த உள்கட்டமைப்பு தரத்துக்கு, உலக அளவில் 13-வது இடத்தைக் கொடுத்திருக்கிறது. கடந்த 2002-ம் ஆண்டு, அமெரிக்கா இந்தப் பட்டியலில் 5-வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிவேக ரயில்கள், மெட்ரோ அமைப்புகள், அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டடங்கள், மின்சார கிரிட்டுகள் என பல உள்கட்டமைப்புத் திட்டங்களில் சீனா தொடர்ந்து பலமாக முதலீடு செய்து வருகிறது.

“சீனர்கள் உண்மையிலேயே தொடர் வண்டிதுறையில் ஒரு பெரிய புதிய முயற்சியை முன்னெடுத்து இருக்கிறார்கள். ஏற்கனவே அவர்களின் ரயில்கள் 225 மைல் வேகத்தில் அனாயாசமாகப் பயணிக்கிறது” எனக் குறிப்பிட்டார் பைடன்.

மனித உரிமைகள் மற்றும் ராஜரீக ரீதியிலான உறவு

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் உடனான அழைப்பின் போது, அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் விரும்பத்தகாத உரசல்களை உண்டாக்கும் மற்ற சில விஷயங்களையும் பேசி இருக்கிறார்.

சீனாவின் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள், ஹாங்காங்கில் சீனா நடந்து கொள்ளும் விதம், சீனாவின் ஷின்ஜியாங் பிராந்தியத்தில் உய்கர் முஸ்லிம்கள் நடத்தப்படும் விதம் போன்றவைகளைக் குறித்து ஜோ பைடன் பேசியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

அதோடு தைவானுக்கு எதிராக அதிகரித்து வரும் சீனாவின் பிடிவாதமான அச்சுறுத்தும் நிலையைக் குறித்தும், கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) விவகாரத்தில் சீனாவின் வெளிப்படைத்தன்மையற்ற நிலையைக் குறித்தும் பைடன் குரல் எழுப்பியதாக வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் ப்சாகி கூறினார்.

“ஹாங்காங், ஷின் ஜியாங், தைவான் போன்ற விவகாரங்களில் கடுமையான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார் சீன அதிபர். அதோடு அவைகள் அனைத்தும் சீனாவின் இறையாண்மை தொடர்பான, பிராந்திய விவகாரங்கள் எனவும் அவர் குறிப்பிடுகிறார்,” என ஜென் ப்சாகி கூறினார்.

இரு நாடுகளுக்கு இடையிலான மோதல் பேரழிவைக் கொடுக்கும், எனவே இரு நாடுகளும் தங்கள் தவறான கணிப்புகளைத் தவிர்க்க வேண்டும் என சீன அதிபர் கூறியதாக, சீனாவின் வெளி விவகாரத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.

BBC Indian sports woman of the year

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »