Press "Enter" to skip to content

இந்தோனீசிய கடற் படை நீர் மூழ்கி கப்பலை காணவில்லை: கேஆர்ஐ நாங்கலா 402 எங்கே?

பட மூலாதாரம், ANADOLU AGENCY/GETTY IMAGES

இந்தோனீசிய கடற்படையை சேர்ந்த கேஆர்ஐ நாங்கலா 402 என்கிற நீர் மூழ்கிக் கப்பல், 53 வீரர்களுடன் காணாமல் போய்விட்டதாக அந்நாட்டு பாதுகாப்புப் படை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

புதன்கிழமை, பாலி தீவுக்கு வடக்கே அந்த நீர்மூழ்கிக் கப்பல் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. பிறகு, நீர் மூழ்கிக் கப்பலிலிருந்து எந்த வித தகவல் தொடர்பும் கிடைக்கவில்லை.

காணாமல் போன நீர்மூழ்கியின் பெயர் கேஆர்ஐ நாங்கலா 402. அக்கப்பலைக் கண்டுபிடிக்க போர் கப்பல்களை அனுப்பி இருப்பதாக இந்தோனீசியாவின் ராணுவத் தளபதி கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளிடமும் கேஆர்ஐ நாங்கலா 402 கப்பலின் தேடுதல் பணிக்கு உதவி கேட்டிருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். அந்நாடுகள் இந்தோனீசிய நீர் மூழ்கிக் கப்பல் குறித்தோ அக்கப்பல்லின் தேடுதல் பணிகள் குறித்தோ பொதுவெளியில் எதையும் குறிப்பிடவில்லை.

இந்தோனீசியாவின் பாலி தீவுகளின் கடற்கரையிலிருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில், புதன்கிழமை அதிகாலை அந்த நீர் மூழ்கிக் கப்பல் காணாமல் போனதாகக் கருதப்படுகிறது.

“கடற்படை தற்போது அந்த நீர்மூழ்கிக் கப்பல்லை தேடிக் கொண்டிருக்கிறது. கப்பல் காணாமல் போன பகுதி குறித்து நாங்கள் அறிவோம். அப்பகுதி கொஞ்சம் அதிக ஆழமானது” என முதல் நிலை அட்மிரல் ஜூலியல் விட்ஜோஜோனோ ஏஎஃப்பி செய்தி முகமையிடம் கூறினார்.

கேஆர்ஐ நாங்கலா 402 காணாமல் போன இடம்

ஆழமான பகுதியில் மூழ்கிச் செல்ல, அந்த நீர்மூழ்கிக்கு உத்தரவு கொடுக்கப்பட்ட பிறகு தான், அக்கப்பலுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது எனவும் சில செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

இந்தோனீசிய நாடு இயக்கிக் கொண்டிருந்த ஐந்து நீர் மூழ்கிக் கப்பல்களில் ஒன்று இது.

1970-களில் உருவாக்கப்பட்ட கே ஆர் ஐ நாங்லா 402 தென் கொரியாவில் இரண்டு ஆண்டுகள் பழுது பார்க்கப்பட்டது. கடந்த 2012-ம் ஆண்டு இந்த பழுது பார்க்கும் பணி நிறைவடைந்தது என ராய்டர்ஸ் செய்தி முகமை குறிப்பிட்டுள்ளது.

வரலாற்றிலேயே முதல் முறையாக இந்தோனீசியாவின் ஒரு நீர் மூழ்கிக் கப்பல் காணாமல் போயிருக்கிறது என இந்தோனீசிய கப்பல் படை செய்தித் தொடர்பாளர் பிபிசியிடம் கூறினார்.

இது போன்ற சம்பவங்கள் இதற்கு முன்பும் உலகத்தில் நடந்திருக்கிறது. கடந்த 2017-ம் ஆண்டு அர்ஜென்டினா பாதுகாப்புப் படையின் நீர் மூழ்கிக் கப்பல் 44 வீரர்களுடன் தெற்கு அட்லாண்டிக் கடல் பகுதியில் காணாமல் போனது.

கிட்டத்தட்ட ஓராண்டு காலத்துக்குப் பிறகு, காணாமல் போன நீர் மூழ்கிக் கப்பலின் பாகங்கள் கிடைத்தன. அதன் பின், அந்த கப்பல் அழிந்ததாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »