Press "Enter" to skip to content

கொரோனா இரண்டாம் அலை: `இந்தியாவுக்கு உதவ தயாராகவுள்ளோம்` – சீனா

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவின் தீவிரமான நிலை குறித்து மிகுந்த கவலை அடைந்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. சீன வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஹுவா சுன்யிங், “இந்தியாவின் சிறப்பு தேவை குறித்து தெரியப்படுத்தினால் நாங்கள் உதவுவதற்கு தயாராக இருக்கிறோம்,” என தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா இரண்டாம் அலையின் பாதிப்பு தீவிரமாகிக் கொண்டு வருகிறது.

இன்று இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 52 ஆயிரத்து 991 பேர். ஒரே நாளில் கொரோனா தொற்றால் 2,812 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லி உள்பட பல இடங்களில் மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறையும், ஆக்சிஜன் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது.

ஆக்சிஜன் பற்றாக்குறையால் பல உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.

சீனாவை தவிர்த்து, அமெரிக்கா, பிரிட்டன், ஃபிரான்ஸ், ஜெர்மனி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளும் இந்தியாவுக்கு உதவு முன் வந்துள்ளன. இதற்கிடையில் இந்தியாவுக்கான சீன தூதர் சன் வீய்டாங், கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்திற்கு சீனா உறுதியாக ஆதரவளிக்கும் என ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு தேவையான மருத்துவ உபகரணங்களை தயாரிக்கும் சீன நிறுவனங்களை வழிநடத்தவும் ஊக்குவிக்கவும் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஹாங்காங்கில் இருந்து டெல்லிக்கு 10 ஆயிரம் ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரங்களை அடுத்த 7 நாள்களில் வழங்கப் போவதாகவும் சீனத் தூதரகம் கூறியுள்ளது.

இந்தியாவுக்கு உதவ முன்வந்த சுந்தர் பிச்சை, சத்திய நாதெள்ளா

சுந்தர் பிச்சை மற்றும் நாதெள்ளா

பட மூலாதாரம், Getty Images

கொரோனா இரண்டாவது அலையின் பிடியில் சிக்கித் திணறும் தங்களது சொந்த நாடான இந்தியாவுக்கு உதவ கூகுளின் சுந்தர் பிச்சையும் மைக்ரோசாப்டின் சத்ய நாதெள்ளாவும் முன்வந்திருக்கிறார்கள்.

சுந்தர் பிச்சை தமிழகத்திலும், சத்ய நாதெள்ளா தற்போதைய தெலங்கனாவிலும் பிறந்தவர்கள்.

இந்தியாவில் நடக்கும் நிகழ்வுகளைக் கண்டு வேதனை அடைந்திருப்பதாககூறியுள்ள சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்தின் சார்பில் 135 கோடி ரூபாய் வழங்கப் போவதாக அறிவித்திருக்கிறார்.

இந்தியாவின் நிலை கண்டு மனம் உடைந்திருப்பதாகக் கூறியுள்ள சத்ய நாதெள்ளா, ஆக்சிஜன் பற்றாக்குறையில் இருந்து மீள்வதற்கு உதவி செய்ய இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

கூகுளின் இந்தியத் துணைவரான சஞ்சய் குப்தாவின் அறிக்கையை தனது ட்விட்டர் பக்கத்தில் சுந்தர் பிச்சை பகிர்ந்துள்ளார்.

கூகுளின் தொழில்நுட்பச் சேவைகள் வழியாக இந்திய மக்களுக்குத் தேவையான தகவல்களையும் உதவிகளையும் வழங்க விரும்புவதாக அந்த அறிக்கையில் சஞ்சய் குப்தா குறிப்பிட்டுள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு நிதி வழங்கும் வகையில் முதல் கட்டமாக உதவ இருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆக்சிஜன் சேகரிக்கும் இயந்திரங்களை இந்தியாவுக்கு வழங்கப் போவதாக சத்தய நாதெள்ளாகூறியிருக்கிறார்.

இந்தியாவுக்கு உதவ முன்வந்திருக்கும் அமெரிக்காவுக்கு நன்றி தெரிவித்திருக்கும் அவர் மைக்ரோசாப்டின் தொழில்நுட்பங்கள் மூலமாக உதவி செய்ய இருப்பதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கோவிஷீல்ட் தடுப்பு மருந்து தயாரிப்பதற்கான மூலப்பொருள்கள் மீது விதிக்கப்பட்டிருந்த தடையை அமெரிக்கா அகற்றியதற்கும் சத்ய நாதெள்ளா நன்றி தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »