Press "Enter" to skip to content

கொரோனா தடுப்பூசிகள் பயன்படுத்தப்படவில்லை எனில் என்ன ஆகும்?

பட மூலாதாரம், Getty Images

பல நாடுகள் போதுமான அளவு தடுப்பூசிகளைப் பெறுவதற்கு துடியாய்த் துடிக்கும்போது, சில நாடுகள் தாங்கள் கேட்டுப் பெற்ற தடுப்பூசிகளைக் கூட பாதுகாப்பு காரணங்களுக்காக உபயோகப்படுத்த முடியாத நிலையில் உள்ளன.

ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா (AZ) மற்றும் ஜான்சன் & ஜான்சன் (J&J) தடுப்பூசிகளை இளம் வயதினருக்குப் பயன்படுத்தப் பல நாடுகள் தடைவிதித்துள்ளன. இதற்குக் காரணம் மிகக் குறைந்த அளவே காணப்படும் ரத்த உறைவு அபாயம் தான்.

டென்மார்க் AZ மருந்து வழங்குவதை முற்றிலுமாக நிறுத்திவிட்டது, பயன்படுத்தப்படாமல் விடுபட்டுள்ள அவற்றைப் பெறப் பல நாடுகளும் ஆர்வம் காட்டிவருகின்றன.

செக் குடியரசு, தைரியமாக, டென்மார்க்கிலிருந்து அனைத்து அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகளையும் வாங்க முன்வந்தது. எஸ்டோனியா, லாட்வியா மற்றும் லிதுவேனியாவும் ஆர்வத்தை வெளிப்படுத்தின.

இது எதனால்?

அரிதான, ஆனால் உயிருக்கு ஆபத்தான இரத்த உறைவுச் சம்பவங்கள் இளம் வயதினரை அதிக அளவில் பாதித்து வருகின்றன. ஆனால் உலகளவில் சுகாதாரத் துறை நிபுணர்கள், கோவிட் -19 இன் ஆபத்து தான் இதை விட மிக அதிகம் என்று சுட்டிக்காட்டுகின்றனர்.

இங்கிலாந்தின் மருந்துகள் கட்டுப்பாட்டாளரின் புள்ளிவிவரங்கள், 10 மில்லியன் பேருக்கு AZ தடுப்பூசி வழங்கப்பட்டால், அதில் 40 பேருக்கு இந்த உறைவு ஏற்படலாம் என்றும் சுமார் 10 பேருக்கு உயிரிழப்பு ஏற்படலாம் என்றும் கூறுகிறது. அந்த அளவுக்கு அரிதாகவே இந்நிலை காணப்படுகிறது.

அடுத்த மாதமே நீங்கள் கொலை செய்யப்படுவதற்கும் 250 மைல் தேர் பயணம் மேற்கொண்டபின் விபத்தில் உயிரிழப்பதற்கும் எந்த அளவுக்கு வாய்ப்புள்ளதோ அந்த அளவுக்குத் தான் இதிலும் உள்ளது.

ஆயினும்கூட, டேனிஷ் சுகாதார ஆணையம் AZ தடுப்பூசியின் பயன்பாட்டை நிறுத்த முடிவு செய்துவிட்டது. தன்னிடம் மற்ற தடுப்பூசிகள் இருப்பதாகவும் நோய்ப் பரவலும் கட்டுக்குள் இருப்பதாகவும் கடுமையான பாதகமான விளைவுகளின் ஆபத்து அறியப்பட்டதால், முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கையை எடுப்பதாகவும் அது கூறியது.

அதாவது, 2.4 மில்லியன் டோஸ்கள் AZ மருந்துகளை வாங்க டென்மார்க் அளித்த ஒப்புதல் இப்போது திரும்பப் பெறப்படும்.

கொரோனா

பட மூலாதாரம், Getty Images

ஜே & ஜே தடுப்பூசியால் ஏற்படும் ரத்த உறைவு குறித்தும் ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகிறது. பாதுகாப்புச் சோதனைகள் நிறைவடையும் வரை, 100 மில்லியன் டோஸ்கள் வாங்க ஒப்புக்கொண்ட அமெரிக்காவிலும் இதன் பயன்பாடு தடை செய்யப்பட்டிருக்கும்.

தென்னாப்பிரிக்காவிலும் ஜே & ஜே தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டுள்ளது. உள்ளூரில் உருவான வைரஸின் ஒரு பிறழ்வுக்கு எதிராக இது திறனுள்ளதாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவித்த பின்னரும் இந்தத் தடை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

உள்ளூர்ப் பிறழ்வுக்கு எதிராகக் குறைவான செயல்திறன் கொண்ட AZ, தென்னாப்பிரிக்காவில் அதிகம் விரும்பப்படவில்லை. இதன் விளைவாகப் பயன்படுத்தப்படாத தடுப்பூசிகள் மிக அதிகமாக மிஞ்சிவிட்டன.

அவை வீணாகப் போவதைத் தடுக்க, தென்னாப்பிரிக்கா 14 சக ஆப்பிரிக்க நாடுகளில் விநியோகிப்பதற்காக ஒரு மில்லியன் டோஸ்கள் AZ மருந்தை விற்பனை செய்தது.

இவற்றை வேறு இடத்தில் பயன்படுத்த முடியுமா?

கொரோனா

பட மூலாதாரம், EPA

ஏட்டளவில் கூறினால், முடியும். தங்களுக்குத் தேவைப்படாத மருந்துகளை விற்கவோ நன் கொடையாக அளிக்கவோ நாடுகள் தயாராக உள்ளன.

வியாழக்கிழமை, உலக சுகாதார அமைப்பின் (WHO) ஐரோப்பிய இயக்குநர், ஹான்ஸ் க்ளூக், டென்மார்க் அதைத் தான் செய்ய முற்படுவதாகக் கூறினார்.

டென்மார்க்கின் வெளியுறவு அமைச்சகம் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகளை ஏழை நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதற்குத் தயாராக உள்ளதாகவும் அதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயத் தொடங்கியுள்ளதாகவும் க்ளூக் ஒரு சந்திப்பில் கூறினார்.

டென்மார்க்கின் அண்டை நாடுகளில் சில, இந்தப் பயன்படுத்தப்படாத மருந்துகளைப் பெற ஆர்வம் காட்டியுள்ளன.

“தடுப்பூசி போட்டுக்கொள்ளத் தயாராக இருக்கும் மக்கள் அனைவருக்கும் போடும் அளவுக்கு எங்களிடம் போதுமான தடுப்பூசிகள் இல்லை என்று லிதுவேனிய பிரதமர் இங்க்ரிடா சிமோனைட் கூறினார். எனவே, டென்மார்க் எவ்வளவு கொடுத்தாலும் அதைப் பெற்றுக்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று அந்நாடு கூறியுள்ளது.

ஒரு ட்வீட்டில், செக் உள்துறை மந்திரி ஜான் ஹமாசெக், “டென்மார்க்கிலிருந்து அனைத்து அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகளையும் வாங்குவதில்” தங்களது நாட்டின் ஆர்வத்தை அறிவிக்க ஒரு இராஜரீக அதிகாரிக்குத் தான் அறிவுறுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து டென்மார்க்கின் பதில் என்ன என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை – அதன் அரசாங்கம் இன்னும் கருத்துத் தெரிவிக்கவில்லை.

இதற்கிடையில், அந்தத் தடுப்பூசிகள் பாதுகாப்பாகச் சேகரித்து வைக்கப்படும். AZ மற்றும் J&J தடுப்பூசிகள் குளிர்சாதனப் பெட்டியின் வெப்பநிலையிலேயே சேமிக்க முடியும் என்பது ஒரு நல்ல விஷயம். இதனால் ஃபைசர் நிறுவன மருந்தை விட இது போக்குவரத்துக்கு எளிதானாக உள்ளது. ஃபைசர் மருந்துகள் -70 டிகிரியில் சேமிக்கப்பட வேண்டும். தடுப்பூசிகளுக்கு ஒரு காலாவதித் தேதியும் உற்பத்தியாளரால் நிர்ணயம் செய்யப்படுகிறது.

பயன்படுத்தப்படாத தடுப்பூசிகள் எத்தனை?

கொரோனா

இது குறித்த உலகளாவிய தரவு எதுவும் இல்லை, ஆனால் பிராந்தியத் தரவு ஒரு தெளிவான பார்வையைத் தருகிறது. எடுத்துக்காட்டாக, டென்மார்க் ஏப்ரல் 15 ஆம் தேதி நிலவரப்படி 2,02,920 டோஸ்கள் AZ மருந்தைத் பெற்றுள்ளதாக, ஐரோப்பிய நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் (ECDP) புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

அவற்றில், 1,50,671 டோஸ்கள் பயன்படுத்தப்பட்டு, 52,249 டோஸ்கள் பயன்படுத்தப்படாமல் இருக்கின்றன.

ஐரோப்பா முழுவதும் இதையே ஒத்திருக்கிறது. அங்கு பல நாடுகள் AZ மற்றும் J&J தடுப்பூசிகளை வயதானவர்களுக்கு மட்டுமே வழங்குகின்றன.

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையங்களின் தரவு பல மாநிலங்களில் உபரி டோஸ்கள் இருப்பதைக் காட்டுகிறது.

அலபாமா (37%), அலாஸ்கா (35%), வெர்மான்ட் (27%) மற்றும் வட கரோலினா (24%) உள்ளிட்ட மாநிலங்களில் வழங்கப்பட்டதில் 20% க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் இன்னும் பயன்படுத்தப்படவில்லை.

இதற்கிடையில், மேற்கு வர்ஜீனியா, தனக்கு ஒதுக்கப்பட்ட அளவைப் பெரும்பாலும் பயன்படுத்திவிட்ட நிலையில், இன்னும் ஒரு கால் வாசி மருந்துகள் பயன்படுத்தப்படாமல் உள்ளதாகக் கூறுகிறது. ப்ளூம்பெர்க் வழங்கும் புள்ளிவிவரத்தின் படி, ஒவ்வொரு நாளும் சராசரியாக 3,50,000 டோஸ்கள் பயன்படுத்தப்படாமல் இருக்கின்றன.

சில பகுதிகளில் தடுப்பூசி போட விரும்பும் பொதுமக்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது இந்த நிலைக்குக் காரணமாக இருக்கலாம் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

இப்படிப் பயன்படுத்தப்படாத மருந்துகளைப்பகிர்ந்து கொள்ளத் திட்டம் ஏதேனும் உள்ளதா?

ஆம். உள்ளது. அது தான் கோவேக்ஸ் என்னும் திட்டம்.

கொரோனா

பட மூலாதாரம், Reuters

இது ஒரு சர்வதேச திட்டமாகும், இது பணக்கார நாடுகள், ஏழை நாடுகள் என அனைத்து நாடுகளிலும் தடுப்பூசிகள் நியாயமான முறையில் பகிரப்படுவதை உறுதிசெய்கிறது. இது உலக சுகாதார அமைப்பின் தலைமையில் செயல்படுகிறது. உலகளாவிய தடுப்பூசி கூட்டணி (காவி, gavi) மற்றும் தொற்றுநோய்களுக்கான தயார் நிலைப் புத்தாக்கங்களுக்கான கூட்டணி (செபி, CEPI) ஆகியவற்றை உள்ளடக்கியது.

2021 ஆம் ஆண்டின் இறுதியில், 190 நாடுகளில் உள்ள இரண்டு பில்லியனுக்கு மேற்பட்ட மக்களுக்குத் தடுப்பூசி வழங்குவதை கோவேக்ஸ், இலக்காகக் கொண்டுள்ளது.

பணக்கார நாடுகளில் மிச்சமாகும் தடுப்பூசிகளை ஏழை நாடுகளுக்கு நன்கொடையாக மறுபங்கீடு செய்வதும் இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

எடுத்துக்காட்டாக, சுமார் 450 மில்லியன் டோஸ்களை வாங்கிய இங்கிலாந்து, தனது உபரி மருந்துகளை ஏழை நாடுகளுக்கு நன்கொடையாக வழங்க உறுதிபூண்டுள்ளது. பிற பணக்கார நாடுகளும் ஏழை நாடுகளுக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

ஆயினும்கூட அவர்கள் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளனர். காரணம், அவர்களிடம் எத்தனை உபரி டோஸ்கள் உள்ளன, அவற்றை எப்போது வழங்குவார்கள் என்று அவர்கள் தெளிவுபடுத்தவில்லை.

குறைந்த பட்சம், பணக்கார நாடுகள் தங்கள் சொந்த மக்களுக்கு தடுப்பூசி போடுவதில் கவனம் செலுத்தும் அதே நேரத்தில் கோவேக்ஸ் திட்டத்திற்கு நிதி வழங்குகின்றன.

இந்த உபரி மருந்துகள் எப்போது, எப்படி பகிரப்படும்?

இதற்கு எளிதாக விடை கூற வேண்டுமானால், இது குறித்து எந்தத் தெளிவும் இன்னும் இல்லை என்று தான் கூற வேண்டும்.

கோவேக்ஸ் திட்டத்துக்குத் தனது உபரி மருந்துகளை வழங்க ஒப்புக்கொண்டுள்ள நாடுகளும் அவற்றின் எண்ணிக்கை குறித்தும் தரவுகள் உள்ளனவா என்று பி பி சி, காவி-யிடம் கேட்டது. அதற்கு “குறைந்த கால இடைவெளியில் மட்டுப்படுத்தப்பட்ட விநியோகச் சூழலைக் கருத்தில் கொண்டு, அதிகப்படியான விநியோகம் உள்ள நாடுகளிடமிருந்து நன்கொடை அளிக்கப்பட்ட அளவுகள் மற்றும் கோவேக்ஸ் வசதி மூலம் சமமாக ஒதுக்கப்படுவது உலகளவில் விரைவான, சமமான பகிர்வைப் பெறுவதற்கான தீர்வின் ஒரு முக்கிய பகுதியாக இருக்கும். நாங்கள் பல உயர் வருமான பொருளாதார நாடுகளிடம் அவற்றின் உபரி அளவைப் பகிர்வது பற்றிப் பேசி வருகிறோம். விரைவில் இதில் ஒரு உடன்பாடு எட்டப்படும் என்று எதிர்பார்க்கிறோம். ” என்ற பதில் தான் கிடைத்தது.

எனவே உதிரி தடுப்பூசிகளைப் பகிர்ந்து கொள்வதற்கான ஒப்பந்தங்கள் இறுதிக் கட்டத்தில் உள்ளன – ஆனால் யார், யாரிடம் எவ்வளவு பெறப்போகிறார்கள் என்பது குறித்த தகவல் இல்லாதது சங்கடத்தை ஏற்படுத்துகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »