Press "Enter" to skip to content

கொரோனா இரண்டாம் அலை: “எந்த நேரத்திலும் இந்தியாவுக்கு உதவ தயார்” – உதவிகரம் நீட்டும் சீனா

பட மூலாதாரம், Getty Images

சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி, எந்த நேரத்திலும் இந்தியாவுக்கு உதவ சீனா தயாராகவுள்ளது என தெரிவித்துள்ளார்.

“இந்தியாவின் தேவையைப் பொறுத்து எந்த நேரத்திலும் உதவுவதற்கு சீனா தயாராகவுள்ளது,” என அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

“இந்தியாவுக்கு உதவும் பணியில் சீன நிறுவனங்கள் அரசின் உதவியுடன் சிறப்பாக செயல்பட்டன. முதல் கட்ட ஆக்சிஜன் இயந்திரங்கள் இந்தியாவை சென்றடைந்துள்ளன.” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கோவிட் – 19 குறித்து ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், நேபாளம், இலங்கை மற்றும் வங்கதேசத்தின் வெளியுறவுத் துறை அமைச்சர்களுடன் காணொளி கான்ஃபிரன்ஸிங்கில் ஆலோசித்தார் வாங் யி.

நேற்று பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் இந்தியாவுக்கு ஆதரவாகச் சீனா இருக்கும் என இலங்கையில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்தது.

மேலும் ஹாங்காங்கில் இருந்து டெல்லிக்கு 10 ஆயிரம் ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரங்களை அடுத்த 7 நாள்களில் வழங்கப் போவதாகவும் சீனத் தூதரகம் தெரிவித்திருந்தது.

சீனா மட்டுமல்ல, ஃபிரான்ஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர், பூடான், ஜெர்மனி, செளதி அரேபியா, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளும் இந்தியாவுக்கு உதவ தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளன.

பிரிட்டனிலிருந்து இந்தியா வந்த உதவிகள்

பிரிட்டனிலிருந்து வெண்டிலேட்டர்கள் மற்றும் ஆக்சிஜன் உபகரணங்கள் செவ்வாயன்று டெல்லி வந்து இறங்கியது.

இது `சர்வதேச ஒத்துழைப்பு` என பிரிட்டனின் வெளியுறவுத் துறை அமைச்சர் அரிண்டாம் பாக்சி தெரிவித்துள்ளார்.

செவ்வாயன்று இந்தியாவில் மூன்று லட்சத்து 20 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதுவரை இந்தியாவில் கொரோனா தொற்றால் இரண்டு லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவுக்கு உதவும் வெளிநாடுகள்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்ட்ராசெனீகா தடுப்பு மருந்து 60 மில்லியன் டோஸ் அளவில் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் என தெரிவித்துள்ளார். எந்தெந்த நாடுகள் என குறிப்பிடவில்லை என்றாலும், பிரதானமாக இந்தியாவுக்கு கிடைக்கலாம் என கூறப்படுகிறது.

பெண்

பட மூலாதாரம், Getty Images

உலக சுகாதார நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தாரிக் ஜாசார்விக், இந்தியாவுக்கு 4000 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்படும் என தெரிவித்தார்.

ஃபிரான்ஸ், ஆக்சிஜன் உற்பத்தி அலகுகளையும், ஆக்சிஜன் கண்டெய்னர்களையும், சுவாசக் கருவிகளையும் வழங்கவுள்ளது.

தாய்லாந்து மற்றும் சிங்கப்பூரிலிருந்து ஏற்கெனவே காலி சிலிண்டர் உருளைகள் வந்து இறங்கியுள்ளன.

“ஃபிரான்ஸும் இந்தியாவும் எப்போதும் ஒத்துமையாக இருந்துள்ளது. எங்களின் உதவியை வழங்க நாங்கள் தயாராகவுள்ளோம். மருத்துவ உபகரணங்கள், வெண்டிலேட்டர்கள், மற்றும் எட்டு ஆக்சிஜன் ஜெனிரேட்டர்களை இந்தியாவுக்கு ஃபிரான்ஸ் அனுப்பும்,” என அந்நாட்டு அதிபர் மக்ரோங் தெரிவித்துள்ளார்.

தடுப்பு மருந்து என்ன நிலவரம்?

வரும் மே ஒன்றாம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தடுப்பு மருந்து செலுத்தி கொள்ளலாம் என இந்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால் தடுப்பு மருந்துகளை தயாரிக்கும் சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா மற்றும் பார்த் பயோடெக் நிறுவனங்கள் இந்த தேவையை பூர்த்தி செய்ய இயலாமல் போகலாம் என அச்சம் தெரிவித்துள்ளன..

ஆனால் தடுப்பு மருந்து தட்டுப்பாடு இல்லை என அரசு தெரிவித்துள்ளது. மேலும் மே இறுதியில் சீரம் இன்ஸ்டிட்யூடில் 100மில்லியன் டோஸ் தடுப்பு மருந்தை தயாரிக்க நிதி வழங்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவிக்கிறது.

இருப்பினும் சில மாநிலங்கள் தங்களுக்கு தேவையான தடுப்பு மருந்துகள் கிடைக்காமல் போகலாம் என தெரிவித்துள்ளன. தடுப்பு மருந்துக்கான தேவை அதிகரித்திருப்பதனால் இந்த அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்தியா இதுவரை தனது மக்கள் தொகையில் 10 சதவீதம் பேருக்கு முதற்கட்ட தடுப்பு மருந்தை வழங்கியுள்ளது.

இந்நிலையில் கொரோனா தொற்றை எதிர்கொள்ள கடந்த முறையைக் காட்டிலும் இந்த முறை இந்தியா தயாராகவே இருந்தது என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் தெரிவித்துள்ளார்.

2020ஐ காட்டிலும் அதிகப்படியான அனுபவத்துடன் மனதளவிலும் உடலளவிலும் கொரோனா தொற்றை எதிர்கொள்ள இந்தியா தயாராகவே இருந்தது என அவர் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »