Press "Enter" to skip to content

சீனாவின் பகிரங்க எச்சரிக்கை: “ஒரு பைசா கூட சம்பாதிக்க முடியாது”

பட மூலாதாரம், Getty Images

ஸ்வீடனைச் சேர்ந்த ஹெச் அண்ட் எம் எனும் ஆடை நிறுவனம், சீனாவின் ஷின்ஜியாங் பிராந்தியத்தில் இருந்து பருத்தியை வாங்கவில்லை எனில், தங்கள் நாட்டில் இருந்து ஒரு பைசா கூட சம்பாதிக்க முடியாது என சீன அரசு கடுமையாக எச்சரித்திருக்கிறது.

ஹெச் அண்ட் எம் போன்ற பல மேற்கத்திய நிறுவனங்கள், சீனாவின் ஷின்ஜியாங் பகுதியில் இருக்கும் மக்களைக் கட்டாயப்படுத்தி, பருத்தி விளைவிக்கப்படுவது தொடர்பாக தங்கள் கவலையை வெளிபடுத்தின. அதற்கு தற்போது சீன எதிர்வினையாற்றி இருக்கிறது.

என்ன பிரச்னை?

உலகின் ஒட்டுமொத்த பருத்தி உற்பத்தியில் ஐந்தில் ஒரு பங்கு இந்த ஷின்ஜியாங் பகுதியில் தான் விளைவிக்கப்படுகிறது.

ஹெச் அண்ட் எம் போன்ற பல மேற்கத்திய நிறுவனங்கள், சீனாவின் ஷின்ஜியாங் பிராந்தியத்தில், வீகர் இன மக்களின் விருப்பமின்றி அவர்கள் பருத்தி விளைவிக்கும் தொழிலில் ஈடுபடுத்தப்படுவது குறித்து தங்களை கவலையை வெளிப்படுத்தின.

இதற்கு எதிர்வினையாற்றும் வகையில், சீனாவில் சில மேற்கத்திய நிறுவனங்களின் கணினிமய கடைகள் முடக்கப்பட்டன. அவர்களின் கடை முகவரிகள் கணினி மயமான மேப்களில் இருந்து நீக்கப்பட்டன. முக்கிய மின்வணிகம் வலைதளங்களிலிருந்தும் அந்நிறுவன பொருட்கள் நீக்கப்பட்டன. கடைகள் மூடப்பட்டன.

சீனாவின் இந்த நிறுவன புறக்கணிப்புப் பட்டியலில் தொடக்கத்தில் நைக், ஹெச் அண்ட் எம் மட்டுமே இருந்தன. பிறகு பர்பெரி, அடிடாஸ், கன்வெர்ஸ் போன்ற நிறுவனங்களும் சேர்க்கப்பட்டன.

நேற்று (29.03.201 திங்கட்கிழமை) நடந்த பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் “ஒரு நிறுவனத்தின் பொருளாதார நடவடிக்கைகள் அரசியலாக்கப்படக் கூடாது” என சீனாவின் ஷின்ஜியாங் அரசின் செய்தித் தொடர்பாளர் ஷூ குய்ஷியாங் கூறினார்.

சீனா

பட மூலாதாரம், Getty Images

“இனி ஹெச் அண்ட் எம் நிறுவனம் சீன சந்தைகளில் பணம் பார்க்க முடியுமா? நிச்சயமாக முடியாது” என்றார் குய்ஷியாங்.

“ஷின்ஜியாங் பிராந்தியத்தில் இருந்து பருத்தி வாங்குவதை நிறுத்துவது சரியல்ல. அது கல்லைத் தூக்கி தங்களின் கால்களிலேயே போட்டுக் கொள்வதற்கு சமம்” என கூறினார் குய்ஷியாங்.

உலகின் மிகப் பெரிய சந்தையான சீனாவில் ஹெச் அண்ட் எம் நிறுவனத்தின் எதிர்காலம் குறித்தும் கேள்வி எழுப்பினார் அந்த செய்தித்தொடர்பாளர்.

இந்த விவகாரம் தொடர்பாக ஹெச் அண்ட் எம் நிறுவனம் எந்த பதிலையும் கூறவில்லை.

சர்வதேச அழுத்தம்

அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள், சீனாவின் ஷின்ஜியாங் பகுதியில் நடந்து வரும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக சர்வதேச அளவில் கடுமையான அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாகத் தான் இந்த பருத்திப் பிரச்னை உருவெடுத்திருக்கிறது.

சீனா, வீகர் இஸ்லாமியர்கள் உட்பட ஆயிரக் கணக்கான சிறுபான்மைகளை கட்டாயப்படுத்தி பருத்தி வயல்களில் வேலை வாங்குவதாக கடந்த ஆண்டு டிசம்பரில் பிபிசி மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த வாரம் பிரிட்டன், அமெரிக்கா, கனடா, சில ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள், ஷின்ஜியாங் விவகாரம் தொடர்பாக சில சீன அதிகாரிகள் மீது தடை விதித்தன.

சீனா இந்த குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக தொடர்ந்து மறுத்து வருகிறது. அதோடு, ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் மீது பதிலுக்கு தடை விதித்து எதிர்வினையாற்றியது.

பின்னணி என்ன?

ஷின்ஜியாங்

பட மூலாதாரம், Getty Images

ஷின்ஜியாங், சீனாவிலேயே மிகப் பெரிய பிராந்தியம். இது திபெத்தைப் போல தன்னாட்சி அதிகாரம் கொண்ட பிராந்தியம். ஆனால் யதார்த்தத்தில் இரண்டு பிராந்தியங்களையும் மத்திய சீன அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து கட்டுப்படுத்தி வருகிறது.

இந்த ஷின்ஜியாங் பகுதியில் வாழும் வீகர் இஸ்லாமியர்கள் தங்களுக்கென தனி மொழியைப் பேசி வருகிறார்கள். தங்களை கலாசார ரீதியாகவும், இன ரீதியாகவும் மத்திய ஆசிய நாடுகளோடு நெருங்கியவர்களாகக் கருதுகிறார்கள்.

கடந்த சில தசாப்தங்களில், சீனாவின் ஹான் இனத்தவர்கள், இப்பிராந்தியத்தில் அதிகம் குடியேறினர். இதனால் கடந்த சில ஆண்டுகளில் ஹான் சீனர்கள் மற்றும் வீகர் இன இஸ்லாமியர்களுக்கு மத்தியில் பிரச்சனைகள் ஏற்பட்டன. சிறிய பிரச்னைகள் ஒரு கட்டத்தில் பெரிய வன்முறையாக வெடித்தது.

இந்த காலகட்டத்தில் தான் சீனா கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்புத் திட்டங்களை ஷின்ஜியாங் பிராந்தியத்தில் அரசு கொண்டு வந்தது. இது வீகர் முஸ்லிம்கள் மீதான மனித உரிமை மீறல்கள் என விமர்சகர்கள் தெரிவித்தனர். ஆனால் சீனாவோ, பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாதத்தை எதிர்கொள்ள அம்மாதிரியான நடவடிக்கைகள் அவசியம் என கூறி வருகிறது.

வீகர் முஸ்லிம்கள், தடுப்புக் காவல் முகாம்களில் வைக்கப்பட்டு சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாகவும் அவர்களின் சுயவிருப்பமின்றி கட்டாயப்படுத்தி வேலை வாங்கப்படுவதாகவும் சர்ச்சை உள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் பிபிசி மேற்கொண்ட ஆய்வில், தொடர்ந்து முகாமில் இருக்கும் பெண்கள் பாலியல் கொடுமைக்கு ஆளாவதும், தடுப்புக் காவலில் இருப்பவர்கள் துன்புறுத்தப்படுவதும் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »