Press "Enter" to skip to content

இளவரசர் ஃபிலிப் இறுதி நிகழ்வு இன்று: 30 பேர் மட்டுமே பங்கேற்க ஏற்பாடு

பிரிட்டிஷ் இளவரசர் ஃபிலிப்பின் இறுதி நிகழ்வு, இன்று சனிக்கிழமை லண்டன் நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு வின்சர் கோட்டை வளாகத்தில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் நடைபெறுகிறது.

இதையொட்டி நடைபெறவுள்ள இறுதி ஊர்வலத்தில் எடின்பரோ கோமகனும் இளவரசருமான ஃபிலிப்பின் பிள்ளைகள் கலந்து கொள்கின்றனர்.

கொரோனா பெருந்தொற்று கட்டுப்பாடுகள் காரணமாக, முப்பது பேர் மட்டுமே இறுதி நிகழ்வில் கலந்து கொள்கிறார்கள். இது தொடர்பாக பக்கிங்காம் அரண்மனை விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “மிகவும் கடினமான இந்த முடிவை எடுத்து இறுதி நிகழ்வில் பங்கேற்கவுள்ளவர்களின் பட்டியலை அரசி எலிசபெத் தயாரித்துள்ளார்,” என்று கூறப்பட்டுள்ளது.

தொடக்கத்தில், இறுதி நிகழ்வில் 800 பேர் பங்கேற்க ஏற்பாடுகள் தயாராகி வந்தன. ஆனால், இப்போது 30 பேர் மட்டுமே பங்கேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிகழ்வில் இளவரசர் ஃபிலிப்பின் குடும்பத்தினர் அனைவரும் இருக்க வேண்டும் என்று அரசி விரும்பினார்.

கேன்டர்பரி பேராயர் ஜஸ்டின் வெல்பி, “இளவரசர் ஃபிலிப்பின் இறுதி நிகழ்வு, அவருக்கு கடைசி பிரியாவிடை தருவதற்கு அரசிக்கு கிடைத்த புனிதமான சந்தர்ப்பம்,” என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிபிசியிடம் பேசிய பேராயர் ஜஸ்டின் வெல்பி, கொரோனா பெருந்தொற்று காலத்தில் பலரும் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், நடைபெறும் இளவரசர் ஃபிலிப்பின் இறுதி நிகழ்வு, உணர்வுபூர்வமாக பலரையும் இணைக்கும் எனறு தெரிவித்தார்.

தங்கள் கண் முன் இனி பார்க்க முடியாத ஒருவரின் இறுதி நிகழ்வில் பங்கேற்க முடியாமல் போவதை அவர்கள் நினைவில் கொள்வார்கள். இறுதி நிகழ்வில் 30 பேர் மட்டுமே பங்கேற்க கட்டுப்பாடு உள்ளதால் அந்த முடிவும் பலருக்கும் வேதனையாக இருக்கும் என்று அவர் கூறினார்.

தனது கணவராக 73 ஆண்டுகள் இருந்த இளவரசருக்கு அரசி எலிசபெத் பிரியாவிடை கொடுப்பது வேறொருவரின் வாழ்வில் நடக்காத மிக, மிக வேதனை தரும் தருணமாக இருக்கும் என்றும் பேராயர் ஜஸ்டின் வெல்பி குறிப்பிட்டார்.

முன்னதாக, பிரிட்டிஷ் ராணுவத்தின் தலைமை அதிகாரி, இளவரசர் ஃபிலிப்பின் பாணியில் அவர் விரும்பிய வகையில் அவரது எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் இறுதி நிகழ்வு நடைபெறும் என்று கூறினார்.

இளவரசர் ஃபிலிப்பின் உடல் மாற்றி வடிவமைக்கப்பட்ட லேன்ட்ரோவர் காரில் வைக்கப்பட்டு இறுதி ஊர்வலம் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேரை சிறப்பாக வடிவமைக்க இளவரசர் ஃபிலிப் தனது வாழ்காலத்தில் உதவினார். அந்த காருக்கு ராணுவ அடையாள நிறமான பச்சை நிறத்தை அடிக்க வேண்டும் என்றும் அவரே விரும்பினார்.

மேலும் தனது இறுதி நிகழ்வில் வாகனத்தில் அரச முத்திரை எங்கு இருக்க வேண்டும், எப்படி தனது கடற்படை சேவை பதக்கங்கள், சின்னங்கள் இடம்பெற்றிருக்க வேண்டும் என்பதையும் இளவரசர் ஃபிலிப் தனது வாழ்காலத்திலேயே குறிப்பிட்டிருந்தார்.

இளவரசர் ஃபிலிப்

பட மூலாதாரம், PA Media

இரண்டாம் உலக போரின்போது இளவரசர் ஃபிலிப் சேவையாற்றியிருந்தார். அவருக்கு ஏராளமான பதக்கங்களும் வழங்கப்பட்டிருக்கின்றன.

தனது 99ஆவது வயதில் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி இளவரசர் ஃபிலிப் வின்சர் கோட்டையில் காலமானார். அவரது இறுதி ஊர்வலத்துக்கு முன்பாக, கிரெனேடியர் கார்ட்ஸ் என்ற ராணுவ பாண்டு வாத்திய சிறப்புக் குழுவினர் செல்ல, அதன் பின்னே அரச குடும்ப உறுப்பினர்களும் முப்படை அதிகாரிகளும் செல்வார்கள்.

இளவரசர் ஃபிலிப்புக்கு வேல்ஸ் இளவரசர் சார்ல்ஸ், ராயல் சீமாட்டி ஏன், யார்க் கோமகன் ஆண்ட்ரூ, இளவரசர் எட்வர்ட் ஆகிய நான்கு பிள்ளைகள் உள்ளனர். இவர்களுடன் இளவரசர் ஃபிலிப்பின் பேரப்பிள்ளைகளான கேம்ப்ரிட்ஜ் கோமகன், சஸ்ஸெக்ஸ் கோமகன் ஹாரி, பீட்டர் ஃபிலிப் ஆகியோரும் இறுதி ஊர்வலத்தில் செல்வார்கள்.

இளவரசர் ஃபிலிப்

பட மூலாதாரம், EPA

கொரோனா விதிகளை பின்பற்றி அனைவரும் முக கவசம் அணிந்தவாறும் சமூக இடைவெளியைப் பின்பற்றியும் ஊர்வலத்தில்செல்வார்கள். இறுதி நிகழ்வின் போது அரசி தனியாக அமரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

கோர்ன்வால் சீமாட்டி, கேம்ப்ரிட்ஜ் சீமாட்டி, அரசியின் சகோரி இளவரசரி மார்கரெட் உள்ளிட்டோரும் இறுதி நிகழ்வில் பங்கேற்பார்கள்.

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், இறுதி நிகழ்வு காட்சிகளை தனது வீட்டில் இருந்தபடி தொலைக்காட்சியில் பார்ப்பார் என்று பிரதமர் இல்ல செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, இறுதி நிகழ்வின் முக்கியமான நேரமான பிரிட்டன் நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு, இளவரசரின் மறைவுக்கு மெளன அஞ்சலி செலுத்தும் வகையில், லண்டனின ஹீத்ரூ விமான நிலையத்தில் முதல் ஆறு நிமிடங்களுக்கு எந்த விமானமும் தரையிறங்கவோ பறக்கவோ செய்யாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »