Press "Enter" to skip to content

சீனாவில் இந்திய வகை கொரோனா திரிபு: எச்சரிக்கை விடுத்துள்ள சுகாதார அதிகாரிகள்

  • பிபிசி மானிடரிங்
  • .

பட மூலாதாரம், Costfoto/Barcroft Media via Getty Images

சீனாவிற்குள் வரும் பயணிகளில் இந்திய கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) திரிபு கண்டறியப்பட்டுள்ளதால் ஆபத்துகள் அதிகரிக்கலாம் என அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஐந்து நாள் தொழிலாளர் தின விடுமுறை வாரத்திற்கு முன்னதாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொது சுகாதார அவசரநிலைகளை சமாளிக்க அதிக அதிகாரங்களைக் கொண்ட ஒரு புதிய நோய் கட்டுப்பாட்டு பணியகத்தையும் சீனா உருவாக்கியுள்ளது.

இந்திய திரிபுக்கு எதிரான எச்சரிக்கை

அண்டை நாடான இந்தியாவில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கோவிட் -19 திரிபு, பி 1617, சீனாவில் உள்வரும் சில பயணிகளிடம் 14 நாள் தனிமைப்படுத்தலுக்குப் பிறகு கண்டறியப்பட்டதை அடுத்து, நாடு மிகுந்த உஷார் நிலையில் இருப்பதாக சீன சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர். சமீபத்திய வாரங்களில் இந்தியாவில் பி 1617 திரிபுதான், மாபெரும் இரண்டாவது அலை நோய்த்தொற்றைத் தூண்டியதா என்பதை விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

ஏப்ரல் 29 அன்று பீய்ஜிங்கில், அரசு சபையின் கூட்டு நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடைமுறையால் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பின் போது, சீனாவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் (சி.டி.சி) தலைமை தொற்றுநோயியல் நிபுணர் வு ஜுன்யோ இதை உறுதி செய்ததாக, தனிப்பட்ட முறையில் இயங்கும் சீன செய்தி வலைத்தளமான Guancha.cn (Observer) செய்தி வெளியிட்டுள்ளது. இருப்பினும், B1617 திரிபு காரணமாக வெளியிலிருந்து எத்தனை தொற்றுகள் வந்தன என்பதை அவர் குறிப்பிடவில்லை.

சில சீன நகரங்களில் இந்திய திரிபுபைக்கண்டறிவது ஒரு “கவலைக்குரிய பிரச்னை” என்று அவர் கூறினார். ஆனால் அந்த திரிபு எங்கே கண்டுபிடிக்கப்பட்டது என்பதை அவர் குறிப்பிடவில்லை.

இந்தியாவிலும் பிற இடங்களிலும் ஏற்பட்டுள்ள கோவிட் -19 நெருக்கடி, இந்த தொற்றுநோயைத் தடுப்பதும், கட்டுக்குள் கொண்டுவருவதும் வெகு தொலைவில் உள்ளது என்ற எச்சரிக்கையை மீண்டும் எழுப்பியுள்ளது என்றும் பெருந்தொற்று விரைவில் தீரும் அறிகுறி இல்லை என்றும் அவர் மேலும் கூறினார்.

ஏப்ரல் மாதத்தில் நாட்டிற்குள் வந்த 364 பயணிகளுக்கு கோவிட் -19 தொற்று உறுதிசெய்யப்பட்டது என்றும் இது முந்தைய மாதத்தை விட சராசரியாக தினசரி 20 சதவீதத்திற்கும் அதிகமாகும் என்றும் நாட்டின் உயர்மட்ட சுகாதார அமைப்பான தேசிய சுகாதார ஆணையத்தின் (என்.எச்.சி) செய்தித் தொடர்பாளர் மி ஃபெங், செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்ததாக சீனா மத்திய தொலைக்காட்சி (கண்காணிப்பு தொலைக்காட்சி) தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 28 ஆம் தேதி, தென்மேற்கு நகராட்சியான சோங்கிங்கில் உள்ள சுகாதார அதிகாரிகள் இந்தியாவில் இருந்து வந்த நான்கு பேருக்கும், நேபாளத்திலிருந்து வந்த ஒருவருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டதாகத் தெரிவித்தனர். ஆனால் புதிய தொற்றுகள் B1617 திரிபு காரணமாக ஏற்பட்டதா என்பதை குறிப்பிடவில்லை என்று ஆங்கில மொழி ஹாங்காங் செய்தித்தாள், சவுத் சைனா மார்னிங் போஸ்ட், ஏப்ரல் 30 அன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஹாங்காங்கில் பதிவுசெய்யப்பட்ட சரக்குக் கப்பலான ஹுவாங் சன்ரைஸில் 11 மாலுமிகளுக்கு நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக, ஏப்ரல் 29 ம் தேதி, கிழக்கு ஜெஜியாங் மாகாண சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தக்கப்பல் முன்னதாக இந்தியா, வங்கதேசம் மற்றும் சிங்கப்பூருக்கும் சென்றிருந்தது என்று சி.சி.டி.வி தெரிவித்துள்ளது.

கோவிட் -19 விடுமுறை முன்னெச்சரிக்கைகள்

நாட்டிற்கு வெளியிலிருந்து வந்துள்ள தொற்றுகள் குறித்த எச்சரிக்கை, சீனாவின் ஐந்து நாள் மே தின அதாவது தொழிலாளர் தின கோல்டன் வீக் விடுமுறை நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டுள்ளது. .

சர்வதேச பயணங்களுக்கு அனுமதி இல்லையென்றாலும் கூட, விடுமுறை நாட்களில் சுமார் 265 மில்லியன் உள்நாட்டு பயணிகள் பயணிப்பார்கள் என்றும் தினசரி 54 மில்லியன் பயணங்கள் இருக்கும் என்றும் போக்குவரத்து அமைச்சகம் கணித்துள்ளது. 2019 மே தின விடுமுறை நாட்களில் ஏறக்குறைய இதே எண்ணிக்கை இருந்தது.

விடுமுறை நாட்களில் பெரிய கூட்டங்களை ஏற்பாடு செய்வதற்கும் பங்கேற்பதற்கும் எதிராக செய்தியாளர் சந்திப்பில் வு ஜுன்யோ எச்சரிக்கை விடுத்தார்.

பொது இடங்களில் காற்றோட்டம் மற்றும் சுகாதாரத்தை உறுதி செய்வதற்காக ஊழியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும், தொற்றுநோய் தடுப்பிற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வார்கள் என்றும் என்.எச்.சியின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு பணியகத்தைச் சேர்ந்த வாங் பின், செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். .

கலப்பு கோவிட் -19 தடுப்பூசிகள்

தடுப்பூசி பெறுநர்கள் வெவ்வேறு உற்பத்தியாளர்களால் ஒரே நுட்பத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் கோவிட் -19 தடுப்பூசிகளை,”சிறப்பு சூழ்நிலையில்” கலந்து பயன்படுத்தலாம் என்று வாங் பின் , செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்ததாக அரசு நடத்தும் பெய்ஜிங் டெய்லி செய்தித்தாளின் வலைத்தளம் குறிப்பிட்டுள்ளது. முதல் டோஸின் 3-8 வாரங்களுக்குள் இரண்டாவது ஊசி போட்டுக்கொள்ளப்பட வேண்டும் என்று வாங் கூறினார்.

சில இடங்களில் தடுப்பூசி பற்றாக்குறை இருப்பதான அறிக்கைகளுக்கு மத்தியில், தடுப்பூசி விநியோகம் அதிகரிக்கப்படும் என்றும் இரண்டாவது ஊசிக்காக காத்திருக்கும் மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் வாங் உறுதியளித்தார்.

ஃபைசர்-பயோஎன்டெக், தடுப்பூசி செயல்திறனை அதிகரிப்பதற்காக , சீனாவின் செயலிழக்க செய்யப்பட்ட அதாவது அடினோநச்சுநுண்ணுயிர் (வைரஸ்) வெக்டர் தடுப்பூசியுடன் பயோஎன்டெக் எம்ஆர்என்ஏ தடுப்பூசியை கலந்து பயன்படுத்துவது குறித்து ஆராய்ச்சி நடத்தி வருவதாக, அரசு நடத்தும் ஆங்கில செய்தித்தாள் குளோபல் டைம்ஸின் ஏப்ரல் 29 கட்டுரை தெரிவிக்கிறது.

ஃபைசர் எம்ஆர்என்ஏ தடுப்பூசிகளை சீனாவில் தயாரிக்கப்பட்ட சினோபார்மின் செயலிழக்கச்செய்யப்பட்ட நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தடுப்பூசியுடன் கலந்து பயன்படுத்துவது குறித்து ஹாங்காங்கில் ஆராய்ச்சியாளர்கள் ஒரு மருத்துவ பரிசோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.

புதிய நோய் கட்டுப்பாட்டு பணியகம்

பொது சுகாதார அவசரநிலைகளை சமாளிக்கும் நடவடிக்கைகள் தொடர்பாக வழிநடத்த, அதிக அதிகாரங்களைக் கொண்ட ஒரு புதிய தேசிய நோய் கட்டுப்பாட்டு பணியகத்தை சீனா அமைத்தது என்று அதிகாரப்பூர்வ ஜின்ஹுவா செய்தி முகமை ஏப்ரல் 28 அன்று தெரிவித்துள்ளது.

என்.எச்.சியின் துணை இயக்குநரும், ஹூபே மாகாண சுகாதார ஆணையத்தின் இயக்குநருமான வாங் ஹெஷெங், பணியகத்தின் இயக்குநராக இருப்பார் என்று மனிதவள மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிவிப்பு தெரிவிக்கிறது.

கடந்த ஆண்டு தொடக்கத்தில் கோவிட் -19 தொற்றுநோய்க்கு ஹூபே மாகாணத்தின் பதில் நடவடிக்கையை வாங் மேற்பார்வையிட்டார் என்று தனிப்பட்ட முறையில் இயங்கும் வணிக செய்தி வலைத்தளமான Yicai யின் ஏப்ரல்29 ஆங்கில அறிக்கை தெரிவித்தது. அவர் பிப்ரவரி மாதம் ஹூபே சுகாதார ஆணையத்திற்கு மாற்றப்பட்டார். அப்போதைய இயக்குனர் லியு யிங்ஷியும், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் ஜாங் ஜின்னும் நெருக்கடியை சமாளிக்கத்தவறியதற்காக பதவியில் இருந்து நீக்கப்பட்டனர்.

EPA / ALEX PLAVEVSKI

பட மூலாதாரம், Getty Images

பணியகம் நேரடியாக மாநில கவுன்சிலின் அதிகார வரம்பிற்குள் இருக்கும். இது NHC இன் கீழ் வரும் நோய் கட்டுப்பாட்டு மையத்தை விட அதிக நிர்வாக அதிகாரங்களை கொண்டிருக்கும். பொது சுகாதார அவசரநிலைகளுக்கு விரைவான, துல்லியமான மற்றும் திறமையான பதில் நடவடிக்கையை உறுதி செய்வதற்காக, பழைய முறையின் குறைபாடுகளை நீக்குவதே இதன் பணி என்று Yicai தெரிவித்தது.

இந்தியாவுக்கு அனுப்பப்படும் சரக்குகள்

ஏப்ரல் 29ஆம் தேதியன்று, இந்தியாவுக்கான சீன தூதர் சன் வீய்டாங், ஏப்ரல் மாதம் தொடங்கி சீனாவுக்கு 5000க்கும் மேற்பட்ட வெண்டிலேட்டர்கள், 21,569 ஆக்சிஜன் ஜெனேராட்டர்கள், 21.8மில்லியனுக்கும் அதிகமான மக்கள் விரும்பத்தக்கதுகுகள் ஆகியவற்றை வழங்கியதாக தெரிவிக்கும் ட்விட்டர் பதிவை குவான்சா.சின் பதிவிட்டிருந்தது.இது சீனாவின் சுங்க பொது நிர்வாகத்தின் தரவுகளின்படி உறுதிசெய்யப்பட்டது. ,

சீனாவின் பிரதான நிலப்பரப்பில் ட்விட்டரை அணுக முடியாது. இருப்பினும், பொருட்கள் நன்கொடையாக வழங்கப்படவில்லை, இவை இந்தியாவால் வாங்கப்பட்டவை என்று இந்தியாவில் ட்விட்டர் பயனர்களிடமிருந்து வந்த பல பதில்கள் சுட்டிக்காட்டின. சீன நிறுவனங்கள் பொருட்களின் விலையை தாறுமாறாக உயர்த்துவதாக சிலர் குற்றம் சாட்டினர்.

அமெரிக்க நிறுவனங்கள் சீனாவிலிருந்து இந்தியாவுக்காக வாங்கிய அனைத்து ஆக்ஸிஜன் கான்ஸெண்ட்ரேட்டர்களையும் சீனா முடக்கிவைத்ததாக வெளியான செய்திகளை, ஏப்ரல் 29 ம் தேதி நடந்த வழக்கமான ஊடகவியலாளர் சந்திப்பில், வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் மறுத்ததாக, குளோபல் டைம்ஸ் வலைத்தளம் தெரிவித்துள்ளது.

“இது போலியான செய்தி. … சில சீன நிறுவனங்கள் ஏற்கனவே அரசின் ஆதரவுடன் நடவடிக்கை எடுத்துள்ளன. முதல் தொகுதி ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை அவை இந்தியாவுக்கு வழங்குகின்றன” என்று வாங் பதிலளித்தார். கோவிட் -19 அலையை சமாளிக்க சீனா இந்தியாவுக்கு உதவி வழங்க தயாராக இருப்பதாக அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

அரசுக்கு சொந்தமான சிச்சுவான் ஏர்லைன்ஸ் ஏப்ரல் 26 ஆம் தேதியிலிருந்து இந்தியாவுக்கான சரக்கு விமானங்களை நிறுத்தியது குறித்து கருத்து தெரிவிக்க வாங் மறுத்துவிட்டார். இது “வணிக முடிவு” என்று அவர் கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »