Press "Enter" to skip to content

பிரேசிலில் கொரோனாவுக்கு அதிக குழந்தைகள் பலியாவது ஏன்?

  • நாதாலியா பஸாரினோ மற்றும் லூயி பரூகோ
  • பிபிசி பிரேசில்

பட மூலாதாரம், JESSIKA RICARTE

ஜெஸ்ஸிகாவின் ஒரு வயது மகன் லூகாஸுக்கு சற்று உடல்நிலை சரியில்லை. கோவிட் பரிசோதனை செய்யலாம் என்று நினைத்தபோது, அதற்கு அவசியமில்லை என்று மருத்துவர் கூறிவிட்டார். ஆனால் இரண்டே மாதங்களில் கொரோனா பாதிப்பால் குழந்தை லூகாஸ் இறந்து போனான்.

பச்சிளம் குழந்தைகளை கொரோனா பெருமளவு பாதிக்காது என்பதற்கான நிறைய ஆதாரங்கள் இருக்கின்றன. ஆனால் பிரேசிலில் இதுவரை 1,300 குழந்தைகள் இறந்து விட்டன.

ஜெஸ்ஸிகாவின் நீண்ட கால காத்திருப்புக்குப் பிறகு கிடைத்த பொக்கிஷம் லூகாஸ். குழந்தை பிறக்காது என்ற நம்பிக்கை இழந்திருந்த நிலையில்தான் அவர் கருவுற்றார்.

“லூகாஸ் என்றால் பிரகாசமான ஒளி. அவன் என் வாழ்வின் ஒளி. நாங்கள் நினைத்ததை விட அதிக மகிழ்வை எங்கள் வாழ்வுக்குக் கொண்டு வந்தவன் அவன்” என்று உருகுகிறார் ஜெஸ்ஸிகா.

நன்றாக சாப்பிடக்கூடிய லூகாஸ், உணவை மறுக்கத் தொடங்கியபோது ஏதோ தவறாக இருக்கிறது என்று சந்தேகித்திருக்கிறார் ஜெஸ்ஸிகா.

பல் முளைக்கிறதா என்று பார்த்தார். தொண்டை வலியாக இருக்கலாம் என செவிலியராகப் பணியாற்றி வரும் லூகாசின் ஞானமாதா கூறினார். காய்ச்சலால் உடல் அயர்ந்து, மூச்சுவாங்கிய பிறகுதான் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். கோவிட் பரிசோதனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

கொரோனா

பட மூலாதாரம், JESSIKA RICARTE

அப்போது நடந்ததை ஜெஸ்ஸிகா நினைவுகூர்ந்தார். “மருத்துவர் ஆக்ஸிமீட்டரில் பார்த்தார். லூகாஸின் அளவு 86% எனக் காட்டியது. எனக்குத் தெரியும் அது வழக்கமான அளவு இல்லை என்று. ஆனால் கொரோனா பரிசோதனை தேவையில்லை; இது தொண்டை வலியின் காரணமாக இருக்கலாம் என்று மருத்துவர் கூறிவிட்டார் “கோவிட்-19 குழந்தைகளைப் பாதிப்பது மிகவும் அரிது என்று கூறிய மருத்துவர் சில மருந்துகளைக் கொடுத்து வீட்டுக்கு அனுப்பிவிட்டார். அந்த நேரத்தில் வேறு இடத்தில் கொரோனா பரிசோதனை செய்யவும் ஜெஸ்ஸிகாவுக்கு வாய்ப்பிருக்கவில்லை.மருத்துவர் கொடுத்த மருந்தை 10 நாள்களுக்குக் கொடுத்ததில் அறிகுறிகள் குறைந்தன. ஆனால் உடல் சோர்வு நீடித்தது. கொரோனாவாக இருக்கலாம் என்ற கவலை ஜெஸ்ஸிகாவுக்கு தொடர்ந்தது.”பல காணொளிக்களை எடுத்து லூகாஸின் ஞானமாதா, எனது பெற்றோர், மாமியார் ஆகியோருக்கு அனுப்பினேன். அனைவரும் நான் மிகைப்படுத்துவதாகக் கூறிவிட்டார்கள். அச்சமூட்டும் வகையிலான செய்திகளைப் பார்க்க வேண்டாம் என்றார்கள். ஆனால் என் மகன் அவனாகவே இல்லை என எனக்குத் தெரியும். அவனது சுவாசம் இயல்பாக இல்லை.”அது 2020-ஆம் ஆண்டு மே மாதம். அப்போதுதான் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவிக் கொண்டிருந்தது. ஜெஸ்ஸிகா வசிக்கும் டார்போரில் என்ற ஊரில் இரண்டு பேர் இறந்தனர். ஊரே சோகத்தில் மூழ்கியிருந்தது.இன்னொருமுறை லூகாசை மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதில் ஜெஸ்ஸிகாவின் கணவர் இஸ்ரேலுக்கு உடன்பாடில்லை. லூகாசை கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றிக் கொள்ளும் என்ற அச்சம் அவருக்கு.

கொரோனா

பட மூலாதாரம், JESSIKA RICARTE

வாரங்கள் செல்லச் செல்ல லூகாஸ் எப்போதும் தூங்கிக் கொண்டிருந்தான். ஜூன் மாதம் 3 ஆம் தேதி மதிய உணவுக்குப் பிறகு அடுத்தடுத்து வாந்தி எடுத்தான். உடனடியாக எதாவது செய்தாக வேண்டும் என்று ஜெஸ்ஸிகாவுக்குப் புரிந்துவிட்டது.அதே மருத்துவமனைக்கு லூகாசை மீண்டும் கொண்டு சென்றார்கள். கோவிட் பரிசோதனை செய்யப்பட்டது. அங்கு பணியாற்றும் லூகாசின் ஞானா மாதா, கொரோனா இருப்பதை ஜெஸ்ஸிகா தம்பதிக்குத் தெரிவித்தார்.”அந்த நேரத்தில் சுவாசத்துக்கு உதவி செய்யும் கருவி கூட மருத்துவமனையில் இல்லை.” என்கிறார் ஜெஸ்ஸிகா.இரண்டு மணி நேரப் பயண தூரத்தில் உள்ள சோப்ரல் நகரத்தில் இருக்கும் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு லூகாஸ் மாற்றப்பட்டான். அங்கு லூகாசை பரிசோதனை செய்த மருத்துவர்கள் எம்.ஐ.எஸ். எனப்படும் பல்லுறுப்பு வீக்கம் இருப்பதாகக் கூறி அதிர்ச்சியளித்தனர். நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தீவிர எதிர்ப்பு சக்தியால் உடலின் முக்கிய உறுப்புகள் வீங்குவதால் இந்த நிலை ஏற்படுகிறது.குழந்தைகளுக்கு கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதித்து ஆறு வாரங்களுக்குப் பிறகு இந்த நிலை உருவாவதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். இது அரிதானதுதான். ஆனாலும் கொரோனா பெருந்தொற்று காலத்தில், முன் எப்போதையும் விட பல்லுறுப்பு வீக்கத்துக்கு ஆளான குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதாக சாவ் பாலோ பல்கலைக்கழகத்தின் பெருந்தொற்று நிபுணர் பாத்திமா மரின்ஹோ கூறுகிறார். லூகாசுக்கு செயற்கையாகச் சுவாசம் அளிப்பதற்காக மருத்துவர்கள் முயற்சி செய்த நேரத்தில் ஜெஸ்ஸிகா உடனிருக்க அனுமதிக்கப்படவில்லை. தனது சகோதரிக்கு தொலைபேசியில் அழைத்து மனதை வேறுபக்கம் திருப்புவதற்காக அவர் முயன்று கொண்டிருந்தார்.”வெளியே இருந்தாலும் இயந்திரங்கள் பீப் ஒலி கேட்டுக் கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் இயந்திரம் நின்று தொடர்ச்சியான பீப் ஒலி கேட்டது. இறந்துபோனால் மட்டும் அது நடக்கும் என்று எங்களுக்குத் தெரியும். சில நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் இயந்திரம் இயங்கியது. பீப் ஒலி கேட்கத் தொடங்கியது. என் கண்களில் நீர் பெருகியது.”லூகாஸுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், தாங்கள் இதயத்தை மீண்டும் இயங்க வைத்துவிட்டதாகவும் மருத்துவர்கள் கூறினார்கள்.சோப்ரல் மருத்துவமனையில் லூகாஸுக்கு ஒரு மாதம் சிகிச்சையளித்தவர் மருத்துவர் மேனுவேலா மான்டி. லூகாஸுக்கு எந்தவிதமான அபாயக் காரணிகளும் கிடையாது என்பதால் அவனது நிலை எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது என்கிறார் அவர்.இதய பாதிப்பு, நீரிழிவு போன்ற இணைநோய்களைக் கொண்ட குழந்தைகளுக்குத்தான் பெரும்பாலும் கோவிட் பாதிப்பதாக குழந்தைகளுக்கான தொற்றுநோயியில் நிபுணர் லோஹன்னா தவேரேஸ் கூறுகிறார்.ஆனால் லூகாஸின் நிலை அப்படியில்லை.

கொரோனா

பட மூலாதாரம், JESSIKA RICARTE

தீவிரச் சிகிச்சைப் பிரிவில் லூகாஸ் இருந்த 33 நாள்களில் மூன்று முறை மட்டுமே அந்த அறைக்குள் ஜெஸ்ஸிகா அனுமதிக்கப்பட்டார். அவனுக்கு இதய வீக்கத்தைக் குறைப்பதற்கான இம்யூனோகுளோபுலின் என்ற விலையுயர்ந்த மருந்து தேவைப்பட்டது. அந்த நேரத்தில் தனக்காக வாங்கியிருந்த கூடுதலான மருந்துக் குப்பி ஒன்றை ஒருவர் மருத்துமனைக்குத் கொடையாக வழங்கியிருந்தார். அது லூகாஸுக்கு செலுத்தப்பட்டது. இரண்டாவது டோஸ் கொடுக்கப்பட இருந்தபோது லூகாஸின் நிலை மோசமடைந்தது. உடலில் தடிப்புகள் ஏற்பட்டிருந்தன. செயற்கை சுவாசமும் தேவைப்பட்டது.அதன் பிறகு லூகாஸின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. செயற்கைச் சுவாசத்தை அகற்றிவிடலாம் என மருத்துவர்கள் முடிவு செய்தார்கள். காணொளி அழைப்பில் லூகாஸுடன் ஜெஸ்ஸிகா தம்பதி பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. “எங்கள் குரலைக் கேட்டதும் அவன் அழத் தொடங்கிவிட்டான்” “எங்கள் குழந்தையை அசைவுடன் பார்த்தது அதுதான் கடைசி முறை. அடுத்த முறை காணொளியில் அவன் வெறித்தபடி பார்த்துக் கொண்டிருந்தான்” என்றார் ஜெஸ்ஸிகா.அவனுக்கு பக்கவாதம் ஏற்பட்டிருப்பது சி.டி. ஸ்கேனில் கண்டறியப்பட்டது. லூகாஸை குணப்படுத்திவிடலாம் என்று அப்போதும் மருத்துவர்கள் கூறினார்கள் என்கிறார் ஜெஸ்ஸிகா.”அந்த இரவில் நான் அலைபேசியை ஓசையில்லாமல் வைத்திருந்தேன். லூகாஸ் என்னிடம் வந்து மூக்கில் முத்தமிடுவது போலக் கனவு வந்தது. அன்பும் நன்றியும் நிறைந்த உணர்வுடன் மகிழ்ச்சியாக எழுந்தேன். எனது அலைபேசி மருத்துவர்களிடம் இருந்து வந்திருந்த 10 அழைப்புகளைக் காட்டியது. “

கொரோனா

பட மூலாதாரம், JESSIKA RICARTE

இதயத் துடிப்பும் ஆக்சிஜன் அளவும் சட்டெனக் குறைந்து காலை நேரத்தில் லூகாஸ் இறந்துவிட்டதாக மருத்துவர் கூறினார்.தாம் வலியுறுத்திய நேரத்திலேயே லூகாஸுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருந்தால் அவனைக் காப்பாற்றியிருக்கலாம் என்று உறுதியான எண்ணம் ஜெஸ்ஸிகாவுக்கு இருக்கிறது.”கொரோனா இருக்காது என்று மருத்துவர்கள் நம்பினாலும், அதை உறுதி செய்து கொள்ள பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்” என்கிறார் அவர்.”ஒரு குழந்தைக்கு எப்படி இருக்கிறது என்று சொல்லத் தெரியாது. அதனால் பரிசோதனை அவசியம்”சிகிச்சையில் தாமதம் ஏற்பட்டதால்தான் லூகாஸின் நிலை மோசமடைந்தது என ஜெஸ்ஸிகா கருதுகிறார். “லூகாஸின் பல உறுப்புகள் வீங்கியிருந்தன. நுரையீரலில் 70% பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இதயம் 40% வீங்கியிருந்தது. இவற்றைத் தவிர்த்திருக்கலாம்”லூகாஸுக்கு சிகிச்சை வழங்கிய மருத்துவர் மான்டி இதை ஒப்புக்கொள்கிறார். பல்லுறுப்பு வீக்கத்தைத் தடுக்க முடியாது என்றாலும், முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை அளித்தால் உயிரைக் காப்பாற்றிவிடலாம் என்கிறார் அவர். லூகாஸின் கதை மற்றவர்களுக்கு விழிப்புணர்வாக அமைய வேண்டும் என்று விரும்புகிறார் ஜெஸ்ஸிகா.”எனது பதிவுகள் மூலமாக பல தாய்மார்கள் அவர்களது குழந்தைகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள்””எனக்கு மற்றவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று விரும்பினேனோ அதையே நான் மற்றவர்களுக்குச் செய்கிறேன். எனக்கு தகவல்கள் தெரிந்திருந்தால் இன்னும் எச்சரிக்கையாக இருந்திருப்பேன்” என்கிறார் ஜெஸ்ஸிகா.குழந்தைகளுக்கு கோவிட் பாதிப்பு ஏற்பட வாய்ப்பே இல்லை என்று தவறான கருத்து பலருக்கு இருக்கிறது என்கிறார் மருத்துவர் பாத்திமா மரின்ஹோ. அவரது ஆராய்ச்சியின்படி அதிக எண்ணிக்கையிலான குழந்தைகளும், பச்சிளங் குழந்தைகளும் கோவிட் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றனர். பிரேசில் நாட்டில் 2020-ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் மார்ச் 15-ஆம் தேதி வரை ஒரு வயதுக்குள்பட்ட 518 பச்சிளங்குழநதைகள் உள்பட 9 வயதுக்குள்பட்ட 852 குழந்தைகள் இறந்துவிட்டதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் கூறுகிறது. ஆனால் இந்த எண்ணிக்கை இரண்டு மடங்குக்கும் அதிகம் என்கிறார் மரின்ஹோ. பரிசோதனை குறைவாக இருப்பதே எண்ணிக்கை குறைவானதுக்கும் காரணம் என்கிறார் அவர்.

ஏன் இப்படி நடக்கிறது?

கொரோனா

பட மூலாதாரம், JESSIKA RICARTE

குழந்தைகள் அதிக அளவு பாதிக்கப்படுவது பிரேசிலில் கொரோனா எண்ணிக்கை அதிகரிப்பதற்குக் காரணம் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.

தொற்று மிக வேகமாக அதிகரிப்பதால் நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பு முடங்குகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படுகிறது. தீவிரச் சிகிச்சைப் பிரிவுகள் நிரம்பியிருக்கின்றன.பிரேசிலில் கண்டறியப்பட்டுள்ள P.1. என்ற வகை மிகவும் வேகமாகப் பரவக்கூடியது. பிரேசில் அதிபர் பொல்சனாரோ பொதுமுடக்கக் கட்டுப்பாடுகளுக்கு எதிரானவர். இவையும் பிரேசிலில் கொரோனா தீவிரமடைவதற்குக் காரணமாகிறது.கோவிட் தொற்று கொண்ட குழந்தைகள் பெரும்பாலும் மிகத் தாமதமாகவே மருத்துவமனைக்குக் கொண்டுவரப்படுகிறார்கள் என்கிறார் மரின்ஹோ. பரிசோதனை வசதி குறைவாக இருக்கிறது என்பதில்லாமல், குழந்தைகளுக்கான அறிகுறிகளைத் தவற விடுவதுதான் காரணம் என்கிறார் அவர்.”வழக்கமான கோவிட் அறிகுறிகளைத் தாண்டி ஒரு குழந்தைக்கு வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, நெஞ்சுவலி ஆகியவை ஏற்படுகின்றன. பரிசோதனை செய்வது தாமதமாகிறது. மிக மோசமான நிலையிலேயே மருத்துவமனைக்குக் கொண்டு வரப்படுகிறார்கள். உயிரிழக்க நேரிடுகிறது” என்கிறார் அவர்.இருப்பினும் ஏழ்மையும், சுகாதார வசதியைப் பெறும் வாய்ப்பும் காரணங்களாக இருக்கின்றன. சா பாலோ மருத்துவக் கல்லூரியின் பிரையன் சாவ்ஸா நடத்திய ஆய்வில் சமூகப் பொருளாதார அமைப்பும் இணை நோய்களும் குழந்தைகளில் கோவிட் மரணங்கள் நிகழ்வதற்குக் காரணிகளாக அமைகின்றன எனத் தெரியவந்துள்ளது.”கருப்பின குழந்தைகள், ஏழைக் குழந்தைகள் ஆகியோருக்கு உதவி கிடைப்பதில் வாய்ப்புக் குறைவு. அதனால் அந்தக் குழந்தைகளில் அதிகம் பேர் உயிரிழக்கிறார்கள் ” என்கிறார் மரின்ஹோ.

எப்போது உதவி தேவை?

கொரோனா

பட மூலாதாரம், CEARÁ DEPARTMENT OF HEALTH

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) குழந்தைகளைத் தொற்றும் என்றாலும் அதிகப் பாதிப்பை ஏற்படுத்துவது அரிது. உங்களது குழந்தைக்கு உடல்நலம் சரியில்லை என்றால் அது கொரோனா காரணமாக இல்லாமலும் இருக்கலாம். சில நேரங்களில் கொரோனாவாகவும் இருக்கலாம்.குழந்தைகளுக்கு கீழ்கண்ட அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும் என லண்டனின் குழந்தைகள் நலனுக்கான ராயல் கல்லூரி கூறுகிறது.

  • உடல் வெளிர் நிறமாகவோ, புள்ளிகள் தோன்றினாலோ, தொடுவதற்கு வழக்கத்துக்கு மாறான குளிர்சியாக இருந்தாலோ.
  • வழக்கத்துக்கு மாறான மூச்சு, முனகல்
  • மூச்சு விடச் சிரமம், அதிகத் துள்ளல் அல்லது அசைவின்றிக் கிடப்பது
  • உதட்டில் நீல நிற வட்டம்
  • வலிப்பு
  • நீடித்த அழுகை, எழுப்ப முடியாத தூக்கம், குழப்பமான தோற்றம்
  • தடிப்புகள் தோன்றுவது
  • விரைகளில் வலி – குறிப்பாக பதின்ம வயதுச் சிறுவர்கள்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »