Press "Enter" to skip to content

’என்னை கொல்லுங்கள்’ – மியான்மரில் அன்பின் அடையாளமான கன்னியாஸ்திரி என்ன சொல்கிறார்?

‘உங்களுக்கு நிச்சயமாக கொல்ல வேண்டும் என்றால், தயவு செய்து அவர்களுக்கு பதிலாக என்னைச் சுடுங்கள்’. மியான்மரில் உள்ள ஒரு கன்னியாஸ்திரி ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காப்பாற்ற ராணுவத்தினரிடம் இப்படியொரு வேண்டுகோளை வைத்தார்.

ராணுவ ஆட்சிக் கவிழ்ப்பினால் பாதிக்கப்பட்டு இருக்கும் மியான்மரில் கன்னியாஸ்திரி ஆன் ரோஸ் நு தாங் தற்போது ஒற்றுமையின் ஓர் அடையாளமாகி இருக்கிறார்.

மியான்மரின் வடக்குப் பகுதியில் இருக்கும் மித்கினா நகரத்தில் கத்தோலிக்க கன்னியாஸ்திரியான இவர், கடந்த மார்ச் 9ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காப்பாற்ற ஆயுதமேந்திய ராணுவ வீரர்களின் முன் மண்டியிட்டு வன்முறையை தடுக்க முயன்றது மியான்மர் நாட்டில் பலராலும் பரவலாக பாராட்டப்பட்டது.

கடந்த மார்ச் 9ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காப்பாற்ற, தரையில் மண்டியிட்டு, திறந்த கைகளோடு, ராணுவ அதிகாரிகளிடம் தேவாலயத்தை விட்டுச் செல்லுமாறு வேண்டிய கன்னியாஸ்திரி ஆன் ரோஸின் படங்கள் உலக அளவில் தலைப்புச் செய்தியாகி, சமூக வலைதளங்களில் மிகுதியாக பகிரப்பட்டுிக் கொண்டிருக்கின்றன.

“நீங்கள் இங்கிருந்து வெளியேறும் வரை நான் எழுந்திருக்கமாட்டேன்” என ராணுவத்திடம் கூறினார் ஆன் ரோஸ் நு தாங்.

கன்னியாஸ்திரியின் முன் ஆயுதமேந்திய ராணுவ வீரர்கள் இருவரும், தரையில் மண்டியிட்டு அவரை வணங்கினர். தங்களுக்கு நிறைவேற்ற வேண்டிய கடமை இருப்பதாகக் கன்னியாஸ்திரியிடம் கூறினர் ராணுவத்தினர்.

கன்னியாஸ்திரி

“உங்களுக்கு உண்மையாகவே கொல்ல வேண்டுமென்றால், தயவு செய்து அவர்களுக்கு பதிலாக என்னைக் கொல்லுங்கள், நான் என் உயிரைத் தருகிறேன்” என அவ்வதிகாரிகளிடம் கூறினார் கன்னியாஸ்திரி ஆன் ரோஸ் நு தாங்

சமீபத்தில் நடந்த தேர்தலில் மோசடி நடந்திருப்பதாகக் கூறி, கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி மியான்மர் ராணுவம் ஆட்சிக்கவிழ்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டது. அப்போதிலிருந்து மியான்மரில் தொடர்ந்து மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

மியான்மரில் ராணுவ ஆட்சியை ஒரு முடிவுக்குக் கொண்டு வர வேண்டும், ஆங் சாங் சூச்சி உட்பட அந்நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் எனக் கோரி வரும் இந்த மக்கள் போராட்டத்தில் குறைந்தபட்சம் 54 பேர் இறந்திருக்கலாம். ஆங் சாங் சூச்சி பதவியில் இருந்து தூக்கி எரியப்பட்டு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்.

மார்ச் 9அன்று மித்கினா சம்பவத்துக்குப் பிறகு, அந்த இக்கட்டான தருணத்தில், கன்னியாஸ்திரி ஆன் ரோஸ் நு தாங் மனதில் என்ன மாதிரியான எண்ணங்கள் வந்து போயின என பிபிசி பர்மிஸ் சேவையிடம் பகிர்ந்து கொண்டார்.

“உங்களுக்கு கொல்ல வேண்டுமானால் என்னைக் கொல்லுங்கள், நான் என் உயிரைத் தருகிறேன் எனக் கூறினேன், பின் அவர்கள் அவ்விடத்தை விட்டுச் சென்றார்கள்.”

“அங்கு குழந்தைகள் சிக்கிக் கொண்டிருந்தனர், அவர்களுக்கு எங்கு செல்வது என தெரியவில்லை. அவர்கள் மிகவும் பயந்து போய் இருந்தார்கள்,” என்றார் ஆன் ரோஸ்.

மாலை

“அப்போது நான் தியாகம் செய்தே ஆக வேண்டும் என எனக்கு தோன்றியது.”

“அதன் பிறகு குழந்தைகள் என்னைச் சூழ்ந்து கொண்டார்கள். அவர்கள் பசியோடும், தாகத்தோடும் பயந்து போய் இருந்தார்கள். வீட்டுக்குச் செல்லக்கூட அவர்களுக்கு தைரியமில்லை,” என்றார்.

இருப்பினும் அந்த பகுதியில் ராணுவத்தினர் தொடர்ந்து போராட்டக்காரர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி கொண்டிருந்தனர்.

“இந்த உலகமே சீர்குலைந்து கொண்டிருப்பது போலத் தோன்றியது, துப்பாக்கிச் சத்தம் மிக அதிகமாக இருந்தது. நான் தேவாலயத்தை நோக்கி ஓட வேண்டி இருந்தது,” என பிபிசியிடம் கூறினார் அவர்.

“எல்லோரையும் தரையில் படுக்குமாறு கூறினேன், ஆனால் யாரும் என் குரலைக் கேட்க முடியவில்லை”.

கன்னியாஸ்திரி ஆன் ரோஸ் எவ்வளவோ முயற்சித்தும், அவர் மறைந்திருந்த இடத்துக்கு அருகிலேயே ஒருவர் உயிரிழந்தார்.

தலையில் குண்டடிபட்ட ஒருவரைக் காப்பாற்ற தான் ஓடியதாகவும், அவர் மோசமாக காயப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்ததாகவும் கூறினார்.

“நான் குண்டடிபட்டவரைக் அழைத்துச் செல்ல விரும்பினேன். ஆனால் என்னால் அவரைத் தனியாக அழைத்துச் செல்ல முடியவில்லை எனவே அங்கிருந்தவர்களிடம் எனக்கு உதவுமாறு கூறினேன்,” என்றார் கன்னியாஸ்திரி.

மியான்மர்

அதன் பிறகு கன்னியாஸ்திரி மற்றும் அவரின் உதவியாளர்கள் தொடர்ந்து கண்ணீர் புகை குண்டுகள் வீசப்படுவதை உணர்ந்தார்கள்.

“என் கண்கள் எரிந்தன, நாங்கள் அனைவரும் வெப்பமாக உணர்ந்தோம். எப்படியோ குண்டடிபட்டவரின் உடலை எடுத்து வர முடிந்தது. எங்களைச் சுற்றி குழந்தைகள் அழுது கொண்டிருந்தார்கள்.” என்றார்.

கடந்த திங்கட்கிழமை மித்கினாவில் நடந்த போராட்டத்தில் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

மியான்மரின் காவலர்கள் மற்றும் மக்களுக்கு இடையில் அதிகரித்து வரும் வன்முறை குறித்து ஐ.நா கவலை தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »