Press "Enter" to skip to content

சர்வதேச அரங்கில் மியான்மார் ராணுவத்தை எதிர்த்த இளம் அழகி ஹான் லே

பட மூலாதாரம், Miss Grand International

பொதுவாக அழகிகள் மேடையில் அன்ன நடை போட்டு வருவார்கள். அவர்கள் அணிந்திருக்கும் ஆடை, ஆபரணங்கள் அத்தனை அழகாக இருக்கும். அவர்கள் பேசுவது பெரிதும் கவனத்தை ஈர்க்காது அல்லது பெரும்பாலும் தலைப்புச் செய்திகளாகாது.

ஆனால் ஒரு மியான்மார் அழகி, தாய்லாந்தில் நடந்த அழகிப் போட்டியில் கலந்து கொண்டு தன் நாட்டுக்காகவும், தன் நாட்டு மக்களுக்காகவும் சர்வதேச நாடுகளிடம் உதவி கோரி இருக்கிறார். அத்துடன் மியான்மரில் நடக்கும் ராணுவ அராஜகம் குறித்தும் பேசி இருக்கிறார். இது தற்போது பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாகி இருக்கிறது.

ஹான் லே என்கிற மியான்மர் அழகி கடந்த வாரம் ‘மிஸ் கிராண்ட் இன்டர்நேஷனல் 2020’ என்கிற தாய்லாந்தில் நடந்த அழகிப் போட்டியில் கலந்து கொண்டார்.

அந்த சர்வதேச அரங்கில் “இன்று என் மியான்மார் நாட்டில் பலர் இறந்து கொண்டிருக்கின்றனர். தயவு செய்து மியான்மார் நாட்டுக்கு உதவுங்கள். எங்களுக்கு சர்வதேச அளவில் உடனடி உதவிகள் தேவை” என கூறினார்.

ஹான் லே

பட மூலாதாரம், Han Lay

கிட்டத்தட்ட ஒரு மாதம் முன்பு, 22 வயதான இளம் அழகி ஹான் லே, யாங்கூன் நகர வீதிகளில், மியான்மார் ராணுவத்துக்கு எதிராக போராடிக் கொண்டிருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

கடந்த பிப்ரவரி மாதம், மியான்மார் ராணுவம் ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபட்டு அதிகாரத்தைக் கைப்பற்றியது. கடந்த 2020-ம் ஆண்டில் நடந்த தேர்தலில் ஆங் சான் சூச்சியின் ஜனநாயகத்துக்கான தேசிய லீக் கட்சி மாபெரும் வெற்றியைப் பெற்றது. ஆனால் தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி மியான்மர் ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.

இந்த ஆட்சிக்கவிழ்ப்பை எதிர்த்து ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராடத் தொடங்கினர். தொடக்கத்தில் நீரைப் பீய்ச்சி அடித்து போராட்டத்தை கலைத்த மியான்மர் ராணுவம், அடுத்து ரப்பர் குண்டுகளையும், அதன் பிறகு உண்மையான துப்பாக்கி குண்டுகளையும் பயன்படுத்தி வருகிறது.

கடந்த சனிக்கிழமை இந்த மக்கள் போராட்டத்தின் மிக மோசமான நாள். அன்று ஒரே நாளில் 100 பேருக்கு மேல் கொல்லப்பட்டார்கள். மக்கள் போராட்டத்தில் இதுவரை ஒட்டுமொத்தமாக சுமார் 500 பேருக்கு மேல் கொல்லப்பட்டிருக்கலாம் என ஒரு உள்ளூர் அமைப்பு கூறுகிறது. ‘சேவ் சில்ட்ரன்’ என்கிற அமைப்பு, இறந்தவர்களில் 43 பேர் குழந்தைகள் என்கிறது.

“மியான்மாரில் பத்திரிகையாளர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்கள்… எனவே தான் நான் வாய் திறந்து பேசத் தீர்மானித்தேன்” என பாங்காக்கில் இருந்து பிபிசிடம் தொலைபேசி மூலம் பேசினார் ஹான் லே.

ஹான் லே

பட மூலாதாரம், Miss Grand International

தனது இரண்டு நிமிட பேச்சு, மியான்மர் ராணுவத்தின் கவனத்தை ஈர்த்திருக்கும் என்கிற கவலையில் இருக்கிறார். குறைந்தபட்சமாக அடுத்த மூன்று மாதங்களுக்கு தாய்லாந்திலேயே தங்க முடிவு செய்திருப்பதாகக் கூறினார்.

தாய்லாந்துக்குச் செல்வதற்கு முன்பே, இப்படிப் பேசுவது தனக்கு நல்லதல்ல, தனக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும், தான் சில காலம் தாய்லாந்திலேயே தங்க வேண்டி இருக்கும் என்பதையும் தான் அறிந்திருந்ததாகக் கூறுகிறார் அழகி ஹான் லே.

“நான் என் குடும்பத்தையும் என் பாதுகாப்பையும் நினைத்து கவலையில் இருக்கிறேன். நான் மியான்மர் ராணுவம் குறித்தும், மியான்மரில் நிலவும் சூழலைக் குறித்து அதிகமாகவே பேசிவிட்டேன். மியான்மரில் என்ன நடக்கிறது என்பதைக் குறித்துப் பேச மியான்மரில் கட்டுப்பாடுகள் இருக்கின்றன என்பது எல்லோருக்கும் தெரியும்” என்றார் ஹான் லே.

“என் நண்பர்கள் என்னை மீண்டும் மியான்மருக்கு வர வேண்டாம்” என்றார்கள்.

ஹான் லே-யின் பயம் நியாயமானது தான். சமூக வலைதளங்களில் ஆதிக்கம் செலுத்துபவர்கள், இரண்டு பத்திரிகையாளர்கள் என 18 பிரபலங்கள் மீது கடந்த வாரம் கைதாணையை பிறப்பித்து இருக்கிறது மியான்மர் பாதுகாப்புப் படை. அவர்கள் ராணுவ ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிராகப் பேசியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அழகிப் போட்டியில் மியான்மரின் நிலையைக் குறித்துப் பேசிய பிறகு, இதுவரை, தன்னை மியான்மர் ராணுவமோ அல்லது மியான்மர் அதிகாரிகளோ தொடர்பு கொள்ளவில்லை என்கிறார் ஹான் லே. ஆனால் தன் சமூக வலைதள பக்கங்களில் மிரட்டல்கள் வந்து கொண்டிருப்பதாகக் கூறினார்.

“நான் மியான்மருக்கு திரும்பி வந்த உடன் எனக்காக சிறை காத்துக் கொண்டிருப்பதாக சமூக வலைதளங்களில் அவர்கள் என்னை பயமுறுத்துகிறார்கள்” என்கிறார் ஹான் லே. இந்த மிரட்டல்களுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்று அவருக்குத் தெரியவில்லை. ஆனால் பெரும்பாலான சமூக வலைதளப் பதிவுகள் அவருக்கு ஆதரவு தெரிவிப்பவைகளாக இருப்பதாகவும் ஹான் லே கூறினார்.

ஆட்சிக் கவிழ்ப்பு நடந்த ஆரம்ப காலகட்டங்களில், தன்னோடு போராட்டங்களில் ஈடுபட்டவர்களில் பலரும் மியான்மர் ராணுவத்தால் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிறார் ஹான் லே. ‘அசிஸ்டன்ஸ் அசோசியேஷன் ஃபார் பொலிடிகல் பிரிஷனர்ஸ்’ என்கிற அமைப்பின் கணக்குப் படி, குறைந்தபட்சமாக 2,500 பேர் மியான்மர் ராணுவத்தால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்கிறது.

தன் குடும்பம் பாதுகாப்பாக இருக்கிறது என ஹான் லே கூறுகிறார். ஆனால், மியான்மரில் இணையம் அடிக்கடி துண்டிக்கப்படுவதால் அவர்களோடு தொடர்பு கொள்வது தான் சிரமமாக இருக்கிறது எனக் கூறியுள்ளார் ஹான் லே.

“மியான்மரில் நடப்பது மனித நேயத்துக்கு எதிரான குற்றங்கள். எனவே தான் இந்த விவகாரத்தில் ஐநா உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறோம்” “எங்களுக்கு எங்கள் தலைவர் வேண்டும், எங்களின் உண்மையான ஜனநாயகம் வேண்டும்” எனக் கூறுகிறார் ஹான் லே.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »