Press "Enter" to skip to content

பருவநிலை மாற்றம்: ஒரு சிறிய பச்சை கல் நமது எதிர்காலம் குறித்து விடுக்கும் எச்சரிக்கை

  • ஜோனாதன் அமோஸ்
  • அறிவியல் செய்தியாளர்

பட மூலாதாரம், CHRISTINE SIDDOWAY

இது ஒரு சாதாரண பச்சை நிறக் கல். அதன் அகலமான பகுதி 4 சென்டிமீட்டருக்கும் கொஞ்சம் அதிகம். அவ்வளவுதான். ஆயினும் இந்த சிறிய கல் நம் அனைவரின் எதிர்காலம் குறித்த முக்கியமான குறிப்புகளை வைத்திருக்கிறது.

இது நவீனகால மேற்கு அண்டார்டிகாவின் ஆழமான கடலடி மண்ணிலிருந்து எடுக்கப்பட்டது.

அதைக் கண்டுபிடித்த விஞ்ஞானிகள் அது உண்மையில் அங்கு இருந்திருக்கக்கூடாது என்று கூறுகிறார்கள்.

இது ‘ட்ராப் ஸ்டோன்’ என்று அழைக்கப்படுகிறது. இது பனிக்கட்டியால் கொண்டுவரப்பட்ட கல். இது பனிக் கண்டத்திலிருந்து பனிக்கட்டி ஆற்றினால் பெயர்த்து கொண்டுவரப்பட்ட சிறியகல்.

அண்டார்டிகாவில் இருந்து அதை தன்னுடன் கொண்டுவந்த பனிப்பாறை அதை கரையைத் தாண்டி கடலில் கொண்டு சேர்த்தது.

இந்தப்பாறையின் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், அது எங்கிருந்து தோன்றியது என்பதை ஆராய்ச்சியாளர்கள் சொல்ல முடியும்.

பனி

பட மூலாதாரம், PHIL CHRISTIE/IODP/EXP379

சமீபத்திய புவித் தடய நுட்பங்களைப் பயன்படுத்தி, இது எல்ஸ்வொர்த் மலையில் இருந்து வந்தது என்று அவர்கள் நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றனர். கரையில் இருந்து சுமார்1,300 கி.மீ தொலைவில் அமுண்ட்சென் கடலடித் தரையிலிருந்து, ஒரு அகழ்வுக்கப்பல் மூலம் இந்தக் கல் வெளியே கொண்டுவரப்பட்டது.

இதில் விந்தை என்னவென்றால் எல்ஸ்வொர்த், அண்டார்டிகாவின் மிக உயரமான மலைத்தொடர். இது கண்டத்தின் தொலைதூரத்தில் உட்புறத்தில் உள்ளது. இது போன்ற ஒரு சிறிய கல் ஒரு பனிப்பாறை மூலமாக இவ்வளவு தூரம் கொண்டுசெல்லப்படுவதற்கான சாத்தியம் மிகவும் குறைவு என்றே சொல்லலாம்.

“அந்தப் பொருளை பற்றிய எங்கள் ஆய்வுகள் என்ன தெரிவிக்கின்றன என்றால், ஓரிடத்தில் கொண்டு சேர்த்தல். பிறகு மீண்டும் அங்கிருந்து அடித்துச்செல்லப்படுதல்தொலைபேசிற பல படிகள் கொண்ட நீண்ட பயணத்தை அந்தக் கல் தாங்காது. பனிக்கட்டிக்கும் பாறைப்படுகைக்கும் இடையேயான நல்ல தொடர்பும் இருந்திருக்க முடியாது. இது அழிக்கப்பட்டு உடைபட்டுவிடும்,” என்று அமெரிக்காவின் கொலராடோ கல்லூரியின் புவியியல் பேராசிரியர் கிறிஸ்டின் சித்தோவே பிபிசியிடம் தெரிவித்தார்.

எல்ஸ்வொர்த் மலைகள்தான் அண்டார்டிகாவின் உயரமான மலைகள்

பட மூலாதாரம், MICHAEL STUDINGER/NASA

பிறகு இந்த சிறு கல் இவ்வளவு தூரம் பயணம் செய்தது எப்படி? 2019 ஆம் ஆண்டில் தனது சர்வதேச பெருங்கடல் கண்டுபிடிப்புத் திட்டத்தின் (ஐஓடிபி) “எக்ஸ்பெடிஷன் 379” இல் , ஜாய்ட்ஸ் ரெசல்யூஷன் கப்பல் சேகரித்த படிமங்களின் வயது பற்றிய விவரங்களில் இதற்குப் பதில் உள்ளது.

புவியியலாளர்களின் காலக்கணிப்பின்படி ப்ளியோசீன் யுகத்தின் நடுப்பகுதியை சேர்ந்தது அது. அதாவது சுமார் 30 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பான காலம்.

புவியின் வரலாற்றில், ப்ளியோசீனின் நடுப்பகுதி ஒரு கண்கவர் காலம். ஏனென்றால் இன்றைய காலகட்டத்தில் அதன் வலுவான எதிரொலி உள்ளது.

வளி மண்டலத்தில் கரியமில வாயு ஒரு மில்லியனுக்கு 400 துகள்கள் என்ற அளவை அப்போதுதான் கடைசியாக எட்டியது.

அப்போது வெப்பநிலை அதிகமாக இருந்தது. உலகளவில் 2-3 டிகிரி வரை அதிகமாக இருந்திருக்கக்கூடும். மேலும் கடல் மட்டங்களும் தற்கால கடல் மேற்பரப்பை ஒப்பிட 10-20 மீட்டர் அதிக உயரத்தில் இருந்திருக்கலாம்.

இங்குதான் நமது சிறிய பச்சை மணற்கல் கதைக்குள் வருகிறது.

கடல்

பட மூலாதாரம், PHIL CHRISTIE/IODP/EXP379

ப்ளியோசீன் யுகத்தின் நடுப்பகுதியில் இருந்த கடல் மட்டம் , மேற்கு அண்டார்டிக் பனிப்படலம் அல்லது அதன் குறிப்பிடத்தக்க பகுதிகள் கரைந்துவிட்டன என்பதையும் அதன் இடத்தில் ஒரு பெரிய திறந்த கடல் பாதை இருந்தது என்பதையும் குறிக்கின்றன.

இன்று அண்டார்டிகாவின் வரைபடங்களைப் பார்க்கும்போது இதை கற்பனை செய்வது கடினம். அதன் பனிப்பாறையை தொடர்ச்சியான திடமான ஒன்றாக நாம் பார்க்கிறோம். ஆனால் இந்தப்பனியை நீக்கிவிட்டால், நாம் காண்பது ஒரு பெரிய தீவுக்கூட்டம்.

இந்த உருளைக்கல் இவ்வளவு தூரம் எப்படி பயணிக்க முடியும் என்பதை இது விளக்குகிறது.

கற்கள்

பட மூலாதாரம், VIV CUMMING/IODP/EXP379

எல்ஸ்வொர்த் மலைகளில் இருந்து அதை எடுத்துச்சென்ற பனிக்கட்டி, பின்னர் ஒரு பனிப்பாறையை உருவாக்கி அதன் மூலம் திறந்த கடல்பாதை வழியாக ஆயிரம் கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்திற்கு அதை கொண்டுவந்து சேர்த்தது. எக்ஸ்பெடிஷன் 379 இறுதியில் அதை அங்கிருந்து மீட்டது.

” பனிப்படலம் மிகவும் விரைவாக மறைந்துவிடும் என்பதையும், அது தன்னை உடனடியாக மீண்டும் உருவாக்கிக்கொள்ளும் என்பதையும் எங்கள் கண்டுபிடிப்புகள் உறுதிப்படுத்துகின்றன” என்று பேராசிரியர் சித்தோவே விளக்கினார்.

” பனிப்படலம் கணிசமான அளவிற்கு குறிப்பாக நடு ப்ளியோசீன் யுகத்தில் உருகிவிட்டது என்பதை நாங்கள் தெரிந்துகொண்டோம். அது பற்றி மேலும் ஆய்வு செய்துவருகிறோம்,” என்று அவர் கூறுகிறார்.

பச்சை கற்கள்

பட மூலாதாரம், CHRISTINE SIDDOWAY

“இது ஒரு இடைவெளி. நாம் நுழைந்து கொண்டிருக்கும் காலநிலை மாதிரிகளை ஆய்வு செய்யும்போது, ப்ளியோசீன் யுகத்தில் நிலவியதைப் போன்ற காலநிலை நிலைமைகளில்தான் நாம் நுழைகிறோம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் புவி வெப்பமயமாதல் இப்போது இருக்கும் விகிதத்தில் தொடர்ந்தால், நாம் அங்கே இருப்போம்,” என்று அவர் குறிப்பிட்டார்.

மேற்கு அண்டார்டிக் பனிப்படலம் கூடிய விரைவில் உருகிவிடும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் இந்த சிறிய உருண்டை மணற்கல் ஒரு எச்சரிக்கை என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். பருவநிலை நெருக்கடிக்கு நாம் விரைவில் தீர்வு காணாவிட்டால், அதே போன்ற ஒரு சூழல் உருவாகக்கூடும் என்று அவர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்த வாரம் நடைபெற்ற ஐரோப்பிய புவி அறிவியல் ஒன்றியம் (ஈ.ஜி.யூ) பொதுச் சபை கூட்டத்தில், ‘ஐ.ஓ.டி.பி எக்ஸ்பெடிஷன் 379’ ஆராய்ச்சி விவரங்களை பேராசிரியர் சித்தோவே வழங்கினார். பொதுவாக ஆஸ்த்திரியாவின் வியன்னாவில் நடைபெறும் #vEGU21 மாநாடு, கோவிட் கட்டுப்பாடுகள் காரணமாக இந்த ஆண்டு இணையத்தில் நடைபெறுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »