Press "Enter" to skip to content

சீனா 10 கோடி பேரை வறுமையில் இருந்து மீட்டது எப்படி?

  • ஜேக் குட்மேன்
  • பிபிசி ரியாலிட்டி செக்

சீன அதிபர் ஷி ஜின்பிங், 2012ஆம் ஆண்டு தான் பதவியேற்றுக் கொண்டபோது 100 மில்லியன் (10 கோடி) மக்களை வறுமையின் பிடியிலிருந்து மீட்க வேண்டும் என்று தான் கொண்ட இலக்கை அடைந்துவிட்டதாக சில தினங்களுக்கு முன் தெரிவித்தார்.

உண்மையில் சீனா தனது இலக்கை அடைந்துவிட்டதா?

இதை அறிந்து கொள்ள சீனாவின் தரவுகளை உலக வங்கியின் சர்வதேச வறுமை புள்ளி விவரங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தோம்.

சீனாவின் வறுமை புள்ளி விவரம்

கிராமப்புற பகுதிகளில் நாள் ஒன்றுக்கு 2.30 (இந்திய மதிப்பில் சுமார் 170 ரூபாய்) அமெரிக்க டாலர்களுக்கு கீழ் வருவாய் ஈட்டுவது வறுமை நிலை எனச் சீனா வரையறுத்துள்ளது. இது 2010ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்டது. வருவாய் பெரிதாகப் பார்க்கப்பட்டாலும், வாழும் சூழல், சுகாதாரம், மற்றும் கல்வி ஆகியவையும் கருத்தி கொள்ளப்படுகின்றன.

சீன மாகாணங்கள் தங்களின் இலக்கை அடைய கடுமையாக முயன்று கொண்டிருக்கின்றன. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சீனாவின் ஜியாங்சு மாகாணம் தனது 8 கோடி மக்களில் 17 பேர் மட்டுமே வறுமையில் வாழ்வதாக தெரிவித்தது.

நாள் ஒன்றுக்கு 1.90 டாலர்களை (சுமார் 150 இந்திய ரூபாய்) வறுமை கோட்டு அளவு கோலாக உலக வங்கி நிர்ணயித்துள்ளது. ஆனால் சீனா இதைக்காட்டிலும் சற்று அதிகமான இலக்கை நிர்ணயித்துள்ளது.

உலக வங்கியின் தரவு

உலக வங்கியின் தரவு

உலக வங்கியின் இந்த இலக்கை கொண்டு அனைத்து நாடுகளின் வறுமை நிலை குறித்தும் கண்டறியலாம்.

1990ஆம் ஆண்டு சீனாவில் சர்வதேச வறுமை கோட்டுக்கு கீழ் 75 கோடி பேர் இருந்தனர். இது அப்போதைய மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்காகும்.

2012ஆம் ஆண்டு அது 9 கோடியாக குறைந்தது. சமீபமாக அதாவது 2016ஆம் ஆண்டு அது 7.2 மில்லியனாக (72 லட்சம்) குறைந்துள்ளது என்கிறது உலக வங்கியின் தரவுகள். இது மக்கள் தொகையில் 0.5 சதவீதமாகும்.

எனவே 2016ஆம் ஆண்டுவரை தனது இலக்கிற்கான பாதையில் சீனா சரியாக சென்று கொண்டிருந்தது என்று சொல்லலாம்.

உலக வங்கியின் சமீபத்திய தரவுகள் இல்லை. இருப்பினும் சீனாவின் அறிவிப்பு இந்த தரவுகளுடன் ஒத்துப் போவதாகவே உள்ளது. அந்த பிராந்தியத்தில் சீனாவை தவிர வியட்நாமும் அதே கால அவகாசத்தில் கடும் வறுமையை குறைத்துள்ளது.

சீனாவுக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய நாடாக இருக்கும் இந்தியாவில் 2011ஆம் ஆண்டுபடி மக்கள் தொகையில் 22 சதவீத பேர் சர்வதேச வறுமை கோட்டுக்கு கீழ் வாழ்ந்தனர்.

விவசாயி

சீனாவின் அதீத வளர்ச்சி

சீனாவின் வறுமை ஒழிப்பு என்பது அதன் நிலையான பொருளாதார வளர்ச்சியுடன் இணைந்ததாக உள்ளது. ஏழ்மை நிலையில் இருக்கும் கிராமப்புற பகுதிகளில் கவனம் செலுத்தப்பட்டது.

தொலைதூர கிராமங்களில் உள்ள மக்களை அரசு அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மாற்றியது. இந்த அடுக்குமாடி குடியிருப்புகள் சில நேரம் பெரு மற்றும் சிறு நகரங்களில் கட்டமைக்கப்பட்டன. சில சமயம் பழைய கிராமங்களின் அருகில் புதிய கிராமங்கள் கட்டமைக்கப்பட்டன.

கிராமப்புற மக்களுக்காக கட்டப்பட்ட புதிய வீடுகள்

ஆனால் தொழிலுக்காக இடம் மாறுவதா அல்லது வீட்டையே மாற்றுவதா என்பதை தேர்வு செய்யும் சுதந்திரம் பெரிதாக மக்களுக்கு கொடுக்கப்படவில்லை என்ற விமர்சனங்களும் எழுந்தன.

சிலர் நாட்டின் கம்யூனிச கொள்கைகளால்தான் கிராமப்புற பகுதிகளில் வறுமை அதிகரித்ததாகத் தெரிவிக்கின்றனர்.

“கடந்த 40 வருடங்களில் ஏதோ ஒரு சிறப்பான முயற்சி நடந்துள்ளது என்பதில் எந்த ஐயமும் இல்லை,” என்கிறார் பொருளாதார நிபுணர் டேவிட் ரென்னி.

இருப்பினும் கடும் வறுமையிலிருந்து மக்களை வெளிக்கொண்டுவந்ததன் பின்னால் அரசாங்கம் மட்டும் இருக்கவில்லை. சீன மக்களின் கடுமையான உழைப்பும் அதற்கு காரணம்.

“கடுமையாக உழைத்து சீன மக்கள் தங்களை தாங்களே வறுமையிலிருந்து வெளியே கொண்டுவந்தனர். மாவோவால் உருவாக்கப்பட்ட சில முதலாளித்துவத்திற்கு ஆதரவான கொள்கைகள் கைவிடப்பட்டன,” என்கிறார் டேவிட் ரென்னி.

சீனக் குடியரசை 1949ஆம் ஆண்டு நிறுவிய மாவோ, 1950களில் நாட்டின் விவசாய பொருளாதாரத்தை தொழில்மயமாக்க முயற்சிகளை மேற்கொண்டார். 1958ஆம் ஆண்டு மாவோவால் கொண்டுவரப்பட்ட பெரும் முற்போக்கு பாய்ச்சல் திட்டம், (Great Leap Forward) விவசாயிகள் கூட்டாக வாழ வற்புறுத்தியதால் தொலைதூரப் பகுதிகளில் பஞ்சம் ஏற்பட்டது.

கடும் வறுமையிலிருந்து வெளியே வந்த சீனா மறுபக்கம் மக்களின் வருமானத்தை தொடர்ந்து அதிகரிக்க வேண்டிய சூழலையும் கொண்டுள்ளது.

தரவு

எடுத்துக்காட்டாக, உயர் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளுக்கு உலக வங்கி வறுமை கோட்டை சற்று அதிகமாக வைத்துள்ளது. நாளுக்கு 5.50 அமெரிக்க டாலர் வருவாய் ஈட்ட வேண்டும்.

சீனா தற்போது உயர் நடுத்தர வருவாய் நாடு என்கிறது உலக வங்கி. இந்த அளவின்படி பார்த்தால் சீன மக்கள் தொகையின் கால்வாசி மக்கள் வறுமையில் வாழ்கின்றனர். இது பிரேசிலை காட்டிலும் சற்று அதிகம்.

அதுபோல சீனாவில் வருமானத்தில் ஏற்றத்தாழ்வுகளும் குறைவாகவுள்ளன. கடந்த ஆண்டு சீனாவின் பிரதமர் லி குவாங், சீனாவில் 60 கோடி மக்களின் மாத வருமான 1000 யுவானிற்கு கீழ் உள்ளது. இது ஒரு நகரத்தில் வீட்டு வாடகைக்குக்கூட போதாது என்று தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், கடந்த சில ஆண்டுகளாக கோடிக் கணக்கானவர்களை வறுமையிலிருந்து மீட்க சீன பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என்பது தெரிகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »