Press "Enter" to skip to content

கோவிட் தடுப்பு மருந்து: பிரேசிலின் குய்குரோ பழங்குடியின சமூகம் இந்தப் பெருந்தொற்றை வென்றது எப்படி?

பட மூலாதாரம், Aikax association

பிரேசிலின் அமேசான் காட்டுப் பகுதியில் உள்ள குய்குரோ இன மக்களின் தலைவர்கள், தட்டம்மை தொற்றிலிருந்து, அறிவியல் மற்றும் நிதி திரட்டலின் அடிப்படையில் ஒரு தொற்றுநோயை எதிர்கொள்ள திட்டமிடத் கற்றுக்கொண்ட சுவாரஸ்யமான கதை.

பிரேசிலின் கோவிட் தடுப்பூசி வழங்கும் திட்டத்தில், பழங்குடிச் சமூகங்களுக்குச் சிறப்பு முன்னுரிமை வழங்கப்படுகிறது. ஆனால் குய்குரோ இனத்தவர் ஒரு படி முந்தியுள்ளனர் – அரசாங்க உதவிக்காகக் காத்திருப்பதற்குப் பதிலாக, அவர்கள் மருத்துவப் பொருட்களுக்காகத் தாங்களே நிதி திரட்டினர்.

தங்கள் கிராமங்களைத் தனிமைப்படுத்தி, அம்மை நோய் பரவலின் போது பெற்ற அனுபவத்தைக் கொண்டு, இந்தப் பெருந்தொற்றை வெற்றி கொண்டுள்ளனர்.

அதிகாரப்பூர்வத் தரவுகளின்படி, பிரேசிலின் பூர்விகமான பிராந்தியங்களில், ஐந்து லட்சம் மக்களில், 45,000க்கும் மேற்பட்டவர்கள் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர், 620 இறப்புகள் பதிவாகியுள்ளன. இந்த அதிகமான இறப்பு விகிதம், மிகத் தீவிரமான அவசரகால நிலையைக் குறிப்பது என்று நாட்டின் தேசிய பூர்வகுடிகள் சங்கம் கருதியது.

ஆனால் அப்பர் ஜிங்கு பேசின் பகுதியில், எட்டு கிராமங்களில் வசிக்கும் 900 அல்லது அதற்கு மேற்பட்ட குய்குரோ இனத்தவர்கள் இடையே, இறப்புகள் எதுவும் ஏற்படவில்லை. சுமார் 160 பேருக்கு மட்டுமே நோய்த்தொற்று பரவியுள்ளது. மேலும், அனைவருக்கும் தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது.

கோவிட் உடன் போராடுவதில் அவர்கள் பெற்ற வெற்றி, பிரேசிலின் மற்ற பகுதிகளுக்கு நேர் மாறாக உள்ளது. இதர பகுதிகளில், 2,95,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அதிபர் சயீர் பொல்சனாரூ பொது முடக்கத்தை ஊக்குவிக்கவில்லை, தடுப்பூசிகளையும் அங்கீகரிக்கவில்லை. மாறாக நிரூபிக்கப்படாத சிகிச்சை முறைகளை ஊக்குவித்தார்.

குய்குரோ சமூகத்தினரின் தலைவர் யானாமே குய்குரோ பிபிசியின் பப்லோ உச்சோவாவிடம், தாங்கள் இந்தச் சூழலை எவ்வாறு கையாண்டனர் என்று விவரிக்கிறார்.

தடுப்பு மருந்து

பட மூலாதாரம், Aikax association

நான் இபாட்சே என்ற முக்கிய கிராமத்தில் வசிக்கிறேன். குழந்தைகள் உட்பட 390 பேர் இங்கு வாழ்கின்றனர். கடந்த ஆண்டு, பிரேசிலில் கோவிட் தொற்று கண்ட நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்த செய்தி கண்டேன்.

எனது சகோதரரும், இபாட்சே கிராமத்தின் தலைவருமான அஃபுகாக்கே குய்குரோவுடன் இது குறித்துப் பேசினேன், அவரும் நடப்பு நிகழ்வுகளைக் கூர்ந்து கவனித்து வந்தார்.

இது நிறைய உயிர்களைப் பலி கொண்டது. நிலைமையின் தீவிரத்தை நாங்கள் புரிந்துகொண்டோம். ஆகவே, நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) இங்கு பரவத் தொடங்கும் முன், பல முறை எங்கள் சமூகத்தினரைக் கூட்டிக் கலந்தாலோசித்தோம். இந்த புதிய வைரஸை நாம் எவ்வாறு எதிர்கொள்ள முடியும், எப்படி உதவி பெற முடியும், என்பது குறித்து விவாதித்தோம்.

குய்கொரோ மக்கள் வாழும் கிராமம்

பட மூலாதாரம், Aikax association

நான் குழந்தையாக இருந்தபோது, அப்பர் ஜிங்குவில் பலரின் உயிரைப் பலி வாங்கிய தட்டம்மை தொற்றுநோய் பற்றி என் தந்தை என்னிடம் சொல்லியிருக்கிறார். கலாபலோ, கமாயுராஸ் எனப் பலர் இறந்துள்ளனர். எனவே புதிய வைரஸைப் பற்றி கேள்விப்பட்டதும், எங்கள் பெரியவர்கள் இதை உடனடியாக நினைவு கூர்ந்தார்கள்.

நாங்களே ஒழுங்கமைத்து ஒரு பொது முடக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். அரசின் ஆதரவுக்குக் காத்திருந்தால் நேர விரயம் ஏற்படும் என்று அறிந்தோம்.

குய்குரோ கிராமத்தில் பணியாற்றிய மருத்துவர் மற்றும் செவிலியர்

பட மூலாதாரம், Aikax association

நோயாளிகள் தனிமைப்படுத்திக்கொள்ள ஒரு வீடு கட்டினோம். குய்குரோ சங்கத்தின் தலைவராக, நான் பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உதவியை நாடினேன்.

அமேசான் ஹோப்ஸ் கூட்டுத் திட்டத்தின் மூலம் அவர்கள் 2,00,000 ரியல்ஸை (சுமார் 36,500 டாலர்கள்) திரட்டினர், நாங்கள் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், ஆக்ஸிஜன் செறிவூட்டி ஆகியவற்றை வாங்கினோம், ஒரு மருத்துவர் மற்றும் ஒரு செவிலியரை நியமித்தோம்.

இந்த வைரஸுக்கு எதிரான நிரூபிக்கப்படாத சிகிச்சையின் கலவையான கோவிட் கிட்டை அரசாங்கம் விநியோகித்து வந்தது. ஆனால் நாங்கள் அதை ஏற்கவில்லை, ஏனெனில் இது ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்படவில்லை. நாங்கள் எங்கள் தனி நெறிமுறையை உருவாக்கினோம். இது அரசாங்க நெறிமுறையிலிருந்து வேறுபட்டது.

மருத்துவமனை

பட மூலாதாரம், Aikax association

எங்கள் சமூகத்தைச் சேர்ந்த சிலருக்கு என் மீது கோபம் கூட இருந்தது. ஏனென்றால் நான் கிராமத்திற்கு வெளியே செல்ல வேண்டாம் என்றும் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் கைகளை அடிக்கடி கழுவ வேண்டும்படி என்றும் கூறி வந்தேன். நான் பொய் சொல்கிறேன் என்று நிறைய பேர் நினைத்தார்கள். பிறகு நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவத் தொடங்கியதும் அவர்கள் என்னை நம்பினார்கள்.

கலபாலோ மக்களைத்தான் இது முதலில் தாக்கியது. நோயின் தாக்கம் மிகவும் தீவிரமாக இருந்தது. மேலும் மக்கள் பூர்விக எல்லைக்கு வெளியே உள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். சில நோயாளிகள், மருத்துவமனைகளில் சரியான செயல்பாடுகள் இல்லை என்றும் உணவு சரியாக வழங்கப்படவில்லை என்றும் எங்களுக்கு ஒலிநாடா செய்திகளை அனுப்பினர்.

சிலர் எங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். ஆனால் யாருக்கும் ஆக்ஸிஜன் கொடுக்க வேண்டிய தேவை ஏற்படவில்லை.

ஜூன், ஜூலை மாதவாக்கில், வேறொரு பகுதியில் இருந்து இங்கு வந்தவர்கள் மூலமாக எங்கள் பகுதியிலும் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவத் தொடங்கியது. எங்கள் மருத்துவர் விரைவான பரிசோதனை செய்தார், அதில் நோய் கண்டறியப்பட்டது. அக்குடும்பம் தனிகைப்படுத்தப்பட்டது.

எங்கள் கிராமத்தில் சுமார் 160 பேர் பாதிக்கப்பட்டனர், அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர். நாங்கள் ஏற்கனவே அருகிலுள்ள நகரங்களிலிருந்து உணவுக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தோம். அவர்களைக் கண்காணித்து வந்த சுகாதார குழு அதை அவர்களிடம் கொண்டு சேர்க்கும்.

உணவுகள் வழங்கப்படுகிறது

பட மூலாதாரம், Aikax association

நாங்கள் மீண்டும் நிதி திரட்டினோம், இந்த முறை 44,000 ரியல்களை (சுமார் 8,000 டாலர்) திரட்டினோம். அந்தப் பணத்தைக் கொண்டு, எங்கள் சமூக அமைப்புக்குத் தேவையான அனைத்தையும் நாங்கள் வாங்கினோம். மீன் பிடிக்கத் தேவையான அனைத்து உபகரணங்கள், உணவு வகைகள், எங்கள் ஜெனரேட்டருக்கான எரிபொருள் மற்றும் மோட்டார் படகு. எல்லாம் எங்கள் கிராமத்திற்குக் கொண்டுவரப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு, பின் எங்கள் பயன்பாட்டுக்கு வந்தன.

தடுப்பூசி வழங்கும் திட்டத்தில், பழங்குடி மக்கள், சுகாதார வல்லுநர்கள் மற்றும் அடிமைகளின் சந்ததியனரான குயிலோம்போலாக்கள் ஆகியோருக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என்று சுகாதார அமைச்சகம் எங்களுக்குத் தெரிவித்தது. சில தடுப்பூசிகள் விமானம் மூலமாகவும், சில தேர் மூலமாகவும், சில படகு மூலமாகவும் இங்கு வந்தன.

தடுப்பூசி வந்தவுடன், ஏராளமான பொய்கள் பரப்பப்பட்டு வந்தன, நிறைய போலி செய்திகள்… ஏராளமான மக்கள் பழங்குடியினரிடம் தடுப்பூசி எடுக்கக் கூடாது என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள், சிலர் அவர்களை நம்பவும் செய்தார்கள்.

ஆனால் நானும் அஃபுக்காகாவும் அதை நம்பவில்லை. நாங்கள் எங்கள் சமூகத்தினருடன் நிறைய பேசினோம், போலிச் செய்திகளை நம்ப வேண்டாம் என்று சொன்னோம்.

தடுப்பூசியின் [சினோவாக்] முதல் சுற்றை நாங்கள் ஏற்கனவே எடுத்துக்கொண்டுள்ளோம். ஜிங்குவில் உள்ள மற்றவர்களுக்கும் தடுப்பூசி குறித்த அச்சத்தைப் போக்க, அந்தப் படங்களையும் நாங்கள் இணையதளத்தில் வைத்துள்ளோம். இங்குள்ள அனைவருக்கும் இப்போது தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

குய்கொரோ கொண்டாட்டம்

பட மூலாதாரம், Aikax association

நான் எனது தடுப்பூசியை எடுத்துக் கொள்ளும்போது, என் தந்தையிடமிருந்து நான் கேட்ட கதைகளைப் பற்றி நினைவு கூர்ந்தேன். தட்டம்மை பலரைக் கொன்றது, வரலாறு மற்றும் கலாச்சாரத்தைப் பற்றி அறிந்த பெரியவர்கள் அதனால் உயிரிழந்தனர். ஆனால் தடுப்பூசிக்குப் பிறகு, இறப்புகள் எதுவும் ஏற்படவில்லை.

கோவிட் -19 -ன் தீவிரத்தைப் பார்த்த எனக்கு, நமது பெரியவர்களும் தலைவர்களும் உயிரிழந்து விட்டால், நமது கலாச்சாரம் அழிந்து விடும் என்ற அச்சம் ஏற்பட்டது.

தடுப்பூசிகள் எங்களுக்கு உதவியுள்ளன. இன்று எங்கள் குழந்தைகள் தட்டம்மை, கக்குவான் இருமல், பெரியம்மை போன்ற கடந்த கால நோய்கள் இல்லாமல் வளர்ந்து வருகின்றனர். இன்று குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்ந்து வருகின்றனர்.

யனாமா

பட மூலாதாரம், Aikax association

எங்கள் போராட்டம் இன்னும் முடியவில்லை. மேட்டோ க்ரோசோ மாகாணாம் மிகவும் மோசமாகப் பாதிக்கபப்ட்டுள்ளது. அங்கு வேகமாகப் பரவி வருகிறது. ஐ.சி.யூ படுக்கைகள் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. வைரஸின் இந்தத் திரிபு பரவலால் [பி. 1] பல இளைஞர்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள்.

இது எனக்கு மிகவும் கவலையளிக்கிறது. மீண்டும் எவ்வாறு ஒழுங்கமைக்க முடியும்? இங்கே ஒரு சின்ன (மினி) மருத்துவமனை அமைப்பது மிகவும் கடினம் என்று எனக்குத் தெரியும், ஆனால் வெளியே உள்ள மருத்துவமனைகளில் பலர் இறந்து கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் கடந்த ஆண்டு மற்றும் இந்த ஆண்டு, எங்கள் கிராமத்தில் மக்கள் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டபோது, இங்கேயே வைரஸை வென்று காட்டினோம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »