Press "Enter" to skip to content

சௌதியில் தடுத்து வைக்கப்பட்ட இலங்கை வீட்டுப் பணிப்பெண்கள் – உதவி கேட்டுக் கதறல்

  • சரோஜ் பதிரானா
  • பிபிசி உலக சேவை

பட மூலாதாரம், Amnesty International

2019-ஆம் ஆண்டு மார்ச் மாதம், துஷாரியை இலங்கையில் விட்டுவிட்டு செளதி அரேபியாவுக்கு வீட்டுப் பணிப்பெண் உதவியாளராகச் செல்லும்போது துஷாரிக்கு 16 வயதிருக்கும்.

துஷாரி தன் 43 வயதான தாய் சுமித்ராவை அதன் பிறகு பார்க்கவே இல்லை.

செளதி அரேபியாவில் கிட்டத்தட்ட 5 லட்சம் இலங்கை புலம்பெயர் பணியாளர்கள் இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் வீட்டுப் பணிப்பெண் உதவியாளர்களாக பணியாற்றுபவர்கள்.

செளதி அரேபியாவுக்கு வந்து ஏழு அல்லது எட்டு மாதங்களுக்குப் பிறகு வீட்டுப் பணி உதவியாளராக பணியாற்றி கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டார்.

தற்போது நாட்டைவிட்டு வெளியேற்றும் மையத்தில் 40 இலங்கை பெண்களோடு தவித்துக் கொண்டிருக்கிறார். அவர்களது பிரச்சனையை அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு வெளியயே கொண்டு வந்திருக்கிறது.

“என் அம்மாவுக்கு வேலை கொடுத்தவரோடு தொழில் ரீதியிலான உறவு முறை மிக மோசமாக இருந்தது. அவருக்கு சம்பளம் கூட கொடுக்கப்படவில்லை. போதுமான உணவு கொடுக்கப்படவில்லை” என துஷாரி தொலைபேசி மூலம் பிபிசியிடம் கூறினார்.

“ஒரு நாள் என் தாய் குளியலறையில் வைத்து பூட்டப்பட்டார். அந்த நாள் முழுவதும் அவர் குளியலறையிலேயே வைக்கப்பட்டார். ஒரு குவளை தண்ணீர் கூட கொடுக்கவில்லை”

எனவே சுமித்ரா தனக்கு வேலை கொடுத்தவரிடம் இருந்து விலக தீர்மானித்தார். செளதி அரேபியாவின் விதிமுறைகள் படி அவர் உடனடியாக சட்டவிரோதமாக குடியேறியவராகிவிட்டார்.

வெளிநாடுகளிலிருந்து வீட்டுப் பணி உதவியாளராக வருபவர்கள், சட்டப்படி செளதி அரேபியாவில் வாழ்வதற்கு அவர்களுக்கு வேலை கொடுக்கும் முதலாளி அவர்களுக்கு ஸ்பான்சர் செய்ய வேண்டும்.

சுமித்ரா தன் முதலாளியிடம் இருந்து தப்பித்த பின், காவலர்களிடம் சிக்கிக்கொண்டார். காவலர்கள் அவரை வெளிநாட்டுக்கு அனுப்பும் மையத்தில் வைத்தனர். சுமித்ராவும் தன்னை இலங்கைக்கு அனுப்புவார்கள் என காத்திருக்கிறார்.

குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள்

காவல் வாகனத்தில் ஏறுவதற்கு முன் வெளிநாட்டுப் பணியாளர்கள் தங்கள் உடைமைகளோடு காத்திருக்கும் காட்சி

பட மூலாதாரம், Getty Images

செளதி அரேபியாவில் இருக்கும் வெளிநாட்டுக்கு அனுப்பும் மையத்தை குறித்து கேட்ட துஷாரி பயந்துபோய் இருக்கிறார். அப்படிப்பட்ட மையத்தில் தன் தாய் எப்படி சமாளிக்கிறார் எனவும் ஆலோசித்து கொண்டிருக்கிறார்.

“பத்துப் பேருக்கு கூட போதுமான இடம் இல்லாத அறையில் 40 பெண்கள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். சில நேரங்களில் பெண்கள், இடத்திற்காக ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். பச்சிளம் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் வயது முதிர்ந்த பெண்கள் என பலரும் அதில் அடக்கம்”

எட்டு மாதம் முதல் 18 மாத குழந்தைகள் உட்பட 41 இலங்கை பெண்கள் செளதி அரேபியாவின் தலைநகரான ரியாதில் இருக்கும் வெளிநாட்டுக்கு அனுப்பும் மையத்தில் அடைக்கப்பட்டு இருப்பதாக அம்னேஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு கூறுகிறது.

“மூன்று பெண்கள் மிக இளம் வயது குழந்தைகளை கையில் வைத்திருக்கிறார்கள். ஒருவருக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை தேவை. அம்மையத்தில் அடைக்கப்பட்டிருக்கும் பெண்களுக்கு அவர்கள் என்ன குற்றத்திற்காக அடைக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று அவர்களிடம் குறிப்பிடவில்லை. அதேபோல அவர்களுக்கு சட்டரீதியிலான உதவிகளும் வழங்கப்படவில்லை” என அம்னெஸ்டிட் இன்டர்நேஷனல் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

போதுமான விவரங்கள் இல்லை

செளதி அரேபியாவில் வீட்டுப்பணி உதவியாளர்களாக பணியாற்றிக் கொண்டிருக்கும் 30 லட்சம் தொழிலாளர்கள் அந்நாட்டின் தொழிலாளர் சட்டங்களால் பாதுகாக்கப்படவில்லை என்கிறது அம்னெஸ்டி இன்டர்நேஷனல்.

பட மூலாதாரம், Amnesty International

இந்த பிரச்சன குறித்து செளதி அரேபிய அதிகாரிகளிடம் முறையிட்டும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. எனவே நான் தான் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பை தொடர்பு கொண்டேன் என்கிறார் செளதி அரேபியாவில் பணியாற்றிக் கொண்டிருக்கும் இலங்கையைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர் கோஸ் மொஹிதின் அன்சார்.

“பல நாடுகளைச் சேர்ந்தவர்களும் அம்மையத்தில் அடைக்கப்படுறார்கள், ஆனால் மற்ற நாட்டைச் சேர்ந்த அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை எடுத்து தங்கள் நாட்டினரை, ஊருக்கு அனுப்புகிறார்கள். இலங்கை அரசு மட்டுமே பணியை தாமதப்படுத்தி கொண்டிருக்கிறது” என பிபிசியிடம் கூறினார் அவர்.

சிலமுறை அன்சாரி தானே முன்வந்து மையத்திற்கு சென்றார், ஆனால் அமையத்தில் அடைக்கப்பட்டிருக்கும் எவரையும் தனிப்பட்ட முறையில் சந்திக்க அனுமதிக்கப்படவில்லை.

“வெளி உலகில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது அவர்களுக்கு தெரியாது” என்கிறார் அன்சார்.

“செளதி அரேபிய அரசு விருப்பப்பட்டு அவர்களை அம்மையத்தில் வைத்திருக்கவில்லை. இலங்கை அரசு போதுமான நடவடிக்கைகளை எடுக்காத காரணத்தினால் தான் அவர்கள் இம்மையத்தில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்”

கொரோனா கட்டுப்பாடுகள்

செளதி அரேபியாவில் வெளிநாட்டுக்கு அனுப்பும் மையத்தில் வைக்கப்பட்டிருக்கும் பெண்களை இலங்கைக்கு அழைத்துவர முடியாததற்கு கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) கட்டுப்பாடுகளே காரணம் என இலங்கை அதிகாரிகள் தொடர்ந்து கூறுவதாக அம்மையத்தில் அடைக்கப்பட்டிருக்கும் பெண்களில் ஒருவரின் கணவர் பிபிசியிடம் கூறினார்.

பிராந்திய அலுவலகங்கள் மற்றும் குடியரசுத் தலைவர் அலுவலகம் வரை, தன் மனைவியை செளதி அரேபியாவிலிருந்து அழைத்து வர உதவி கேட்டு அணுகியதாக கூறுகிறார் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட தமிழர் ஜெயபரகாஷ்.

“என் மனைவிக்கு சாப்பிட உணவு இல்லை, குடிக்க தண்ணீர் எதுவுமே இல்லை. மூல நோய் இருப்பதால் அவளால் சரியாக உட்கார கூட முடியாது” என்கிறார்.

செளதி அரேபிய அதிகாரிகளிடமிரந்து எந்த ஒரு பதிலும் வராத போது, செளதி அரேபிய அதிகாரிகளோடு இதுதொடர்பாக விவாதித்திருக்கிறோம் உடனடியாக அவர்களை சொந்த நாட்டிற்கு அழைத்து வர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என இந்த விவகாரம் தொடர்பாக இலங்கையின் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிமல் சிறிபலா டி சில்வா கூறினார்.

ஆனால் எந்த ஒரு காலக்கெடுவையும் குறிப்பிடவில்லை.

‘மிகவும் பாதிக்கப்படும் பணியாளர்கள்’

சுனித்ரா செளதி அரேபியாவுக்குச் செல்வதற்கு முன், தன் 3 மகள்களையும் பார்த்துக் கொள்ள, தன் தாயை விட்டுச் சென்றிருந்தார்.

சுனித்ராவின் கணவருக்கு, சிறுநீரகப் பிரச்சனை இருக்கிறது. அவருக்கு நிரந்தரமாக எந்த ஒரு பணியும் இல்லை. அவரால் எந்த கடிணமான பணிகளையும் செய்ய முடியாது.

ஒரு பக்கம் சுனித்ரா ஓராண்டு காலத்துக்கு மேல் அம்மையத்தில் இருந்து வருகிறார். மறுபக்கம் கடந்த பிப்ரவரி 11-ம் தேதி சுனித்ராவின் தாயார் காலமாகிவிட்டார்.

தன் தாயாரின் மத ரீதியிலான சடங்கிலாவது சுனித்ரா பங்கெடுப்பார் என நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள் அவரின் குடும்பத்தினர். புத்த மதத்தில், ஒருவர் காலமாகி மூன்று மாதங்களுக்குப் பிறகு நடத்தப்படும் சடங்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

ரியாத் நகரத்தில் இருக்கும் கிங்டம் டவர்

பட மூலாதாரம், Getty Images

செளதி அரேபியா உட்பட, வளைகுடா நாடுகளில் புலம்பெயர் தொழிலாளர்களிலேயே வீட்டு உதவிப் பணியாளர்களின் நிலை மிகவும் மோசமாக இருப்பதை சுனித்ரா மற்றும் மற்ற பெண்களின் நிலை சுட்டிக் காட்டுகிறது என்கிறது அம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பு.

“சமீபத்தில் கொண்டு வரப்பட்ட தொழிலாளர் சீர்திருத்தத்தில் செளதி அரேபியா வீட்டுப் பணி உதவியாளர்களை நீக்கிவிட்டது. அதாவது வீட்டுப் பணி உதவியாளர்கள், தங்கள் முதலாளியின் அனுமதியின்றி, செளதி அரேபியாவை விட்டு வெளியேற முடியாது. இது அவர்கள் பாதிக்கப்படுவதற்கான சாத்தியக் கூறுகளை அதிகப்படுத்துகிறது” என்கிறது அவ்வமைப்பின் அறிக்கை.

சுனித்ராவின் குழந்தைகளை கவனித்து வந்த அவரது தாயார் காலமான பின், சுனித்ராவின் மூத்த மகள் துஷாரி தாயாகவும் பாதுகாவலராகவும் தன் இரண்டு தங்கைகளை கவனித்துக் கொள்கிறார். எனவே தன்னால் வேலைக்குச் செல்ல முடியாது என்கிறார்.

“பள்ளி கல்விக்குப் பிறகு, நான் ராணுவ பயிற்சிப் படிப்பை (Cadet Course) நிறைவு செய்தேன். நான் கப்பற்படையில் சேர விரும்புகிறேன்” என பிபிசியிடம் கூறினார் துஷாரி. “ஆனால் இப்போது, நான் வீட்டை விட்டு வெளியேற முடியாது” என்கிறார்.

இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் பெண்கள் மற்றும் அவரது குடும்பத்தினரின் பெயர்கள் பாதுகாப்பு கருதி மாற்றபட்டிருக்கின்றன.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »