Press "Enter" to skip to content

பில்கேட்ஸ் – மெலிண்டா விவாகரத்து முடிவு: அறக்கட்டளை எதிர்காலம் என்னவாகும்?

பட மூலாதாரம், Getty Images

உலக கோடீஸ்வரர்கள் வரிசையில் முதல் ஐந்து இடங்களில் இருப்பவராக நம்பப்படும் மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸும் அவரது மனைவி மெலிண்டா கேட்ஸும் பரஸ்பரம் விவகாரத்து செய்ய முடிவு செய்துள்ளனர்.

இது தொடர்பான அறிவிப்கையை அந்த தம்பதி இணைந்து ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

எங்களுடைய உறவை எப்படி கொண்டு செல்வது என மிக அதிகமாக யோசித்த பிறகு, எங்களுடைய இல்லற வாழ்வை முடித்துக் கொள்ள முடிவு செய்துள்ளோம் என்று பில் கேட்ஸ், மெலிண்டா தம்பதி கூறியுள்ளது.

1980களில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் மெலிண்டா சேர்ந்தபோதுதான் அவரை பில் கேட்ஸ் முதல் முறையாக சந்தித்தார்.

இந்த கோடீஸ்வர தம்பதிக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். இவர்கள் இணைந்து நடத்தி வரும் பில் அண்ட் மெலிண்டா ஃபவுண்டேஷன், உலக அளவில் மிகவும் கொடிய நோய்களுக்கு சிகிச்சை தர உதவும் திட்டங்களுக்கும் தடுப்பூசி திட்டங்களுக்கும் நிதியுதவி செய்து அறப்பணிகளை செய்து வருகிறது.

உலக கோடீஸ்வரர்கள், நல்ல நோக்கங்களுக்காக தங்களுடைய தனிப்பட்ட வருவாயில் ஒரு பகுதியை வழங்குவதற்காக தி கிவ்விங் பிளெட்ஜ் என்ற அமைப்பை பிரபல முதலீட்டாளர் வாரென் பஃபெட்டுடன் சேர்ந்து உருவாக்கினார் கேட்ஸ்.

ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்ட பட்டியலின்படி 124 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள சொத்துகளுடன் உலக பணக்காரர்கள் வரிசையில் நான்காம் இடத்தில் பில் கேட்ஸ் இருக்கிறார்.

1970களில் உலகின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமாக மைக்ரோசாஃப்டை உருவாக்கிய பிறகு அதன் மூலம் தமது சொத்துகளை சேர்த்தார் பில் கேட்ஸ்.

இந்த நிலையில், தங்களுடைய 27 வருட மண வாழ்வு முறிவு தொடர்பான அறிக்கையில், “கடந்த 27 ஆண்டுகளாக எங்களுடைய சிறந்த பிள்ளைகளை வளர்த்தெடுத்தோம். ஒரு சிறந்த அறக்கட்டளையை கட்டமைத்தோம். உலக அளவில் அனைத்து மக்களும் ஆரோக்கியமாகவும் ஆக்கப்பூர்வமாகவும் வாழ அது உதவியது,” என்று கூறியுள்ளனர்.

மேலும், “அறக்கட்டளை பணியில் நாங்கள் இருவரும் சேர்ந்து பணியாற்ற முடியும் என்ற நம்பிக்கையை கொண்டுள்ளோம். ஆனால், இருவரும் எங்களுடைய வாழ்வில் அடுத்த கட்டத்துக்கு ஒரு தம்பதியாக இணைந்து வளர முடியும் என்று நாங்கள் நம்பவில்லை,” என்று கேட்ஸ் தம்பதி குறிப்பிட்டுள்ளனர்.

புதிய வாழ்வை முன்னெடுக்கும் பயணத்தில் தங்களுடைய தனி வாழ்வுக்கான இடத்தை கொடுத்து மதிக்குமாறும் அந்த தம்பதி அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளது.

எப்படி இணைந்தனர் பில் கேட்ஸ் தம்பதி?

பில் கேட்ஸ்

பட மூலாதாரம், Reuters

56 வயதாகும் மெலிண்டா, 1987ஆம் ஆண்டில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் புரொடக்ஷன் மேனேஜர் பதவியில் சேர்ந்தார். தொழில்முறை இரவு விருந்தொன்றில் இந்த இருவரும் நியூயார்க் நகரில் சந்தித்தனர்.

அப்போது டேட்டிங் செய்த இருவரும் பேசியதாக இவ்வாறு நெட்ஃபிளிக்ஸ் ஆவணப்படத்திடம் தெரிவித்திருந்தார் பில் கேட்ஸ்.

“நாங்கள் இருவரும் பரஸ்பரம் மிகவும் அக்கறைபட்டுக் கொண்டோம். எங்களுக்கு இரு தேர்வு மட்டுமே இருந்தது. ஒன்று நாங்கள் இணைந்து திருமணம் செய்வது அல்லது பிரிந்து செல்வது.”

மெலிண்டாவின் பார்வையில் பில்கேட்ஸ், எதை செய்தாலும் அதை தமது இதயபூர்வமாக செய்பவர் என்று கருதினார். எந்த விஷயத்தைசெய்தாலும் ஒரு போர்டில் அதன் சாதக, பாதக அம்சங்களை பட்டியலிட்டு அவர் செயல்படுத்துவார் என்று கூறினார்.

இந்த காதல் ஜோடி 1994ஆம் ஆண்டில் திருமணம் செய்தனர். லனாயின் ஹவாய் தீவில் இவர்களின் திருமணம் நடந்தது. அந்த நேரத்தில் உள்ளூரில் வாடக்கைக்கு விடப்பட்டிருந்த அனைத்து உலங்கூர்திகளையும் இந்த ஜோடி வாடகைக்கு எடுத்திருந்தனர். காரணம், அன்றைய நாளில் தங்களுடைய திருமணத்துக்கு வருபவர்கள் தவிர வேறு தேவையற்ற விருந்தினர்கள் அங்கு வருவதை அந்த ஜோடி விரும்பவில்லை என்று கூறப்பட்டது.

அந்த அளவுக்கு தங்களுடைய காதலையும் அதைத்தொடர்ந்து அமைந்த திருமண வாழ்வையும் பில்கேட்ஸ்-மெலிண்டா தம்பதி அற்புதமாகக் கருதினர்.

65 வயதாகும் பில் கேட்ஸ், கடந்த ஆண்டு மைக்ரோசாஃப்ட் நிர்வாகக் குழுவில் இருந்து விலகினார். அதைத்தொடர்ந்து தமது அறப்பணிகளில் கவனம் செலுத்தப்போவதாக அவர் அறிவித்தார்.

கேட்ஸ் ஃபவுண்டேஷன் என்ன செய்கிறது?

  • பில் கேட்ஸும், மெலிண்டா கேட்ஸும் சேர்ந்து 2000ஆம் ஆண்டு சியாட்டிலில் பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேஷன் என்ற அறக்கட்டளையை நிறுவினார்கள்.
  • இந்த அறக்கட்டளை பெரும்பாலும் ஆரம்ப சுகாதாரம், கல்வி, பருவநிலை மாற்றத்தை தடுக்கும் நவடிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுக்கிறது.
  • தடுப்பூசி தயாரிப்பு திட்டங்களுக்காகவும் கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஆராய்ச்சிப் பணிகளுக்காகவும் இந்த அறக்கட்டளை 1.75 பில்லியன் டாலர்களை வழங்கியது.
  • 2019ஆம் ஆண்டில் பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேஷனின் சொத்து மதிப்பு 43 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக இருந்தது.
  • 1994 ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 36 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான நன்கொடை இந்த அறக்கட்டளைக்கு கிடைக்க இந்த தம்பதி நடவடிக்கை எடுத்தனர்.

அறக்கட்டளை பணியில் மெலிண்டாவின் பங்களிப்பு என்ன?

2019ஆம் ஆண்டில் அசோசியேடட் பிரெஸ் என்ற செய்தி முகமைக்கு பேட்டியளித்த மெலிண்டா, “நானும் பில் கேட்ஸும் சமமான கூட்டாளிகள். ஆணும் பெண்ணும் பணியிடத்தில் சரிமமாக மதிக்கப்பட வேண்டும்,” என்று கூறினார்.

தமது வாழ்க்கைச் சரிதமான தி மொமென்ட் ஆஃப் லிஃப்ட் புத்தகத்தில், தனது குழந்தைபருவம், வாழ்க்கை மற்றும் மிகப்பெரிய பிரபலத்தின் மனைவியாக வாழும்போது எதிர்கொள்ளும் போராட்டங்கள், மூன்று பிள்ளைகளுக்கு தாயாக வீட்டிலேயே இருக்கும் நிலை குறித்து மெலிண்டா விரிவாகவே எழுதியிருந்தார்.

அறக்கட்டளை பணிகளின்போது இருவருடைய உறவும் மேம்பட்டு இருந்ததாக மெலிண்டா குறிப்பிடுகிறார். “எப்படி சமமாக நடத்துவது என்பதை அவர் கற்றுக் கொண்டுள்ளார். மேலும், சமமாக நடத்த எவ்வாறு தன்னை தரம் உயர்த்திக் கொள்வது என்பதையும் அவர் அறிந்திருந்தார்,” என்று பில்கேட்ஸ் பற்றி மெலிண்டா கூறுகிறார்.

அறக்கட்டளை பணிகள் மட்டுமின்றி பைவோட்டல் வென்சர்ஸ் என்ற பெண்கள் மற்றும் குடும்பங்களின் நலன்கள் தொடர்பான ஒரு நிறுவனத்தை 2015இல் மெலிண்டா தொடங்கியிருந்தார்.

உலகில் பாதி பேர் பின்தங்கியிருக்கும்போது நம்மில் எவராலும் கடைசியில் முன்னேற முடியாது என்று மெலிண்டா கூறியிருந்தார். “தரவுகள் தெளிவாகவே உள்ளன. அவை அதிகாரமளிக்கப்பட்ட பெண்கள் இந்த சமூகத்தை மாற்றிக் காட்டுவார்கள்,” என்று அந்த புத்ககத்தில் குறிப்பிட்டிருக்கிறார் மெலிண்டா.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »