Press "Enter" to skip to content

MH-370: ’என்று தரையிறங்கும் காணாமல் போன விமானம்?’ – மீளாத் துயரில் காத்திருக்கும் உறவுகள்

  • சதீஷ் பார்த்திபன்
  • பிபிசி தமிழுக்காக, மலேசியாவிலிருந்து

“என் மகன் சென்ற விமானம் காணாமல் போனதாகக் கேள்விப்பட்டதும் தலை மேல் இடி விழுந்தாற்போல் இருந்தது. உலகமே இருண்டு போனது. ஐயோ கடவுளே! என் மகனுக்கு ஒன்றும் ஆகிவிடக்கூடாது என்று வேண்டாத தெய்வமில்லை. ஆனால், கடவுள் எங்களைக் கைவிட்டு விட்டதாகவே நினைக்கத் தோன்றுகிறது,” என்று கண்ணீர் மல்க பேசுகிறார் சுப்பிரமணியம்.

இவர் மட்டுமல்ல, 7 ஆண்டுகளுக்கு முன்பு மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் எம்.எச். 370 விமானத்தில் பயணம் மேற்கொண்ட அனைத்துப் பயணிகளின் குடும்பத்தாரும் இன்றளவும் இப்படித்தான் கண்ணீருடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

தமது சோக வாழ்க்கை குறித்து பிபிசி தமிழிடம் விரிவாகப் பேசிய அவர், இதுபோன்ற துயரச் சம்பவம் யார் வாழ்க்கையிலும் நிகழக்கூடாது என்றார்.

2014ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் தேதி மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பீஜிங் நோக்கி 239 பயணிகளுடன் புறப்பட்டது எம்.எச். 370 விமானம். (227 பயணிகள், 12 விமான ஊழியர்கள்).

ஆனால் அடுத்த ஒன்றரை மணி நேரத்தில் அந்த விமானம் வானில் மாயமாக மறைந்தது. விமானம் என்னவானது என்பதும், அதில் பயணம் செய்த பயணிகளின் நிலை என்னவானது என்பதும் இதுவரை விடை தெரியாத புதிர்களாகவே உள்ளன.

மாயமான அந்த விமானத்தில் மலேசியாவின் பூச்சோங் பகுதியைச் சேர்ந்த 33 வயதான புஷ்பநாதனும் ஒருவர். தனியார் நிறுவனத்தில் நல்லதொரு பொறுப்பில் பணியாற்றி வந்த இவர், பணி நிமித்தமாக அடிக்கடி வெளிநாடு சென்று வரக்கூடியவர். பீஜிங் பயணத்துக்கு முன்பு ஏறத்தாழ 23 நாடுகளுக்கு தன் மகன் அலுவலகப் பணி நிமித்தமாக சென்று திரும்பியதாக சொல்கிறார் சுப்ரமணியன்.

விமானத்தின் இருப்பிடம் குறித்து ஏதும் தெரியவில்லை

“ஒவ்வொரு பயணத்துக்கு முன்பும் கோலாலம்பூரில் இருந்து வந்து என்னையும் மனைவியையும் பார்த்து விவரம் சொல்வதற்காக வந்து போவார். அதேபோல் பயணம் முடிந்து நாடு திரும்பிய பிறகு வார இறுதி நாட்களில் மீண்டும் வந்து எங்களோடு தங்கிச் செல்வார். இப்படித்தான் பீஜிங் பயணத்துக்கு முன்பும் எங்களைச் சந்தித்துப் பேசிய அவர், வழக்கம்போல் திரும்பி வருவார் என்றே நினைத்திருந்தோம். ஆனால், விதி வேறு கணக்கு போட்டு வைத்திருந்தது எங்களுக்குத் தெரியவில்லை,”

புஷ்பநாதனின் தந்தை

“சீனாவுக்குச் சென்றபிறகு தொடர்பு கொண்டு பேசுவார் என்று நினைத்திருந்த வேளையில் திடீரென ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. உங்கள் மகன் சென்ற விமானம் மாயமானது என்ற தகவல் தெரிவிக்கப்பட்டது. பதறி அடித்துக்கொண்டு விமான நிலையத்துக்குச் சென்றோம். அங்கு சில தகவல்களைத் தெரிவித்தனர். அதன்பிறகு பல விதமான தகவல்கள், கணிப்புகள், ஆரூடங்கள் என்று நாட்கள் கடந்தனவே தவிர மாயமான விமானத்துக்கு என்னவானது என்பது இன்றுவரை தெரியவில்லை. நடந்தது விதியா, சதியா என்பது புரியவில்லை. இன்றளவும் மகனின் நினைவோடுதான் நானும் என் மனைவியும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்,” என்று பிபிசி தமிழிடம் மனம்திறந்து பேசினார் தற்போது 67 வயதான சுப்பிரமணியன்.

“மலேசிய அரசு உதவித்தொகை அளித்து வருகிறது”

சொந்த ஊரான பந்திங்கில் பெற்றோர் வசிக்க தன் மனைவி குழந்தைகளுடன் கோலாலம்பூரில் தங்கியிருந்துள்ளார் புஷ்பநாதன். மிக விரைவில் கோலாலம்பூரில் புதிய வீடு கட்டி குடியேறப் போவதாகவும் அப்போது பெற்றோரும் தம்முடன் வந்து தங்கவேண்டும் என்றும் பாசத்துடன் உத்தரவு போட்டிருந்ததாகவும் கண்ணீர் மல்க நினைவு கூர்கிறார் சுப்பிரமணியன்.

“என் மகனுக்கு எங்கள் மீது அதிக பாசம் உண்டு. ஒவ்வொரு மாதமும் எங்களுக்குத் தேவையான அனைத்தையும் பார்த்துப் பார்த்து செய்வார். என் மனைவிக்கு, எனக்கு, வீட்டுச் செலவுக்கு என தனித்தனியே பணம் கொடுப்பது அவரது வழக்கம். பெற்றோருக்குத் தன் கடமைகளைச் சரிவரச் செய்த நிம்மதி அவருக்கு நிச்சயம் இருக்கும்”

“விமானம் மாயமானதை அடுத்து மலேசிய அரசாங்கம் முதற்கட்டமாக ஒரு தொகையை நிவாரணமாக அளித்தது. பின்னர் சமூல நலத்துறை சார்பில் மாதந்தோறும் ஓர் உதவித்தொகை கிடைத்து வருகிறது. அதைக்கொண்டு காலத்தைக் கடத்தி வருகிறோம். பிள்ளை காணாமல் போனதால் என் மனைவி மனதளவில் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளார். மீண்டும் தன் மகனின் முகத்தைக் காணவேண்டும் எனும் பரிதவிப்புடன், நம்பிக்கையுடன் காத்திருக்கிறார். என் பேரக் குழந்தைகள் தந்தையின் அரவணைப்பு இன்றியும் என் மகனைப் பார்க்காமலும் வளர்வதை நினைத்து மனம் கலங்குகிறது,” என்கிறார் சுப்பிரமணியன்.

அம்ரிதம்

தாம் 6ஆம் வகுப்பு மட்டுமே படித்ததால் தனது ஒரே மகனையும் மகளையும் பட்டதாரிகளாக்க வேண்டும் என சுப்பிரமணியன் தம்பதியர் விரும்பியுள்ளனர். பெற்றோரின் இந்த விருப்பத்துக்கு ஏற்ப இரு குழந்தைகளும் நன்றாகப் படித்து பட்டப்படிப்பை முடித்துள்ளனர். அதை நினைத்துப் பெருமிதம் கொண்டதாக சொல்கிறார் புஷ்பநாதனின் தாயார் அமிர்தம்.

“சிறு வயது முதலே என் மகன் அன்பாக இருப்பார். எதற்கும் பதற்றமடையாமல் நிதானமாக இருப்பார். நன்றாகப் படிக்கவேண்டும், பட்டம் பெற்று அப்பா அம்மாவுக்குப் பெருமை தேடித்தர வேண்டும், கொஞ்சம் கூட கவனம் சிதறக்கூடாது என்று அடிக்கடி நினைவூட்டுவேன். அப்போதெல்லாம், ‘கவலப்படாதீங்க அம்மா, நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று சொல்வார். அடிக்கடி என்னை பாசத்துடன் அரவணைத்து, ‘எதுகுறித்தும் யோசிக்காதீங்க. எல்லாம் நல்லவிதமாக நடக்கும்’ என்று சொல்வது அவர் வழக்கம்.”

“ஞாயிற்றுக்கிழமைகளிலும் வெளிநாடு சென்று திரும்பிய பிறகும் வீட்டில் அவர் சமையல்தான். அவரே மார்க்கெட் சென்று காய்கறிகள் உள்ளிட்ட அனைத்தையும் வாங்கி வந்து பக்குவமாக சமைத்து எங்களுக்குப் பரிமாறுவார். அப்படிப்பட்ட அன்பான பிள்ளையை இழந்துவிட்டோமே என்று நினைக்கும்போது மனசு தாங்கவில்லை. எந்த இரவிலும் நான் மகனை நினைத்துக் கண் கலங்காமல் உறங்கியதில்லை. என்கிறார் திருமதி சுப்பிரமணியன்.

அவரை ஆசுவாசப்படுத்திவிட்டு தொடர்கிறார் சுப்பிரமணியன்.

மகன் தங்களுடன் இல்லாதபோதும்கூட தனது மகனால்தான் மாதந்தோறும் அரசு உதவித்தொகை கிடைக்கிறது என்கிறார்

‘மலேசிய அரசு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்’

“இவ்வளவு இளம் வயதில் அவர் எங்களை விட்டுச் செல்வார் என நினைத்துக் கூடப் பார்த்ததில்லை. அவர் எங்கேனும் வாழ்ந்து கொண்டிருப்பார் என்று நம்பத் தோன்றுகிறது. கணிதமேதை ராமானுஜம் 33 வயதில் காலமானதாகப் படித்திருக்கிறேன். மக்களுக்காகப் பாடல்கள் எழுதிய பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் இறந்தபோது அவருக்கு 29 வயது என அறிந்திருக்கிறேன். ஒருவேளை என் மகனும் அவர்களைப் போன்று சிலவற்றைச் சாதித்த திருப்தியுடன் மாயமாகி விட்டதாகக் கருதுகிறேன். அப்படி நினைக்கும்போது சற்று ஆறுதலாக இருக்கிறது. என்னைப் போன்றுதான் மற்ற பயணிகளின் குடும்பத்தாரும் மீளாத் துயரத்தில் இருப்பார்கள்.”

புஷ்பநாதன்

“எங்களது இந்தத் துயரத்துக்கு வடிகாலாக ஆண்டுதோறும் பிரிந்து சென்ற உறவை நினைத்து கண்கலங்கி எங்களைத் தேற்றிக் கொள்வதற்காக மலேசிய அரசாங்கம் எம்.எச்.370 பயணிகளுக்காக நினைவிடம் ஒன்றை அமைக்க வேண்டும் என்பதே எனது கோரிக்கை,” என்கிறார் சுப்பிரமணியன்.

தினந்தோறும் தன் மனைவியும் தாமும் மகன் புஷ்பநாதனை நினைத்து கண்ணீர் விடுவதாகக் குறிப்பிட்ட அவர், விமானத்தைப் பார்க்கும் போதெல்லாம் மகனின் நினைவு வந்து போவதகாத் தெரிவித்தார்.

“தினமும் வெளியே சென்று திரும்பும்போது ஏராளமான வாகனங்களையும் அவற்றின் இரைச்சலையும் கடந்து செல்கிறேன். ஆனால், ஏதேனும் விமானம் வானில் பறந்தால் வாகன இரைச்சலையும் மீறி அந்த விமானத்தின் சத்தம் மட்டுமே என் செவிகளை ஆக்கிரமித்திருக்கும். அந்த விமானம் ஏன் பீஜிங் நகரை நோக்கி செல்லும் விமானமாக இருக்கக்கூடாது என்று நினைப்பேன்.”

“விமானம் பத்திரமாகத் தரையிறங்கும், என் மகன் பத்திரமாக வீடு திரும்புவார், எங்களுடன் பேசுவார், வழக்கம்போல் அன்புடன் சமைத்து அவர் பரிமாறும் உணவைச் சாப்பிட வேண்டும் என்று கனவிலும் நினைவிலும் பல முறை நானும் என் மனைவியும் நினைத்துப் பார்த்திருக்கிறோம்.

அவருடன் பேசுவதற்கு நிறைய இருக்கின்றன,” என்று கண்களிலும் மனதிலும் எதிர்பார்ப்புகள் மின்ன சொல்கிறார் சுப்பிரமணியன்.

2014, மார்ச் 8ஆம் தேதி என்ன நடந்தது?

சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான MH 370 விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென மாயமானது.

2014ஆம் ஆண்டு மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து சீனாவின் பீஜிங் நகருக்கு புறப்பட்ட அந்த போயிங் 777 ரக விமானத்தில் பயணிகள், விமானக் குழுவினர் என மொத்தம் 239 பேர் பயணித்தனர்.

திடீரென மாயமான MH 370 விமானம் பிறகு ரேடார் கருவிகளில் தென்படவே இல்லை. இதையடுத்து பல மாதங்கள் தேடுதல் வேட்டை நடந்தது. ஆனால் எந்தப் பலனும் இல்லை. வேறு வழியின்றி அந்த விமானம் விபத்துக்குள்ளாகி இருக்கலாம், கடலில் விழுந்து நொறுங்கி இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தது மலேசிய அரசு.

அனைத்துலக விமானப் போக்குவரத்து துறையில் இதுவரை காரணம் கண்டறியப்படாத மர்மம் நிறைந்த ஒரு நிகழ்வாகவே இந்த விபத்து கருதப்படுகிறது.

கோரிக்கை

மலேசிய விமானம் மர்ம நபர்களால் கடத்தப்பட்டு இருக்கலாம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கடலில் விழுந்து நொறுங்கி இருக்கலாம் என்று பலவிதமான ஆருடங்கள் தொடக்கத்தில் எழுந்தன.

விமானம் இந்தியாவுக்கு அருகே உள்ள ஒரு தீவுப் பகுதியில் தரையிறக்கப்பட்டு, பயணிகள் அனைவரும் பணையக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்பட்டது.

அடுத்து, ‘எம்எச்-370’ தலைமை விமானியே அந்த விமானத்தைக் கடத்தியிருக்கலாம் என்றும், அவர் தற்கொலை செய்து கொள்ளும் முடிவைச் செயல்படுத்த விமானத்தை வேண்டும் என்றே கடலில் விழச் செய்திருக்கலாம் என்றும் பரபரப்பு எழுந்தது. ஆனால் இன்று வரை எந்தக் கூற்றும் நிரூபிக்கப்படவில்லை.

விமானத்தை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் தொடரும் என்கிறது மலேசிய அரசு

இதற்கிடையே மாயமான மலேசிய விமானத்தைத் தேடுவதற்கான பயனுள்ள முயற்சிகளில் மலேசியா தொடர்ந்து ஈடுபடும் என போக்குவரத்து அமைச்சர் மருத்துவர் வீ.கா. சியோங் தெரிவித்துள்ளார்.

மலேசியாவுடன் சீனாவும் ஆஸ்திரேலியாவும் இணைந்து விமானத்தைத் தேடும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டதாக அவர் நினைவு கூர்ந்துள்ளார்.

“அந்த விமானத்துக்கு என்னவானது என்பதை அறியவேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். விமானத்தைத் தேடும் முயற்சியில் மூன்று நாடுகள் தீவிரமாக ஈடுபட்டன. விமானத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். அதன்மூலம் பல்வேறு கேள்விகளுக்கான விடைகளைக் கண்டறிய வேண்டும் என்பதே எங்களுடைய குறிக்கோளாக இருந்தது. எனினும் 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை விமானத்தின் இருப்பிடம் குறித்து நம்புவதற்குரிய ஆதாரங்கள் ஏதும் கிடைக்காததால் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் நிறுத்தப்பட்டன,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »