Press "Enter" to skip to content

கூகுள் வலைதளத்தை 215 ரூபாய் கொடுத்து வாங்கிய அர்ஜென்டினாவின் வெப் டிசைனர் – அடுத்து நடந்தது என்ன?

பட மூலாதாரம், Google design

பிரபல நிறுவனங்களின் வலைதளத்தை வாங்குவது அத்தனை எளிதான காரியமல்ல. அப்படியே வாங்க விரும்பினாலும், பல லட்சம் ரூபாய் கொடுத்து தான் வாங்க வேண்டி இருக்கும்.

ஆனால் அர்ஜென்டினாவில் வெறும் 270 பெசோ ($2.9 டாலர், இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 215 ரூபாய்) கொடுத்து www.google.com.ar என்கிற அர்ஜென்டினா நாட்டுக்கான கூகுள் வலைதளத்தை வாங்கிவிட்டார் ஒரு 30 வயது வலைதள வடிவமைப்பாளர்.

அர்ஜென்டினா நாட்டுக்கான கூகுள் வலைதளம் கடந்த புதன்கிழமை சுமார் இரண்டு மணி நேரத்துக்கு ஏலத்துக்கு வந்த போது, அந்த வலைதள வடிவமைப்பாளர் அதை வாங்கிவிட்டார்.

நிகோலஸ் குரொனா என்கிற 30 வயதுக்காரர் தான், Google.com.ar என்கிற வலைதளத்தை சட்டப் பூர்வமாக, மிக சாதாரண முறையில் வாங்கிவிட்டார்.

“அவ்வலைதளத்தை வாங்க எனக்கு அனுமதி கிடைக்கும் என நான் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை” என பிபிசியிடம் கூறினார் நிகோலஸ்.

நிகோலஸ் குரொனா

பட மூலாதாரம், Nicolas Kurona

அர்ஜென்டினா நாட்டுக்கான கூகுள் அலுவலகமோ “சிறிது நேரத்துக்கு அவ்வலைதளத்தை வேறு ஒருவர் கைப்பற்றி வைத்திருந்தார்” என பிபிசியிடம் கூறியது. தங்கள் வலைதள உரிமைகள் மற்றும் கட்டுப்பாடுகளை மீண்டும் தாங்களே பெற்றுவிட்டதாகவும் குறிப்பிட்டு இருக்கிறது கூகுள்.

அர்ஜென்டினாவின் தலைநகரான பியூனஸ் ஏரிஸின் புறநகர்ப் பகுதியில், கடந்த புதன்கிழமை இரவு ஒரு வாடிக்கையாளருக்காக தன் மேஜையில் நிகோலஸ் வலைதளத்தை வடிவமைத்துக் கொண்டிருந்த போது அந்த சம்பவம் தொடங்கியது.

கூகுள் வலைதளம் சரியாகச் செயல்படவில்லை என வாட்ஸ் ஆப் செயலி மூலம் நிகோலஸ்ஸுக்கு செய்திகள் வரத் தொடங்கின.

“நான் www.google.com.ar வலைதளத்தை இணையத்தில் தேடினேன், அது வேலை செய்யவில்லை” என்கிறார்.

“ஏதோ வித்தியாசமாக நடக்கிறது என யோசித்தேன்”

’.ar’ வலைதளங்களை நிர்வகிக்கும் நெட்வொர்க் இன்ஃபர்மேஷன் சென்டர் (என் ஐ சி) அர்ஜென்டினாவுக்குச் சென்று கூகுளைத் தேடிப் பார்த்தேன். அர்ஜென்டினா நாட்டுக்கான கூகுள் வலைதளத்தை வாங்கலாம் எனக் காட்டியது.

அதை வாங்க முடியாது, வேலைக்கு ஆகாது என நினைத்துக் கொண்டே, அந்த வலைதளத்தை வாங்குவதற்கான வழிமுறைகளைப் பின்பறினார். “அதன் பிறகு, நான் கூகுள் வலைதளத்தை வாங்கியதற்கான ரசீது என் மின்னஞ்சலுக்கு வந்தது” என்கிறார் நிகோலஸ்.

கூகுள் வலைதளத்தை வாங்கியதற்கான ஸ்கிரீன் ஷாட்

பட மூலாதாரம், Network Information Center, Argentina

நிகோலஸ் அர்ஜென்டினாவுக்கான கூகுள் வலைதளத்தை வாங்கிய என்.ஐ.சியின் ரசீதை பிபிசியிடம் பகிர்ந்து கொண்டார். அதில் அவ்வலைதளத்தை 270 பெசோ கொடுத்து வாங்கியிருப்பதைப் பார்க்க முடிந்தது.

அதிர்ச்சி அடைந்தேன்

www.google.com.ar வலைதளத்தை தேடிப் பார்த்தார். “அதில் என் விவரங்கள் தோன்றின” என்கிறார்.

“நான் வலைதளத்தைப் பார்த்து அப்படியே உறைந்து போய்விட்டேன். இப்போது என்ன நடந்தது என என்னால் நம்ப முடியவில்லை”

கடந்த புதன்கிழமை இரவு உள்ளூர் நேரப்படி, இரவு 9 மணிக்கு நிகோலஸ் அர்ஜென்டினாவுக்கான கூகுள் வலைதளத்தை வாங்கினார். கூகுளைத் தேடும் லட்சக் கணக்கானவர்கள், www.google.com.ar வலைதளத்துக்கு வருபவர்கள் தற்போது தர்க்க ரீதியாக அப்போது நிகோலஸுக்கு வந்து கொண்டு இருந்தார்கள்.

“எனக்கு எந்த வித தவறான நோக்கமும் இல்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் வாங்க முயற்சித்தேன், என் ஐ சி அவ்வலைதளத்தை வாங்க அனுமதித்தது” என்கிறார் நிகோலஸ்.

அடுத்த சில நிமிடங்களில் நிகோலஸின் இந்த விவரங்கள் பெரிய செய்தியாகிவிட்டது.

“வலைதளத்தை வாங்கும் நடைமுறைகள் எல்லாம் நிறைவடைந்து, என் விவரங்கள் அவ்வலைதளத்தில் தோன்றிய பிறகு, ஏதோ நடக்கப் போகிறது என எனக்குத் தெரிந்தது. நான் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்தேன்” என்கிறார்.

இந்த கூகுள் வலைதள விவகாரம் தொடர்பாக என்ன நடந்தது என்பதைத் தெளிவுபடுத்த நிகோலஸ் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதாகக் கூறுகிறார்.

என்ன நடந்தது?

கூகுள் தன் வலைதளத்தின் பெயருக்கு கட்டணம் செலுத்தி புதுப்பிக்க மறந்திருக்கலாம் என ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது. ஆனால் கூகுளோ, தன் வலைதளத்துக்கான உரிமை காலாவதி ஆகவில்லை எனவும், ஜூலை 2021 வரை கால அவகாசம் இருப்பதாகவும் கூறுகிறது.

காலாவதியான அர்ஜென்டினா வலைதளங்கள் மற்றும் பதிவு செய்த வலைதளங்களைப் பின் தொடரும் ‘ஓபன் தரவு கோர்டோபா’ குழுமம் மேலே கூறிய வாதத்தை ஆமோதிக்கிறது.

இப்போது வரை கூகுள் வலைதளத்தின் பெயர் ஏன் வெளியிடப்பட்டது என தெளிவாகத் தெரியவில்லை.

என்ன நடந்தது என தனக்குத் தெரியவில்லை எனவும், நிறைய ஊடக கவனம் கிடைப்பது ஒரு மாதிரி வித்தியாசமாக உணர்வதாகவும் கூறுகிறார். நிகோலஸை ட்விட்டரில் ஒரு சாரார் கதாநாயகன் போல தூக்கி வைத்து கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள். இந்த விவகாரம் தொடர்பாக என்ன நடந்தது என விளக்கமளித்திருக்கும் நிகோலஸின் ட்விட்டுக்கு 80,000 லைக்குகள் குவிந்திருக்கின்றன.

தான் எந்த வித பிரச்னையிலும் சிக்கவில்லை என்பதை தெரிந்து கொண்ட பிறகு, கொஞ்சம் ஆசுவாசப்படுவதாகக் கூறினார் நிகோலஸ்.

கூகுள் வலைதளத்தை வாங்கிய சிறிது நேரத்துக்குப் பிறகு, என் ஐ சி அமைப்பு, அவ்வலைதளத்தை தன்னிடம் இருந்து பறித்துவிட்டதாகக் கூறுகிறார் நிகோலஸ். அதோடு, அவ்வலைதளத்தை வாங்க செலவழித்த 270 பெசோவை திருப்பிக் கொடுக்கவில்லை எனவும் குறிப்பிடுகிறார்.

கூகுள் நிறுவனம் தன்னோடு தொடர்பு கொள்ளவில்லை எனவும், தனக்கு பணம் எதுவும் கொடுக்கவில்லை எனவும் கூறுகிறார்.

கூகுள் நிறுவனம் எப்படி தன் வலைதளத்தை மீண்டு கைப்பற்றியது என்பது குறித்து இதுவரை விளக்கமளிக்கவில்லை.

கடந்த புதன்கிழமை என்ன நடந்தது என்பதைக் குறித்து கூகுள் விசாரித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் சில காரணங்களுக்காக, வெகு சில நிமிடங்களாவது கூகுள் நிறுவனம் தன் அர்ஜென்டினா வலைதளத்தின் கட்டுப்பாட்டை 30 வயது வலைதள வடிவமைப்பாளரிடம் இழந்துவிட்டது என்பது மட்டும் தெரிகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »