Press "Enter" to skip to content

சீனாவின் புதிய சிவில் சட்டம்: வீட்டு வேலை செய்த மனைவிக்கு இழப்பீடு கொடுக்க உத்தரவிட்ட நீதிமன்றம்

சீனாவில் வரலாற்று முக்கியத்துவம் பெரும் வகையில், பெய்ஜிங்கில் உள்ள நீதிமன்றம் ஒன்று திருமணம் செய்து கொண்டு வாழ்ந்த நாட்களில் மனைவி செய்த வீட்டுப் பணிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்குமாறு கணவனுக்கு உத்தரவிட்டுள்ளது.

ஐந்து ஆண்டு திருமண காலத்தின் போது செய்த பணிகளுக்கு, அந்தப் பெண் 50,000 சீன யுவானை இழப்பீட்டுத் தொகையாகப் பெறவிருக்கிறார்.

பெண்கள் வீட்டில் செய்யும் பணிகளுக்கான மதிப்பு தொடர்பாக, இந்த வழக்கு சமூக வலைதளங்களில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. சிலர் இந்த இழப்பீட்டுத் தொகை மிகவும் குறைவு எனக் கூறுகிறார்கள்.

சீனாவில் புதிய சிவில் சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட பின் இப்படி ஒரு தீர்ப்பு வந்திருக்கிறது.

சென் என்கிற குடும்பப் பெயரைக் கொண்ட ஆண், வாங் என்கிற குடும்பப் பெயரைக் கொண்ட பெண்ணைக் கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். கடந்த ஆண்டு சென், தன் மனைவி வாங்கிடமிருந்து விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் பதிவு செய்தார் என நீதிமன்ற விவரங்கள் கூறுகின்றன.

முதலில் விவகாரத்துக்கு தயங்கிய வாங், பின் நிதி இழப்பீடைக் கேட்டார். சென் வீட்டு வேலைகளிலோ அல்லது குழந்தையை கவனித்துக் கொள்ளும் பணிகளிலோ பங்கெடுக்கவில்லை என வாதிட்டார் வாங்.

ஃபாங்சாங் மாவட்ட நீதிமன்றம், வாங்குக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கியது. சென் மாதாமாதம் 2,000 சீன யுவானை ஜீவனாம்ச ஆதரவுத் தொகையாக வழங்க வேண்டும் எனவும், அது போக 50,000 சீன யுவனை வாங் செய்த வீட்டுப் பணிகளுக்கு இழப்பீட்டுத் தொகையாகக் கொடுக்க வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கியது.

சீனாவின் புதிய சிவில் சட்டம்

இந்தத் தீர்ப்பு, இந்த ஆண்டு முதல் சீனாவில் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கும் புதிய சிவில் சட்டங்களின் படி வழங்கப்பட்டிருக்கிறது.

அப்புதிய சட்டத்தின் படி, விவாகரத்தின் போது கணவன் அல்லது மனைவி, குழந்தை வளர்ப்பு, வயதானவர்களை கவனித்துக் கொள்வது, தங்களின் மனைவி அல்லது கணவனுக்கு அவருடைய பணிகளில் உதவுவது போன்ற பணிகளை கூடுதலாகச் செய்ததற்கு இழப்பீடு கேட்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

இதற்கு முன், Prenuptial Agreement என்றழைக்கப்படும் திருமணத்திற்கு முன் செய்து கொள்ளும் திருமண ஒப்பந்தம் செய்து கொண்ட கணவன் அல்லது மனைவி மட்டுமே விவாகரத்தின் போது இப்படிப்பட்ட இழப்பீடுகளைப் பெற முடிந்தது. சீனாவில் இப்படிப்பட்ட ஒப்பந்தங்களை எல்லோரும் மேற்கொள்வதில்லை.

இந்த தீர்ப்பு தொடர்பாக சீனாவின் வைபோ சமூக வலைதளத்தில் காரசார விவாதங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன.

ஐந்து ஆண்டுக்கு 50,000 யுவான் என்பது மிகவும் குறைவானது என சில சமூக வலைதள பயனர்கள் குறிப்பிடுகிறார்கள். “எனக்கு வார்த்தைகளே வரவில்லை., ஒரு முழு நேர மனைவியின் பணிகள் குறைத்து மதிப்பிடப்பட்டிருக்கிறது. பெய்ஜிங்கில் ஒரு உதவியாளரை ஓராண்டுக்கு வேலைக்கு எடுத்தாலே 50,000 யுவான்களுக்கு மேல் கொடுக்க வேண்டி இருக்கும்,” என ஒருவர் தன் கருத்தைப் பதிவு செய்திருந்தார்.

ஆண்கள் அதிகமான வீட்டு வேலைகளை எடுத்துச் செய்ய வேண்டும் என மற்றவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

சிலரோ, பெண்கள் திருமணம் செய்து கொண்ட பின்பும் தங்களின் தொழில்ரீதியிலான வாழ்கையைத் தொடர வேண்டும் எனக் கூறினர். “பெண்களே, எப்போதும் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். திருமணத்துக்குப் பிறகு வேலைக்குச் செல்வதை விட்டுவிடாதீர்கள். உங்களுக்கென தனி வாழ்கைப் பாதையை வைத்துக் கொள்ளுங்கள்,” என ஒரு சமூக வலைதளப் பயனர் கூறினார்.

சீன பெண்கள் நாள் ஒன்றுக்கு கிட்டத்தட்ட 4 மணி நேரங்களை பணம் கிடைக்காத வேலைகளைச் செய்கிறார்கள். இது ஆண்களை விட 2.5 மடங்கு அதிகம் என பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு (ஒ.இ.சி.டி) கூறுகிறது. இது ஒ.இ.சி.டி நாடுகளின் சராசரியை விட அதிகம்.

BBC Indian Sports Woman of the Year

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »