Press "Enter" to skip to content

மேகன் மார்கல் மற்றும் ஹாரி நேர்காணல்: வெளிவந்த 12 முக்கிய தகவல்கள்

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சஸ்ஸெக்ஸின் கோமகன் மற்றும் சீமாட்டியின் ஓப்ரா வின்ஃப்ரே உடனான நேர்காணல், அமெரிக்காவில் ஒளிபரப்பானது. அதில் அரச குடும்பத்தில் தங்கள் வாழ்க்கை எப்படி இருந்தது என்பதை அவர்கள் பகிர்ந்து கொண்டார்கள்.

அரச குடும்பத்துடன் அத்தம்பதியினருக்கு இருந்த உறவுமுறை, இனபாகுபாடு மற்றும் அவர்களின் மன நலம் பாதிக்கப்பட்டது எவ்வாறு பாதிக்கப்பட்டது என்பது குறித்துப் பேசினர்.

இதற்கு முன் ஹாரி இல்லாமல் ஓப்ரா வின்ஃப்ரே உடன் பல நேர்காணல்களில் பேசி இருக்கிறார் மேகன்.

இந்த நேர்காணல் ஐடிவி மற்றும் ஐடிவி ஹப்பில், திங்கட்கிழமை 21.00 ஜி.எம்.டி நேரத்துக்கு ஒளிபரப்பாக இருக்கிறது.

1. `மேகனின் குழந்தை எவ்வளவு கருப்பாக இருக்கும் என விவாதம்`

ஹாரி மற்றும் மேகனுக்குப் பிறக்கவிருக்கும் குழந்தை எவ்வளவு கருப்பாக இருக்கும் என அரச குடும்பத்துக்குள் பல விவாதங்கள் நடந்ததாக இத்தம்பதியினர் கூறியுள்ளனர். இந்த நேர்காணலில் சுமத்தப்பட்டுள்ள மிகப் பெரிய குற்றச்சாட்டு இது என்பது குறிப்பிடத்தக்கது.

“நான் கர்ப்பமாக இருந்த காலத்தில் எனக்குப் பிறக்கவிருக்கும் குழந்தையின் தோலின் நிறம் எத்தனை கருமையாக இருக்கும் என்கிற கவலையும், விவாதங்களும் நடந்தன,” என மேகன் கூறினார்.

ஹாரி உடன் இந்த பேச்சுவார்த்தைகள் நடந்தது, அவர் தான் என்னிடம் இதைக் குறித்துக் விவரித்தார் என மேகன் கூறினார். அரச குடும்பத்தில் யார் இப்படிக் கூறியது என்பதை இருவருமே கூற மறுத்துவிட்டனர்.

“அந்த பேச்சுவார்த்தைகளை எப்போதும் பகிர மாட்டேன். அந்த நேரத்தில் அது மிகவும் சங்கடமாக இருந்தது. நான் கொஞ்சம் அதிர்ந்துவிட்டேன்” என்றார் ஹாரி.

சில வருடங்களுக்கு முன் மேகன் குறித்து வெளியான செய்திகளுக்கு, தன் குடும்பம் எப்போது எதுவும் பேசவில்லை என்பது தனக்கு வேதனை அளித்தது எனவும் ஹாரி கூறினார்.

மேகன் மற்றும் ஹாரி

2. மேகனை அழ வைத்தார் கேட்

`ஃப்ளவர் கேர்ள்ஸ்` ஆடை தொடர்பான விவகாரத்தில் கேம்பிரிட்ஜின் சீமாட்டி `கேட்`டை, மேகன் மார்கல் அழ வைத்தார் என சில ஆண்டுகளுக்கு முன் செய்தித்தாள்களில் ஒரு செய்தி வெளியானது.

ஆனால் இதற்கு மாறாக நடந்தது தான் உண்மை என, மேகன் ஓப்ராவிடம் கூறினார்.

கேட் மற்றும் மேகன்

“திருமணத்துக்கு சில தினங்களுக்கு முன், `ஃப்ளவர் கேர்ள்ஸ்` குறித்து கேட் வருத்தத்தில் இருந்தார். அது என்னை அழ வைத்தது” என மேகன் கூறினார். அதன் பிறகு கேட் தன்னிடம் மன்னிப்பு கேட்டதாகவும், மலர்களைக் கொண்டு வந்ததாகவும், நடந்தவைகளை சரிசெய்ய ஒரு குறிப்பை எழுதியதாகவும் கூறினார் மேகன்.

“கேட்டை இழிவுபடுத்தும் விதத்தில் இருக்கும் அந்த குறிப்பு விவரங்களைப் நான் பகிரப் போவதில்லை” என மேகன் கூறினார். கேட் ஒரு நல்ல மனிதர், அவர் வெளியான போலிச் செய்திகளை திருத்த விரும்பி இருக்கலாம் என்றார் மேகன்.

3.`தற்கொலை முனையில் இருந்தேன், உதவி மறுக்கப்பட்டது`

தன் சுதந்திரம் பறிபோனது குறித்தும், அரசு குடும்பத்தில் இணைந்த பின் தான் எப்படி தனிமையை உணர்ந்ததாகவும் கூறினார் மேகன்.

“நான் அரச குடும்பத்தில் இணைந்த பின், இங்கு வரும் வரை, நான் என் பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், என் சாவிகளைப் பார்த்தது அது தான் கடைசி முறை. அவை அனைத்தும் எனக்கு மறுக்கப்பட்டது” எனக் கூறினார்.

தன் மன நலம் மிக மோசமாக பாதிக்கப்பட்டதாகவும், அதற்கு மேல் தான் வாழ விரும்பவில்லை எனவும் கூறினார் மேகன்.

“நான் அந்த அமைப்பின் மிகவும் மூத்தவர் ஒருவரிடம் சென்று எனக்கு உதவி தேவை என்றேன், இதற்கு முன் நான் இவ்வாறு உணர்ந்தது இல்லை என்றும் வெளியில் செல்ல வேண்டும் என்றும் கோரினேன். ஆனால் நான் அவ்வாறு செல்ல முடியாது என்றும், அது அமைப்புக்கு நல்லதல்ல என்றும் கூறப்பட்டது,” என்றார் மேகன்.

4. டயானாவின் நண்பர்களில் ஒருவரோடு மேகன் பேசினார்

அரச குடும்பத்தில் வாழும் அனுபவம் குறித்த ஒற்றுமைகள் காரணமாக, இந்த நேர்காணலின் பல இடங்களில் சீமாட்டி டயானாவின் பெயர் வந்தது.

தான் போராடிக் கொண்டிருந்த போது “நான் யாரிடம் உதவி கேட்பது என்று கூட எனக்குத் தெரியவில்லை” எனக் கூறினார் மேகன். “நான் என் பிரச்னை குறித்துப் பேசியவர்களில் நண்பராகவும், நம்பிக்கைக்குரியவராகவும் இருந்தவர், என் கணவரின் தாயின் உற்ற நண்பர்களில் ஒருவர்தான்” என்றார் மேகன்.

“காரணம் அரச குடும்பத்துக்குள் இருப்பது எப்படி இருக்கும் என்பதை வேறு யாரால் புரிந்து கொள்ள முடியும்?”

5. `சார்ல்ஸ் தன்னை கைவிட்டதாக` ஹாரி நினைக்கிறார்

ஹாரி

தன் குடும்பத்தினர் குறிப்பாக அவரது தந்தை வேல்ஸின் இளவரசர் மற்றும் கேம்பிரிட்ஜின் கோமகனான அவரது சகோதரருடன் உறவுமுறை எப்படி இருந்தது என ஓப்ரா, ஹாரியிடம் கேட்டார்.

அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகிய பிறகு, ஒரு கட்டத்தில் தன் தந்தை தன் அழைப்புகளை எடுப்பதை நிறுத்திவிட்டார் என ஹாரி கூறினார்.

“அவரும் நான் கடந்து கொண்டிருப்பதைப் போல ஏதோ ஒன்றைக் கடந்து கொண்டிருந்தார் என்பதால் நான் கைவிடப்பட்டதாக நினைத்தேன், அவருக்கு வலி என்றால் என்னவென்று தெரியும், அவருக்கு அவரது பேரன் அர்ச்சியையும் தெரியும்”

“இருப்பினும் நான் அவரை எப்போதும் நேசிக்கிறேன். ஆனால் அதிகம் வேதனை அடைந்துவிட்டேன். இந்த உறவுமுறையை சரி செய்ய தொடர்ந்து முயற்சிப்பதற்கு முக்கியத்துவம் கொடுப்பேன்” எனக் கூறினார்.

சகோதரர் வில்லியமைக் குறித்துக் கூறிய போது தான் அவரை நேசிப்பதாகவும், ஒன்றாகவே பிரச்னைகளை எதிர்கொண்டதாகவும் கூறினார். ஆனால் இருவரும் இருவேறு பாதையில் இருந்தோம் என்றார்.

6. இருப்பினும் அரசியுடனான தம்பதியின் உறவுமுறை நன்றாக இருந்தது

ராணி

தனக்கும் தன் பாட்டிக்கும் இடையிலான உறவுமுறை நன்றாக இருந்தததாகக் கூறினார் ஹாரி. தன் பாட்டியுடன் கடந்த ஆண்டு நிறைய பேசியதாகவும், முந்தைய பல ஆண்டுகளில் பேசியதை விட இது அதிகம் எனவும் கூறினார். இதில் அர்ச்சி உடனான காணொளி அழைப்பும் அடக்கம்.

“அவர் என் தலைவர் இல்லையா? அவர் எப்போதும் என் தலைவராக இருப்பார்”

மேகனும் அரசியைப் பாராட்டிப் பேசினார். முதல் நிச்சயதார்த்தத்தின்போது அரசி தனக்கு மிகவும் அழகான நகையைப் பரிசளித்ததாகவும், இருவரும் சேர்ந்து பயணிக்கும் போது தங்களை கதகதப்பாக வைத்துக் கொள்ள ஒரு கம்பளியை பரிசளித்ததாகவும் கூறினார்.

7. பொருளாதார ரீதியாக ஹாரி தனித்துவிடப்பட்டார்

2020-ம் ஆண்டின் முதல் காலாண்டில், தன் குடும்பம் தன்னை அப்படியே பொருளாதார ரீதியாக கைவிட்டதாகக் கூறினார் ஹாரி.

நெட்ஃபிளிக்ஸ் மற்றும் ஸ்பாட்டிஃபை போன்ற நிறுவனங்களுடன் தானும் மேகனும் நிகழ்ச்சிகள் மற்றும் பாட்காஸ்டை உருவாக்க செய்து கொண்ட ஒப்பந்தங்கள் தங்கள் திட்டத்தில் இல்லை என கூறினார். ஆனால் எங்களுக்கான பாதுகாப்பை நான்தான் உறுதி செய்யதாக வேண்டும் என்றார்.

“ஆனால், என் தாயார் எனக்காக விட்டுச் சென்றவை இருக்கின்றன. அதுமட்டுமில்லை என்றால், நிச்சயம் எங்களால் இதை செய்திருக்க முடியாது.”

அரச குடும்பத்தால் கைவிடப்பட்ட பின், கடந்த ஆண்டு கனடாவிலிருந்து தெற்கு கலிஃபோர்னியாவுக்கு இடம் மாறிய பின் அமெரிக்க பில்லியனர் டைலர் பெர்ரி தான் ஹாரி மற்றும் மேகனுக்கு வீடு மற்றும் பாதுகாப்பை வழங்கினார்.

8. ஒரு புகைப்படத்தின் பின் இருக்கும் உண்மை

தனக்கு தற்கொலை எண்ணம் வருவதாக ஹாரியிடம் ஒரு நாள் மாலை நேரத்தில் கூறிய பின், அவர்கள் ராயல் ஆல்பர்ட் ஹாலில் ஒரு அதிகாரபூர்வ நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டி இருந்தது என கூறினார் மேகன்.

மேகன் மற்றும் ஹாரி

மேகன் தன்னை மிகவும் பாதித்த ஒரு புகைப்படம் குறித்துப் பேசினார்.

தன் நண்பர் ஒருவர், இந்த தம்பதியினர் பார்க்க எவ்வளவு அருமையாக இருக்கிறார்கள் என வியந்ததாகக் கூறினார் மேகன். “அந்தப் புகைப்படத்தை நீங்கள் பெரிதாக்கிப் பார்த்தால், ஹாரியின் கைகள் என் கைகளை எப்படி இறுக்கமாகப் பற்றிக் கொண்டிருந்தன என்பதை நான் பார்க்கிறேன்” என ஓப்ராவிடம் கூறினார் மேகன். அப்போது மேகன் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டார்.

“நாங்கள் சிரித்துக் கொண்டே எங்கள் வேலையைச் செய்து கொண்டிருந்தோம். ஆனால் நாங்கள் இழுத்துப் பிடித்துக் கொண்டிருந்தோம். ஊடக கவனம் அந்த கூட்டத்திலிருந்து இருந்து விலகிய போதெல்லாம், நான் அழுதேன்”

9. அரச குடும்பத்தைக் குறித்து மேகன் எதையும் தேடவில்லை

தான் முதன்முதலில் ராணியை சந்தித்தது குறித்து பேசிய மேகன், தான் ஒரு காலை மண்டியிட்டு வணங்க வேண்டும் என்பதை அறிந்தபோது ஆச்சர்யப்பட்டதாகக் கூறினார்.

அது வெறுமனே ரசிகர்கள் மனநிலையில் செய்யப்படுகிறது, அரச குடும்பத்துக்குள் அது நடக்காது என தான் நினைத்ததாகக் கூறினார் மேகன்.

அரசி உடனான முன்னேற்பாடுகள் ஏதுமின்றி அறிவிக்கப்பட்ட ஒரு மதிய விருந்தில், அரசியை மேலே குறிப்பிட்டது போல மண்டியிட்டு வணங்க பயிற்சி எடுக்க வேண்டி இருந்ததாகக் கூறினார். “அவர் உன் பாட்டி” என நான் கூறினேன். “அவர் உன் அரசி” என ஹாரி கூறினார்.

தான் அரச குடும்பத்தில் சேர்வதற்கு முன், அவர்களைக் குறித்து எதையும் தேடிப் படிக்கவில்லை எனக் கூறினார். அதே போல ஹாரி உடன் பழகிக் கொண்டிருந்த போது வலைதளத்தில் அவரைப் பார்க்கவில்லை என வலியுறுத்துகிறார்.

10. மூன்று நாட்களுக்கு முன்பே திருமணம்

பல லட்சக் கணக்கானோர் விண்ட்சர் கோட்டையில் கடந்த 2018-ம் ஆண்டு நடந்த ஹாரி மற்றும் மேகனின் திருமணத்தைக் கண்டுகளித்தார்கள். அந்த சடங்கின் போது தான் அவர்கள் இருவரும் சட்டப்படி திருமணம் செய்து கொண்டார்கள். ஆனால் மூன்று நாட்களுக்கு முன்பே கேன்டர்பரியில் ஒரு பேராயருக்கு முன் இருவரும் திருமண உறுதிமொழி ஏற்றுக் கொண்டதை வெளிப்படுத்தினர்.

“நாங்கள் பேராயரை அழைத்து, இந்த காட்சி எல்லாம் உலகத்துக்கு தான், நாங்கள் இருவரும் இணைவது எங்களுக்கு மத்தியில் எங்கள் வீட்டின் பின்புறத்தில் நடக்க வேண்டும் எனக் கூறினோம்” என மேகன் கூறினார்.

ஹாரி மற்றும் மேகன்

11. அர்ச்சியின் விருப்பமான சொல் `பாதுகாப்பாக வாகனத்தை ஓட்டுங்கள்`

ஹாரி தன் குழந்தை ஆர்ச்சியைக் குறித்துப் பேசினார். அவரை இருசக்கர வாகனத்தில் வெளியே அழைத்துச் செல்லும் போது அவர் ஆனந்தமடைவது குறித்துப் பேசினார். இந்த நேர்காணலில் ஆர்ச்சி கடற்கரையில் தன் பெற்றோர்களுடன் விளையாடும் ஒரு காணொளிக் காட்சியும் இருந்தது.

கடந்த சில வாரங்களாக அர்ச்சியின் விருப்பமான சொல் “தண்ணீர் வேண்டும்” என கூறினர். வீட்டில் இருந்து யாராவது வெளியே சென்றால், அவர்களை பாதுகாப்பாக வாகனத்தை ஓட்டுமாறு “டிரைவ் சேஃப்” என அர்ச்சி அவர்களுக்குக் கூறுகிறார்.

12. மீண்டும் ஒரு பெண் குழந்தை

இந்த கோடை காலத்தில் இத்தம்பதியினர் ஒரு பெண் குழந்தையை வரவேற்க இருப்பதை உறுதி செய்தனர்.

அது அருமையாக இருக்கிறது என்றார் ஹாரி. இதை விட நீங்கள் வேறென்ன கேட்க முடியும்? என்றார். இரண்டாம் குழந்தையை பெற்றவுடன் அதோடு நிறுத்தி கொள்வதாக ஹாரி கூறினார்.

அந்த நேர்காணலின் நிறைவுப் பகுதியில், இவ்வளவு நடந்த பிறகும் ஹாரி உடன் மேகன் ஓர் இனிமையான வாழ்கையை வாழ்கிறீர்களா என்று ஓப்ராவின் கேள்விக்கு, “நீங்கள் படித்த எந்த ஒரு கற்பனைக் கதையை விடவும் இந்த காதல் கதை அருமையானதாக இருக்கும் என்றார் மேகன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »